Saturday, December 11, 2010

போராளி-பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம்


-தமிழினப் படுகொலையும் வெளியாகும் ஆதாரங்களும்
 
சனவரி 9 , 2011     சென்னை 
மே பதினேழு இயக்கம்
 
 
வியேத்நாம்  போரின் கொடூரங்களை சொன்ன 'ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்' (கிம் சுக்)  உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை  உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார்.  போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று  வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு  காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும்  இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம்.
 
 இசைபிரியாவையும் ஏனைய போராளிகளையும்  பார்த்த   உலக சமூகம் இப்போது நிர்வாணமாய் நிற்கிறது. துயரப்படங்களையும் துரோகத்தையும் பார்த்து பார்த்து பழகிவிட்ட சமூகமாய்  தமிழ் சமூகம் நிற்கிறது.

இறுதி வரை சமரசம் செய்யாத போராளிகளாய் நின்றவர்களுக்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இசைபிரியாவை கொலை செய்ய துணை போன சமூகத்தை கேள்வி கேட்டு குற்றவாளிகளை தண்டிக்க  வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

மே 17 , 18 படுகொலை நடந்த ஒரு வாரத்தில் அங்கு சென்று பார்வை இட்ட ஐ. நா தலைவர், அந்த ஒரு வாரத்தில் உதவி தொகையை அளித்த இந்திய சோனியா அரசு, ஐ. நா வில் வர இருந்த இலங்கை மீதான விசாரணை தீர்மானத்தை தடுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், மத்திய மந்திரி பதவி ஒதுக்கீட்டில் தமிழர்களை மறந்த தி.மு.க மற்றும் தோல்வியில் தூங்கி போன கட்சிகள் என அனைவரின் முன்னிலயில் தான் இசைபிரியா கொல்லப்பட்டார். 

இங்கு இசைபிரியா என்பவர்  ஒரு தனி நபர் அல்ல, உலக சமூகத்தால் ஒரு மிருகத்தின் வாயில் தனித்து, கைகள் கட்டப்பட்ட நிலையில், வேட்டையாட  விடப்பட்ட தமிழீழ சமூகமே. 
 
போருக்கு பிறகு அமைதியை காத்த தமிழக தமிழர்களும் இந்த குற்ற சாட்டுக்கு விலக்கானவர்கள் அல்ல. நம் கண் முன்னால் தான், நம்மின் மௌனத்தின் மீதுதான் இந்த பச்சை படுகொலைகள் நடந்தன. போருக்கு பிறகு எழுச்சி பெற்று இருக்க வேண்டிய சமூகம் அவ்வாறு தனது கடமையை செய்யாமல் போனதன் சாட்சி தான் இசை பிரியாக்கள்.
  தான் பெற்ற 6 மாத குழந்தையை  போரில் பறிகொடுத்த பிறகும் உறுதியாய் இறுதி வரை எதிரியை எதிர்கொண்ட அந்த மாமனித போராளிக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இருந்து நமது உத்வேகமுற்ற போராட்டத்தை ஆரம்பிப்போம். 
 
போர் எதிர்ப்பு போராட்டத்தின் மையமாய் எப்படி மாவீரன் முத்துகுமரன் இருந்தாரோ, எப்படி திலீபன் இந்தியா அமைதிபடையின் எதிர்ப்பு மையமாய் மாறினாரோ அவ்வாறே போரின் பிறகான புத்துணர்வு பெரும் போராட்டத்தின் மையமாய் போராளி பத்திரிகையாளர்  இசைபிரியா. இசைபிரியா சிங்கள கோரமுகத்தின் எதிர்ப்பு குறியீடு. மரணத்தின் வாயிலில் சமரசம் செய்யாத  தமிழீழ போராளியின் அடையாளம், இசைபிரியாவுடன் கொள்ளப்பட்ட அனைத்து போராளிகளும் அவ்வாறானவர்களே. இசைபிரிய இந்த போராட்ட குணத்தின் அடையாளமாய் நம்முன் நிற்கிறார். 
 
தமிழீழபோராளிகளை, தமிழீழ மக்களை -நாம் இந்த செய்தியை படிக்கும் இதே கணத்தில்-  கொல்வதற்கு அனுமதிக்கும் செயலாக நமது மௌனம் ஆக கூடாது. நாம் மறக்க கூடாதது நமது இந்த மௌனம்தான் போர் முடிந்த இரண்டு மாதம் கழித்து இந்த போராளிகள் நம் மௌனத்தை சாட்சியாய் வைத்து கொல்லப்பட்டார்கள் என்பதை
 
இணைந்து பணியாற்ற அனைத்து அமைப்புகளுக்கும் பணிவான கோரிக்கை வைக்கிறோம். இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல, அனைவரும் இணைந்து இந்த வீர  வணக்க நிகழ்வை நிகழ்த்தி  இனிவரும்   போராட்டத்திற்கு ஆரம்ப புள்ளி வைப்போம்.
 
ஒன்று திரள்வோம்.
மே பதினேழு இயக்கம்  - contact.may17@gmail.com , thiruja@yahoo.com  

No comments:

Post a Comment

Kids enjoying evening in village