Tuesday, September 29, 2009

சிறிலங்காவில் சமாதானம் சாத்தியமா?

சிறிலங்காவில் சமாதானம் என்பது சாத்தியமான பாதையி்ல் பயணிக்கின்றதா அல்லது அதற்கு சாத்தியமான பாதையை - போர் முடிவுற்றதாக அறிவித்துள்ள - சிங்கள அரசு உருவாக்கிவருகிறதா என்ற அடிப்படை கேள்வி இன்றைய காலகட்டத்தில் பல்வேறு தரப்பிலும் எழுந்துள்ளது.
போர் முடிவடைந்து நான்கு மாதங்களாகியும் அங்கு அமைதி என்ற சொல்லுக்கு இன்னமும் அர்த்தம் இல்லாத நிலையே காணப்படுகிறது.
சிறிலங்கா என்ற நாடு சமாதானமாகவும் சுபீட்சம் மிக்கதாகவும் இருப்பதற்கு விடுதலைப்புலிகள்தான் பெரும்தடை என்ற கருத்துருவாக்கத்துடன் தசாப்தங்களாக இரத்தவெறி பிடித்த போரை பகுதி பகுதியாக மேற்கொண்ட சிங்கள அரசுகள் இன்றைய காலகட்டத்தில் ஏதோ ஒரு புள்ளியில் வெற்றிகண்டிருக்கிறது. அந்த வெற்றி தமிழ்மக்களது ஆயுதப்போராட்டத்துக்கு எதிராக வெற்றி மட்டுமே என்பது அனைவரும் அறிந்தவிடயம்
.
ஆனால், அந்த வெற்றியினூடாக இன்னமும் அங்கு சமாதானத்தை சிங்கள அரசினால் கொண்டுவர முடியவில்லை என்றால், நாட்டின் சுபீட்சத்துக்கு தடையாக இருப்பது என்ன என்பது சர்வதேச அரசியல் ஆய்வாளர்களால் சிறிலங்காவை நோக்கி முன்வைக்கப்படும் கேள்வியாகும். இதற்கான பதிலில்தான், தமிழர்களது போராட்ட காரணங்களும் அதன் தாற்பரியங்களும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுவரும் கருப்பொருட்களாக மீண்டும் மாறியிருக்கின்றன.
போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய காலகட்டத்தில் சிங்கள அரசின் சுய உருவம் தெளிவாகவே சர்வதேசத்துக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. சிறுபான்மையின மக்களை பாதுகாப்பாக நடத்துவதாக கூறிவந்த சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அம்பலத்துக்கு வந்துள்ள அசிங்கங்களாக ஊடகங்களில் பெரிய பெரிய விமர்சனங்களாகிவருகின்றன.
இந்நிலையில், பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள் சிறிலங்காவை நோக்கி முன்வைக்கும் சில நியாயமான கேள்விகள் - போர் முடிவுற்ற இந்த தறுவாயில் - அர்த்தபுஷ்டியானவை.
1) போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் சிறிலங்கா இராணுவத்தின் எண்ணிக்கையை மேலும் பல மடங்குகளாக்ககும் முடிவுடன் ஆட்சேர்ப்பில் இறங்கியிருக்கும் அரசின் உண்மையான நோக்கம் என்ன? ஏற்கனவே, பிரித்தானியா, இஸ்ரேல் ஆகிய நாட்டு இராணுவத்தினரின் எண்ணிக்கையிலும் பார்க்க கூடுதலாக துருப்புக்களை குவித்து வைத்திருக்கும் சிறிலங்கா, இன்றைய நிலையில் போர் முடீவடைந்த பின்னரும் அந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் நோக்கம் என்ன?
2) போர் முடிவடைந்து விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கபட்டுவிட்டார்கள் என்று அறிவிக்கப்பட்ட பின்னர், மக்கள் வாழ்விடங்களுக்கு அரச அதிகாரிகள் மற்றும் உதவு நிறுவனங்களை அனுப்பி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், எங்கெங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமோ, அங்கெல்லாம் மேலதிக படையினரை அனுப்பி, இராணுவ பிரசனங்களை அங்கு அதிகரித்து கொள்வதில் மும்முரமாக செயற்படும் அரசின் நோக்கம் என்ன?
3) சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கப்போவதாக வார்த்தைக்கு வார்த்தை சர்வதேசத்திடம் ஒப்புதல் வாக்குமூலமளிக்கும் சிறிலங்கா அரசு, பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்தவேளையில், அந்த மக்களை இந்த நிலைக்கு உள்ளாக்கிய தனது நடவடிக்கையை வெற்றிவிழாவாக அறிவித்து, பெரும்பான்மையின மக்களுக்கு களியாட்ட விழாக்களை ஏற்பாடு செய்துகொடுத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை நிச்சயம் வெல்வோம் என்று கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது? அல்லது, அவ்வாறு அந்த மக்களின் மனங்களை வெல்லத்தான் இந்த அரசினால் முடியுமா?
4) நாட்டில் இவ்வளவு காலமும் புற்றெடுத்தப்போயிருந்தது பயங்கரவாத பிரச்சினை என்று கூறி விடுதலைப்புலிகளை அழித்துதொழித்த அரசு இன்னமும் அங்கு கொடுமையான பயங்கர வாத தடை சட்டத்தை அமுல்படுத்தி, அதன் கீழ் சிறுபான்மையின ஊடகவியலாளர் ஒருவருக்கு 20 வருடன கடூழிய சிறைத்தண்டனை அழித்ததன் மூலம், சிறுபான்மையின மக்களின் மனங்களை வெல்லப்போவதா அறிவித்துள்ள தனது திட்டத்தில் சிறிலங்கா அரசு எத்தனை அடி முன்னே நகர்ந்திருக்கிறது?
5) போர் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொண்டதாக கூறப்படும் பல்வேறு யுத்த குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் பன்னாட்டு சமூகம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்து அந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலடி கொடுப்பதிலேயே குறியாக நிற்கும் சிறிலங்கா அரசு, அவ்வாறு தன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு என்ன காரணம் என்பது தொடர்பில் இதுவரைக்கும் எப்போதாவது உருப்படியாக சுய விசாரணையை மேற்கொண்டதா?
- இவ்வாறு இன்றைய காலகட்டத்தில், சிறிலங்கா அரசின் மீது முன்வைக்கப்படும் பல கேள்விகளுக்கு சிறிலங்காவிடம் பதில்கள் இல்லை. மாறாக கேள்வி கேட்பவர் உள்நாட்டவராக இருந்தால் கடத்திச்செல்லப்படவும், வெளிநாட்டவராக இருந்தால் நாடு கடத்தப்படுவதற்குமான ஏதுநிலையே அங்கு காணப்படுகிறது.
இந்த விடயங்கள் தொடர்பில் சிங்கள அரசு தெளிவான சிந்தனையுடன் செய்றபடும் என்ற நம்பிக்கை தமிழ்மக்களுக்கு அற்றுப்போய் வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால், சர்வதேச சமூகம் தனது இறுதி கட்ட அரசியல் அழுத்தங்களை சிறிலங்காவின் பிரயோகித்து தன்னாலான முயற்சியை மேற்கொண்டுவருகிறது.
எது எவ்வாறாக இருப்பினும் சிங்கள தேசத்தின் அடிப்படை மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தாதவரை அங்கு நிலையாக சமாதானம் எனப்படுவது சாத்தியமே அற்ற ஒரு நிலைமைதான் இப்போதுள்ளது.
தெய்வீகன் ஈழநேசன்
Source: http://tamilthesiyam.blogspot.com/2009/09/blog-post_37.html

1 comment:

  1. Very nice write-up. I absolutely appreciate this site.

    Keep writing!

    Here is my web-site - exterior home renovations (http://www.homeimprovementdaily.com)

    ReplyDelete

Kids enjoying evening in village