Wednesday, May 11, 2011

இறுதி நாட்களும் எனது பயணமும்


என் கண்ணால் கண்ட காட்சிகளை அப்போதிருந்த என் மனதின் உணர்வுகளோடு இங்கே பதிவுசெய்கிறேன்.
வரலாற்றில் வாழவேண்டிய தமிழர்களின் கண்ணீர் கதைகளாக இருக்கட்டும் என்பதால் இயன்றவரை எழுதுகிறேன். உண்மையைச் சொன்னால் இவற்றை எல்லாம் எழுத எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை. ஏனெனில் இதன் ஒவ்வொரு வரியையும் எழுதும்போது மீண்டும் மீண்டும் செத்துப்பிழைக்கிறேன்.
நினைக்காமல் இருந்துவிட விரும்பும் சில காட்சிகளை நினைத்து நினைத்து எழுதவேண்டி இருப்பதில் எவருக்கும் விருப்பம் இருக்காதல்லவா? நானே நினைக்கத் தயங்கும் விடயங்களை பிறருக்கு படிக்கத்தருவதா என்ற தயக்கமும் எனக்குண்டுதான். எனினும் இந்த அவலங்களும் மரணங்களும் தழிழர்களின் வரலாறு என்பதால் எழுதுகிறேன்.
இனி……
புளியங்குளத்திலும் முகமாலையிலும் மணலாறிலும் சிறிலங்கா படையினர் நிலைகொண்டிருந்த நாட்கள் அவை. எனினும் யுத்தம் வன்னி மண்ணை உலுப்பி எடுத்துக்கொண்டிருந்தது.நாலாபுறமிருந்தும் மாறிமாறி யுத்தமுனைச்சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. முடுக்கிக்கொண்டு கிளம்பும் படையினரும் அவர்களின் கொடுக்குகளை முறித்தெறியும் போராளிகளும் ஊடகங்களில் நாளாந்தச் செய்தியாகினர்.
விடமாட்டோம் விடமாட்டோம் என்ற முயற்சிகளில் களமுனைகள் எரிந்து கருஞ் சாம்பலாகிக் கொண்டிருந்தன. படையினரின் எந்தப்பெரிய முன்னேற்ற முயற்சிகள் எனினும் அது ஒரிருநாட்களிலேயே முடக்கப்பட்டன.
நாலாபுறமும் அனல்பறக்கும் சண்டைகள் அடிக்கடி நடந்தன. எந்த முறியடிப்புத் தாக்குதலில் போராளிகள் மும்மரமாக ஈடுபட்டு தம்மை தாரைவார்த்து தடுத்துநிறுத்தினாலும் அவை எழுந்துநின்ற கிளிநொச்சி மாநகரை பெரிதாகத் தாக்கவில்லை.
வன்னி முழுவதிலும் வீரச்சாவு நிகழ்வுகள் நாளாந்தம் நடக்கத்தொடங்கின. கிளிநொச்சியின் கனகபுரத்திலும் முல்லைத்தீவின் முள்ளியவளையிலும் விசுவமடுவின் தேராவிலிலும் அமைந்திருந்த துயிலும் இல்லங்கள் நாளாந்தம் சோக இசையில் மூழ்கின.
கல்லறை வரிசைகள் வேகமாக நிறையத்தொடங்கின. கல்லறையில் விதைக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் களமுனையில் எதிரிப்படையோடு மூர்க்கமாய் சண்டையிட்டுத்தான் மடிந்தார்கள்.
பதிலுக்குப்பதில் படையினரும் செத்து மடிந்தனர். எனினும் படையினர் எல்லாவழிகளாலும் முன்னேற தலைப்பட்டுக்கொண்டிருந்தனர். எல்லாவற்றையும்விட முகமாலை நாகர்கோயில் பகுதியை ஊடறுத்து எ-9 வீதியூடாக கிளிநொச்சியை கைப்பற்றிவிடவே அதிகம் விரும்பியது படைத்தரப்பு. அதனால் பாரிய முன்னகர்வுகளை அதிகம் மேற்கொண்டனர் படையினர். எனினும் அது அன்று முடியாத காரியங்களாகிப்போயின.
கிளாலி கடற்கரை தொடக்கம் முகமாலை அடங்கிய நாகர்கோவில் கடற்கரை வரையிலான வடபோர்முனையில் போராளிகளின் காவல்வேலி மிகப்பலமாய் இருந்தது.
சதாகாலமும் விழிப்புடன் இருந்தபோராளிகளால் படையினரின் சின்னச்சின்ன முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. சாதாரண வேவு நடவடிக்கைகூடச் செய்யமுடியாத நிலையில் எதிரியை தடுத்து வைத்திருந்தார்கள் விடுதலைப்போராளிகள்.
படையினரின் எந்தப்பெரிய படைமுன்னெடுப்பாக இருந்தாலும் மூன்றுநான்கு மணித்தியாலங்களுக்குள் அல்லது ஒரே நாளைக்குள் முறியடிக்கப்பட்டுவிடும். சண்டையின் முடிவிலும் படையினரின் நூற்றுக்கணக்கான ஆயுதங்களையும், சடலங்களையும் அள்ளிவந்து கிளிநொச்சியின் விளையாட்டு மைதானத்தில் குவித்தார்கள் விடுதலைப் போராளிகள்.
ஆனால் ஏனைய போர்முனைகள் அப்படி இருக்கவில்லை, இருக்கவும் முடியாது. காடுகரம்பையெங்கும் பரந்துநீண்ட ஏனைய களவரிசைகளில் படையினரின் ஆதிக்கமே கோலோச்சியது.
எத்தனைதான் வீரத்தோடு போராளிகள் நின்றாலும் அவர்களால் எதிரியோடு நேருக்குநேர் சண்டையிட முடியவில்லை. ஏனெனில் எதிரி நேருக்குநேராக சண்டையிட வருவதில்லை. அவர்களுடைய ஆயுதங்களே சண்டையிட்டன.
எல்லா வழிகளிலும் போராளிகளின் காவல் வேலிகளை உடைத்துக்கொண்டுவர எத்தனித்த படையினருக்கு மேற்குப்பகுதியே முதலில் இடம் கொடுத்தது. மன்னாரின் அடம்பன், பாலைக்குழி, மடு வழியாக திறந்த பாதைகள் படையினரை தங்குதடையின்றி முன்னேற வைத்தது. அதன் பிறகே கிளிநொச்சி நகரமும் கிபிர்களின் பேரிரைச்சலால் அதிரத்தொடங்கியது.
சிறிலங்கா வான்படையின் யுத்தச்சன்னதங்கள் தமிழ் மக்களால் வாழ்நாளிலும் மறக்க முடியாதவை. காலத்துக்குகாலம் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியவை. உலக நாடுகளால் மனதார கொடுக்கப்பட்ட பலவகைப்பட்ட போர்விமானங்கள் போர்க்களத்தையும் மீறிவந்து கோயில்களையும் குடியிருப்புகளையும் சிதறடித்துச் சென்றன.
ஊர்களுக்குள் அமைந்திருந்த போராளிகளின் தங்குமிடங்களை இலக்குவைத்தும் குண்டெறிவதுண்டுதான். ஆனால் போர்விமானங்களின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் எண்ணிறைந்த பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள்.
காலையில் எழும் விமானிகள் தேநீர்தன்னும் குடிப்பார்களோ இல்லையோ குண்டுகளோடு விமானங்களை கிளப்பிக்கொண்டு வந்துவிடுவார்கள். கிளிநொச்சியின் மூலைமுடுக்குகளில் இருந்த போராளிகளின் முகாம்கள் நாளாந்தம் குறிவைக்கப்பட்டன.
கிபிர்கள், மிக் விமானங்கள் என்பன வீசிய பலநூறு குண்டுகளால் கட்டிடங்கள் அழிந்தன. உயிர்களும் கருகின. விமானத் தாக்குதல்கள் பற்றிய செய்தி வராமல் ஈழநாதம் பத்திரிகை வெளிவந்த நாளில்லை எனலாம்.
காயப்பட்டவர்களதும் உறவினர்களதும் கண்ணீர் கதறல் போராளிகள் ஒலிபரப்பிய புலிகளின்குரல், தமிழீழவானொலி மற்றும் தமிழீழ தேசிய தொலைக்கட்சியில் அடிக்கடி அழுதன.
ஒரு மனிதன் காலையில் திருப்தியாக காலைக்கடன் கழிப்பதைப்போல விமானிகளும் தம் கடைமைகளைச் செய்துமுடித்த போதுகளில், ஊரெல்லாம் சாவும் அழிவும் ஓலமும் ஒப்பாரியும்தான்.
மரணதேவன், இழுத்துக்கட்டிய கச்சையோடு அகோரத்தாண்டவம் ஆடத்தொடங்கிவிட்டான். விளைவு கிளிநொச்சி மாநகரமும் சின்னாபின்னமாகத் தொடங்கியது.
மக்கள் வீடு வளவுகளைவிட்டு கிளம்பத்தொடங்கினார்கள். இடப்பெயர்வு அவலம் தொடர்ந்தது. வீட்டுக் கூரைகளை பிரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். மன்னார் தொடக்கம் பளை மற்றும் புளியங்குளம் என நாலாபுறத்திருந்தும் புறப்பட்ட மக்களும் கிளிநொச்சியில்தான் தற்காலிக தங்குமிடங்களில் இருந்தார்கள்.
இப்போது இடம்பெயர் மக்களின் தொகை அதிகரித்துவிட எஞ்சிய கிராமங்களும் நிரம்பி வழியத்தொடங்கின. ஒரு குடிசை போடுமிடத்துக்குக்கூட போட்டி வரத்தொடங்கியது. மக்களின் அகோர தேவையை கொஞ்சமாவது பூர்த்திசெய்ய எந்தத் தொண்டு நிறுவனங்களும் உதவவில்லை.
சில அத்தியாவசியத் தேவைகளை தமிழர் புனர்வாழ்வு கழகம் செய்து கொடுத்துத்தான் பார்த்தது. ஆனால் அதன் கையையும் மீறிய, மிதமிஞ்சிய தேவையாளர்கள் சேவைபெற காத்துக்கிடந்தனர்.
சாவையும் அழிவையும்பற்றி புலம்பவும் பண உதவி கோரவுமாக நூற்றுக்கணக்கான மக்கள் தொலைபேசி நிலையங்களில் குழுமினார்கள். ஓரிரு தொலைபேசி நிலையங்களே இயங்கியதால் தொடர்பாடல் செய்வது பெருத்த சவாலானது.
ஐந்தே நிமிடங்கள் கதைப்பதற்காக ஐந்து மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருக்கவேண்டியதானது. சின்னச்சின்னத் தேவைகளை நிறைவேற்றக்கூட நீண்டநேரத்தையும் நிறையப் பணத்தையும் செலவழிக்கவேண்டியிருந்தது.
எத்தனை தொலைபேசிகள் இருக்கின்றனவோ அத்தனை வரிசைகள் நகர்ந்தன. அவ்வரிசைகளில் எப்போதும் குறையாத சனநெரிசலும் சலசலப்பும்தான்.
அதற்குமுன்பான காலங்களில் வெடிச்சத்தங்களை கேட்டவுடன் இடம்பெயர்ந்த மக்கள் இப்போது குடியிருப்புகளே குதறப்படும்போதுதான் குடிபெயர்ந்தார்கள். இரண்டாயிரத்து ஏழாமாண்டில் மன்னாரின் அடம்பன் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அதற்குமுன்பும் அவர்கள் எத்தனையோ தடவைகள் இடம்பெயர்ந்தவர்கள்தான். ஊரைவிட்டு கிளம்புவதும் திரும்பி வருவதுமாக அவர்கள் பட்ட அவலங்கள் கொஞ்சநஞ்சமல்ல. இதுவே அவர்களது வாழ்வில் அமையப்போகும் மிகநீண்ட இடப்பெயர்வு என்று அன்று அவர்களுக்குத் தெரியாது.
பாலைக்குழி, இத்திக்கண்டல், சகாயவீதி, காத்தான்குளம், கருக்காய்குளம், வட்டக்கண்டல், ஆண்டான்குளம், கன்னாட்டி, அடம்பன் சாலம்பன் போன்ற பகுதிகளையுடைய மக்கள் முதல் இடப்பெயர்வைத் தொடங்கியபோது தாம் வட்டக்கச்சியையும் தாண்டி செல்லவேண்டிவரும் என்று கனவிலும் நினைக்கவில்லை.
எப்போதும் போல மடுவில் இருந்துவிட்டு திரும்பலாம் என்றிருந்த அவர்கள் மடுவையும் விட்டுவிட்டு இடம்பெயரவேண்டி ஏற்பட்டுவிட்டது. மெல்ல மெல்ல இடம்பெயர்ந்த அவர்கள், வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு செல்வதைப்போல அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்த மக்களையும் சேர்த்துக்கொண்டு கிளம்பிக்கிளம்பி வட்டக்கச்சியின் பெரிய பெரிய வளவுகளில் சின்னச்சின்னக் குடிசைகளைப் போட்டுக்கொண்டு குந்தினார்கள்.
எனினும் அந்த இருத்தலும் நீடிக்கவில்லை. வட்டக்கச்சியின் சின்னச்சந்தையடியில் விழுந்த எறிகணைகள் பலரது உயிர்களைக்குடித்து, இண்டு இடுக்கற்று நிறைந்திருந்த மக்களை மீண்டும் விரட்டத் தொடங்கின.
இப்போது அந்த மக்கள்திரள், சிறிலங்கா அரசு, பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பகுதியான முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த உடையார்கட்டு, விசுவமடு வள்ளிபுனம், இரணைப்பாலை ஆகிய பகுதிகளுக்கு நகரத்தொடங்கியது.
இடப்பற்றாக்குறை மற்றும் உணவுத்தட்டுப்பாடு காரணமாக மக்களுக்குள் நாளாந்தம் பிரச்சினைகள் அதிகரித்தன. ஓவ்வொரு இடப்பெயர்வும் ஒவ்வொருவருக்கும் பெருஞ்சவாலாக இருந்தது. அது பொதுமக்களுக்கு மட்டுமல்ல போராளிகளுக்கும்தான். பெருந்தொகையென கிளம்பிய அத்தனைபேரும் எங்கேதான் செல்வது? எப்படிச்செல்வது? சினமும் துயரமும் பொங்கினாலும் எங்கேயாவது சென்றுதானே தீரவேண்டும்.
வட்டக்கச்சியிலிருந்து மக்கள் இடம்பெயர இடம்பெயர, கையோடு தர்மபுரம், விசுவமடு மக்களும் மூட்டைமுடிச்சுகளை கட்டத்தொடங்கினார்கள். எறிகணைகளே ஊர்முழுவதையும் உழுது எறியப்போதுமானவையாக இருந்தாலும் மிகையொலி விமானங்களும் ஊர்களைக் குற்றி உமிகளாக்கின.
‘கொஞ்சம் பாத்துப்போவம்.’ என்று வட்டக்கச்சியின் கல்மடுவில் தாமதித்த பலர் உயிர்களை இழந்தார்கள். பலர் உடுத்த உடைகளோடுமட்டும் உயிர்தப்பி வந்துசேர்ந்தார்கள். யுத்தம் ஒவ்வொரு குடும்பத்திலும் புகுந்துவிளையாடியது. அதன் எக்காளச்சிரிப்பில் மக்கள் அரண்டு போனார்கள்.
அன்றைய நாட்களில் பெரும்பாலும் மறிப்புச்சண்டைகள் நடக்கவே இல்லை. சில நேரங்களில் சில பகுதியில்தான் போராளிகள் சண்டையிட்டார்கள். மற்றும்படி படையினர் பொடிநடையாய் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவர்கள் முன்னேறிய பாதைகளில் இருந்த அத்தனை தடைகளையும் எறிகணைகளாலேயே துடைத்தெறிந்தனர்.
போர்ப்பணியில் இணைக்கப்பட்ட புதிய போராளிகள்கூட வெஞ்சினங்கொண்டு எதிரியோடு சண்டையிட்டு வீரச்சாவடைந்தார்கள்.
எந்தக்காப்பரணுக்குள் இருந்தாலும் மரணம் தங்களைத்தேடிவரும் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. எதிரியை நேரே சுடமுடியாத சூழலில்நின்று வீணே எதற்காக சாகவேண்டும் என்று நியாயம் கேட்டவர்களும் இருக்கத்தான் செய்தார்கள்.
போதியளவு சண்டைப்பயிற்சிகளை வழங்க போராளிகளிடம் நேரமோ பயிற்சித்தளங்களோ இருக்கவில்லை. களமுனைகளே பயிற்சிபெறும் இடங்களாகின. நேரடிப் பயிற்சி. ஆனால் அவர்கள் சுட்டுப்பழக எந்த எதிரியும் எதிரே தெரிவதில்லை. எதிரி ஏவும் குண்டுமழை மட்டுமே போராளிகளின் களவரிசைகளை முழுதுமாய் துடைத்தெறியும்.
வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பணி எல்லோருமே வாருங்கள் போராடுவோம் என மாற்றமடைந்தது. ஏனென்றால் அந்தளவுக்கு களவரிசையில் பாரிய வெற்றிடங்கள் ஏற்பட்டன.
போராளிகளின் இருப்பிடங்கள் விமானங்களாலும் எறிகணைகளாலும் தாக்கப்படுவதன் காரணமாகவும் நிமிடத்துக்கு நிமிடம் சாவு நடந்தது.
படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் ஊர்கள் எரிந்தாலும் எரிப்பவனை எதிர்க்கும் எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு எழவில்லை என்பது அதிசயமே.
போரில் தொடர்ந்தும் தோல்வியும் இழப்பும் வந்தபோது போராட்டத்தை கடுமையாக விமர்சிக்கதொடங்கினார்கள். எனினும் காயப்பட்டுவரும் போராளிகளுக்கு குருதிகேட்டால் கொடுக்காமல்விட மனதில்லை அந்த மக்களுக்கு. அவர்களது அடிமனதிலிருந்த உண்மையான பற்றும் தனியரசின் மீதான விருப்பமும் இல்லாது போகவில்லை.
அந்நியர்களின்கீழ் அடிமையாக வாழ்வதைவிட சுயவிருப்பு வெறுப்புகளோடு வாழக்கூடிய ஒரு நாடு தமக்குவேண்டும் என்பதாலும் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையாலும் அந்தமண்ணோடு இணைந்துநின்றார்கள்.
ஆளிணைப்பு போராளிகளை மண்ணை வாரியிறைத்துச் சபித்தார்கள். ஆனால் களமுனையில் நின்று களைத்து வந்தவர்களை வீட்டுக்குள்வைத்து சோறூட்டி உபசரித்தார்கள்.
பல வீடுகளில் போராளிகளுக்காக உலையேறும் அடுப்புகள் இருந்தன. தமக்கில்லாது விட்டாலும் போராளிகளுக்கு வயிறுநிறைய கொடுக்க விரும்பிய மக்கள் தாராளமாக இருந்தார்கள்.
எனினும் அந்தத் துயரமும் கடினமும் நிறைந்த, கத்திமுனையில் நடக்கும் வாழ்க்கையை தாக்குப்பிடிக்க முடியாதென முடிவெடுத்தவர்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வரவே விரும்பினர்.
களச்சாவுகளைவிட ஊருக்குள் விழுந்த எறிகளைகளால் ஏற்பட்ட அவலச்சாவுகள் நாளுக்கு நூறை தாண்டத்தொடங்கின. படையினர் விசுவமடுப்பகுதியையும் கடக்கத் தொடங்கியபோது மனிதர்கள் நடமாட வீதிகளில் இடமே போதவில்லை.
பாரிய வாகனங்களும் சைக்கிள்களும் மோட்டார் சைக்கிள்களும் வீதி முழுவதையும் அடைத்து நிறைத்துவிட்டன. மூட்டை முடிச்சுகளை தலைகளில் சுமந்த மக்கள்வேறு இடித்துப்பிடித்துக்கொண்டு நகர்ந்தார்கள்.
ஒரேயொரு பாதையாக இருந்த தேராவில் பாதையை மூடி வெள்ளம் பாய்ந்தது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல என்பார்களே அப்படியானதாகத்தான் சனங்களின் நிலையும் இருந்தது.
உடனடியாகவே தேராவில் தேக்கங்காட்டின் ஊடாக பாதையொன்றை அமைத்தார்கள். கொட்டும் மழை புதிதாக காட்டைவெட்டி அமைத்த அந்தப்பாதையையும் சேற்றுக்கூழாக்கியது. சேறுஞ்சகதியுமான அப்பாதையால் நெருக்கியடித்துக்கொண்டு நகர்ந்த மக்களில் எரிச்சலும் சினமும் மேலோங்கி ஒரே சண்டையையும் சச்சரவைவயும் ஏற்படுத்தியது.
அதுவரை இருப்பதுகூட தெரியாமல் கிடந்த சாதாரண மருத்துவ நிலையங்கள்தான் பாரிய செயற்பாடுகளைக்கொண்ட மருத்துவமனைகளாக மாறத்தொடங்கின.
அரசுக்கு எல்லா நாடுகளும் ஆயுதங்களை வழங்குகின்றன என்று மக்கள் எல்லோருக்குமே தெரிந்தாலும் அவர்களாலும் எப்படி இப்படி தண்ணீரைப்போல கொட்டித்தள்ளும் அளவுக்கு எறிகணைகளையும், குண்டுகளையும் வாரியிறைக்க முடிகிறது என்றுதான் மூக்கின்மேல் விரல்வைத்தார்கள். அந்தளவுக்கு படையினர் எறிகணைகளை மழைபோல பொழிந்தார்கள். மணித்தியாலத்திற்கு ஆயிரம் இரண்டாயிரம் என்று ஊர்மனைகளுக்குள் விழுந்த எறிகணைகளில் பத்து எறிகணைகளாவது நூறு நூற்றைம்பதுபேரை கீறிக் கிழித்துப்போட்டன.
தொட்டிலில் கிடந்த குழந்தைக்கும் உடல் சிதறும். தாயின் முலையில் பாலருந்திக் கொண்டிருக்கும் மழலைக்கும் தலை பறக்கும். சோற்றை அள்ளி வாயில் வைக்க போனவரின் கை துண்டாடப்படும். பதுங்கு குழிக்குள் பாயும் சிறுமி காலை இழப்பாள் என்றெல்லாம் மனிதர்களின் அங்கங்கள் சிதறுதுண்டுகளால் அறுத்தெறியப்பட்டன.
சாவு நடக்காத குடும்பம் எதுவும் இருக்கவில்லை. கதறல் ஒலி கேட்காது நேரம் கழியவில்லை. எந்த நேரமும் எல்லோருக்கும் அடி விழுந்தது. அனைவரும் வலியால் துடித்தனர். பொதுமக்கள் போராளிகள் என்ற வேறுபாடின்றி எல்லோருமே ஓடிக்கொண்டிருந்தார்கள். நின்று நிதானித்த ஒவ்வொருவரும் உடலின் பாகங்களையோ உயிர்களையோ இழக்கவேண்டி இருந்தது.
பயணம் தொடரும்…
ஆனதிஈழநேசன்

No comments:

Post a Comment

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...