Monday, March 28, 2011

அமைச்சராக அதிரடித் திட்டமா? பலே தங்கபாலு



திமுக கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் சிட்டிங் எம்.எல்.ஏவான எஸ்.வி.சேகரும், கராத்தே தியாகராஜனும் மயிலாப்பூர் தொகுதி தங்களுக்கு ஒதுக்கப் படலாம் என்று பெரிதும் எதிர்பார்த்தனர்

யாரும் எதிர்பாராவிதமாக மயிலாப்பூர் தொகுதியை மேலிடத்தில் பேசி தன் மனைவிக்கு பெற்றுத் தந்தார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு. தங்கபாலுவின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி தங்கபாலுவின் உருவ பொம்மை எரிக்கப் பட்டு சத்யமூர்த்தி பவனும் தாக்கப் பட்டது. மயிலாப்பூர் தொகுதியில் மகிளா காங்கிரஸ் செயலாளர் சிவகாமியும் போட்டி வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளராகவும் தங்கபாலுவே மனு செய்துள்ளார். இந்நிலையில் தங்கபாலுவின் மனைவி ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனு தேர்தல் அதிகாரிகளால் இன்று நிராகரிக்கப் பட்டது. ஜெயந்தி தங்கபாலுவின் வேட்புமனுவுடன் இரண்டு ஆவணங்கள் இணைக்கப் பட வில்லையென்று அவரது வேட்புமனு நிராகரிக்கப் பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கபாலுவோ எல்லா ஆவணங்களும் இணைக்கப் பட்டு இருந்தன என்றும் எங்கேயோ மாயமாகி விட்டது என்றும் கூறியுள்ளார். 4280 பேர் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில் ஜெயந்தி தங்கபாலுவின் ஆவணங்கள் மட்டும் எப்படி மாயமாகிப் போனது என்பது தங்கபாலுவுக்கே வெளிச்சம். தேர்தல் அதிகாரிகளோ வேட்புமனுவுடன் இணைத்துள்ள ஆவணங்கள் மாயமாக வாய்ப்பில்லை என்றும் ஜெயந்தி தங்கபாலு இணைக்கவே இல்லை என்றும் உறுதியாகக் கூறியுள்ளனர்.

மேலும் ஜெயந்தி தங்கபாலுவின் பிரமாணப் பத்திரத்தில் கணவர் தங்கபாலுவின் அசையும் சொத்து மதிப்பாக ரூ 3,50,16 ,043  காட்டியுள்ளார். சொத்து மதிப்புகளைக் கூட்டிப் போட்டதில் ரூ 10 லட்சம் அதிகமாகக் காட்டியுள்ளார். தங்கபாலுவின் பிரமாணப் பத்திரத்தில் இம்மதிப்பு சரியாகக் காட்டப் பட்டுள்ளது.

திமுக அணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கோரி வந்த நிலையில் திமுகவும் மறைமுகமாக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புதல் அளித்து விட்டதாகவே தெரிகிறது. அதன் காரணமாக மீண்டும் திமுக கூட்டணி வெல்லும் பட்சத்தில் தாமும் காங்கிரஸ் சார்பாக அமைச்சராகி விடலாம் என்ற கனவுடனே தங்கபாலு திட்டமிட்டு இவ்வாறு செயல்பட்டு இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நேரடியாக சீட் கேட்டால் கோஷ்டித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பிரச்னை உருவாகும். மேலும் மேலிடத்தைச் சமாதானப்படுத்தி சீட் வாங்கினாலும் எதிர் கோஷ்டியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்றோரும் தேர்தலில் நிற்க அது ஒரு வாய்ப்பாக அமையக் கூடும் என்ற அச்சத்தில் தங்கபாலு சாதுர்யமாக காய் நகர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

கிருஷ்ணகிரி தொகுதியில் தனது ஆதரவாளரான ஹசீனா சையதுக்கு சீட் வாங்கி கொடுத்து வேட்பாளர் மாற்றப் பட்ட பிறகும் புதிய வேட்பாளரான மக்பூல் ஜான் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. இச்சம்பவத்திலும் தங்கபாலுவின் கைங்கர்யம் இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. திமுகவுடன் மல்லுக்கு நின்று சீட்களை போராடி வாங்கிய காங்கிரசுக்கு வெற்றி வேட்பாளரை தேர்ந்தெடுக்கத் தெரிய வில்லை என்று விமர்சகர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...