Tuesday, April 30, 2013

கோமா நிலையில் சென்னைத் துறைமுக மருத்துவமனை



By -முகவை.க.சிவகுமார்-, திருவொற்றியூர்
சென்னைத் துறைமுக மருத்துவமனை நிர்வாகச் சீர்கேடுகளில் சிக்கித் தவிப்பதாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தகுதிச் சான்று காலாவதியான பிறகும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் வாகனச் சோதனையில் திருவொற்றியூர் போலீஸரிடம் சிக்கிய சம்பவம் மருத்துவமனை நிர்வாகத்தின் அவல நிலையை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
பழமையும், பெருமையும்வாய்ந்த மருத்துவமனை: 130 ஆண்டுகள் பழமை கொண்ட சென்னைத் துறைமுகத்தில் அமைந்துள்ள மருத்துவமனை 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் நலனுக்காக கட்டப்பட்ட இந்த மருத்துவமனையில் அவசரம், தீவிரம், கண், இதய நோய், மகப்பேறு உள்ளிட்ட துறைகளும், அதிநவீன அறுவைச் சிகிச்சைக் கூடமும் உள்ளன.
தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கான ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் Open Heart Surgery, Bye Pass Surgery உள்ளிட்டவைகூட இங்கு சர்வ சாதாரணமாகச் செய்யப்பட்டன. ரயில்வே, பாதுகாப்புத் துறை மருத்துவமனைகளிலிருந்துகூட சிறப்பு சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. 
திசை மாறிய மருத்துவமனை: 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஊழியர்கள் இந்த மருத்துமனையில் மட்டுமே இலவசமாக சிகிச்சை பெற முடியும். இந்நிலையில் 2003- ஆம் ஆண்டில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்துவரப்பட்ட தீயணைப்பு வீரர் சாந்தகுமார் என்பவருக்கு சிகிச்சை அளிக்கும்போது சிலிண்டரில் ஆக்ஸிஜன் இல்லாததால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி ஆயிரக்கணக்கான ஊழியர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் வசதியில்லாத நிலையில் சிறப்பு மற்றும் அவசரச் சிகிச்சைக்காக எந்த ஊழியரும் தனியார் பல்துறை மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இதற்கான கட்டணத்தை நிர்வாகமே செலுத்தும் என துறைமுக பொறுப்புக் கழகம் ஒப்புதல் அளித்தது.
இதன்பிறகுதான் முறைகேடுகள் நடைபெறத் தொடங்கின. இதனையடுத்து பெரும்பாலான நோயாளிகள் சொகுசு கருதி தனியார் மருத்துவமனைகளை நாடத் தொடங்கினர். அப்படியே துறைமுக மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்தாலும் அவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்லவே பரிந்துரைக்கப்பட்டனர். நிர்வாகம் எடுத்த இம்முடிவால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணமாகச் செலுத்தப்படுகிறது.
உள் நோயாளிகளின் எண்ணிக்கை- 50: டாக்டர்களின் எண்ணிக்கை- 45: இம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து தற்போது உள்நோயாளிகளாக சுமார் 30 முதல் 50 பேர் மட்டுமே மருத்துவமனையில் தங்கியுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கில் இருந்த வெளிநோயாளிகளின் எண்ணிக்கையும் நூற்றுக் கணக்காக குறைந்துவிட்டது.
ஆனாலும் தற்போது சுமார் 45 டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இதே அளவிற்கு செவிலியர்கள் மற்றும் சுமார் 200 ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இருப்பினும் நோயாளிகள் வருகைக் குறைவு, போதிய மருந்துகள் இல்லாதது, உபகரணங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் உள்ளிட்டவைகளால் சிகிச்சை அளிப்பதில் டாக்டர்களும் போதிய ஆர்வம் காட்டுவதில்லை.
ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கில் நடைபெற்று வந்த அறுவைச் சிகிச்சைகள் தற்போது ஒன்றுகூட மேற்கொள்ளப்படுவதில்லை என்கிறார் இயந்திரவியல் துறையின் ஊழியர் முத்துகிருஷ்ணன்.
விசாரணைக் குழு நியமிக்கக் கோரிக்கை: இந்தப் பிரச்னை குறித்து பி.எம்.எஸ். தொழிற்சங்க பொதுச் செயலாளர் சந்தானம் கூறியது: காலாவதியான ஆம்புலன்ஸ் பிடிபட்டது என்பது முறைகேடுகளின் ஒரு துளிதான்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் சட்டவிரோதமாக வேறு பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பெருமைவாய்ந்த இந்த மருத்துவமனையில் மருந்து வாங்குவது உள்ளிட்ட பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
இதற்கு துறைமுக உயர் அதிகாரிகள் பலர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே கப்பல் துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும். முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் யார் என்பதும் வெளிச்சத்துக்கு வரும் என்றார் சந்தானம்.

காலாவதியான ஆம்புலன்ஸ் வாகனங்கள்
மருத்துவமனை வசம் உள்ள TN 04  AE 1217, 1224, 1243, 1246  பதிவெண்கள் கொண்ட நான்கு ஆம்புலன்ஸ்களின் தகுதிச் சான்று (FITNESS CERTIFICATE) 2012 பிப்ரவரியிலேயே காலாவதியாகிவிட்டன. ஆனால் இவையனைத்தும் ஓராண்டுக்கும் மேலாக தொடர் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
இந்நிலையில் ஊழியர் ஒருவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் TN04  AE 1217 என்ற ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த ஆம்புலன்ஸின் தகுதிச் சான்று காலாவதியானது குறித்து போலீஸôருக்கு ஊழியர் ஒருவர் தகவல் தெரிவித்ததையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...