Source: http://www.vinavu.com/2010/05/24/malaysia-tamil-workers/
இப்போது நான் மலேசியாவில் பணி புரியும் ஒரு அந்நிய நாட்டு தொழிலாளி. இங்கு யார் மீதும், அல்லது இந்நாட்டின் மீதோ அவதூறு கூறும் நோக்கம் எனக்கு இல்லை. அந்நிய நாட்டில் வேலை வாய்ப்பு தேடும் பொழுது ஏற்படும் வலிகளையும் ஏமாற்றங்களையும் முடிந்தவரை கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
______________________________________________
அந்நிய நாட்டுக்கு வேலை தேடி செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கும். தமிழ்நாட்டு தமிழனாக இருந்தால், ஊரில் சம்பாதிப்பதை விட குறுகிய காலத்தில் இரண்டு மடங்கு சம்பாதித்து பின்னர் ஊர் திரும்பி வளமான வாழ்வு வாழலாம். வாட்டும் வறுமையில் இருந்து தப்பிக்கலாம். கூடப் பிறந்த சகோதர சகோதரிகளை கரையேற்றலாம். ஊரிலேயே சம்பாதித்து அடைக்க முடியாத கடனை வெளிநாட்டில் சென்று சம்பாதித்து அடைக்கலாம். இலங்கை தமிழனாக இருந்தால் காரணம் சொல்லாமலே புரியும். இப்படி காரணங்கள் வேறு வேறாக இருக்கலாம் இறுதியில் எல்லோரும் சந்திப்பது ஒரே நேர்கோட்டில் தான்.
அந்நிய நாட்டு வேலைக்காக முகவர் நிலையத்தில் பணத்தை கட்டுவதில் இருந்து அலைச்சல்களும் உளைச்சல்களும் ஆரம்பமாகி விடுகின்றன. அம்மாவின், சகோதரியின், மனைவியின் நகைகள், சேர்த்து வைத்த நிலங்கள் எல்லாவற்றையும் விற்று இல்லை கடன் வாங்கியோ, முகவருக்கு கொடுத்து பின்னர் அவர்களுக்கு பின்னாலேயே நாயாய் பேயாய் அலைந்து ஒருவாறாக விமானமேறி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் ஒரு நாள் காலையில் வந்து இறங்கும் ஒரு அந்நிய தொழிலாளியின் ஏமாற்றங்களும், துன்பங்களும் இங்கு புதிதாக ஆரம்பிப்பதில்லை. ஊரில் முகவர்களிடம் வெளிநாடு செல்வதற்காக பணத்தை கட்டுவதில் இருந்தே அவை தொடங்குகின்றது.
முகவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்களா? அல்லது ஒழுங்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பார்களா?, வெளிநாட்டு வேலையை பற்றி, சம்பளத்தை பற்றி அவர்கள் கூறியதெல்லாம் உண்மைதானா? எல்லாம் நிறைவேறும் போது மட்டுமே கண்டுகொள்ள முடியும். இங்கு என்னையே உதாரணத்திற்க்கு எடுத்துக் கொள்ளலாம். இலங்கை தலைநகரில் வெள்ளவத்தையில் உள்ள ஓர் பிரபலமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம். அவர்கள் என்னிடம் கூறிய வேலை, கணினி வன்பொருள் தயாரிக்கும் நிறுவனமொன்றில் பொதி செய்யும் வேலை. அவர்கள் கூறியதை நம்பினேன். அவர்கள் கூறியதை வேறு வழிகளில் உறுதிப்படுத்தும் வழிகள் இருந்த போதும் அத்தகைய மனநிலையில் நானும் அப்போது இருக்கவில்லை. ஏனெனில் கொழும்பில் அப்போதிருந்த நெருக்கடியில் அங்கிருந்து வெளியேறினால் போதும் எனும் மனநிலையே இருந்தது.
_________________________________________
அப்படிப்பட்ட நிலையில் அந்நிய நாட்டில் வந்திறங்கிய அடுத்தநாள் அதே நிறுவனம் ஒரு கணினி வன்பொருள் தயாரிப்பு தொழிற்சாலை அல்ல, ஒரு கட்டுமான குத்தகை நிறுவனம் என்பதும், அடுத்தநாள் காலையில் உங்களுக்கு ஓர் பாதுகாப்பு காலணியும், பாதுகாப்பு தலைக்கவசமும் தந்து கையில் மண்வெட்டியுடன் சுட்டெரிக்கும் வெய்யிலில் நெடுஞ்சாலையில் பிரிமிக்ஸ் அள்ளிப்போடும் வேலைக்கு அனுப்பினால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எனக்கு அப்போதிருந்த மனநிலையில் என்னை இங்கு அனுப்பி வைத்த முகவர் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாராவது என் முன் வந்திருந்தால் விளைவுகள் விபரீதமாக இருந்திருக்குமென்றே தோன்றுகிறது. வெளிநாட்டு வேலைக்கு வந்த முதல் நாளே ஆத்திரத்துடன் கூடிய கடுமையான ஏமாற்றத்தை சந்தித்தேன்.
நான் நினைத்திருந்தால் அடுத்த ஆறாவது மாதத்தில் என்னுடைய சொந்த செலவிலேயே விமான பயண சீட்டு எடுத்து நாடு திரும்பியிருக்க முடியும். ஆனால் முகவர் நிலையத்துக்கு கட்டிய ஒரு லட்சத்து எழுபத்து ஐயாயிரம் ரூபாவும், நான்கு வருடத்திற்கு முந்திய இலங்கை நிலவரமும் என்னை சமாதானம் செய்ய வைத்தது. வேறுவழி? இதுகூட பரவாயில்லை. விமான நிலையத்தில் வந்திறங்கிய அன்று, எம்மை பொறுப்பேற்க எமது நிறுவனத்தை சார்ந்த யாரும் வராததால், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் எங்களை விமான நிலையம் அருகில் உள்ள ஒரு இடைத்தங்கல் தடுப்பு முகாமில் கொண்டு சென்று விட்டனர். அங்கு இந்தியா பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தை சேர்ந்த பலர் அங்கு இருந்தனர்.
ஒவ்வொருவருடைய கதையும் மிக மோசமான சோகக் கதைகள். தமிழ்நாடு வேதாரணியம் பகுதியை சேர்ந்த ஒருவர், அவர் இரண்டு மாதங்களாக இடைத்தங்கல் முகாமில் காத்திருப்பதாகவும், தனக்கு கூறப்பட்டிருந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் யாரும் வந்து தன்னை அழைத்து செல்லவில்லை என கூறி வேதனைப்பட்டார். இதே போல் இன்னொரு தமிழக தமிழர் இவருக்கு வேலை தரும் முகவர்களால் கூறப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு நிறுவனமுமே இங்கு செயல்படவில்லை என குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் இவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி “எங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைத்து விடுங்கள்” என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட போது, “அது இந்திய தூதரகம் முயற்சி எடுத்தால் நீங்கள் இந்தியா திரும்பலாம். நாங்கள் அவர்களுக்கு அறிவித்து விட்டோம்” என கூறியிருந்தார்கள்.
இது இவ்வாறிருக்க கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இன்னொருவரின் நிலை மிக பரிதாபமாக இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் கிட்டத்தட்ட சித்தப்பிரமை பிடித்தவர் போல் வெறிக்க பார்த்தபடி அமர்ந்திருந்தார். மிகவும் வறிய நிலையில் உள்ள குடும்பம். இருந்த நிலத்தை அடமானம் வைத்தும், நகைகளை விற்றும் முதல் குழந்தை பிறந்து இரண்டு வாரங்களில் மலேசிய நாட்டுக்கு விமானம் ஏறியிருக்கிறார். வந்து நான்கு மாதங்கள் கடந்த நிலையில் கம்பனியை சேர்ந்த யாரும் வந்து அழைத்து செல்லாத நிலையில், வீட்டுக்கும் தகவல் சொல்லமுடியாத நிலையில் இருப்பதாக அருகில் இருந்தவர் கூறினார். இவர்களை போல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அங்கு தங்கி இருக்கும் இந்திய நாட்டவர்கள் இன்னும் பலர் இதே நிலையில் இருந்தனர்.
இவர்கள் எல்லோரும் கட்டிட நிர்மாண வேலைகளுக்காகத்தான் இங்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர். இங்கு இவர்கள் வெவ்வேறு இடங்களில் செய்யப் போகும் வேலை ஒன்று. ஆனால் அதற்கு இவர்கள் தங்கள் முகவர்களிடம் கொடுத்த தொகையோ ஆளாளுக்கு மாறுபடுகிறது. இவர்களை எல்லாம் பார்க்கும்போது எனக்கு உண்மையிலேயே பயம் பிடித்து விட்டது. எனக்கும் இவ்வாறு ஆகிவிட்டால்? நான் அங்கு இருந்த நான்கு நாட்களில் அத்தடுப்பு முகாமிற்கு பலர் வந்து கொண்டிருந்தனர். வந்த அடுத்த நாளிலோ அல்லது அதற்கு பின்னரோ அவர்கள் வேலை செய்யப் போகும் நிறுவனத்தை சார்ந்தவர்கள் வந்து அவர்களை அழைத்து சென்று கொண்டிருந்தனர். இவர்களை அழைத்து செல்லத்தான் யாரும் வரவில்லை.
ஆனால் குடிநுழைவுத் துறை தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேறினால் மட்டும் இவர்களது துன்பங்களுக்கு முடிவு கிட்டுவதில்லை. கதையே இங்குதான் ஆரம்பம். முகவர்களின் ஏமாற்று எங்கே ஆரம்பிக்கிறது என பார்க்கலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னர் ஜொகூர் மாநிலத்தில் உள்ள கப்பல் திருத்தும் துறைமுகம் ஒன்றில் பணிபுரிய தமிழ் நாட்டில் இருந்து சிலர் வருகின்றனர். கப்பல் திருத்தும் தொழிலகத்தில் பணி புரிவதற்கு முன்னர் பணி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு பரீட்சைகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அடிப்படையிலேயே பணிக்கு அனுப்பப்படுவர். வந்தவர்களில் ஒரு சிலர் படிப்பு வாசனையே அற்றவர்கள். இப்போது இவர்களின் நிலை என்ன? “ஊரில ஏஜெண்ட் கப்பல் வேலைன்னு சொன்னான், மாசம் பதினையாயிரம் சம்பாதிக்கலாம்னும் சொன்னான், ஆனால் பரீட்சை எழுதனும்னு சொல்லலையே படுபாவிங்க, தொண்ணூறாயிரம் ரூபாவை சுளையா வாங்கிட்டான்களே?, என்ன பண்ணுவேன்” என புலம்பினார்.
இப்பொழுது இப்படிப்பட்ட நிலைமையில் இவர் நாடு திரும்பவும் முடியாது. வந்த கடனை அடைத்தே தீர வேண்டுமானால் வேறு இடங்களில் வேலை செய்ய வேண்டி வரும். அப்படி செய்வதானால் அது சட்டவிரோதம். மலேசியாவில் அந்நிய தொழிலாளர் சட்டவிதிகளின் படி, எந்த நிறுவனத்தில் வேலை செய்ய வந்தார்களோ, அதில்தான் அவர்களின் ஒப்பந்த காலம் முடியும் வரைக்கும் வேலை செய்யலாம். சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சம்பள தகராறுகள் அல்லது முதலாளி மீதான அதிருப்தி காரணமாக ஏதும் பிரச்சினைகள் ஏற்படின் நீங்கள் உங்கள் நாட்டுக்கு திரும்புவதை தவிர வேறு வழியில்லை. வேறு நிறுவனங்களில் வேலை செய்தால் அது சட்ட விரோதம். ஆனால் அதையும் மீறி சட்டவிரோத அந்நிய தொழிலாளர்கள் உருவாகும் இடம் இங்கே தான்.வந்த நிறுவனத்திலும் வேலை செய்ய முடியாது, வேறு நிறுவனத்திற்கும் போகமுடியாது, ஊரில் வேறு கடன் வாங்கி வந்திருக்கிறோம், ஆதலால் சட்டத்தை மீறுவதை தவிர வேறு வழி இல்லை. பிடிபட்டால் தண்டனை நிச்சயம்.
______________________________________________________
இங்கு பெரும்பாலான இடங்களில் எட்டு மணி நேரத்திற்கான அடிப்படை சம்பளம் மலேசிய வெள்ளி பதினெட்டில் இருந்து இருபத்தி ஐந்து வரைக்கும் இருக்கிறது. குறிப்பாக உணவகங்கள், கார் கழுவும் இடங்கள் போன்றவை. ஒப்பந்தத்தில் என்னவோ எட்டு மணி நேர வேலையின் பின்னர் கிடைக்கும் மேலதிக ஒவ்வொரு மணிக்கும் மேலதிக வேலை நேரக் கூலி இருந்தாலும், அன்றாடம் பன்னிரண்டு மணி நேரம் வேலை பார்க்கவேண்டிய கட்டாயமும் ஏற்படுவதுண்டு. அயலில் உள்ள இந்திய முஸ்லீம் உணவகம் ஒன்றில் ஒன்றில் வேலை செய்யும் ஒரு வெளிநாட்டு பணியாளர் காலை ஏழு மணிக்கு இறங்கினால் மாலை ஏழுமணிக்கு தான் பணி முடிவு பெறும். பொதுவாக இங்குள்ள இந்திய முஸ்லீம் உணவகங்களில் பணி செய்யும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வார விடுமுறைகளோ, மாத விடுமுறைகளோ கிடையாது (வருடத்தில் ஒரு நாள் வரும் ரமலான் பெருநாள் பண்டிகைக்காக வழங்கப்படும் விடுமுறையை தவிர).
உடம்புக்கு முடியவில்லை என்று அவர்களாக விடுப்பு எடுத்துக் கொண்டால் மட்டுமே உண்டு. இங்கு யாரும் யாருடனும் நியாய அநியாயங்கள் குறித்து பேசமுடியாது. பேசினால் முரண்பாடுகள் உருவாகும். முரண்பாடுகள் உருவாகினால் வேலை பறிபோகலாம். கட்டுமானத்துறை சார்ந்த வேலைகளை குத்தகை எடுத்து செய்யும் நிறுவனங்களில் வேலை செய்யும் அந்நிய தொழிலாளர்கள் நிலை இன்னும் சிக்கலானது. கட்டிட நிர்மாண துறையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் சற்றே அதிகம். எட்டு மணி நேர வேலைக்கு வெள்ளி முப்பத்து ஐந்திலிருந்து நாற்பத்தைந்து வரைக்கும் வழங்கப்படுவதுண்டு. காரணம் இது கடினமான வேலை என்பது மட்டும் காரணமில்லை.
இதையும் எனது நிலையில் இருந்தே விளக்கலாம். நான் பணிபுரியும் நிறுவனம் ஓர் குத்தகை நிறுவனம். குறிப்பிட்ட பிரதேசத்தை குத்தகைக்கு எடுத்து அதில் பிரதான புதிய நீர்க்குழாய்களை பதித்து, பின்னர் அதில் இருந்து வீடுகளிற்கு புதிய இணைப்பு வழங்குவது எங்கள் பணி. எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை ஒன்றை முழுவதும் முடிக்க எடுக்கப்படும் காலம் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள். எமது நிறுவனத்தால் எடுக்கப்படும் குத்தகை அதன் காலம் முடிவடைவதற்குள், டெண்டர் போடப்பட்டு புதிய குத்தகை நிறுவனத்திற்கு கிடைத்தால் எமக்கு வேலைக்கு பிரச்சனை இல்லை. சம்பளம் மாதம் தவறாமல் கிடைத்து விடும். இல்லை எனில் நிலைமை சிக்கல். கிடைக்கப்போகும் புதிய குத்தகைக்காக ஓரிரு மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவ்வாறு வேலை இல்லாமல் காத்திருக்கும் காலப் பகுதியில் சம்பளம் கிடைக்காது.
ஆக வேலை இல்லாமல் குந்திக்கொண்டிருக்கும் காலங்களுக்கும் சேர்த்தே இந்த அதிக சம்பளம். வருடத்தில் குறைந்தது நான்கு மாதங்கள் இவ்வாறு புதிய வேலைக்காக காத்திருக்க வேண்டி வீணே உட்கார்ந்திருக்க வேண்டியுள்ளது. பெரிய வீடமைப்பு திட்டங்கள், பால கட்டுமான திட்டங்களில் பணிபுரிபவர்கள் நிலைமை ஓரளவு பரவாயில்லை என கூறலாம். அந்நிய தொழிலாளர்களின் வேலையிட நலன்கள் இப்படி இருக்கின்றனவெனில் சமூகப் பாதுகாப்பு மிக மோசமானது.
என்னுடன் சிறிது காலம் பணியாற்றிய தமிழகத்தவர் ஒருவரின் காதில் ஒரு வெட்டுக்காயம் ஒன்று இருக்கும். அவரிடம் கேட்டேன்,”எதனால் இவ்வாறு ஏற்பட்டது”? அவர் எமது நிறுவனத்தில் பணி புரிவதற்கு முன்னர் தமிழர் ஒருவருக்கு சொந்தமான கட்டுமானத் திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த காலத்தில், நிலுவையில் இருந்த தனது இரண்டு மாத சம்பளத்தை தரும்படி கேட்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் முதலாளி அருகில் இருந்த கத்தியை தூக்கி தமிழக தொழிலாளி மீது வீசி காதில் வெட்டுக்காயத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அன்றிலிருந்து அவர் சட்ட விரோத தொழிலாளியாகவே வேலை செய்தார். சிறிது காலத்தின் பின்னர் குடிநுழைவுத்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றில் பிடிபட்டு, தண்டனை காலம் முடிந்த பின்னர் தமிழ் நாட்டுக்கு சென்று விட்டார்.
கோலாலம்பூர் பிரதான புகையிரத நிலையத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிறேன். தலையும் ஆடையும் கலைந்திருந்தது.வயது இருபத்தியிரண்டு இருக்கலாம். கையில் ஒரு பழைய துணியால் கட்டுப் போட்டிருந்தார். தயங்கியபடியே என்னை நோக்கி வந்தார். “அண்ணை தமிழோ” என கம்மிய குரலில் வினவினார். “ஆமா, என்ன பிரச்சனை” என்று கேட்க “தான் ஒரு தமிழரின் கார் கழுவும் நிலையம் ஒன்றில் வேலை பார்த்ததாகவும், நேற்றிரவு கூடுதலான நேரம் வேலை பார்த்ததால் காலையில் வழமையான நேரத்திற்கு எழுந்திருக்க முடியவில்லை, அதனால் முதலாளிக்கும் எனக்கும் பிரச்சனையாகி விட்டது, அங்கு வேலை செய்பவர்களுடன் சேர்ந்து அவர் என்னை இரும்புக் கம்பியால் தாக்க முற்பட்டபோது, தடுத்ததில் உள்ளங்கையில் கிழிந்து விட்டது,” எனகூறி காயத்தை காட்டிய போது எனக்கு கண்கள் இருண்டு விட்டது. “சரி ஏன் காயத்துக்கு மருந்து கட்டவில்லை” என கேட்க, “கையில் காசில்லை, பாஸ்போர்ட் முதலாளியிடம் இருக்கு” எனக் கூறினார்.
அப்போது என்னால், அவரை ஒரு கிளினிக்கிற்கு அழைத்து சென்று காயத்திற்கு மருந்து கட்டிவிட்டு, அன்றைய நாளிற்கான உணவு செலவிற்கு பணம் கொடுக்க மட்டும்தான் முடிந்தது. அவரிடம் இருந்து விடை பெறும் போது “அண்ணை எனக்கு எங்கேயும் ஒரு வேலை வாங்கி தரமுடியுமா?” என வினவினார். அவருக்கு எனது நிலையை தெரிவித்து விட்டு “அவரின் பாஸ்போர்ட்டை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், அதற்கு ஏதேனும் மக்கள் நல அமைப்பின் உதவியை நாடுங்கள், அல்லது மலேசிய இந்தியர் அரசியல் அமைப்புக்களிடம் உதவி கேளுங்கள் என கூறிவிட்டு விடை பெற்றேன்.
நாட்டுக்குள் சட்ட விரோதமாக நுழைந்து வேலை செய்பவர்கள் ஒருபுறமிருக்க, நிறுவனங்களில் இடம்பெறும் இது போன்ற காரியங்களும் சட்ட பூர்வமாக இருக்கும் ஒரு தொழிலாளியை சட்டவிரோத தொழிலாளராக மாற்றி விடுகின்றன. இதை விடவும் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட தொழிலாளி, தனது நிலுவை சம்பளத்தை கேட்ட காரணத்திற்காக, தமிழர்களான வீட்டு உரிமையாளர்களினாலேயே அறைக்குள்ளேயே சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, உடம்பில் கொதிநீர் ஊற்றி சித்திரவதை செய்து செம்பனை தோட்டத்தில் வீசப்பட்ட செய்திகள் பலர் அறிந்திருக்க கூடும். தமிழ் நாட்டு தொழிலாளர்கள் சிலரை, அவர்கள் தமது கூலியை கேட்ட ஒரே காரணத்திற்காக தனது நண்பர்களை கொண்டு அடித்து துவைத்த முதலாளி, சிறிது காலத்தின் முன்னர் கோழிப்பண்ணையில் வேலை செய்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த இரு தொழிலாளர்கள் அடைத்து வைத்து சித்திரை என சம்பவங்கள் பல. இதை விட ஏனைய இந்தோனேசியர்களின் கொள்ளை முயற்சிகளில் சிக்கி தமது அவயங்களில் வெட்டுக் காயத்துடன் நாடு திரும்பிய தமிழக தொழிலாளர்களும் உள்ளனர்.
வேலையிடம் ஒன்றில் அங்கிருந்த இயந்திர உபகரணங்களை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்த பாராங்கத்தி ஏந்திய இந்தோனேசியர்கள் நால்வர், அங்கிருந்த தமிழக தொழிலாளியை தாக்கியதில் வலது கையில் நான்கு விரல்களிலும் மோசமான வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன் கழுத்திலும் காயமடைந்தார். நஷ்டஈடு? அதைப்பற்றி யாரும் பேசவுமில்லை, அந்த தொழிலாளியும் அதை கேட்கவும் இல்லை. மலேசியாவும் வேண்டாம், வேலையும் வேண்டாம் உயிரோடு ஊர் போய் சேர்ந்தால் போதும் என வந்து ஆறு மாதத்திற்குள்ளாகவே நாடு திரும்பிவிட்டார்.
மலேசியாவில் பாதிப்புக்குள்ளான தமிழக தொழிலாளர்களில் பெரும்பாலோர் மலேசிய தமிழ் முதலாளிகளினாலேயே பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது கொஞ்சம் வேதனையான உண்மை. பிற இன முதலாளிகளினால் தமிழக தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் இருப்பினும் அவற்றுக்கு நிர்வாகத்திற்குள்ளேயே தீர்வு காணப்பட்டு இருக்கின்றன. சித்திரவதை செய்யும் அளவிற்கு மோசமான சம்பவங்கள் இடம்பெறவில்லை.
தமிழ் நாட்டில் பணம் பிடுங்கும் முகவர்களிடம் பணத்தை இழந்ததும் அல்லாமல், அவர்கள் வழங்கிய திருட்டு விசாவில் வந்து சிக்கிக் கொண்டு வாழ்வை தொலைத்துவிட்டு தவித்து நிற்கும் அப்பாவிகளும் சரி, சட்டபூர்வமாக நுழைந்து சுரண்டும் முதலாளி வர்க்கத்தின் நடவடிக்கைகளால் சட்டவிரோதமான தொழிலாளர்களாக மாறியவர்களும் சரி, இறுதியில் தடுப்பு முகாம்களிலேயே மாதக்கணக்கில் தவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இவர்களுக்கு நண்பர்களோ, உறவினர்களோ, வேறு யாராவது நலன்விரும்பிகளோ அவர்களது செலவில் பயணசீட்டு வாங்கித் தரும் பட்சத்தில் அவர்கள் விரைவில் நாடு திரும்பலாம். இல்லையெனில் மலேசிய அரசாங்கமோ, இந்திய தூதரகமோ ஏற்பாடு செய்யும் வரைக்கும் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியது.
பொதுவாக இவ்வாறான சம்பவங்களில் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இந்திய தூதரகத்தில் இறுதியாக தஞ்சம் புகும் தருணத்திலும், அங்கும் இவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு புறக்கணிக்கப்படுகின்றனர். பாதிக்கப்படுவது வடஇந்திய தொழிலாளர்களாக இருந்தால், அவர்களிற்கான தூதரகத்தின் அணுகுமுறை ஒரு மாதிரியாகவும், தென்னிந்திய தொழிலாளர்களுக்கான அணுகுமுறை ஒரு மாதிரியாகவும் இருப்பதாக புகார்கள் பத்திரிகையில் செய்திகளாக வந்துள்ளன. அந்நிய தொழிலாளர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பினும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொதுவானது. இங்கே தமிழக தொழிலாளர்களை முதன்மைப்படுத்தியதன் காரணம் இந்த நாட்டில் வேலை பார்க்கும் பதினேழு இலட்சம் இந்திய தொழிலாளர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் என செய்திக் குறிப்பொன்று கூறுகின்றது.
தேவைக்கு அதிகமாகவே சட்டரீதியான, சட்டவிரோதமான அந்நிய தொழிலாளர்கள் பணியாற்றும் ஒரு நாட்டில் அந்நிய தொழிலாளர்கள் நலன் பேணும் விதிமுறைகள் கடுமையாக்கப்படவில்லை. இஷ்டம் இருந்தால் வேலை செய்யலாம், அல்லது நாடு திரும்பலாம் என இருக்கும் பட்சத்தில் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. ஏனெனில் உணவகத்துறை உட்பட்ட சேவைத் துறைகளில் அந்நிய தொழிலாளர்களை ஆட்குறைப்பது பற்றியும் அந்த இடங்களுக்கு உள்நாட்டவர்களை நியமிப்பது பற்றியும் அரசதரப்பில் இருந்து செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
___________________________________________________
கனவுகளைச் சுமந்து வரும் தொழிலாளிகளின் கண்ணீர்க் கதைகள் இங்கே ஏராளம். அடிபட்டு, காயம்பட்டு, சிறைபட்டு, இறுதியில் எப்படியாவது தாய்நாடு திரும்புவோமா என்று எண்ணுபவர்களும் அதிகம். அப்படி ஊர் திரும்பினாலும் அங்கே அவர்கள் வாங்கிய கடன் மிச்சமிருக்கும் வாழ்வை சித்திரவதை செய்யப் போதுமானது. அதனாலேயே இங்கே சட்டவிரோதமாக தங்கிக் கொண்டு கடுமுழைப்பு செய்து குறைந்த கூலியிலும் காலத்தை ஓட்டுபவர்கள் ஏராளம்.
மற்ற முதலாளிகளை விட தமிழ் முதலாளிகள்தான் தமிழனென்ற முறையில் இந்த சுரண்டல் மோசடியை அதிகம் செய்கின்றனர். தேசிய இனப்பெருமிதம் இங்கே வறியோனை வலுத்துவன் சுரண்டுவதற்கே உதவுகிறது. மலேசியாவிலிருந்து ஒரு பார்வதி அம்மாள் இந்தியா வருவதற்கு இவ்வளவு பிரச்சினை என்றால் அவரைப் போன்ற பிரபல பின்னணி இல்லாமல் மலேசியாவில் நாளைத் தள்ளும் சாமானியர்களின் கதி?
தமிழ்நாட்டு முகவர்கள், மலேசிய முதலாளிகள், மலிவான கூலியில் தொழிலாளர்களை ஏற்பாடு செய்து கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் மலேசிய அரசின் கண்டு கொள்ளாமை, இந்தியத் தொழிலாளிகளின் நலனை கவலைப்படாத இந்தியத் தூதரகம் என்ற இந்த அதிகார வலைப்பின்னலில் விட்டில் பூச்சிகளாய் சிக்கி வதைபடும் தொழிலாளிகளை யார் காப்பாற்றுவார்கள்? விடை தெரியாத கேள்விகளோடு நானும் வாழ்வை ஓட்டுகிறேன். வேறு வழி?
_______________________________________________
- பிரகாஷ், மலேசியா.
பின்குறிப்பு: வாசகர்களும் படைப்பாளிகளாக வினவில் பங்கேற்க வேண்டும், பங்கேற்பார்கள் என்ற எமது அவாவின் மற்றுமொரு அறிமுகமாக நண்பர் பிரகாஷை இங்கே பெருமையுடன் அறிமுகம் செய்கிறோம். – வினவு
No comments:
Post a Comment