Friday, September 23, 2011

14 ஆயிரம் கன்டெய்னர்கள் தேக்கம்: சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் பாதிப்பு



சென்னை துறைமுகத்தின் அலட்சியம் காரணமாக, 14 ஆயிரம் கன்டெய்னர்கள் வெளியேற்ற முடியாமல், துறைமுக முனையங்களில் முடங்கிக்கிடக்கின்றன. இதனால், ஏற்றுமதி வர்த்தகம் பாதித்துள்ளது. இதே நிலை நீடித்தால், துறைமுகத்தின் வர்த்தகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. சிக்கலைத் தீர்க்க, துறைமுக நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னைத் துறைமுகம் ஆண்டுக்கு, 15 லட்சம் கன்டெய்னர்களை கையாண்டு வருகிறது. தினமும், 4,000த்துக்கும் அதிகமான கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. ஆனால், அதற்கேற்ப உள்ளேயும், வெளியேயும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், சென்னைத் துறைமுகம் சிக்கலில் தவிக்கிறது. வழக்கமாக, கன்டெய்னர் லாரிகளின் போக்குவரத்துக்கு, "ஜீரோ, 2, 2ஏ, 10 ' வது வாயில்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. பின், "2 ஏ, 10'வது கேட்கள் இழுத்து மூடப்பட்டுவிட்டன. லாரி டிரைவர்கள் நடத்திய ஸ்டிரைக்கால், இவை இரவில், குறித்த நேரத்தில் மட்டும் செயல்பட்டு வருகிறது. போதிய வாயில்கள் இன்மையால் கடந்த சில மாதமாக, வெளியேற்ற வேண்டிய கன்டெய்னர்கள் கொஞ்சம், கொஞ்சமாக முடங்கின.

போதிய கட்டமைப்பு வசதிகள், சாலை மேம்பாட்டு வசதிகள் கோரி, லாரி டிரைவர்கள் கடந்த மாதம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். ஒரு வாரம் வரை இந்த ஸ்டிரைக் நீடித்தது. இதனால், இறக்குமதியாகும் கன்டெய்னர்கள் வெளியேற்ற முடியாமல் தேங்கின. ஸ்டிரைக் முடிந்தாலும், அவை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றாததால், கொஞ்சம் கொஞ்சமாக தேங்கி, இரண்டு முனையங்களிலும், 14 ஆயிரத்துக்கும் அதிகமாக கன்டெய்னர்கள் தேங்கிக்கிடக்கின்றன.

சாதாரணமாக இரு முனையங்களிலும், 3,000 முதல் 6,000ம் வரை கன்டெய்னர்கள் தேங்கினால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. தற்போது, 14 ஆயிரத்துக்கும் அதிகமான கன்டெய்னர் முடங்கியதால், சென்னைத் துறைமுகத்தின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முனையங்களில் முடங்கிய கன்டெய்னர்களை, வெளியேற்றினால் மட்டுமே, இறக்குமதி கன்டெய்னர்களை அனுமதிக்க முடியும் என்ற நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சரக்குகளுடன் வரும் கப்பல்கள் ஐந்து நாட்கள் வரை காத்துக் கிடக்க வேண்டியுள்ளன. மேலும், ஏற்றுமதி கன்டெய்னர்களையும் உரிய காலத்தில், எடுத்துச் செல்ல முடியவில்லை.

நெருக்கடி நிலை நீடிப்பதால், கன்டெய்னர்களை வைக்க அனுமதிக்கும் "படிவம் 13ஐ' கன்டெய்னர் முனையங்கள் உடனுக்குடன் தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள, 30 "வேர் ஹவுஸ்'களும் நிரம்பி வழிகின்றன. இதனால், கன்டெய்னர்களை இறக்கக்கூட வழியின்றி, வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே காத்து நிற்கின்றன. கன்டெய்னர்கள் உடனுக்குடன் வெளியேற்ற முடியாததால், தேக்க நிலைக் கட்டணத்தை, கப்பல் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 40 அடி கன்டெய்னர் ஒன்றுக்கு, 260 டாலர் வரை (10 ஆயிரம் ரூபாய்)கட்டணம் வசூலிப்பதால், ஏற்றுமதி நிறுவனங்களும், வர்த்தகர்களும், என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கியுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் விஜயகுமார் கூறும்போது, "சென்னைத் துறைமுகத்தில் இப்படி ஒரு சிக்கலான நிலை, இதுவரை ஏற்பட்டதில்லை. ஏற்றுமதி செய்ய முடியாமல், ஆங்காங்கே கன்டெய்னர்கள் தேங்கிக் கிடக்கின்றன. துறைமுகத்தின் அலட்சியத்தால், நாங்கள் கன்டெய்னருக்கு தேக்க நிலைக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. கிடைக்கும் லாபத்தை விட அதிகம். நிர்வாகத்திறன் இன்மைதான் காரணம்' என்றார்.சென்னைத்துறைமுக அதிகாரி ஒருவர் கூறும்போது,"வழக்கத்தைவிட கன்டெய்னர்கள் சற்று அதிகம் தேங்கினாலும், அவற்றை அகற்றி, நிலைமை சரி செய்ய துரித நடவடிக்கை எடுத்து வருகிறோம். வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏதுமில்லை' என்றார்.

சிக்கலைத் தீர்க்க என்ன வழி?

* சில நாட்களுக்கு ஏற்றுமதியை முற்றிலும் நிறுத்திவிட்டு, தேங்கிய கன்டெய்னர்களை, போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற வேண்டும்.
* கன்டெய்னர் லாரிகள் போக்குவரத்துக்கு வாய்ப்புள்ள கூடுதல் வாயில்களை அனுமதிக்க வேண்டும்.
* உள்ளேயும், வெளியேயும் நெரிசலைக் குறைப்பதோடு, போக்குவரத்தை விரைவுபடுத்தும் வகையில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
* துறைமுக இணைப்புச் சாலை மேம்பாட்டுத் திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

- நமது சிறப்பு நிருபர் -

No comments:

Post a Comment

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...