முகவை.க.சிவகுமார்
திருவொற்றியூர் : திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் மாதவரம் சரக்கு வாகனம் முனையம் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
இங்கு வசதிகளை மேம்படுத்த வேண்டிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
சென்னை மாநகரின் சரக்கு வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் ஜார்ஜ் டவுன், வால்டாக்ஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் இயங்கி வந்த லாரி ஏஜென்சிகளை புறநகருக்கு மாற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) 1986-ல் திட்டத்தை அறிவித்தது.
இதன்படி 1992-ல் மாதவரத்தில் சுமார் 100 ஏக்கரில் ரூ. 6 கோடி செலவில் சரக்கு வாகன முனையம் திறக்கப்பட்டது. லாரிகள் நிறுத்துமிடம், சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதிகள், பழுது நீக்கும் மையங்கள், 194 ஏஜென்சி அலுவலங்கள், மின் நிலையம், தபால் அலுவலகம், தொலைபேசி இணைப்பகம், எடைமேடை, பெட்ரோல் நிலையங்கள், குடிநீர், கழிப்பறை, ஓய்வறைகள் என அனைத்து வசதிகளும் நிரம்பியதாக திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 75 சதவீத ஏஜென்சிகள் தங்கள் அலுவலகங்களை இங்கு மாற்றினர்.
இத்திட்டம் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் சரக்கு முனையம் செயல்படும் விதம் அனைத்து தரப்பினரையும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
சாலைகள் கூட சரியில்லை:
முனையத்திற்கு செல்லும் வழியெல்லாம் குழிகளும், பள்ளங்களுமாக உள்ளன. இதில் கனரக வாகனங்கள் செல்வதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எங்கு பார்த்தாலும் மழை நீர், சாக்கடை நீர் தேங்கி கொசு வளரும் குட்டைகளாகக் காட்சி அளிக்கின்றன. வாகன நிறுத்தும் இடமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் இப்போது முள் செடிகள் நிறைந்து புதராக மாறிவிட்டன.
திட்டம் துவக்கப்பட்டபோது அமைக்கப்பட்ட கழிப்பிடங்கள், ஓய்வு அறைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பொது குடிநீர் வசதி இல்லை. மேலும் இங்கு அலுவலகம் தொடங்கிய ஏஜென்சிகளில் பெரும்பாலானோர் ஜார்ஜ் டவுன் பகுதிக்கே மீண்டும் சென்றுவிட்டனர்.
100 ஏக்கரில் 45 ஏக்கரில் மட்டும் முனையம்:
முனையத்தின் தற்போதைய அவலநிலைக்கான காரணங்கள் குறித்து மாதவரம் சரக்கு வாகன முனைய நல சங்கத் தலைவர் எம்.வாசுதேவன் கூறியது:
திட்டம் அறிவிக்கப்பட்டபோது கூறிய கவர்ச்சிகரமான உறுதிமொழிகளை நம்பி இங்கு வந்தோம். ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக சாலைகள், வடிகால் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதற்கே போராடி வருகிறோம் என்பதே உண்மை.
இத்திட்டத்திற்காக ஒரு சென்ட் நிலம் ரூ. 300 என்ற குறைந்த விலையில் 100 ஏக்கர் நிலம் பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டன. ஆனால் 45 ஏக்கரில் மட்டுமே திட்டம் முதலில் துவக்கப்பட்டது.
அதுவும் 13 ஏக்கர் நிலம் மட்டுமே லாரி ஏஜென்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள நிலத்தில் பெரும்பகுதி வணிக நோக்கத்தின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டன. இதன்மூலம் இத்திட்டத்துக்கு அரசு செலவிட்ட ரூ. 6 கோடிக்கும் மேல் அப்போதே லாபம் கிடைத்துவிட்டது.
இதுவரை ரூ. 15 கோடிக்கு நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலத்தை வணிக நோக்கில் விற்க தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருவதால் விற்பனை சற்று தாமதம் அடைந்துள்ளது.
இதுவரை ரூ. 15 கோடிக்கு நிலங்கள் விற்கப்பட்டுள்ளன. மேலும் ரூ. 20 கோடி மதிப்புள்ள நிலத்தை வணிக நோக்கில் விற்க தற்போது முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனை எதிர்த்து கடுமையாக போராடி வருவதால் விற்பனை சற்று தாமதம் அடைந்துள்ளது.
முனையத்தில் வாகனங்களை அனுமதிக்க நுழைவுக் கட்டணம் வசூலிக்க டெண்டர் அறிவித்தது. 7 ஆண்டுகள் டெண்டரில் யாரும் பங்கேற்காத வகையில் தடுத்து போராடினோம். ஆனால் 2000-ம் ஆண்டில் தனியார் ஒருவர் ஆண்டுக்கு ரூ. 39 லட்சம் என டெண்டர் எடுத்தார்.
இதனை அடுத்து டெண்டரில் எங்கள் சங்கமே கலந்து கொண்டு எடுத்தோம். கடந்த ஆண்டுகூட ரூ. 69 லட்சம் செலுத்தி விட்டோம். மேலும் கட்டமைப்பு வசதிகளை செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து சி.எம்.டி.ஏ-விற்கு ரூ. 2 கோடி செலுத்தினோம். இப்பிரச்னைகள் குறித்து மாதவரம் நகராட்சியை அணுகிய போது சாலைகளைச் செப்பனிட தங்களால் இயலாது என கூறிவிட்டனர் என்றார் வாசுதேவன்.
இன்னொரு முனையம்?
இந்நிலையில் கருணாகரன் சேரி, அன்னம்பேடு உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 120 ஏக்கர் நிலம் கையகப்படுத்தி அங்கு சர்வதேச தரத்தில் சரக்கு வாகன முனையம் அமைக்க உள்ளதாக சி.எம்.டி.ஏ. முடிவு செய்துள்ளதாகச் செய்தி வெளியாகி உள்ளது.
முதலில் மாதவரத்தை சீர்படுத்துங்கள். பிறகு கருணாகரன் சேரி செல்லலாம் என்பதே இத்துறையில் உள்ளோரின் கருத்தாக உள்ளது.
No comments:
Post a Comment