Monday, July 8, 2013

மாணவர்களை தொடர்ந்து மோசடி செய்யும் கடல்சார் பல்கலைக்கழகம்... கடல்சார் பணி, கனவாகும் அபாயம்!

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=751973

தகுதியான, நிரந்தரமான ஆசிரியர்கள் இல்லாதது, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது போன்ற குறைகளை மறைத்து, ஆயிரக்கணக்கான மாணவர்களை, ஆண்டுதோறும் கடல்சார் படிப்புகளில் சேர்த்து, கடல்சார் பல்கலை, மோசடி செய்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பல்கலையில் சேரும் மாணவர்களின், கடல்சார் பணி, கனவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில், இந்திய கடல்சார் பல்கலை இயங்கி வருகிறது. கடந்த, 2008ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பல்கலை, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி, திக்கு முக்காடி வருகிறது. இந்த பல்கலை சார்பில், நாட்டின், பல்வேறு பகுதிகளில், ஏழு கடல்சார் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மேலும், சென்னை, கொச்சின், கண்டலா துறைமுகம், கோல்கட்டா, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய ஆறு இடங்களில், பல்கலை வளாகங்கள் இயங்கி வருகின்றன.
பல்கலையின் இணைப்பு அங்கீகாரத்துடன், 38 தனியார் கல்வி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. 
தனியார் கல்வி நிறுவனங்கள், அதிக முதலீட்டில், நிறைவான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளன. ஆனால், கடல்சார் கல்வி நிறுவனங்களுக்கு எல்லாம் வழிகாட்ட வேண்டிய பல்கலையின் நிலைமை, மிக மோசமாக உள்ளது.பல்கலையிலும், அதன் சார்பு நிறுவனங்களிலும், தகுதியான, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.

உள்கட்டமைப்பு வசதிகளும் மோசமாக உள்ளன. ஆனால், இதை அனைத்தையும் மறைத்து, மாணவர்களை தொடர்ந்து மோசடி செய்து வருவதாக, துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மத்தியில், நடப்பு கல்வி ஆண்டில், பி.டெக்., (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி., (நாட்டிகல் சயின்ஸ்) உள்ளிட்ட பல்வேறு இளங்கலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வை, வரும் 8ம் தேதி முதல், 15ம் தேதி வரை, பல்கலை வளாகத்தில் நடத்துவதற்கு, பல்கலை ஏற்பாடு செய்துள்ளது. இந்த படிப்புகளில் சேர்வதற்காக, கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் தேர்வு பெற்று, 7,800 பேர், கடல்சார் படிப்புகளில் சேர, முன் வந்துள்ளனர்.ஆனால், பல்கலை மற்றும் பல்கலை வளாகங்களில் உள்ள நிறுவனங்களில், 3,200 மாணவர்களைமட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, துறை வல்லுனர்கள் கூறியதாவது:கடல்சார் பல்கலையின், சென்னை மையத்தில், ஆசிரியர்களின் நிலை, படுமோசமாக உள்ளது. கடந்த ஆண்டுகளை விட, ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் குறைந்துவிட்டது. பல்கலைக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, ஆசிரியர்கள், பணி பாதுகாப்பு கருதி, சென்னை ஐகோர்ட்டை அணுகினர்.
இதில், ஆசிரியர்களுக்கு சாதகமாக, ஐகோர்ட் உத்தரவு வந்ததால், எரிச்சல் அடைந்த பல்கலை, 20 ஆசிரியர்களை, சென்னை அல்லாத பிற இடங்களில் உள்ள பல்கலை நிறுவனங்களுக்கு மாற்றியுள்ளது. இதனால், ஆசிரியர் எண்ணிக்கை, மிகவும் சரிந்துவிட்டது.இவ்வாறு, துறை வல்லுனர்கள் தெரிவித்தனர்.

பெயர் வெளியிட விரும்பாத, பல்கலையின், மூத்த ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""நிரந்த ஆசிரியர் நியமனம் தொடர்பாக, பல்கலை நிர்வாகத்திற்கும், கப்பல் துறை அமைச்சகத்திற்கும் இடையே, பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே, முந்தைய துணைவேந்தர் ரகுராம், தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்ததற்குப் பிறகு, பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், சென்னையில் வேலை செய்ய, யாருக்குமே விருப்பம் இல்லை,'' என்றார்.

இதற்கு நடுவே, பல்கலையின், "கேம்பஸ்இன்டர்வியூ'வும், மோசமான நிலைக்கு சென்றுள்ளது. பல்கலையை விட, தரமான மாணவர்களை, தனியார் கல்வி நிறுவனங்கள் உருவாக்குகின்றன. தனியார் கடல்சார் கல்வி நிறுவனங்களில், நிரந்தர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். உள்கட்டமைப்பு வசதிகளும், முழுமையான அளவில் உள்ளன.இதனால், கடல்சார் துறை வேலை வாய்ப்புகளை அளிக்கும் நிறுவனங்களின் பார்வை, தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் பக்கம் திரும்பியுள்ளது.

இதற்கு மாறாக, பல்கலையில் சேரும் மாணவர்கள், படிப்பை முடிப்பதே, சிக்கலாக இருக்கும் நிலை எழுந்துள்ளது. இதனால், அவர்களின் கடல்சார் பணி கனவும், கனவாகவே மாறும் அபாயம் எழுந்துள்ளது.தவிரவும் ஏற்கனவே, டி.என்.எஸ்., கோர்சில் படித்த ஏறக்குறைய 2,000 மாணவர்கள், படிப்பின் ஒரு அங்கமாக, 18 மாத காலம் கப்பலில் வேலை செய்ய இயலாத பரிதாப நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...