தீபச்செல்வன்
பந்து எட்டாத தூரத்திலிருக்கிறது கால்கள்
இறங்காமல் எப்பொழுதும் தூக்கி மடக்கி
வைத்திருந்தபடி அவள்
எல்லாருடைய கண்கள் வழியாகவும்
நடந்து செல்லுகிறாள்.
பதுங்குகுழி உடைந்துமண் விழுகையில்
தனது கால்கள் மேலும் நசிந்தன என்கிறாள்.
கால்களை ஷெல் கிழித்த பொழுது தனது
கண்கள் குருதியில் நனைத்து கிடந்தன
என்று கூறியபடி சக்கரத்தை உருட்டுகிறாள்.
எனது கால்கள் இல்லாததைப் போலிருக்கின்றன.
நடப்பதற்கு ஆசைப்படுகிற கால்கள் எப்பொழுதுமே தொங்குகின்றன. மண்ணிறங்கும் கால்களுக்காக கனவுகாணுகிற இராத்திரிகளில்
அவளது மனம் நாற்காலியின் கீழாக தூங்குகிறது.
எப்பொழுதும் எங்கும் உருள மறுக்கிற சக்கரங்களுடன்
யாரையாவது உதவிக்கு அழைத்தபடி குழந்தைகள்
விளையாடுகிற இடத்தின் ஓரமாய் நிற்கிறாள்.
எட்டுவயது சிறுமி நற்காலியை நகர்த்துகிறாள்
கால்கள் நிரம்பிய பெரிய மனிதர்களின் மத்தியில்.
கால்கள் வளரும் என்று கூறுகிற தாயின் சொற்கள்
பொய்த்துவிடுகிறதாக சொல்லிவிட்டு
சிதல் கசியும் காயத்தை காட்டுகிறாள்.
எல்லாம் ஒடுங்கியபடி தங்கியிருக்கிறது அவளது உலகம்.
தனது கால்களை உடைத்து தன்னிடமிருந்து நடை பிரிக்கப்பட்டது என்கிறாள்.
மண்ணிற்குள் இறங்கிப்போயிருந்தது
அவளின் அம்மாவின் கால்கள்.
அவள் அறியாதபடி கற்களின் மேலாகவும் கிடங்குகளிலும்
அந்தச் சக்கரங்கள் உருளுகின்றன.
அவளுக்கு முன்னால் பெருத்த கால்கள்
பெரிய அடிகளை வைத்தபடி எங்கும் நடந்து திரிகின்றன.
தனது கால்களை தூக்கி மடியில் வைத்திருக்கிறாள்.
-----------(12.09.2009 அன்று வவுனியா கதிர்காமர் தடுப்புமுகாமலிருந்து அழைத்து வரப்பட்ட எட்டு வயதுச் சிறுமி ----------- கைதடி தடுப்பு முகாமில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிக்கிறாள்.
ஷெல் தாக்குதலில் கால்கள் பழுதடைந்திருப்பதால் நடப்பதற்கு முடியாமல் சக்கர நாற்காலியை உருட்டியபடி திரிகிறாள்.)
No comments:
Post a Comment