Thursday, December 16, 2010

ஓநாயின் முன்னால் கட்டப்பட்ட ஆட்டுக் குட்டியாக யாழ்.குடா மக்கள் !- கந்தரதன்

Source:http://www.tamilkathir.com/news/4236/58//d,full_article.aspx

இராணுவத்தினரதும் காவல்துறையினரதும் துணையுடன் நடாத்தப்படும் இத் திருட்டுச் சம்பவங்கள் நன்கு திட்டமிட்டு நடத்தப்படுகின்றதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்கள் தினமும் ஏக்கத்துடனேயே இரவுப் பொழுதைக் கழித்துவருகின்றனர். ஓநாயின் முன்னால் கட்டப்பட்ட ஆட்டுக் குட்டியின் நிலையிலேயே யாழ்.குடா தமிழ் மக்கள் உள்ளனர்.

எந்த நேரமும் சிங்களவன் தம்மை விரட்டிவிடுவானோ என்ற ஏக்கம் வேறு மக்களை ஆட்கொள்ள ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இரவுவேளை யாழ்.தெல்லிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட அளவெட்டிப் பகுதியில் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக உள்ள இடத்தில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீட்டில் வளர்க்கப்படும் நாயை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதமுனையில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள்,பணம் என்பனவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் யாழ்.மாவட்ட மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது யாழ்குடாப் பகுதியில் பெய்துவரும் அடைமழைக்கு மத்தியிலும் - படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் ஆயுதமுனையில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அளவெட்டிஎட்டாம் கட்டையில் உள்ள வீட்டுக்குள் முகத்தை கறுப்புத்துணியினால் மறைத்துக்கொண்டு சென்ற ஆயுதம் தாங்கிய கும்பலே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் வீதியில் சென்ற சிலரையும் இவர்கள் மறித்து பரிசோதனைகள் மேற்கொண்டதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்துடைப்புக்காக இதுதொடர்பிலான விசாரணைகளை தெல்லிப்பளை காவல்துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணைகள் விழுந்தவனை மேலும் மேலும் மாடுகள் ஏறி மிதிப்பதாகவே அமையும்.
இந்நிலையில் கடந்தவாரம் கைதடிச் சந்தியில் அமைந்துள்ள மதுபானச் சாலை ஒன்றின் கூரைச் சீற்றை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடியதுடன் அங்குள்ள மதுபானங்களையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் கூரைச் சீற்றுகள் மேலே இருந்து மதுபானத்தை அருந்தி விட்டு போத்தல்களை அங்கு விட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் நிற்காத திருடர்கள் கைதடிப் பகுதியிலுள்ள பலசரக்கு கடை ஒன்றினுள் உள்நுழைந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைத் திருடியதுடன் செல்பேசி நிரப்பும் அட்டைகள் மற்றும் பால்மா வகைகள், சிகரெட் போன்றவற்றையும் அள்ளிச் சென்றுள்ளதாகக் கடை உரிமையாளரால் முறையிடப்பட்டுள்ளது.தொடர்ந்து மேற்படி பலசரக்குக் கடைக்கு  அண்மையில் அமைந்திருந்த  இரும்புக்கடை ஒன்றினுள் நுழைந்த திருடர்கள் 16 ஆயிரத்து 800 ரூபா பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.

இராணுவத்தின் முகாம்கள் நெருக்கமாக அமைந்திருக்கும் கைதடிப் பகுதியில் திருடர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான திருட்டுச் சம்பவங்களை நடத்தியிருப்பது பொதுமக்களை சந்தேகம் கொள்ளவைத்துள்ளது. இராணுவத்தினரின் திட்டமிட்ட செயல் இது என பொதுமக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.இவ்வாறு யாழ்குடாப் பகுதியில் நாளாந்தம் திருட்டுக்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையை தாம் யாரிடம் சென்று முறையிடுவது என பொதுமக்கள் தமக்குள் புலம்புகின்றனர். பேய்க்கு சிரிச்சாலும் கோபம் அழுதாலும் கோபம் என்ற நிலையிலேயே அங்குள்ள மக்கள் காணப்படுகின்றனர்.இந்நிலையில், யாழ்.குடாவில் அழையா விருந்தாளியாக வந்த சிங்களவர்களும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் தமது ஆதிக்கத்தைக்காட்ட ஆரம்பித்துள்ளனர்.நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறிய சிங்களவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என சிறீலங்கா அரசாங்கமும், யாழ் குடாநாட்டில் பதுங்கியிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும்? தெரிவித்து வருகின்றபோதிலும்,

அங்கு சிங்களக் குடியேற்றம் பலப்படுத்தப்பட்டு தமிழர்கள் வெளியேற்றப்படுவதைக் காணக்கூடியதாக இருப்பதாக யாழ். நகர் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.புதிதாகக் குடியேறியிருக்கும் சிங்கள மக்கள் டிசெம்பர் மாத விடுமுறை காலத்தில் தென்பகுதியிலுள்ள தமது பாடசாலைச் சிறுவர்களையும் யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடிருக்கும் அதேவேளையில், அவர்களுக்கு வசதியாக யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள சிங்கள மகாவித்தியாலயத்தை மீண்டும் திறக்குமாறும் சிறீலங்கா அரசாங்கத்தைக்கோரியுள்ளனர்.
இதுவரை 186 சிங்களக் குடும்பங்கள், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான நாவற்குழி காணியில் குடியேறியுள்ளனர். ஜனாதிபதியையும், படைத்துறை அமைச்சின் செயலாளரையும் வாழ்த்தும் பதாதைகளை அவர்கள் தொங்கவிட்டுள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பதாகை தொங்க விடப்பட்டுள்ளது.சிங்களக் குடியேற்றவாசிகளுக்கு போட்டியாக நாவற்குழிப் பகுதியில் இடம்பிடித்த தமிழ்க் குடும்பங்களில்  பல வெளியேறியுள்ளன. அவர்கள் குடியமர்ந்த பகுதி பெரும்பாலும் தாழ்நிலப் பகுதிகளே. இரவோடிரவாக சிங்களக் குடியேற்றவாசிகள் மேட்டு நிலங்களை ஆக்கிரமித்துவிட்டனர்.

அண்மைய அடை மழை காரணமாக, தாழ்நில பகுதி வீடுகளுள் வெள்ளம் புகுந்துவிட்டது. அதனாலேயே பெரும்பாலான தமிழ்க் குடும்பங்கள் வெளியேறியுள்ளன.
தமிழ்க் குடும்பங்கள் விட்டுச்சென்ற வீடுகளில் இருந்த மரம், தடிகள் சிங்கள குடியேற்ற வாசிகளால் சூறையாடப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இப்பகுதியில் 330 வரையான தமிழ் குடும்பங்கள் குடியமர விருப்பம் கொண்டுள்ளனர். அரசு காணிகளில் அத்துமீறிக் குடியமர்ந்துள்ள குடியேற்றவாசிகள் வெளியேற்றப்படுவர் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது. டக்ளஸ் தேவானந்தாவும் இதையையே கூறுகின்றார்.

ஆனால் வாரந்தோறும் தெற்கிலிருந்து சேகரிக்கப்படும் உணவுப் பொருட்களுடன் பௌத்த மதகுருமார் மற்றும் சிங்கள வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் பலர் சிங்கள குடியேற்றவாசிகளைச் சந்தித்துத் திரும்புவதாக அங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் குறிப்பிடுகின்றன.
எமது பூர்வீக குடிமனைகள் சிங்களவர்களிடம் சிக்குவதா? இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்!

நன்றி. ஈழமுரசு.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village