Wednesday, September 9, 2009

பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி!




நாங்கள் எங்களின் வீட்டில் மகிழ்வோடு வாழ்ந்து வந்தோம். எங்களின் மூச்சுக் காற்று வீட்டோடு கலந்து போயிருந்தது. வீடு எங்களுக்கு எல்லாமுமாக இருந்தது.திடீரென்று ஒரு நாள் அவர்கள் எங்கள் முற்றத்தில் வந்து நின்றார்கள். அவர்களின் வீட்டில் இருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து நின்றார்கள். வரவேற்பது எங்கள் பண்பு. அவர்களுக்கும் இடம் கொடுத்தோம். அவர்கள் பல்கிப் பெருகினார்கள்.
ஒரு நாள் வீடு முழுவதும் எங்களுக்கே சொந்தம் என்றார்கள். எங்களை எங்களின் வீட்டை விட்டு அடித்து விரட்டினார்கள். நாங்கள் தெருவுக்கு வந்தோம். எங்களின் வீட்டைத் தாருங்கள் என்று நயமாகக் கேட்டோம். அவர்களிடம் பொல்லாத நாய் ஒன்று இருந்தது. அதை எம் மீது ஏவினார்கள். “நாயைப் பிடி! எங்களோடு பேசு! எங்களின் வீட்டைத் தா!” என்று மீண்டும் அன்போடு கேட்டோம். அவர்கள் மீண்டும் நாயை ஏவினார்கள்.
நாங்கள் எங்களின் வீட்டைக் கேட்பதும், அவர்கள் நாயை ஏவுவதுமாக காலம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நேரத்தில் நாம் எதுவுமே செய்யாது இருக்கின்ற போது கூட நாய் கடிக்கத் தொடங்கியிருந்தது. எம்மைக் காணுகின்ற போதெல்லாம் நாய் துரத்தித் துரத்தி கடித்தது.
எங்களில் சிலர் நாயை அடித்து விரட்ட புறப்பட்டார்கள். எங்களுக்கு அது பெரும் ஆச்சரியமாக இருந்தது. எங்களுக்கு யாரையும் அடித்துப் பழக்கம் இல்லை. இந்தப் பொல்லாத நாயை அடிப்பதைப் பற்றி கற்பனை செய்வதற்கே நாம் தயாராக இருக்கவில்லை. ஆனால் எங்களில் சிலர் “அடிப்போம்” என்று கற்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பினார்கள்.
எம்மவர்கள் நாயை அடித்தார்கள். என்ன ஆச்சரியம்? நாய் மெது மெதுவாக பின்வாங்கியது. நாய் ஓடுவதைக் கண்டதும் கற்களை எடுக்கின்ற கரங்கள் அதிகரித்தன. ஆயினும் எம்மில் சிலர் நாயின் கடி தாங்காமலும், கடித்து விட்டது என்று சொல்லியும், கடிக்கலாம் என்று சொல்லியும் தூரமாய் இருந்து வேறு வீடுகளுக்குள் போய் அடைக்கலம் ஆனார்கள்.
உண்மையைச் சொல்வது என்றால் நாயை அடிக்கப் புறப்பட்டவர்களை விட நாயைக் காரணம் காட்டி ஓடிப் போனவர்கள்தான் அதிகம். அதே வேளை ஓடிப் போனவர்களும் நாய் அடித்து விரட்டப்படுவதை விரும்பினார்கள். ஆகவே கற்களை பெறுவதற்கு உதவி செய்து திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.
எம்மவர்களின் அடி தாங்காமல் நாய் ஓடினாலும், பின்பு மீண்டும் வந்து எங்கள் மீது பாய்ந்தது. ஒருநாள் எம்மவர்கள் சரியான அடி கொடுத்தார்கள். இனிமேல் நாய் மீண்டும் வராது என்று நாங்கள் நம்பியிருந்தோம்.
அந்த நேரம் பார்த்து யார் யாரோவெல்லாம் வந்தார்கள். அவர்களோடு மீண்டும் பேசுங்கள் என்றார்கள். நாங்களும் அவர்களோடு பேசினோம் “எங்களைக் கடிக்க வருகின்ற உன்னுடைய நாயைப் பிடி! எங்களை எங்களின் வீட்டினுள் வாழ விடு!” என்று மீண்டும் பேசினோம். காலம் பேச்சோடு உருண்டு போனது.
திடீரென்று ஒருநாள் நாய் மீண்டும் எங்களைக் கடித்தது. எம்மவர்களும் மீண்டும் கற்களை எடுத்தார்கள். இம் முறை நாய் மிகவும் கொழுத்துப் போய் நின்றது. அதனுடைய பற்கள் கூர்மையடைந்திருந்தன. நாய் பாய்ந்து பாய்ந்து கடித்துக் குதறியது. அந்த நாயோடு வேறு சில நாய்களும் சோந்திருந்தன. எல்லா நாய்களும் சேர்ந்து எம்மை சுற்றிச சுற்றி கடித்தன. எம்மவர்களும் முடிந்த வரை கற்களை வீசினார்கள்.
கடைசியில் நாய் வென்றது. உதவிக்கு வந்த மற்ற நாய்கள் அந்த நாயை வெல்ல வைத்தன என்பதே உண்மை. அவைகளே எம்மவர்களை தோற்கடித்தன.
இப்பொழுது எங்களுக்குள் நிறையக் குழப்பங்கள். “எங்களுக்கு இனிமேல் வீடு வேண்டாம். நாங்கள் ஒரு வீட்டைப் பெறுவதை மற்றவர்கள் விரும்பவில்லை, எங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்க விடும்படி கேட்போம்” இப்படி சிலர் சொல்கிறார்கள். நாயின் கடியைத் தாங்க முடியாமல் சொந்த வீட்டில் வாடகைக்கு இருப்போம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
வேறு சிலரோ இன்னும் ஒரு யோசனையை சொல்கிறார்கள். “வீட்டை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நாம் தினமும் வாசலில் போய் நின்று அவர்களிடம் பிச்சை எடுப்போம்” இது சிலரின் யோசனை. வீட்டை எம்மிடம் இருந்து பறித்தவர்களுக்கும் இந்த யோசனை மிகவும் பிடித்திருக்கிறது. அவர்களும் மிகக் குறைந்த பிச்சையை எங்களுக்கு வழங்குவது பற்றி ஆலோசிக்கத் தயாராக இருக்கிறார்களாம்.
ஆயினும் எங்களில் சிலர் இவைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. “யாராவது சொந்த வீட்டில் போய் பிச்சை எடுப்பார்களா? இது எங்களின் வீடு! பிச்சை வேண்டாம்! நாயைப் பிடி! நாயைப் பிடித்துக் கொண்டு எங்கள் வீட்டை விட்டு வெளியேறு!” என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த உணர்வு இருப்பதனாலேயே எங்கள் வீடு எங்களுக்கு மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்னமும் எங்களுக்கு இருக்கின்றது.

வி.சபேசன் (31.08.09)

No comments:

Post a Comment

Kids enjoying evening in village