Sunday, October 11, 2009

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்ல முடிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அனுமதி மறுப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 11 ஒக்ரோபர் 2009, 10:21 மு.ப ஈழம்] [நி.விசுவலிங்கம்]

இந்திய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கி இருக்கும் வன்னி வதை முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்படும் அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மக்களைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டு அரசிடம் விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை அந்த அனுமதி வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டி இருக்கின்றது கொழும்பு வார ஏடான 'சண்டே ரைம்ஸ்'.
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்துப் பேசியபோது முகாம்களுக்கு செல்வதற்கு தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. கோரிக்கை விடுத்து ஒரு மாதமாகி விட்ட நிலையிலும் அவர்களுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. "முகாம்களுக்கு செல்வதற்கான அனுமதி குறித்த எமது கோரிக்கைக்கு அரசு இன்னும் பதிலளிக்கவில்லை" என்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
இதேபோன்றே எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதை அரசு ஏன் தடுக்கிறது என்பது தொடர்பில் விளக்கம் தருமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. எதிர்வரும் 27 ஆம் நாள் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு வேற்று நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகாம்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகையில், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அங்கு செல்ல அனுமதிக்கப்படாமை அவர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயல் என்று ஐக்கிய தேசியக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது.
Source: www.puthinam.com

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...