Monday, January 25, 2010

நாளை விடிந்தால் தேர்தல் பல கேள்விகளுக்கு விடைதரப்போகும் தேர்தல்..


யாழ். குடாநாட்டு மக்கள் புலம் பெயர் தமிழருக்கு தரப்போகும் பதில்..
இராணுவம் இரண்டாகப் பிளவுபடக்கூடிய ஆபத்து..
தேர்தலுக்கு பின் கக்கப் போகும் ஆபத்தான எரிமலை..

நாளை விடிந்தால் சிறீலங்காவில் அதிபர் தேர்தல் ஆரம்பித்துவிடும். இம்முறை தேர்தலில் சுமார் 80 வீதமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மொத்தம் 21 நாடுகளில் இருந்து 55 தேர்தல் கண்காணிப்பாளர் தற்போது பணிகளில் உள்ளார்கள். இராணுவம் தலைநகருக்கு வரவழைக்கப்பட்டுள்ளது, கலவரங்களில் ஈடுபடுவோரை கண்ட இடத்தில் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 900 வன்முறைகளோடு தேர்தல் களமிறங்குகிறார்கள்.

மகிந்த ராஜபக்ஷவிற்கு இருக்கும் வாய்ப்புக்கள்.

சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தை தேர்தல் மூலம் மாற்றியமைப்பது இலகுவான காரியமல்ல. ஜே.ஆர், பிரேமதாச, சந்திரிகா ஆகிய மூன்று அதிபர்களுமே இரண்டு தடவைகள் ஆட்சிக்கட்டிலில் அதிபராக இருந்துதான் பதவியில் இருந்து இறங்கியவர்கள். பிரேமதாச படுகொலை செய்யப்பட்டார், இல்லாவிட்டால் இவரை ஆட்சியில் இருந்து இறக்க யாராலும் முடிந்திருக்காது. இப்படிப்பட்ட சிறீலங்காவில் ஒரு தடவை அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து இறக்க முடியுமா என்பது முக்கிய சவாலாக இருக்கிறது. அரசியல் அதிகாரத்தை எப்படியும் பயன்படுத்த முடியும், பின்னர் எந்த நியாயத்தையும் கூற முடியும் என்ற வரலாறுள்ள ஒரு நாடு என்பதால் மகிந்தவை ஆட்சியில் இருந்து இறக்குவது கடினமான காரியமாகவே இருக்கும். பிரேமதாச படுகொலை, காமினிபொன்சேகா படுகொலை மூலம் ஓர் அரசியல் வெற்றிடம் ஏற்படுத்தப்பட்டே சந்திரிகாவின் ஆட்சி மாற்றம் நடைபெற்றது கவனிக்கத்தக்க விடயம்.

சரத் பொன்சேகாவிற்கு உள்ள வாய்ப்புக்கள்.

தேர்தலுக்கு முதல் நாள் சந்திரிகா அம்மையார் சரத்திற்கு ஆதரவாக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டது போலவே நேற்று அவர் சரத்திற்கு தனது ஆதரவை பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஐ.தே.க, தமிழர் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், ஜே.வி.பி போன்ற கட்சிகளுடன் இப்போது கொரகொல்ல சீமாட்டியின் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார். ஏறத்தாழ இதுவரை மகிந்தராஜபக்ஷ நடாத்திய குடும்ப ஆட்சிக்கு எதிராக சிங்கள அரசியல் கட்சிகள் உட்பட தமிழ் கட்சிகளும் இணைந்துள்ளன. நியாயமான தேர்தல் நடைபெற்றால் சரத் பொன்சேகாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம்.

புலம் பெயர் தமிழருக்கு பதில் தரும் தேர்தல்

ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான தீர்வைக் காண்பதே யதார்த்தம். ஆகவே சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்குங்கள் என்று சம்மந்தர் நேற்று யாழில் வைத்து வெளிப்படையாகக் கேட்டுள்ளார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை தருகிறேன் என்ற சரத் பொன்சேகாவின் கருத்தை யாழ். குடாநாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டால் புலம் பெயர் மக்களுக்கு அது முக்கிய தகவலாக அமையும். சிறீலங்காவின் அரச இயந்திரத்தை எதிர்த்து யாழ். மக்கள் கருத்துரைத்துள்ளார்கள் என்ற நிலை ஏற்பட்டால், பயத்தினால் வாக்களித்தார்கள் என்று வாதிட முடியாத நிலை ஏற்படும். அதிபர் தேர்தலில் யார் வென்றாலும், தோற்றாலும் யாழ். குடாநாட்டு மக்கள் கூறும் யதார்த்தமே புலம் பெயர் தமிழரின் அடுத்த கட்ட அசைவிற்கு வழிகாட்டும் என்பதால் இது வெளிநாடுகளிலும் முக்கிய தேர்தலே.

ஆபத்தான தேர்தல்

இதுவரை நடைபெற்ற அதிகமான அதிபர் தேர்தல்கள் தேர்தலுக்கு முன்னர் தற்கொலைத் தாக்குதல்களோடு நடைபெறும் பயங்கரம் நிறைந்ததவையாக இருந்தன. அந்தப் பயக்கெடுதியே தேர்தலுக்கு பின் ஓர் அமைதியையும் உருவாக்கின. ஆனால் இம்முறை மோசமான வன்முறைகள் நடந்தாலும் இது கக்கித் தள்ளாத எரிமலை போன்ற தேர்தலே. கக்கித்தள்ளாத உறங்கும் எரிமலைபோல ஆபத்தான காரியம் எதுவுமே கிடையாது. தேர்தலுக்குப் பின்னர் கக்கப்போகும் எரிமலையாக இந்தத் தேர்தல் இருப்பதால் அடுத்து வரும் தினங்கள் ஆபத்தான மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

சொலபடான் மிலோசெவிச் விதி

சேர்பியாவில் நடைபெற்ற தேர்தலில் அதிபராக இருந்த மிலோசெவிச் தவறாக, ஊழல் செய்து தேர்தலை நடாத்தினாரென எதிரணியினர் பெரும் ஊர்வலமாக வந்து அவரை ஆட்சியில் இருந்து இறக்கியது தெரிந்ததே. அதுபோல தேர்தலில் வெற்றி கிடைக்காவிட்டால் களத்தில் இறங்க வாய்ப்பாக எதிரணி பிரச்சாரங்களை செய்துள்ளது. மறுபுறம் தோல்வியடைந்தால் ஆட்சியை கொடுக்காமலிருக்க அரசும் தயாராகி வருகிறது.

தேர்தலுக்குப் பின் வெடிக்கப் போகும் எரிமலை தமிழரின் முதுகுகளை பதம் பார்க்கவும் இடம் இருக்கிறது. இராணுவம் இரண்டாகப் பிளவு படுவதற்கும் வாய்ப்புள்ளது. வெளிப்படையான பல தகவல்கள் கட்டு மீறி இருதரப்பும் வெளியிடவும் வாய்ப்பிருக்கிறது. இதுவரை புதுமாத்தளன் தொடர்பான உண்மைகளை அடக்கி வாசித்த இரு தரப்பும் தேர்தலுக்குப் பின் வெளியிட வாய்ப்புள்ளது. அடுத்து வரும் சில தினங்கள் மிகவும் மோசமானவையாக அமையலாம். மலைய மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனுக்கு ஏற்பட்ட மாரடைப்பு இதற்கு ஒரு காய்ச்சல் கம்பியாக உள்ளது.

01. இதுவரை உலகில் நடைபெற்ற தேர்தல்களை அவதானித்த எந்தக் கண்காணிப்புக் குழுவும் அநீதியான தேர்தல்களை நிறுத்தி நீதியை நிலை நாட்டியது கிடையாது. கண்காணிப்பு ஒரு கண்துடைப்பு என்பது அரசிற்கு தெரியும்.

02. தேர்தல் முடிவுகளை மறுத்து இராணுவ சர்வாதிகார ஆட்சி புரியும் பர்மீய ஜிந்தா ஆட்சியாளரை இந்தியா, சீனா இரண்டும் ஆதரிக்கின்றன. ஆங் சூங் சுயி அம்மையாரை வீட்டுக் காவலில் இருந்தே விடுவிக்கவே மேலை நாடுகளால் முடியவில்லை. ஆகவே தேர்தலில் தோற்றாலும் ஆட்சியை விட வேண்டிய அவசியமில்லை என்பதற்கு பர்மா நல்ல உதாரணமாக இருக்கிறது.

03. ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று கூறிய சரத் பின்நாளில் அதை அடக்கி வாசிக்கத் தொடங்கிவிட்டார். ஆக அதிபர் தேர்தல் தொடரப்போகிறது என்பது தெரிகிறது. சிங்களவர் விரும்பாத எதையும் தமிழருக்கு கொடுக்க மாட்டேன் என்று சரத் புத்தபிக்குகளிடம் கூறிவிட்டார்.

04. புலிகளுடனான இராணுவ வெற்றிக்குப் பிறகும், தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தர தீர்வில்லை என்றால் சிங்கள அரசின் நோக்கம் என்ன என்ற கேள்வி அரசியல் வட்டகையில் எழும்.

புலிகள் பயங்கரவாதிகளும் அல்ல, நடைபெற்றது பயங்கரவாதத்திற்கு எதிரான போருமல்ல, உண்மையான பயங்கரவாதம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்தத் தேர்தல் வழிசமைக்கப் போகிறது. அதை நோக்கியே சகல காய்களும் நகர்கின்றன. மூன்று நாட்கள் பொறுத்திருக்க வேண்டும்…


No comments:

Post a Comment

Kids enjoying evening in village