Wednesday, September 9, 2009

வன்னி அகதி முகாம்களிலிருந்து அம்பாறை வந்தவர்களின் கண்ணீர்க் கதைகள்
வவுனியா முகாம்களில் தங்கியிருந்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அகதிகள் சிலர் மீள்குடியமர்த்துவதற்காக அம்பாறைக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அப்போது அவர்கள் தாம்பட்ட அவலம் பற்றிக் கூறிய கண்ணீர் கதைகள் இதோ... "நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்.

''வன்னி யுத்தத்தில் சிக்கி வவுனியா நிவாரணக் கிராமங்களிலிருந்து காரைதீவுக்கு சென்ற, அம்பாறை மாவட்ட 159 அகதிகள் சார்பில் நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி இவ்வாறு கூறினார்.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் இவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வேளையில் அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் அவர்களைப் பேட்டி கண்டனர். அப்போது அப்பெண்மணி கூறியவை வருமாறு:"எனது கணவர் த.சிவராசா கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982 இல் திருமணம் செய்தோம். அதன் பலனாக 3 பிள்ளைகள் பிறந்தனர். 2006ஆம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து மீண்டும் திரும்வர "பாஸ்' தரமறுத்துவிட்டனர். கடந்த வருடம் யுத்தம் தொடங்கியது. வேறு வழியின்றி இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் எனத் தொடங்கி புதுமாத்தளன் வரை 3 மாதங்கள் உடுத்த உடுப்புடன் நாடோடிகளாக ”டச்”ட அலைந்தோம்.புதுமாத்தளனில் இருக்கும்போது உணவுக்கு கஷ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படி விலைகளில் பொருட்கள். கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. அப்பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியைப் போக்கினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை. அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு தடவை பார்த்தோம். எம்முடன் வந்த அறுவருக்கு கால்களில்லை.இப்படி நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதியன்று படையினரிடம் சரணடைந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். அதன்பிறகு ஓரளவு நிம்மதி. நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்'' என்றார்.

மாங்குளத்தில் காலையிழந்தேன்!

நிந்தவூரைச் சேர்ந்த சீ.வில்டன் (வயது 57) என்பவர் கூறியவை வருமாறு:"நான் மேசன் வேலை செய்து பிழைத்து வந்தேன். 1996இல் விமானத் தாக்குதலில் காலையிழந்தேன். மாங்குளத்தலிருந்த வேளை இச்சம்பவம் இடம்பெற்றது. எனது குடும்பத்தினருடன் கிளிநொச்சிக்குச் சென்று யுத்தம் தொடங்கியதும் 3 மாதம் அலைந்து அடுத்த மே 17ஆம் திகதி செட்டிக்குள முகாமிற்கு வந்தடைந்தோம். அங்கு 1,500 குடும்பங்கள் உள்ளனர்'' என்றார்.வில்டனின் மகளான ரவீந்திரராஜ பேபி (வயது 33) தெரிவித்தவை வருமாறு:"நாம் கிளிநொச்சிக்கு 1992 இல் குடியேறினோம். எமக்கு 5 பிள்ளைகள் பிறந்தனர். எனது மகன் ரசிதர் (வயது 10) அங்கு நிலவிய கடும் காய்ச்சல் காரணமாக காக்காய் வலிப்பு வந்தது. ஒரு காலையும் இழந்தார். மற்ற மகளுக்கும் அதேகதி'' என்றார்.அன்னமலையைச் சேர்ந்த சந்திரசேகரன் யமுனா (வயது 32) கூறியவை வருமாறு:"நான் 2003 இல் முன்பள்ளிப் பாடசாலையில் கற்பிப்பதற்கு புதுக்குடியிருப்புக்குச் சென்றேன். அங்கு 2004இல் சு. சந்திரசேகரனுக்கு (வயது 39) வாழ்க்கைப்பட்டேன். பலனாக 02 பிள்ளைகளைப் பெற்றோம்.கடந்த வருட நடுப்பகுதியில் யுத்தம் ஆரம்பமாக வீட்டை விட்டு வெளியேறி தேவிபுரம், ஆனந்தபுரம், பழையமடம், இரட்டை வாய்க்கால், முள்ளிவாய்க்கால் கடந்து மே 5 இல் வெள்ளமுள்ளி வாய்க்காலுக்கு வந்து சேர்ந்தோம்.கடும் கஷ்டப்பட்டு மே 17 இல் இராணுவத்தில் சரணடைந்து வவுனியா முகாமை அடைந்தோம். வழியில் எமது 2ஆவது நான்கரை வயது பிள்ளையை தவறவிட்டிருந்தோம். வவுனியா முகாமில் "உறவுப்பாலம்' வானொலி நிகழ்ச்சியின் பலனாக இரண்டரை மாதங்களுக்கு பிறகு எனது மகள் புகழரசி எங்களுக்குக் கிடைத்தாள். அவள் வேறொரு முகாமில் இருந்திருக்கிறாள்.வலயம் 4 முகாமில் நாம் சமைத்துச் சாப்பிடுவோம். அவர்கள் உணவுப் பொருட்கள் தருவார்கள். யுனிசெவ் எமக்கு முத்திரை வழங்கி முதலாம் கட்ட உணவுப் பொருட்களைப் பெற்றவேளை இங்கு வந்திருக்கிறோம். இப்பதான் சந்தோசம். எமது தலைவிதி; கஷ்டப்பட்டோம். இனி நிம்மதி'' என்றார்.மற்றவர்களையும் விடவேண்டும்!திருக்கோவிலைச் சேர்ந்த கா.துஸ்யந்தி (வயது 26) கூறியவை வருமாறு:"நாம் 1996 இல் கிளிநொச்சிக்கு தொழில் நிமித்தம்சென்றோம். மாங்குளத்திலிருந்த வேளை 2 பிள்ளைகள் கிடைத்தது. அவர் கார்த்திகேசு ( வயது 37) கூலி வேலை செய்பவர். யுத்தம் தொடங்கியதும் கஷ்டப்பட்டு சாப்பாடின்றி அலைந்து திரிந்து புதுமாத்தளனுக்கு வந்தோம். அங்கிருந்து ஏப்ரல் 20இல் முகாமிற்கு வந்து சேர்ந்தோம். முகாமில் கஷ்டம்தான். என்றாலும் நிம்மதி. எங்களை வெளியே விட்டதுபோன்று ஏனையவர்களையும் விட்டால் நல்லது'' என்றார்.நேர்த்திசெய்யபோய் மாட்டினோம்திருக்கோவிலைச் சேர்ந்த தி.குமரன் தெரிவித்தவை வருமாறு:"வற்றாப்பளை, அம்மன் கோவிலுக்கு நேர்த்தி செய்வதற்கு 2006இல் முல்லைதீவு சென்றோம். பின்புவர "பாஸ்" தரமறுத்துவிட்டார்கள். மாட்டிக் கொண்டோம். இவ்வேளையில் யுத்தம் இடம்பெற்றது. இருந்த இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து வல்லிபுரம், மாத்தளன், முள்ளிவாய்க்கால், வட்டுவாள் ஊடாக 5 மாதங்கள் அலைந்து இராணுவத்திடம் சரணடைந்து மெனிக் பாம் முகாமில் தங்கவைக்கப்பட்டோம். குளிப்பதற்கு 3 வாளி தண்ணீர் மாத்திரம்தான் கஷ்டம்தான். என்றாலும் நிம்மதி. நாம் இப்படி வருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. வெறும் பருப்பை தண்ணீரில் அவித்துச் சாப்பிட்ட எமக்கு இங்கு காரைதீவுப் சாப்பாடு தேவாமிர்தமாக உள்ளது'' என்றார்.வினாயகபுரத்தைச் சேர்ந்த அ.சத்தியராஜ் (வயது 17) கூறியவை வருமாறு:"2006இல் மாமாவைப் பார்க்க தேவிபுரத்திற்கு சென்றேன். அங்கு "பாஸ்" தராமையினால் மாட்டினேன். யுத்தம் ஆரம்பமானது. அங்கு ஷெல் வீழ்ந்ததில் எனது கால் போய்விட்டது. 2 மாதமாக உரிய மருந்தில்லாமல் அலைந்தேன். ஒருவாறு காய்ந்தவுடன் கம்பின் உதவியுடன் ஓடிஓடி வட்டுவாளூடாக வந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். வவுனியா இராமநாதபுரம் முகாமிலிருந்து இங்கு வந்துள்ளேன். எனது பெயர் இங்கில்லை என்கிறார்கள். அதுதான் கவலையாக இருக்குது'' என்றார்.திருக்கோயிலைச் சார்ந்த கு.திருநாவுக்கரசு (வயது 63) குறிப்பிட்டவை வருமாறு:"நான் குடும்பத்துடன் கிளிநொச்சிக்கு போனபோது யுத்தம் தொடங்க மாட்டிக் கொண்டேன். புதுமாத்தளன் பகுதியில் குழந்தைக்காக பால்மா வாங்கப் போனபோது ஷெல் வீழ்ந்ததில் பாரிய உயிரிழப்பு ஏற்பட்டது. பின்பு அத்தலைந்து திரிந்து இராணுவத்திடம் சரணடைந்தேன். எப்போ சாவு என்ற நிலையில் நடைப்பிணமாக அலைந்தோம். நாம்பட்ட கஷ்டங்களை எழுத்தால், சொல்லால் வடிக்க முடியாது. இன்று இங்கிருக்கிறோம்'' என்றார்.

No comments:

Post a Comment