Saturday, March 12, 2011

ஜாதி இரண்டொழிய வேறில்லை....

 
முகவை.க.சிவகுமார்.     
 
      சமூக ஆர்வலர் ஒருவர் ஆற்றிய உரை: தங்கள் வாழ்க்கையில் நடைபெற்றுள்ள மிக முக்கிய நிகழ்வுகளைப் பட்டியலிட்டு, அதற்கு உதவியோரை வரிசைப்படுத்துங்கள். பின்னர் அவர் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். அதில் தங்களுக்கு உதவியோர் பெரும்பாலானோர் வேறு சாதிகளைச் சேர்ந்த நண்பர்களாகவே இருப்பர். எனவே சொந்தக்காரர்கள் பெரும்பாலும் அதிகம் உதவியதில்லை. எனவே சாதிகளை மறந்து விட்டு மனித நேயத்தை வளர்க்க பாடுபடுங்கள் என முடித்தார்.  
      1906-ல் ஆங்கிலேயரின் ஏகபோக வணிக முறையைக் கண்டித்து சுதேசி கப்பல் கம்பெனி மூலம் தூத்துக்குடி-கொழும்பு இடையே கப்பலோட்டினார் வ.உ.சி. இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசும் பயணக் கட்டணத்தை ஒரு ரூபாயாக குறைத்தது. இதனையடுத்து சுதேசி கப்பல் நிறுவனமும் தனது கட்டணத்தை 50 பைசாவாக்கியது. பிரிட்டிஷ் கப்பல் நிறுவனம் பயணத்தையே இலவசமாக அறிவித்தது. விளைவு,  சுதேசி கப்பல்கள் காலியாகச் சென்றன. பெருத்த நட்டத்திற்கிடைய 1909-ல் சுதேசி கப்பல் கம்பெனி திவாலாகியது. 
     கோயம்பத்தூர் சிறைச்சாலையில் செக்கிழுத்த வ.உ.சி நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்தபோது அவரை வரவேற்க வந்தவர்கள் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட இருவர் மட்டுமே. சொத்துக்களை, வழக்கறிஞர் உரிமத்தை இழந்து தன் வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடி 1936 நவ.18-ல் வ.உ.சி. மறைந்தார்.
     1800-களின் தொடக்கத்தில் கொங்கு நாட்டின் பாளையக்காரர்களாக இருந்து  ஆங்கிலேயர்களை எதிர்த்தார் தீரன் சின்னமலை. ஏராளமான இளைஞர்களை ஒன்று திரட்டி பிரெஞ்ச் நாட்டின் ராணுவப் பயிற்சி பெற வைத்தார். இதே காலகட்டத்தில் திப்பு சுல்தான் தனது மைசூர் படை மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டபோது அவருக்கு தனது படையுடன் பகிரங்கமாக உதவியவர் சின்னமலை. திப்புசுல்தானைத் தோற்கடித்த ஆங்கிலேயர் தீரன் சின்னமலையையும் பழிதீர்த்தனர்.  காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆடிப் பெருக்கு தினமான 1805  ஜூலை 31-ல் சங்ககிரியில் தீரன் சின்னமலை தூக்கிலிட்டப்பட்டார்.
    முதல் இந்திய சுதந்திரப் போர் துவங்குவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே வீரபாண்டிய கட்டப்பொம்மன், மருது பாண்டியர் உள்ளிட்டோர் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடினர். 1789-ல் 12 ஆயிரம் வீரர்களைத் திரட்டி ஆங்கிலேயரின் கூட்டாளியாகச் செயல்பட்ட ஆற்காடு நவாபை மருது பாண்டியர்கள்  விரட்டியடித்தனர். கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்ட பிறகு தப்பி வந்த ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கினர். இதனையடுத்து ஆங்கிலேயர்கள் மருது பாண்டயர்களை வீழ்த்தினர்.  மருது சகோதரர்கள் தூக்கிலிடுவதற்கு முன்பு கூறிய வரிகள் இவை: நண்பர்களுக்காக போராடினோம்....நாட்டிற்காக உயிர் துறக்கிறோம்.
     எட்டையபுரத்தில் சுப்பிரமணியனாகப் பிறந்து குறுகிய காலத்திலேயே தேசியக்கவி எனப் போற்றப்பட்டவர் பாரதி. தனது பாடல்கள் மூலம் தேசப்பற்றுவை ஊட்டி வளர்த்த பாரதி வறுமையில் வாடினார். 39 வயதில் பாரதி மறைந்தபோது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் வெறும் பதினான்கு பேர் மட்டுமே.
      பசும்பொன் கிராமத்தில் பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்த முத்துராமலிங்கத் தேவர் ஆங்கிலேயர்களின் அநீதிகளை எதிர்த்து இறுதிவரை போராடியவர். தான் பதவி வகித்த தொகுதியில் ஒரு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவரை நிறுத்தி சட்டமன்ற உறுப்பினராக்கினார். ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலைத்தை தலித் சமுதாயத்தினருக்கே தானமாக வழங்கியவர்.  மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தலித்துகளை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் செய்தவர் தேவர்
      விருதுநகரில் பிறந்த காமராஜர் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை வழங்கினார். 12 ஆயிரம் பள்ளிகளை 27 ஆயிரமாக உயர்த்தி கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியவர். சென்னை ஐ.ஐ.டி,  திருச்சி பெல், நெய்வேலி என்.எல்.சி, வைகை, சாத்தனூர், கீழ்பவானி, மணிமுத்தாறு, அமராவதி உள்ளிட்ட அணைகளை கட்டியதால்தான் தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது.  பிறந்த ஊரிலேயே தேர்தலில் காமராஜர் தோற்கடிக்கப்பட்டார்.
     மேலூர் தும்பைப்பட்டி குக்கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த பி.கக்கன், சட்டமன்ற,மக்களவை உறுப்பினர், பொதுப்பணி, விவசாயம், காவல் உள்ளிட்ட துறைகளின் அமைச்சராகப் பரிணமித்தவர்.  அரசியலில் நேர்மைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த கக்கன் 1967 தேர்தலில் தோற்றுப் போனார். பின்னர் அரசியலில் இருந்தே ஓய்வு,  வறுமையில் வாடி இறந்து போனார்.
      மேலே குறிப்பிட்டுள்ளதியாகத் தலைவர்கள், அண்ணா, பெரியார், ராஜாஜி, எம்.ஜி.ஆர் போன்றவர்கலெல்லாம் கோலோச்சிய தமிழகம் சாதீய கட்சிகளின் பின்னால் செல்லும் நிலைமை. ஒரே சாதிக்கு பல கட்சிகள். அந்த பல கட்சிகளும் எதிர் எதிர் அணியில் கரம் சேர்ந்து தேர்தலைச் சந்திக்க உள்ளன. தேர்தல் தோல்வி பயம் கொடுப்பதால் தி.மு.க., அ.தி.மு.க-வும் அவர்களைச் சேர்த்துக் கொள்ள போட்டி போடுகின்றன.
    தற்போதைய நிலவரப்படி விடுதலை சிறுத்தைகள்-புதிய தமிழகம்,  மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், கொங்கு முன்னேற்ற பேரவை-கொங்கு இளைஞர் பேரவை, பா.ம.க-வன்னியர் கூட்டமைப்பு, மனித நேய மக்கள் கட்சி-முஸ்லீம் லீக், சமத்துவ மக்கள் கட்சி-பெருந்தலைவர் மக்கள் கட்சி என ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்காக போராடுவதாகக் கூறும் இவர்கள் வரும் தேர்தலில்  முண்டாசு தட்ட தயாராகிவிட்டனர். புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம் போன்ற கட்சிகளுக்கு இதுவரை இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்துள்ளன.
     முன் பத்திகளில் குறிப்பிட்டுள்ள தலைவர்கள் வாழ்ந்தபோது தங்கள் சாதியினரை முன்னிறுத்தியது இல்லை. நேசம், நாட்டுப்பற்று, தியாகம்தான் அவர்களின் இதயத்தில் கோலோச்சி இருந்தன. நாட்டின் சொத்தாக விளங்கக் கூடிய தியாக சீலர்களை எல்லாம் சாதி கண்ணோட்டத்தில் கொண்டு வருவது அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை, செய்த தியாகங்களை எல்லாம் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கிறது.
சாதி அமைப்புகள் இருக்க கூடாது என்பது நம் வாதம் அல்ல. பதவியை அடைய குறுக்கு வழியாக சாதிகள் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்கனவே உள்ள பெரிய அரசியல் கட்சிகளும் துணை போகின்றனவே என்பதுதான் எதார்த்தவாதிகளின் கவலையாக உள்ளது. 
      சமுதாயப் பணிகளில் எப்போதும் அரசியலை அனுமதிக்கக் கூடாது.  சமுதாய உதவி என்பது முதலில் குடும்பத்திலிருந்து துவங்க வேண்டும்.  வசதியில்லாத அண்ணன், தம்பிகள், உற்றார், உறவினர்களுக்கு வசதி படைத்தவர்கள் உதவிட முதலில் உதவிட வேண்டும். பின்னர் அவரது கிராமம், இதர ஜாதியினர் என படிப்படியாக உதவி செய்தாலே அனைத்து சமுதாயத்தினரும் உயர்ந்திட முடியும். மற்றபடி அரசியலில் ஈடுபட்டுத்தான் அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்திற்கு சேவையாற்ற முடியும் என்பது ஏற்கத் தக்கதல்ல என்கிறார் ஃபோகஸ் அகாடமியின் நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.சங்கரவடிவேலு.
    தமிழகத்தில் நகரத்தார்கள், ஜைன, கிருத்தவ, இந்து மிஷன்கள் போன்றவை ஓசையின்றி பல்வேறு அறப்பணிகளை நீண்டகாலமாகச் செய்து வருகின்றன. இவைகள் மீது சாதி முத்திரைகள் குத்தப்பட்டிருந்தாலும் கூட அவர்களின் சேவையில் அது ஒரு போதும் எதிரொலித்தது இல்லை. சமுதாயத்திற்கு சேவை செய்தே ஆகவேண்டும் என விரும்பும் சாதீயக் கட்சிகள் இது போன்ற அமைப்புகள் மூலம் சேவையைத் தொடரலாம்.  ஒரிரு தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகி, ஒட்டுமொத்த சாதிக்காரர்களை முன்னேற்ற முடியும் எனில் அந்த சாதியைச் சேர்ந்த, அரசியல் கட்சிகள் மூலம் பதவியில் இருந்த நூற்றுக் கணக்கான எம்.எல்.ஏ-க்கள் செய்யாதது ஏன்?. சமுதாய வளர்ச்சிக்கு அரசியல் பதவி மட்டுமே பயனளிக்காது.
       மேலே குறிப்பிட்டுள்ளவர்களை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.  எதிர்காலத்தில் தங்களை முதலியார், ஐயர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், நாயுடு என கொச்சைப்படுத்துவார்கள் என தங்கள் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.  அந்த மாமனிதர்கள் தமிழத்திற்கு சொந்தமானவர்கள். அவர்களை சாதீய முன்னோடிகளாக்கி கொச்சைப் படுத்த வேண்டாம் என்பதே பெரும்பாலோரின் வேண்டுகோள். ஜாதி இரண்டொழிய வேறில்லை. ஏழைகள்- பணக்காரர்கள் என்பதுதான் அது.
      சாதி வேற்றுமையைச் சொல்லி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எல்லாம் மாற்றுச் சாதியினரோடு சென்னையிலும், டெல்லியிலும்  கொஞ்சிக் குழாவுவதும், அவர்கள் வீடுகளில் லட்ச ரூபாய் விலையுள்ள உயர்ரக நாய்கள், மீன்கள் வளர்க்கப்படுவது எல்லாம் குக்கிராமத்தில் இருக்கும் சாதீயத் தொண்டனுக்குத் தெரியவா போகிறது?. அதுதான் அரசியல்வாதிகளின் பலமே.

No comments:

Post a Comment

Kids enjoying evening in village