Tuesday, January 25, 2011

இலங்கை கடற்படை தாக்குதல் எதிரொலி: தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் பெற மீனவர்கள் அமைப்புகள் முடிவு

Source:http://www.dinamani.com

சென்னை, ஜன. 24: இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிக்க பல்வேறு மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
 இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் அடுத்தடுத்து 2 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீனவர் அமைப்புகளின் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.
 புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாபட்டினத்தை சேர்ந்த ஒரு மீனவர் கடந்த 12-ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நிகழ்ந்து 10 நாள் இடைவெளியில் தற்போது, நாகை மாவட்டம், புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
 அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த இரு சம்பவங்களால் கடலோர மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மீனவர்கள் மத்தியில் பீதி நிலவுகிறது.
இது தொடர்பாக தமிழக அரசும், மத்திய அரசும் மேற்கொண்டுள்ளதாக கூறப்படும் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்ற கருத்து மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
 இதனால் தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக மீனவர்கள் கருதுகிறார்கள்.
 இந்த நிலையில் இந்திய-இலங்கை கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்லும் போது, தங்களது உயிருக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்வதற்காக உரிமம் கோரி விண்ணப்பிப்பது என மீனவர் அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.
 தற்காப்புக்காக துப்பாக்கி உரிமம் கோரி மாவட்டங்களில் உள்ள காவல் துறை அதிகாரிகளிடம் அடுத்த சில நாள்களில் மீனவர்கள் விண்ணப்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது என தென்னிந்திய மீனவர் நலச்சங்கத்தின் தலைவர் கு. பாரதி தெரிவித்தார்.
 மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதை இந்த நடவடிக்கை மூலமே மத்திய, மாநில அரசுகளுக்கு தெரியப்படுத்த முடியும் என்றார் அவர்.
இவ்வாறு பெறப்படும் உரிமத்தை பயன்படுத்தி, இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலை சமாளிக்க தேவையான ஆயுதங்களையும், அவற்றை கையாள்வதற்கான பயிற்சியையும் அரசு அளிக்க வேண்டும் என இந்திய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எம்.டி. தயாளன் கூறினார்.
 மீனவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு உணர்த்துவதற்காகவே துப்பாக்கி உரிமம் கோரி விண்ணப்பிக்க மீனவர்கள் முடிவு செய்துள்ளனர் என அகில இந்திய பாரம்பரிய மீனவர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.ஏ. மகேஷ் தெரிவித்தார்.

1 comment:

  1. அரசினால் முடியாவிடின் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள மீனவ சகோதரருக்கு ஆயுதம வழங்கப்பட வேண்டும். சிங்கள கொலைவெறி படையினருக்கு அஹிம்சாவாதத்தால் பதில் சொன்னால் புரியாது. இதுவே சிறந்த வழி்

    ReplyDelete

Kids enjoying evening in village