Thursday, October 15, 2009

மாண்புமிகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல்



மாண்புமிகு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆனந்தசங்கரி ஐயாவின் தொழிலை இப்போது நானும் செய்யலாமென எண்ணுகின்றேன் என்று தெரிவித்து ஓர் பகிரங்க மடலை யாழ்ப்பாணத்திலிருந்து சனீஸ்வரன் என்பவர் வெளியிட்டுள்ளார்.
சனீஸ்வரன் வெளியிட்டுள்ள பகிரங்க மடல்:

முன்னாள் தளபதியே…! காரைநகர் கடற்படை முகாம் தாக்கிய வீரனே….? மட்டக்களப்பு சிறையுடைத்த தன்மானத் தமிழனே …! கோட்டையில் மோட்டார் செல்லடித்த வீரனே….! பத்மநாபா பாசறையில் வளர்ந்த தோழரே….! வணக்கம்
இணக்கப்பாட்டு அரசியல் மூலம் இருநூறாண்டாக புரையோடிப் போயிருக்கின்ற தமிழரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப் போகின்றேன். புறப்பட்டிருக்கின்றீர்கள் நல்லது யார் குற்றியாவது அரிசி ஆகட்டும் என்று விட்டுவிட முடியாத விடயம் இது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய பின்னடைவிற்கு முன்பு தங்களின் தாரக மந்திரமாக “மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி – எக்காலமும் பிரிக்கப்படாத வடக்கு கிழக்கு ஓர் இணைந்த அலகு என்று பிதற்றிக் கொண்டு திரிந்தீர்கள்.
பிரபாகரனிடமிருந்து தப்புவதற்கு பகைவனின் கூடாரத்துக்குள் பதுங்க வேண்டிய கட்டாயத்தில் தாங்கள் உளறியவைகள் அவை. இப்போது புலிகளின் அச்சுறுத்தல் இல்லை நந்திக்கடலோரம் பிரபாகரனதும் தளபதிகளினதும் சங்காரம் முடிந்துவிட்டதென்று தாங்களும் தங்கள் எஜமானர்களும் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் இந்நேரத்திலும் கூட மலிவான அரசியல் செய்து கொண்டிருக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாகவில்லையா?

தமிழர்கள் நொந்து வாழ்விழந்து வாழும் மண்ணிழந்து தன்மானம் தனையிழந்து அகதிகளாக அடிமைகளாக அவலப்பட்டுக் கொண்டிருக்கும்போது இன்னும் அந்த மலினமான ஈனப்பிழைப்பைச் செய்து கொண்டிருக்க உங்களுக்கு வெட்கமாகவில்லையா..?
உங்களின் தாரக மந்திரம் வடக்கு கிழக்கு இணைந்த அலகு எங்கே ஐயா போய்விட்டது? மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றீரே! மாநிலத்தில் கூட மகிந்தவுடன் கூட்டாட்சி செய்யவேண்டிய நிலை வந்துவிட்டதே என்ன சொல்லப் போகின்றீர்..?

மாநகரசபைத் தேர்தலில் உமக்குத் தோல்விதான் என்பதை நல்ல காலம் நல்ல மனதுடன் ஒத்துக்கொண்டுவிட்டீர்…? மாற்றுக்கட்சி மாற்றுக் கருத்து என்று பிதற்றுவீரே..?
பிரபாகரன்தானே முட்டுக்கட்டை பிரபாகரன்தானே எல்லாவற்றுக்கும் தடையாக இருந்தார். அதுதான் எல்லாம் முடித்து விட்டீர்களே. 180 நாட்கள் தாண்டியும் கூட அரசியல் தீர்வின் கதையைக் கூட காணவில்லையே..?

என்ன செய்யவதையா ஒரு மதகுகட்டும் அதிகாரம் உள்ள மாநகரசபைத் தேர்தலில் கூட உங்களால் தனித்து நின்று போட்டியிட முடியவில்லை. நீரா அரசியல் தீர்வு பெற்றுத் தரப் போகிறீர்.
நாலு பேருக்கு ஆஸ்பத்திரி பரிசாரகர் உத்தியோகம் பல்கலைக்கழத்தில் பத்து பேருக்கு புல்லுவெட்டும் தொழில், 2 தொண்டர் ஆசிரியருக்கு நிரந்தர நியமனம், 2 மதவு திறந்து வைத்தல் மூடிக்கிடந்த 2 பாதைகளை திறந்து வைத்தல், ஒரு சலூன் திறந்து வைத்தல் போன்றவற்றை உமது இணக்கப்பாட்டு அரசியல் மூலம் சாதிக்க முடியும். எரிந்து கொண்டிருக்கும் எங்கள் மனங்களை உம்மால் அணைக்க முடியுமா..?
எத்தனை ஆயிரம் இன்னுயிர்களை இழந்தோம் நாம். எமது இளமைக்காலம் முழுவதனையும் எங்கள் சொத்துகளையும் எங்கள் அருமந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் இழந்துவிட்டிருக்கின்றோம். நீர் என்னடாவென்றால் மூடிக்கிடந்நத பாதையொன்றை ஆயிரம் கட்டுப்பாடுகள் சோதனைகளுடன் திறந்துவிட்டு தமிழரின் பிரச்சனை தீர்ந்து விட்டது என்று பிதற்றிக் கொண்டிருக்கின்றீர்.
வேலைகேட்டு வரும் வேலையில்லாப் பட்டதாரிகளையெல்லாம் பஸ்களிலேற்றி நீர் போகும் கூட்டங்களுக்கெல்லாம் கூட்டிச் சென்று ஆள்கூட்டம் காட்டுகின்றீர்களே வெட்கமாகவில்லையா..?

ஒரு சிறு தையல் பயிற்சி நிலையம் அதை ஒரு விதானை அல்லது ஒரு ஓய்வு பெற்ற வயோதிபர் திறந்து வைக்கலாம்தானே..! ஒரு அமைச்சரா அதையும் திறந்து வைக்க வேண்டும். அதைத்திறந்து வைக்க நீங்கள் படும் பந்தாக்கள் அப்பப்பா இந்திய அரசியல் தோற்றது போங்கள். கண்ணாடி முன்னால் நின்று உங்கள் சுட்டுவிரலையே உங்கள் முகத்திற்கு முன்னால் நீட்டி வடிவேலு பாணியில் “இந்த அவமானம் உனக்கு தேவையா…” என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
ஏதோ யாழ் மாவட்டத்து மக்கள் மின்சாரத்தையோ தொலைபேசியையோ காணாதது போலவும் 1980 களுக்கு முன்பு அவை கிடையாத ஒன்று மாதிரியும் அவற்றிற்காகத்தான் நாங்கள் எல்லாம் ஏதோ போராடப் போனதாகவும் இப்போது அவையெல்லாம் கிடைத்துவிட்டது ஆகவே தமிழன் பிரச்சனை தீர்ந்தது என்பது போல பிதற்றுகின்றீர்களே இது கொஞ்சம் ஓவராக இல்லையா அமைச்சர் அவர்களே!
இதுவரைகாலமும் உங்கள் இணக்கப்பாட்டு அரசில் மூலம் நீங்கள் சாதித்தது என்ன..? அரசு ஏதோ அள்ளிப் போடும் பிச்சையை உங்கள் தயவால்தான் அது மேற்கொள்ளப்படுவதாக காட்டுவதற்கு என்னவெல்லாமோ பித்தலாட்டங்களை செய்து வருகிறீர்கள். அது என்ன ஐயா சந்திரசிறி றிபன் வெட்டி கட்டிடம் திறந்து வைக்கிறார் நீங்கள் இடிபட்டுக்கொண்டு றிபனைப் பிடித்துக்கொண்டு நிற்கிறீர்கள். எப்படியாவது அந்த நிகழ்வில் நீங்கள் கலந்து கொண்டுவிடவேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் தெரிகிறது. வடிவேலு பாணியில் சொன்னால் நானும் ரவுடிதான் …. நானும் ரவுடிதான் …. நானும் ரவுடிதான் ….
ஐயா ஒரு விடயம் கவனித்துக் கொள்ளுங்கள். இலங்கைத் தமிழன் ஒன்றும் கேனயன் இல்லை. நீர் வீசும் எலும்புத் துண்டைக் கௌவியபடி உமக்கும் உம்முடைய சிங்கள எஜமானனுக்கும் வாலாட்டுவதற்கு. ஒரு சாண் வயிறு இருக்கிறதே வாழவேண்டுமே அதற்காக ஒரு அரச உத்தியோகம் வேண்டும் என்பதற்காக உமது தியேட்டருக்கு வருகிறார்களே தவிர அடிமைகளாய் சாசனம் எழுதுவதற்கு அவர்கள் வரவில்லை.
இன்னும் இது தனது நாட்டின் கீழ் இருப்பதாய் சிங்களம் கூறுவதால் எமது ஜீவாதாரத்திற்கு சிங்கள தேசத்திடம் கை நீட்ட வேண்டிய தேவை அவர்களுக்கு இருககிறது. அவர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை பயன்படுத்தி விபச்சார அரசியல் நடாத்தி வருகின்றீரே கொஞ்சமேனும் யோசிக்க கூடாதா…?

அவர்களையெல்லாம் திரட்டி வந்து கூட்டம் போடுகின்றீர். ஊர்வலம் வைக்கின்றீர். சிங்கள அமைச்சர் விஜயத்தின் போது அவர்களைக் கொண்டு மாலைகள் போடுவிக்கின்றீர்கள். உங்களை தோழர் என்று அழைப்பதைவிட மாமா என்று அழைக்கலாம்தானே.
கே. சி. நித்தியானந்தா என்னும் உன்னதமானவரின் வளர்ப்பில் வளர்ந்தவர் நீங்கள். புரட்சிகரமான கம்யூனிஸட் கொள்ளை உங்களில் ஊறியிருந்தது அல்லவா…? தமிழ் மக்களுக்கு ஏதோ செய்ய வேண்டும் என நினைக்கும் உங்கள் செயல் பாராட்டப்பட வேண்டியதுதான் இருந்தாலும் இணக்கப்பட்டு அரசியல்தான் இடிக்கின்றது. பிரபாகரனும் அவரது போராட்டமும் வலுப்பெற்றிருந்தபோது உங்கள் தேவை அரசிற்கு இருந்தது.
இப்போது எல்லாம் முடிந்துவிட்டதாக கூறப்படும் இந்நேரத்தில் உங்கள் தேவை அரசிற்கு இல்லை என்பதையே ஒரு பௌத்த மேலாண்மைக்கட்சியின் பெயரில் நீங்கள் தேர்தலில் நிற்கவேண்டி வந்ததற்குகக் காரணம். சக தமிழ் கட்சிகளுடன் கூட இணக்கத்திற்கு வர முடியாத நீங்கள மேலாண்மைச் செருக்குக் கொண்ட சிங்களக் கட்சியொன்றுடன் இணக்கப்பாடு செய்வதென்பது நகைப்புக்குரியதானது
.
முதலில் மாற்றுக் கருத்துக் கொண்ட தமிழ் கட்சிகள் நீங்கள் ஒன்றுபடுங்கள். அதன்பின்னர் இணக்கப்பாட்டு அரசியல் மூலம் ஏதாவது தீர்வு பெறமுடியுமா என்பது பற்றி சிந்தியுங்கள். புலி எதிர்ப்பு பேசிக்கொண்டே எத்தனை காலத்திற்கு அரைத்த மாவையே அரைக்கப் போகின்றீர்கள்.
தோழரே….! ஆயிரக்கணக்கான போராளிகளினாலும் மக்களினாலும் வளர்க்கப்பட்ட விடுதலைப் போராட்டம் இன்று பின்னடைவை சந்தித்திருக்கின்றது. அந்த மாவீரார்கள் இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் இல்லை. இந்த மண்ணின் மைந்தர்கள். உங்களிடம் வேலை தேடிவருபவர்களிடம் கூட அவர்களின் உறவுகள் இருக்க முடியும்.
எனவே தியாகங்களை கொச்சைப்படுத்தாதீர்கள். பிரபாகரனுக்காக உலகம் முற்றிலும் உள்ள தமிழன் கண்ணீர் வடிக்கிறான் என்றால் அது அவரது தியாகத்திற்கு கிடைத்த பரிசு.. நாளை உங்களுக்காகவும் ஒரு சொட்டு கண்ணீரை உங்களின் மறைவுக்குப் பின்னர் நாம் வடிக்க வேண்டும். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
தெரிந்தோ தெரியாமலோ அரசியல் தலைமை என்னும் ஆயுதத்தை எடுத்துவிட்டீர்கள். மறப்போம் மன்னிப்போம் என்பதை சிங்களவருக்கு மட்டும் கடைப்பிடிக்காது சக அரசியல் கட்சிகளிடமும் கடைப்பிடியுங்கள். தவறுகள் செய்யதவன் மனிதனே இல்லை. காலம் காலமாக நடந்த எமது விடுதலைப் போராட்டத்தை அற்ப சலுகைகளுக்காக கேவலப்படுத்தாதீர்கள். தாங்களும் போராட்டங்களில் பங்குபற்றியவர். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும் வரை
யாழ்ப்பாணத்திலிருந்து
சனீஸ்வரன்.
நன்றி: பாரிஸ்தமிழ்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...