Sunday, November 15, 2009

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு-165: ஆனையிறவு புலிகள் வசம்!

புத்தாயிரம்-2000-ஆவது ஆண்டில், ஜனவரி 5-ஆம் தேதி, தமிழீழத் தலைவர்களில் ஒருவரான ஜி.ஜி.பொன்னம்பலத்தின் குமாரர், குமார் பொன்னம்பலம் கொலையுண்டார். வழக்கறிஞரான இவர், சிங்கள ராணுவம், அதிரடிப்படை, போலீஸ் ஆகியவற்றின் கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர். செம்மணி புதைகுழி போன்ற அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதாலும், ஐ.நா. மனித உரிமைக் கமிஷன், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு நேரடியாகச் சென்று புகார்களை அளித்ததாலும் இலங்கை அதிபர்களின் கோபத்துக்கு ஆளானவர்.
இறுதியாக, 29-12-1999 அன்று தேர்தல் வெற்றிவிழா கூட்டத்தில் அதிபர் சந்திரிகா பேசிய பேச்சில் பயங்கரவாதத்தை அகற்றுவதுதான் தனது பணி என்று குறிப்பிட்ட அவர், குமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இந்த எச்சரிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து குமார் பொன்னம்பலம் வெளிப்படையான கடிதம் ஒன்றை சந்திரிகாவுக்கு எழுதினார். அந்தக் கடிதத்தில்,
"விடுதலைப் புலிகளின் அரசியல் தத்துவத்தை அப்படியே ஏற்றுக்கொண்டவன் என்கிற முறையிலும் அந்த ஆழமான நம்பிக்கையுடன் தெற்குப் பகுதியில் வாழ்பவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். இலங்கைத் தீவில் மட்டுமல்ல; இத் தீவுக்கு வெளியேயும் இந்தக் கருத்தை எழுத்திலும், பேச்சிலும் பகிரங்கமாக வற்புறுத்த விரும்புகிறேன். உங்களுடைய பேச்சில் என்னை எச்சரித்து இருக்கிறீர்கள். உங்கள் பேச்சு நெடுகிலும் வெளிப்பட்ட அப்பட்டமான மிரட்டல்களைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவன் என்கிற முறையிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன்' என்று குறிப்பிட்ட அவர்,
"டிசம்பர் 19-ஆம் தேதி இரவு வரலாற்றில் மறக்கமுடியாத இரவாகும் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருளின் கரங்கள் படிந்த இரவாகவும் வர்ணித்து இருக்கிறீர்கள். குண்டு வெடிப்பினால் பாதிக்கப்பட்ட நீங்கள் இவ்வாறு பேசுகிறீர்கள். தமிழீழப் பகுதியில் ஆயிரக்கணக்கான விதவைகள், சொந்த வாழ்வில் எத்தனையோ இரவுகள் இருள்பிடித்த இரவுகளாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாட்டின் ராணுவத்தின் தலைமைத் தளபதி என்கிற முறையில் உங்களுடைய இருள்படிந்த கரங்களினால் அவர்கள் வாழ்வை இழந்தார்கள் என்பதையும் நீங்கள் என்றாவது உணர்வீர்கள்' என்றும் உறுதிப்படக் கூறியிருந்தார்.
தொடர்ந்து அக்கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது, "விடுதலைப் புலிகளை ஒழித்துக்கட்டப்போவதாக உறுமியிருக்கிறீர்கள். உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள். அத்தகைய முயற்சி நடைபெறுமானால் இந்தத் தீவில் காலாகாலத்திற்கும் அமைதி என்பதே இல்லாமல் போகும் என எச்சரிக்கிறேன்-
இந்தத் தீவில் பயங்கரவாத மரணக் கலாசாரம் பரவியது என்று சொன்னால் அதற்கு சிங்களவரே காரணமானவர்கள். 1956-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வன்முறைக் கலாசாரத்தைத் தொடங்கியவர்கள் அவர்களே. (சந்திரிகாவின் தந்தை பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்துக்கு எதிரே போராடியவர்கள் மீது குண்டர்கள் தாக்குதல் நடந்தது.) விடுதலைப் புலிகளின் அருகே நீங்கள் செல்வதற்கு முன்னால், நீங்கள் மட்டுமல்லாமல் இந்தத் தீவில் வாழும் ஒவ்வொருவரும் முதலில் இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும்.
சிங்களவருடைய தயவில் அல்லது அவர்கள் தூக்கியெறியும் பிச்சையில் வாழ்வதற்காக நாங்கள் பிறக்கவில்லை. இந்தத் தீவின் ஒரு பகுதி நியாயமாக எங்களுக்கு உரியது. அதைப் போல மற்றொரு பகுதி நியாயமாக சிங்களவருக்குச் சொந்தமானது. இந்த உண்மையைச் சிங்களவர் ஏற்கவேண்டும்.
தமிழர்கள் ஒரு தனி தேசிய இனம் என்பதையும், தங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், அந்த உரிமையை எந்தக் காரணத்தைக்கொண்டும் அந்நியப்படுத்த முடியாது என்பதையும், அது அவர்களின் பிறப்புரிமை என்பதையும், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்குண்டான அறிவுக்கூர்மை தங்களுக்கு உண்டு என்பதையும், தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தாங்களே முடிவு செய்யவேண்டும் என்பதையும் நன்றாக உணர்ந்து இருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் பத்திரிகைகளில் வெளிவந்த நான்கே நாளில், அதாவது ஜனவரி 5-ஆம் தேதி குமார் பொன்னம்பலம் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணத்துக்கு சந்திரிகாவின் ஆள்களே காரணம் என்று அப்போது கூறப்பட்டது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ""நேர்மைத் திறமையுடன் அபாரமான துணிச்சலுடன் அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. குமார் பொன்னம்பலத்தின் இனப்பற்றுக்கும், விடுதலை உணர்வுக்கும் மதிப்பளித்து அவரைக் கெüரவிக்கும் விதமாக "மாமனிதர்' என்ற விருதை வழங்குவதாக'' அறிவித்தார்.

புலிகளின் தாக்குதல் மற்றும் மீட்பு சரித்திரத்தில் ஆனையிறவுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மிகப் பெரும் பரப்பளவில், ஏராளமான ஆயுதங்களுடன், கனரக ஆயுதங்கள் உள்பட, குவிக்கப்பட்டு, 20 ஆயிரம் வீரர்களைக் கொண்ட பல்வேறு முகாம்களை உள்ளடக்கியது. அந்த முகாமைத் தகர்ப்பது யாழ்ப்பாணத்துடன் இதரப் பகுதிகளை இணைப்பதற்கான முயற்சியாகும்.
இத் தாக்குதல் தொடங்கப்பட்டால் எதிரி தலையெடுக்க முடியாதபடி, ஒரேயடியில் வீழ்த்துவது என்ற சூத்திரப்படி, அதிக நாள்கள் பிடிக்காமல், பலத்தத் தாக்குதலில் வீழ்த்த வேண்டும் என்றும் புலிகள் தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டப்படி பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்ட 48 மணி நேரத்தில் ஆனையிறவு தளம் புலிகளின் வசமாயிற்று.
20 ஆயிரம் வீரர்களுடன் 4 ஆயிரம் புலிப் போராளிகள் மோதி வென்றனர். ஆயிரக்கணக்கில் சிங்கள வீரர்கள் இப் போரில் மடிந்தனர். சந்திரிகாவின் கடும் தணிக்கைக்குப் பிறகும் வெளிவந்த செய்திகள் மூலம் சிங்கள ராணுவத்துக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரியவந்தது.
மூடி மறைக்கப் பார்த்தும் முடியவில்லை. வெளிநாட்டுப் பத்திரிகைகளில் ஆனையிறவுப் போர்க்காட்சிகளும், மீட்புச் செய்தியும், தென்மராட்சி, வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதிகளையும் மீட்ட செய்திகளும் அடுத்தடுத்து வெளிவந்தன. சிங்கள ராணுவத்துக்கு மிகப் பெரும் இழப்பு என்பது உறுதியாயிற்று.
இதனைத் தொடர்ந்து சிங்கள ராணுவத்தின் வீரர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இந்த சலசலப்பு முல்லைத்தீவுச் சண்டையில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான வீரர்களை சிங்கள வீரர்கள் அல்ல என்று சொன்னதில் ஆரம்பமானது. ஆனையிறவு முகாம் தகர்ப்பில் உயிரிழந்த வீரர்களுக்கும் அதே நிலை நீடித்ததால், பல ஆயிரம் ராணுவ வீரர்கள், ராணுவத்தைவிட்டு ஓடினர். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியும் வெற்றி பெறவில்லை.
விடுதலைப் புலிகள் தரப்பில் தற்கொலைப் படைப்பிரிவிலும் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்து பணியாற்றும் நிலையில், சிங்கள ராணுவ வீரர்கள், பணியிலிருந்து சொல்லாமல் ஓடுவது ஏன் என்று, சந்திரிகா யோசித்தார்.
ஒரு முடிவாக மாவீரர் தினம் போல, "போர்வீரர்கள் தினம்' கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்து, 7-6-2000 அன்று தேவாலய மணிகள் ஒலிக்கும் நேரத்தில் அவரவர் இருக்குமிடத்தில் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் திட்டத்தை அமல்படுத்தினார்.
போர்வீரர்கள் நினைவு நாள் அனுசரிக்கப்பட்ட அதே நாளில் அமைச்சர் சி.வி.குணரத்னே குண்டுவெடிப்பில் சிக்கி பலியானார். அவருடன் மேலும் 20 பேர் உயிரிழந்தனர்.

முகமலை கிளாலி பகுதியில் புலிகள் தங்களது தாக்குதலைத் தொடங்கினார்கள். இந்த அதிரடித் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மடிந்தனர். ஏராளமானோர் படுகாயமுற்றனர். இந்தத் தாக்குதல் மூலம் "ஓயாத அலைகள்-3' ஆரம்பமாகின்றது என்று புலிகள் அறிவித்தனர். புலிகளின் திருகோணமலைத் தாக்குதல் (அக்டோபர் 23) ஆரம்பமானது. இந்த அறிவிப்பு வெளியான சமயத்தில் சந்திரிகாவின் தாயார் ஸ்ரீமாவோ பிரதமர் என்ற நிலையிலும், அடுத்தப் பிரதமரும் அவரே என்ற நிலையிலும் காலமானார். மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மகிந்த ராஜபட்ச மீன்வளத்துறை அமைச்சரானார்.
www.dinamani.com

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...