கொழும்பு, நவ. 2: விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது முகாம்களில் அடைக்கப்பட்டு தற்போது சொந்த இடங்களுக்கு திரும்பும் தமிழர்கள் புது வேதனையை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்துள்ளது.
இத்தகைய வேதனை அனுபவம் சுமார் 1500 தமிழர் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளது.
முகாம்களில் அடைபட்டுள்ள அகதிகளை சொந்த வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து இலங்கை அரசு அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டது.
அதன்படி சுமார் 1500 குடும்பங்கள் திரிகோணமலை, வவுனியா, மட்டக்களப்பில் உள்ள தமது வீடுகளுக்கு திரும்பினர். அங்கு சென்றபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களது வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளது தெரியவந்தது.
இந்த தகவலை நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இலங்கை தமிழ் அரசு கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
போருக்கு முன்னர் இந்த பகுதிகள் தமிழர்களின் அனுபவத்தில் இருந்தன. முகாம்களுக்கு அவர்கள் மாற்றப்பட்டதும் அவர்களது இடங்களை 500-க்கும் மேற்பட்ட சிங்கள குடும்பங்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டிக்கொண்டு தமிழர்களின் நிலங்களில் விவசாயத் தொழிலை செய்துவருகின்றனர், என இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர் ஆரியநேத்திரன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரித்து பிரச்னைக்குத் தீர்வு காணும்படி அதிபர் ராஜபட்சவுக்கு செப்டம்பர் 16ம் தேதி கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடிதத்தை பரிசீலித்த அதிபர், இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உள்ளாட்சி நிர்வாகத்தை பணித்துள்ளார். இதுவரை உள்ளாட்சி நிர்வாகம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
எனவே, விடுமுறை காலம் முடிந்ததும் எமது முறையீடு தொடர்பாக என்ன மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேட்க முடிவு செய்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போல் வட மேற்கில் உள்ள புத்தளம் பகுதியிலிருந்து முகாம்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கும் இதே பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர்களது வீடுகளையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மிகக் குறுகிய காலத்தில் தமிழர் பகுதிகளை சிங்களர்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆக்கிரமித்துள்ள்ளனர் என்று ஆரியநேத்திரன் தெரிவித்ததாக அந்த நாளேடு மேலும் தெரிவித்துள்ளது.
தமிழர்களின் வீடுகளை சிங்களர்கள் ஆக்கிரமித்துள்ள விவகாரம் பற்றி நாடாளுமன்றத்தில் கடந்த வாரத்தில் தமிழர் கட்சி ஒன்றின் தலைவர் ஆர்.சம்பந்தன் பிரச்னை எழுப்பினார். தமிழர்களின் வீடுகளை ஆக்கிரமிக்கும் சிங்களர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் சம்பந்தன் குற்றம்சாட்டியதாக அந்த நாளேடு மேலும் தெரிவித்துள்ளது.
இதனிடையே, முகாம்களில் இருப்போரின் எண்ணிக்கை அக்டோபர் 27ம் தேதி நிலவரப்படி 1 லட்சத்து 80 ஆயிரமாக குறைந்துள்ளது எனவும் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த நேரத்தில் சுமார் 3 லட்சம் பேர் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர் எனவும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
அகதிகளை அவரவர் சொந்த வீடுகளுக்கு அனுப்பிட ஐநா ஆதரவுடன் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு கிடைத்த பலன் இது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
Source: http://www.dinamani.com/
No comments:
Post a Comment