Source: www.dinamani.com
பர்மா தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள்?
1963 ஆம் ஆண்டு."கப்பலை விடுங்கள். கண்ணீரைத் துடையுங்கள்' என்று பர்மா தூதுவரகத்தின் முன்பு முழக்கமிட்டார்கள் பர்மா தமிழர்கள்.
அதற்குப் பிறகு கப்பல் விட்டார்கள். சென்னைக்கு வந்திறங்கினார்கள் பர்மா தமிழர்கள்.
சொந்தத் தொழிலும் ஊரில் பூர்வீக வீடும் உள்ள சிலர் தப்பித்தார்கள். சொந்த ஊரில் சேர்ந்து கொண்டனர். பல தலைமுறைகளாக அங்கேயே பிறந்து வாழ்ந்து வந்தவர்களுக்குப் பல்வேறு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
இன்று சென்னையிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பர்மா தமிழர்கள் வாழ்கின்றனர். சென்னை வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, எண்ணூர், செங்குன்றம் பகுதிகளில் அதிகமாக வாழ்கிறார்கள். வணிகத்தில் ஈடுபட்டவர்களுக்காக சென்னைத் துறைமுகத்தையொட்டிய பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு, இன்று "பர்மா பஜார் ' எனப் பிரபலமாக இயங்குகிறது.
ஆனால் பர்மாவில் இருந்து திரும்பியவர்கள் அங்கு வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துப் பெருமூச்சுவிடாமல் இல்லை.
இவர்களின்- இவர்களுடைய முன்னோர்களின் - சொந்த ஊர் எது? பர்மாவிலிருந்து வந்து சென்னையில் தங்கியது ஏன்? எப்படி?
84 வயதாகும் ரெங்கசாமி ஒரு பர்மா தமிழர். இளைஞராக இருந்தபோது நேதாஜியின் "இந்திய சுதந்திர லீக்' என்ற அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர். இப்போது சென்னை அண்ணாநகரில் "நேதாஜி வணிக வளாகத்தை' ஏற்படுத்தி அதன் தலைவராக இருக்கிறார். வீடு மகாகவி பாரதி நகரில் இருக்கிறது.
""நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் பர்மாவில் ரங்கூனுக்கு அருகில் உள்ள சிறிய ஊரில்தான். என்னுடைய அப்பாவுக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தேவகோட்டைக்கு அருகில் உள்ள திருவாடனை. அப்பா பர்மாவில் வியாபாரம் செய்து வந்தார். என்னுடைய 16 வயதில் நேதாஜியின் இந்திய சுதந்திர லீக் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டேன். நேதாஜி என்றவுடனேயே அவருடைய இந்திய தேசியப் படைதான் எல்லாருடைய நினைவுக்கும் வரும். நான் இருந்தது அவருடைய அரசியல் இயக்கம். அந்த இயக்கத்துக்காக பிரசாரம் செய்வது, நிதி வசூல் செய்வது எனத் தீவிரமாகச் செயல்பட்டேன்.
அதன் பிறகு திரைப்பட விநியோகத் தொழில் செய்து வந்தேன்.
1950 ஆம் ஆண்டுகளில் நிறைய இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் பர்மாவின் அரசுப் பணிகளில் அதிகம் இருந்தார்கள். பர்மா ரயில்வே, நீர்வழிப் போக்குவரத்துத்துறை, சுங்கத்துறை, தபால், தந்தி, பொதுப் பணித்துறை போன்றவற்றில் அதிக அளவில் வேலை செய்தார்கள். இதற்குக் காரணம் இந்தியாவும், பர்மாவும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளாக இருந்தன. அதனால் தமிழகப் பகுதிகளில் வேலை செய்த அரசு ஊழியர்களைப் பணியிட மாற்றம் செய்து ரங்கூன், மாத்தளை போன்ற பகுதிகளுக்கு அனுப்பினார்கள். பர்மா சுதந்திரம் பெறப் போராடியபோதே, பர்மியர் அல்லாதவர்கள் மீது வெறுப்பு ஊட்டப்பட்டது. அதன் பின்பு தமிழர்களை நீக்கிவிட்டு, பர்மாவைச் சேர்ந்தவர்களை அந்த இடங்களில் நிரப்பினார்கள். 1962 - ஆம் ஆண்டுக்குப் பிறகு பர்மாவில் தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது. ஜெனரல் நி வின் என்பவரின் ராணுவ ஆட்சி அப்போது நடந்தது.
இந்திய குடிமகன்கள் அங்கே தொழில் செய்யக் கூடாது என்றார்கள். சிறுவியாபாரம் செய்யக் கூட அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பு தமிழர்களுக்குக் கிடைத்து வந்த சலுகைகள் எல்லாம் நிறுத்தப்பட்டன. பர்மிய மொழியில் மட்டுமே கல்வி என்று கொண்டு வந்தார்கள். இந்திய குடிமகன்களுக்கு என்று தனி வரியெல்லாம் விதித்தார்கள். சொத்துகளைப் பறிமுதல் செய்தார்கள். அரசுடைமை ஆக்கினார்கள். ஆயிரம் ரூபாய், ஐந்நூறு ரூபாய் நோட்டுகள் எல்லாம் செல்லாது என்று அறிவித்தார்கள். அவர்கள் அங்கே சம்பாதித்ததை இந்தியாவுக்கு எடுத்து வர தடை செய்தார்கள். பெண்களின் கழுத்தில் தொங்கும் தாலியைக் கூட அவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கே தமிழர்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டது.
எனவே பர்மா தமிழர்கள் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தார்கள்.
திரும்பி வந்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊருக்குப் போகலாம் என்று நினைத்தார்கள். ஆனால் சொந்த ஊரிலுள்ள உறவினர்களுடனான தொடர்புகள் விட்டுப் போயிருந்தன. அதுமட்டுமல்ல, அவர்களுடைய முன்னோர்கள் விட்டுச் சென்ற சொத்துகளை ஊரிலிருந்த உறவினர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தனர். பர்மாவிலிருந்து வந்தவர்களை வரவேற்றால் எங்கே சொத்துக்களில் பங்கு கேட்டு விடுவார்களோ என்று ஊரிலிருந்தவர்கள் பயந்தார்கள்.
இதனால் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்கள் சொந்த ஊரின்றி, கால் வைக்க இடமின்றி நின்றார்கள்.
அப்போது அரசாங்கம் பர்மா தமிழர்கள் வாழ்வதற்கான பல சலுகைகளைச் செய்து தந்தது. கும்மிடிப்பூண்டி, சோழவரம், எண்ணூர், செங்குன்றம் பகுதிகளில் பர்மா தமிழர்களுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டன. சென்னை பீச் ரயில்வே நிலையத்துக்கு அருகில் பிளாட்பாரத்தில் உட்கார்ந்து பர்மா தமிழர்கள் வியாபாரம் செய்ய அண்ணாதுரை காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. கப்பலில் வரக் கூடிய பொருட்களை வாங்கி, பர்மா தமிழர்கள் விற்றார்கள். இப்போதுள்ள பர்மா பஜார் அப்படித்தான் உருவானது.
நான் கொத்தவால் சாவடியில் "சிவசக்தி தேங்காய் மண்டி' என்ற பெயரில் கடை வைத்து நடத்தினேன். எனக்குக் கொஞ்சம் இரக்க சுபாவம். நிறைய கடன் கொடுத்ததால் நஷ்டம் ஏற்பட்டது. கடையை மூடிவிட்டேன்.
அதுவுமில்லாமல் எனக்குப் பொதுப் பணிகளில் ஆர்வம் அதிகம். எனவே "பர்மா தமிழர்கள் நல உரிமைச் சங்கம்' என்ற சங்கத்தை ஆரம்பித்தேன். தொடர்ந்து பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன்'' என்கிறார்.
ஐ.வியாகுலம் ஒரு பர்மா தமிழர். சென்னை திருவொற்றியூரில் உள்ள என்ஃபீல்டு தொழிற்சாலையில் வேலை செய்கிறார். வீடு மகாகவி பாரதி நகரில் இருக்கிறது. அவரிடம் பேசினோம்.
""எங்களுடைய குடும்பம் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது தஞ்சாவூர் முகாமில் தங்க வைக்கப்பட்டோம். ஒரு மாதம் அந்த முகாமில் இருந்தோம். எத்தனை நாள் முகாமில் இருக்க முடியும்? சென்னைக்கு வந்தோம்.
பிழைக்க வழியில்லாமல் திணறிக் கொண்டிருந்தோம்.
இப்போது பக்தவத்சலம் நகர், சாஸ்திரி நகர் இருக்கும் இடங்களில் அப்போது ஒரு பெரிய ஏரி இருந்தது. வியாசர்பாடியில் அப்போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த மந்தொவானி என்ற கிறிஸ்தவப் பாதிரியார் இருந்தார். அவர்தான் ஏரியின் மேட்டுப் பகுதிகளில் வீடுகட்டச் சொல்லி, சாஸ்திரி நகர், பக்தவத்சலம் நகர் காலனிகளை உருவாக்கினார். பர்மா தமிழர்களின் பிள்ளைகள் படிப்பதற்கு நிறைய உதவிகள் செய்தார்.
இலவசக் கல்வி தரும் பள்ளிகளில் படிக்க ஏற்பாடு செய்தார். ஹாஸ்டலில் இலவச உணவுக்கும் ஏற்பாடு செய்தார். உணவு என்றால் பால், சிக்கன் எல்லாம் உள்ள உணவு. மத வேறுபாடு பார்க்காமல் எல்லா மதத்தைச் சேர்ந்த பர்மா தமிழர்களுக்கும் உதவி செய்தார். நிறையப் பேரை படிக்க வைத்தார். பர்மா தமிழர்களுக்கு வீடு கட்ட வீட்டுக் கடன் வாங்கித் தந்தார்.
படித்த பர்மா தமிழ் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தது அரசு. ஃபாதர் மந்தொவானியின் உதவியால் படித்த பல இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைத்தது. எனக்குக் கூட பொதுப்பணித்துறையில் ஜூனியர் அஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது. நான் அந்த வேலையை விட்டுவிட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தேன்'' நன்றியுடன் சொல்கிறார் வியாகுலம்.
""ஃபாதர் மந்தொவானிக்குப் பிறகு சலூஸ் என்ற ஃபாதர் வந்தார். அவரும் நிறைய உதவிகளைப் பர்மா தமிழர்களுக்குச் செய்தார்.
1965 முதல் 1975 வரை அரசின் சலுகைகள் எங்களுக்குக் கிடைத்து வந்தன. ஆனால் இப்போது இல்லை.
இங்குள்ள பர்மா தமிழர்களுக்கு உறவினர்கள் பர்மாவில் இருந்தாலும் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது இப்போது அநேகமாக இல்லை. காரணம், இவ்வாறு திருமணம் செய்வதில் நிறையச் சட்டச் சிக்கல்கள் உள்ளன.
1973 வரை பர்மாவிலிருந்து தமிழர்கள் இங்கே வந்தார்கள். அதற்குப் பின்பு யாரும் வரவில்லை. பர்மாவிலேயே தங்கிவிட்டார்கள். பர்மாவிலுள்ள பெரும்பாலான தமிழர்கள் விவசாயம்தான் செய்கிறார்கள். இங்குள்ள பர்மா தமிழர்கள், பர்மா பஜாரில் வியாபாரம் செய்கிறார்கள். என்னைப் போல தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். அலுவலங்கங்களில் வேலை செய்கிறார்கள்'' என்கிறார் வியாகுலம்.
""பர்மா பஜாரில் முன்பைப் போல் இப்போது வியாபாரம் பிரமாதமாக இல்லை'' என்கிறார் பி.மார்க்கஸ் வருத்தத்துடன். அவர் பர்மா பஜார் வியாபாரி.
""முதலில் வெளிநாட்டுப் பொருட்களை வாங்க வேண்டுமென்றால் பர்மா பஜாருக்குத்தான் வர வேண்டும். ஆனால் இப்போது எல்லாக் கடைகளிலும் வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் தமிழர்களின் பிழைப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
நான் பர்மா பஜாரில் 28 வருடங்களாக வியாபாரம் செய்து வருகிறேன். முதலில் எல்லாம் கப்பலில் இருந்து வருகிற பொருட்களை விற்று வந்தோம். சிங்கப்பூரிலிருந்து வருபவர்கள் எங்களிடம் தரும் பொருட்களை விற்றுக் கொண்டிருந்தோம். அப்போதும் சரி, இப்போதும் சரி நிறைய எலக்ட்ரானிக் பொருட்கள்தாம் பர்மா பஜாரில் அதிகமாக விற்பனையாகும். ஹோம் தியேட்டர், கீ போர்டு, கால்குலேட்டர், வீடியோ புரஜெக்டர், கேமரா போன்றவைதாம் அதிகமாக விற்பனையாகும். இப்போது எல்சிடி டிவி அதிக அளவில் விற்பனையாகிறது.
வியாபாரம் குறைந்ததற்கு இதுமட்டும் காரணமல்ல. பர்மா பஜாரில் உள்ள ஒரு சில புரோக்கர்கள் செய்யும் தவறுகளால் எங்களுடைய வியாபாரத்தின் நம்பகத்தன்மையில் சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால் மக்கள் வேறு கடைகளில் பொருட்களை அதிக அளவில் வாங்குகிறார்கள்.
பர்மாவிலிருந்து நாங்கள் இங்கு வந்த புதிதில் அரசாங்கம் எங்களுக்குப் பல உதவிகள் செய்து தந்தது. இப்போது எங்களை யாரும் கவனிப்பதில்லை. பத்து வருடங்களுக்கு முந்தைய வியாபாரம் இப்போது இல்லை. இப்போது பர்மா ஜனங்கள் கஷ்டப்படும் நிலைக்கு வந்துவிட்டார்கள்'' - கவலையுடன் சொல்கிறார் மார்க்கஸ்.
வியாசர்பாடியில் ஒரு முனீஸ்வரர் கோவிலைப் பார்த்தோம். பெயர் வித்தியாசமாக இருந்தது. பீலிக்கான் முனிஸ்வரர் ஆலயம். அதென்ன பீலிக்கான்? மிகுந்த பக்தியுடன் காணப்பட்ட ஜோதிடர் கே.கே.சுப்பையாவைக் கேட்டோம்.

""பர்மாவில் வாழும் தமிழர்கள் பீலிக்கான் என்ற இடத்தில் முனீஸ்வரர் ஆலயத்தை ஏற்படுத்தி வழிபாடு செய்கிறார்கள். பர்மா தமிழர்கள் இங்கே வந்ததும் அதே பெயரில் கோயிலைக் கட்டிவிட்டார்கள். இங்கு மட்டுமல்ல, எண்ணூருக்கு அருகே உள்ள அன்னை சிவகாமி நகரிலும் இந்த முனீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்து பர்மாவுக்குச் சென்ற தமிழர்கள் முனீஸ்வரனையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். அந்த முனீஸ்வரனைப் பர்மா தமிழர்கள் இப்போது தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்.
பர்மாவில் முனீஸ்வரர் வழிபாடு மட்டுமல்ல, முருகன் வழிபாடும் உள்ளது. சக்தி அங்காள பரமேஸ்வரி வழிபாடும் உள்ளது. இங்குள்ள பர்மா தமிழர்களும் அதே வழிபாட்டு முறையைப் பின்பற்றுகிறார்கள்.
வழிபாட்டில் மட்டுமல்ல, உணவு உண்பதிலும்கூட பர்மா உணவு வகைகள் சிலவற்றை விரும்பி உண்கின்றனர். நீங்கள் மகாகவி பாரதி நகர் பகுதியில் மாலை நேரங்களில் பர்மாவின் மொஹிங்காவை வாங்கிச் சுவைக்க முடியும். மொஹிங்கா என்பது நூடுல்ஸ் உணவு வகை. இதை ரோட்டுக் கடையில் கூட விற்பனை செய்கிறார்கள். மொஹிங்கோவை வீட்டில் செய்ய முடியாத பர்மா தமிழர்கள், கடையில் வாங்கி ஆர்வத்துடன் சுவைப்பதைக் காண முடியும். சிலர் வீட்டிலும் செய்வார்கள். இங்கு மட்டுமல்ல, பர்மா பஜார் பகுதியில் செகண்ட் லைன் பீச்சில் தள்ளுவண்டியில் பர்மா உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்க முடியும்.
பர்மா தமிழர்களின் விருந்தோம்பல் பண்பு மறக்க முடியாதது. பெரியவர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை அதிகம். இப்போது கூட இங்கிருந்து பர்மாவுக்குச் செல்பவர்கள் ஒரு மாதம் அங்கே தங்கினாலும் ஒரு காசு செலவு இல்லாமல் இருக்க முடியும். தினம்தோறும் ஒவ்வொரு வீட்டிலும் விருந்துக்கு அழைப்பார்கள். தங்கச் சொல்வார்கள். மிகுந்த அன்போடு கவனித்துக் கொள்வார்கள்.
அதனால் பர்மாவிலிருந்து தமிழர்கள் யாராவது இங்கு வந்தால், இங்குள்ள பர்மா தமிழர்கள் விழுந்து விழுந்து அவர்களைக் கவனிப்பார்கள்.
வயதில் மூத்தவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள், பர்மாவில் உள்ள தமிழர்கள். இங்கே அந்தப் பண்பு, சற்றுக் குறைந்ததுபோல இருக்கிறது'' - குரலில் சற்று வருத்தம் தொனிக்கிறது.
ந.ஜீவா
படங்கள்: யு.கே.ரவி
this is Very useful for us
ReplyDeleteஇதெல்லாம் உண்மை கடந்த இரண்டு நாட்களாக யாங்கூன் வந்து தமிழர் வாழும் நிலை அறிந்தேன் . பலர் முன்னேறி இருந்தாலும் நம் சமூகம் பின் தங்கியே உள்ளது. பொன் விளைத்த தமிழரை துரத்தியதால் இன்று வரை முன்னேற வில்லை.
ReplyDelete