Saturday, September 12, 2009

ஊடக வெளியில் மூச்சுத் திணற வைக்கும் புகைப் படலமாக பணத்தின் செல்வாக்கு!இம்மாதம் தலைநகர் டில்லியில் ஒரு தேசிய சிறப்பு மாநாடு நடைபெற உள்ளது. டில்லி பத்திரிகையாளர் சங்கம் (டியுஜே) ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பெரும் நிறுவனங்கள் ஊடகநெறி தவறி, அரசியலை சூதாட்டக்களமாக்குகிற பெரிய கட்சிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, நடக்கிற நிகழ்ச்சிகளை செய்தியாக்காமல் தமது விருப்பத்தை செய்தியாகத் திரித்துத் தருகிற போக்குக் குறித்தும் இந்த மாநாடு விவாதிக்க உள்ளது.

இதற்கு முன்னோடியாக ஆகஸ்ட் 7 அன்று டியுஜே ஒரு சுதந்திர தினபிரகடனத்தை வெளியிட்டது. அதில் ஒரு புதிய, கண்ணியமான ஊடக நெறி உருவாக்கப்பட வேண்டும், தற்போதுள்ள பிரஸ் கவுன்சில் அமைப்புக்குப் பதிலாக மீடியா கவுன்சில் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் (கேயுடபிள்யு), பத்திரிகையாளர்களிடையே ஒரு விரிந்த ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை தொடங்கியுள்ளது. ஒரு புதிய ஊடகத் தகவல் ஒழுங்கமைப்பை உருவாக்க வேண்டும், சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு உதவ பத்திரிகை மேம்பாட்டுக் கழகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று கேரள சங்கம் கோரியுள்ளது.

சிறப்பு மாநாட்டுக்கான முன்னுரையாக ஆகஸ்ட் 7 அன்று டில்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில், ஊடக உலகில் புகுந்து ஆட்டுவிக்கும் பணபலம் குறித்து எச்சரிக்கப்பட்டது. நாட்டின் முன்னணிப் பத்திரிகையாளர்கள் அந்த கருத்தரங்கில் பங்கேற்று, இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் எந்த அளவிற்கு ஊடகங்கள் பணச்சங்கிலியால் கட்டப்பட்டிருந்தன என்பது வெளிப்படையாகத் தெரியவந்தது என சுட்டிக்காட்டினார்கள். டில்லி பத்திரிகையாளர் சங்கமும், டில்லி ஊடக மையமும் இணைந்து அந்தக் கருத்தரங்கை நடத்தின.

“அமெரிக்காவைப் போலவே இந்தியா விலும் தேர்தல்களில் பணபலம் விளையாடுகிறது என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி, வாக்காளர்களைச் சென்றடைவதில் காட்சி ஊடகங்களுக்கு உள்ள முக்கியத்துவம் ஆகிய காரணங்களால் பணத்தின் செல்வாக்கு மிகப்பெரும் அளவிற்கு மேலோங்கியிருக்கிறது,” என்று மூத்த பத்திரிகையாளர் எஸ். நிஹால் சிங் அந்த கருத்தரங்கில் குறிப்பிட்டார்.

தி ஸ்டேட்ஸ்மேன், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரான நிஹால் சிங், இன்றும் டெக்கான் கிரானிக்கிள் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் தமது கருத்துக்களைத் தயங்காமல் வெளிப்படுத்தி வருபவர்.

ஊடகங்கள் பணத்திற்குப் பணிவது குறித்து மக்களிடையே விரிவான விழிப்புணர்வு இயக்கம் ஒன்றை நடத்தவேண் டும் என்ற யோசனையை முன்வைத்தார் பிரபல ‘ஜன்சட்டா’ இந்தி நாளேட்டின் முன்னாள் ஆசிரியர் பிரபாத் ஜோஷி.
“புகையிலைப் பொருள்களின் மீது, அவை உடல் நலத்திற்கு கேடானவை என்ற எச்சரிக்கை அச்சிடப்படவேண் டும் என்பது சட்டப்பூர்வமாகியுள்ளது. ஊழல் தோய்ந்த செய்திகளும் சமுதாய நலத்திற்குக் கேடானவையே. எனவே, பத்திரிகைகளும் கூட இப்படிப்பட்ட சட்டப்பூர்வ எச்சரிக்கையை அச்சிட வேண்டும் என்று ஆணையிடலாம்,” என்கிற அளவுக்கு அவர் பேசியது எந்த அளவுக்கு அவர் நொந்துபோயிருக்கிறார் என்பதைக் காட்டியது.

நாடறிந்த மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் பேசுகையில், “ஊடகத் துறையில் அந்நிய முதலீடுகள் அதிகரிப்பது வேலைவாய்ப்புகள் அதிகரிக்க இட்டுச்செல்லும் என்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சரின் வாதம் முற்றிலும் தவறானது,” என்றார்.

“மேல்தட்டில் உள்ளவர்களின் மனப்போக்கிற்கு ஏற்ப செய்திகளை உருவாக்கு வது நமது ஜனநாயகத்திற்கு ஆபத்து,” என்று கருத்தரங்கத்திற்கான விவாத அறிக்கையை முன்வைத்துப் பேசிய டியுஜே தலைவர் எஸ்.கே. பாந்தே கூறினார். பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள தகவல்கள், சில இடங்களில் ஊடகங்களுக்கு அரசியல்வாதிகள் லஞ்சம் கொடுத்ததையும், சில இடங்களில் ஊடகங்கள் லஞ்சம் கேட்டதையும் தெரியப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

ஆந்திராவிலிருந்து பெண் பத்திரிகையாளர்கள் குழு ஒன்று கருத்தரங்கில் பங் கேற்றது. நெறியற்ற முறையில் செயல் படும் ஊடகங்கள், உண்மையில் தங்களது வாசகர்களையும் பார்வையாளர்களையும் ஏமாற்றுகின்றன என்று அக் குழுவினர் கூறினர்.

பத்திரிகைகள் பணம்பெற்ற விவகாரம் குறித்து ஆராய்வதற்காக பிரஸ் கவுன்சில் இரண்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்த இருவரில் ஒருவரான பரஞ்ஜய் குகா தாகுர்தா, அரசியல்வாதிகளுக்கும் சில ஊடகங்களுக்கும் இடையே பணஉறவு இருப்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் கிடைத்துள்ளன என்று தெரிவித்தார். எனினும், குழுவின் உறுப்பினராக பணியாற்றிவரும் நிலையில், விசாரணை முடியும் வரையில் இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கில்லை என்றும் அவர் கூறினார்.

ஊடக ஆய்வு மையத்தைச் சேர்ந்த பிரபாகர், தேர்தல் நேரத்தில் செய்திகளைச் செய்து வெளியிடுவதற்காக எந்தெந்த ஊடகங்கள் பணம் பெற்றன என்பதைக் காட்டும் சில புள்ளி விவரங்களை அளித்தார்.

ஊடகவெளியில் மூச்சுத் திணற வைக்கும் புகைப்படலமாக பணத்தின் செல்வாக்கு பரவி வருகிறது என்று கருத்தரங்க விவாதத்தில் பங்கேற்ற அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அந்தப் புகை மண்டலம்தான், ஊடகச் சுதந்திரம் குறித்தும் ஊடக நெறி குறித்தும் நடந்த இந்த முக்கியமான கருத்தரங்கில் குறித்த செய்திகளையும் மறைத்தது போலும். மக்கள் விழிப்புணர்வின்றி அந்தப் புகைமண்டலத்தை எப்படி கலைக்க முடியும்?
(தகவல் ஆதாரம்: ‘பீப்பிள்ஸ் டெமாக்ரஸி’, ஆக. 17)
Source: http://inioru.com/?p=5227

No comments:

Post a Comment