வெளிநாட்டு அணியைச் சேர்ந்தவர்கள் பார்வையிட வந்தபோது, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறைகளில் தெரு நாய்கள் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும், கழிவறைகளில் வேலையாள்கள் அசுத்தம் செய்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் சென்றிருப்பதையும் பார்த்து அதிர்ந்துவிட்டிருக்கிறார்கள்.பன்னாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் "விளையாட்டு கிராமம்' அசுத்தமாக, சுகாதாரமற்று இருக்கிறதே என்கிற வெளிநாட்டு விருந்தாளிகளின் கேள்விக்கு நம்மவர்கள் தரும் பதில் என்ன தெரியுமா? ""சுத்தம், சுகாதாரம் என்பது ஒவ்வொரு நாட்டினருக்கு ஒவ்வொரு விதத்தில் அமையும்'' என்பது. அதாவது, இந்தியர்களின் சுகாதாரஅளவு இதுதான் என்கிறார்களா? அப்படியானால், இவர்கள் பன்னாட்டு விளையாட்டு வீரர்களை அழைத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடத்த முன்வந்திருக்கக் கூடாது.விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் கேள்விகள் கேட்டால், தனக்கு எதுவுமே தெரியாது என்று சொன்னால்கூடப் பரவாயில்லை. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை என்பதுபோல கேட்டும் கேட்காமலும் நகர்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அதற்கும் ஒருபடி மேலே போய், "எல்லாம் இப்படித்தான் இருக்கும், நம்ம ஊர் கல்யாணங்களைப்போல, விளையாட்டுத் தொடங்கிவிட்டால் சரியாகிவிடும்' என்று விட்டேத்தியாக பதிலளிக்கிறார்.ஒரு வருடத்துக்கு முன்பே காமன்வெல்த் போட்டி அமைப்பாளர் குழுத் தலைவர் இந்தியா வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில், போட்டிக்கு முன்பு அரங்கங்களும், கட்டமைப்பு வசதிகளும் தயாராகுமா என்பது சந்தேகம்தான் என்று கூறியபோதே, பிரதமர் முதல் அனைவரும் சுறுசுறுப்பாகி விழித்துக் கொண்டிருக்க வேண்டாமா? ஆனால், யாருமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அசிரத்தை, எந்தவிதத் திட்டமிடலும் இல்லாமல், எல்லாம் நடந்துவிடும் என்கிற பொறுப்பின்மை. அதையே சாக்காக்கி, இந்தியாவின் மானம் கப்பலேறிவிடும் என்று பயமுறுத்தி, செலவுக்கான பட்ஜெட்டை அதிகரித்துவிட்டார்கள் இந்திய ஒலிம்பிக் குழுவின் பாவிகள். கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. வேலையைத் துரிதப்படுத்த மீண்டும் கோடிக்கணக்கில் பணம் வாரி வழங்கப்பட்டது. இதை எல்லாம் சொல்லி என்ன பயன்? விளையாட்டுப் போட்டிகள் தொடங்க இன்னும் பத்து நாள்கள்தான் இருக்கின்றன. இன்னும் 30 சதவிகித வேலைகள் முடிவடையவில்லை. கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களில் ஆங்காங்கே பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. ஸ்டேடியங்களின் கூரையிலிருந்து பதிக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் உடைந்து விழுகிறது. சாலை வசதிகள், மின்சார வேலைகள் எல்லாமே அரைகுறை. தரக்குறைவான வேலைகள். அங்குலத்துக்கு அங்குலம் ஊழல் பல்லிளிக்கிறது.வெளிநாட்டு வீரர்கள் பலர் தாங்கள் வருவதில்லை என்று கூறிவிட்டனர். ஏதாவது தீவிரவாதத் தாக்குதல் - நடக்க வேண்டாம், நடக்கக்கூடாது - நடந்தால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் வரமாட்டார்கள். 70,000 கோடியில் இந்தியாவிலுள்ள ஏறத்தாழ 500 மாவட்டங்களில், மாவட்டத்துக்கு 100 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக்கியிருந்தால், ஒலிம்பிக்கில் பல தங்கப்பதக்கங்களைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை தேடியிருக்கலாமே! ஆப்பிரிக்க நாடுகளான கென்யா, உகாண்டா, தான்சானியா, ஜிம்பாப்வே போன்றவைக்கு இருக்கும் முன்யோசனைகூட ஹார்வர்ட் பட்டதாரிகளான நமது மன்மோகன் சிங் குழுவினருக்கு ஏன் இல்லாமல் போயிற்று? இவர்களுடைய அசிரத்தை இப்போது இந்தியாவுக்கு உலகளாவிய அளவில் "ஊழல்' பதக்கத்தை அல்லவா தேடித்தந்திருக்கிறது.எல்லோரும் இந்திய ஒலிம்பிக் கழகத் தலைவர் சுரேஷ் கல்மாதியை குற்றம் சாட்டுகிறார்கள். அவர் மட்டுமா குற்றவாளி? தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி எல்லோரும்தான் குற்றவாளிகள். அணுசக்தி ஒப்பந்தம் தமது மானப்பிரச்னை என்று கருதிய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, உலக அரங்கில் இந்தியாவின் கெளரவம் பறிபோவதைப் பற்றி அக்கறை இல்லாமல் போயிற்றே, அவர் குற்றவாளி இல்லையா? கடந்த ஒரு வருடமாகப் பத்திரிகைகள் எச்சரிக்கின்றன. நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக எழுகின்றன. எதைப்பற்றியும் கவலைப்படாமல் 70,000 கோடி விரயமாவதையும், தேசத்தின்கௌரவம் கேள்விக்குறியாவதையும் வேடிக்கை பார்ப்பதற்காகவா நமக்கு ஒரு பிரதமர்? நமக்கு ஒரு மத்திய அரசு? நமக்கு ஒரு நிர்வாக இயந்திரம்? இன்னொரு தேசப்பற்று மிக்க நாடாக இருந்தால், மேலே குறிப்பிட்ட அனைவரும் தேசத்துரோகக் குற்றத்துக்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்கள். என்ன செய்வது, இந்தியாவுக்கு அவமானங்களையும், தேசத் துரோகிகளையும் சுமப்பதே தலையெழுத்தாகிவிட்டது!
Thursday, September 23, 2010
தேசத் துரோகிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
No comments:
Post a Comment