Saturday, July 24, 2010

கறுப்பு-கறுப்பாக-கறுப்பாகவே யூலை

Source: http://www.alaikal.com/news/?p=43147#more-43147

விண்ணுய வீரத்தை விமானதளத்துள் சமராடிக் காட்டிய எம் கரும்புலிமறவரின் நினைவு சுமந்து
கறுப்புயூலையின் நாளுள் நனைவோம்
.

எட்டி உதைக்கும் கால்தழுவி
தொழுது கிடந்த பொழுதுகளாகவே
ஆண்டுகள் பலவாக அப்படியே கிடந்தோம்.


காலிமுகத்திடலில் யூனியன்கொடி இறக்கி
ஏற்றி வைத்த சிங்கக்கொடியின் நிழலே
எந்நாளும் எமக்கானது என்ற நினைப்பிலேயே
நீட்டித் தூங்கிக் கிடந்தனர் எம் முன்னோர்.


ஒருதீவு ஒரேநாடு என்ற தேசியக்கனவில்
திளைத்திருந்தோம்.-சத்தியமாகவே லங்கா
நமது நாடென்றே மனதார நினைத்திருந்தோம்.


ஆதிகாலைப்பொழுதொன்றில் யாழ்தேவி
புகையிரத்தின் உள்ளிருந்து களனிப்பாலத்தின்
முழு அழகையும்,சேறு உழக்கும் எருமையின்
காலடியில் விரிந்திருக்கும் செங்கமலப்பூவின்
சிலிர்ப்பையும்,விடிந்தும் விடியாத அந்தப்
பொழுதில் தூக்கம் கலைந்தும் கலையாத
தென்னிலங்கை கிராமங்களையும் எங்களின்
தேசம் என்றே இறுமாப்பு கொண்டிருந்தோம்.


எல்லாம் அந்த யூலைமாதத்து 24ம் நாள்
வரும்வரைக்கும்தான்
.-நேற்றுவரை எங்களை
‘யாழுவ’ என்றும் ‘மல்லி’என்றும்’ஐயே’ என்றும்
உறவுகொண்டாடிய பேரினத்து மனிதர்கள்
ஒருநாளில் முகம்மாற்றி தங்களுக்குள்
துட்டகைமுனுவின் இனவாதம் ஏற்றி
எதிர்ப்படும் ஒவ்வொரு தமிழனிலும்
எல்லாளனை தேடித்திரிந்த அந்த நாட்கள்
இன்றும் இனியும் எப்போதும் நெஞ்சகலாது.


தென்னிலங்கைத் தெருவெங்கும் எம்தமிழனும்
தமிழச்சியும் யாரோபோல வெட்டியும் நெருப்பில்
வீசியும்,ஆடைகலைந்தும் குதறப்பட்ட அந்தப்
பொழுதில்தான் ஒற்றை இலங்கையெனும் தேசிய
பாலம் என்றும் ஒட்டமுடியாவண்ணம் விரிசல் கண்டது.


குந்தி இருந்து கூழ்குடிக்க சொந்தமாக ஒரு
குடில் வேண்டும் என தமிழினம் முடிவெடுத்த
பொழுது கறுப்பு யூலையில்தான்.


பின்பொருநாள் இதே கறுப்புயூலைப் பொழுதில்தான்
என்தேசத்து இளவல்கள் நள்ளிரவுப்பொழுதொன்றில்
ஆதிக்கத் தலைநகரின் விமானநிலையத்தின்
ஓடுபாதையில் வீரம் விளைத்தனர்.
-காற்றுக்கும்
வேகம் சொல்லும் எம் கரும்புலிகள்
வெடியதிர்வுகளை
அந்தப் பின்னிரவில் உலகெங்கும் பரவவிட்டனர்.


முன்னர் எம் தமிழர்களை வெட்டியும் விரட்டியும் கொன்ற
தென்னிலங்கையின் நெற்றிப்பொட்டில் இதே யூலையில்
இடி இறக்கினர்.

-விண்ணுய வீரத்தை விமானதளத்துள்
சமராடிக் காட்டிய எம் கரும்புலிமறவரின் நினைவு சுமந்து
கறுப்புயூலையின் நாளுள் நனைவோம்.

ச.ச.முத்து 23.07.2010

No comments:

Post a Comment

Kids enjoying evening in village