Monday, November 26, 2012

பரிதி ஏன் கொல்லப்பட்டார்? - அகத்தியன்


Source: http://www.tamilkathir.com/news/9383/58//d,full_art.aspx

தமிழீழ விடுதலைத் தளத்தின் முக்கிய பொறுப்பாளராகவும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இயக்குனராகவும், ஒரு விடுதலைப் போராளியாகவும் பன்முகப் பரிமாணம்கொண்ட பரிதி அவர்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்டது. பரிதி கொலை தொடர்பாக நடைபெற்றுவரும் விசாரணைகளும், வெளியாகிவரும் தகவல்களும் இந்தக் கொலைக்கான முழுப் பொறுப்பும் சிங்கள ஆட்சியாளர்கள் மீதானதாகவே உள்ளது. ஆனாலும், இந்தக் கொலைக்கான தளத்தினை உருவாக்கிக் கொடுத்த குற்றச்சாட்டுக்குள் முள்ளிவாய்க்காலின் பின்னர் உருவான சில புதிய குழுக்களும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டுள்ளன.  

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் தமிழ்த் தேசிய தளத்தினை வெகு நேர்த்தியாக உறுதியுடன் நகர்த்திச் சென்ற பரிதி அவர்களைக் குறி வைக்க வேண்டிய அவசியம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருந்ததில் வியப்பெதுவும் கிடையாது. ஆனால், ஐரோப்பிய நாடொன்றில், அதுவும் உலக வல்லரசுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் சிங்கள ஆட்சியாளர்கள் இன்னொரு கொலைக் களத்தைத் திறப்பார்கள் என்று யாருமே நம்பியிருக்காத நிலையில், இந்தப் படுகொலை நடாத்தப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் இராணுவ வீழ்ச்சிக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்கள் இத்தனை உறுதியுடன் போரிடுவார்கள் என்று சிறீலங்கா அரசு நம்பியிருக்கவில்லை. கே.பி. மூலமாக புலம்பெயர் தமிழர்களைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம் என்ற சிங்கள தேசத்தின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனதால், தமது அடுத்த கட்டத்தை நோக்கி நகர அது முற்பட்டது.  
விடுதலைப் புலிகளது இராணுவ பலத்திற்கும், அதன் பிரமாண்டத்திற்கும், அவர்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கும் பின்பலமாக விளங்கிய புலம்பெயர் தமிழர்களை அந்த நினைவுகளிலிருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே சிங்கள தேசம் நிம்மதியாக இருக்க முடியும் என்பதே சிங்கள - இந்தியப் புலனாய்வாளர்களது ஒருமித்த முடிவாக இருந்தது. அதை நோக்கிய செயற்பாடுகளுக்கே அதி முக்கியத்துவமும், அதி நிதியூட்டலும் கொடுக்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களிடமிருந்து விடுதலைப் புலிகள் என்ற அதி உச்ச நம்பிக்கையைச் சிறைப்பிடித்து, சிதறடிக்கும் முகமாக கே.பி. மூலமாக ‘நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்’ உருவாக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால்வரை விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தே பயணித்த தமிழ் மக்களை முள்வேலி முகாமுக்குள் அடைத்தது போல், புலம்பெயர் தமிழர்களை ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஜனநாயக முள்வேலிக்குள் முடக்குவதுதான் சிங்கள ஆட்சியாளர்களது திட்டமாக இருந்தது.
 யுத்தம் நிறைவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், சிங்கள ஆட்சியாளர்களது ஜனநாயக முள்வேலிக்குள் புலம்பெயர் தமிழர்கள் அடைபட மறுத்துவிட்டார்கள். கே.பி. மீதான தமிழர்களது வெறுப்பின் பாதிப்பு, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அவரது கட்டுமானத்தையும் கேள்விக்குறியாக்கிவிட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் பெரும்பான்மையாக உள்வாங்கப்பட்ட கே.பி. குழுவினரது செயற்பாடுகளும் புலம்பெயர் தமிழர்களிடம் நம்பகத் தன்மையை உருவாக்கவில்லை.  
சிங்கள ஆட்சியாளர்கள் தங்களது அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக ‘தலைமைச் செயலகம்’ என்ற விடுதலைப் புலிகளது இன்னொரு அணி விளங்கியது. ‘தலைமைச் செயலகம்’ சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலோ, கட்டளையுடனோ இயங்காவிட்டாலும், அவர்களது முரண்பாடான செயல்கள் அனைத்தும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மிக, மிக அவசியமானதாக இருந்தது.  
புலத்தில், தமிழர்களது பலத்தைச் சிதைப்பதற்கு சிங்கள அரசு கே.பி. குழு ஊடாக, முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்த் தேசியத் தளத்திற்கும், தலைமைச் செயலகத்திற்கும் இடையேயான முரண்பாடுகள் கே.பி. குழுவினரால் கூர்மைப்படுத்தப்பட்டது. தலைமைச் செயலகம் மேற்கொண்ட ‘அதிகாரத்தைக் கைப்பற்றுதல்’ என்ற வேட்கைக்கு ஏற்பட்ட ஆளணிப் பற்றாக்குறையை சிங்களப் புலனாய்வாளர்கள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார்கள். கே.பி.   குழுவின் தூண்டுதலோடு, கடந்த வருடம் மாவீரர் தினமும் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டது.  
விடுதலைப் புலிகளால் அதி உச்ச கௌரவத்திற்கு உரியவர்களாகவும், தமிழ் மக்களால் காவல் தெய்வங்களாகவும் பூசிக்கப்பட்ட மாவீரர்களுக்கு, கடல் கடந்த நாடுகளில் நடாத்தப்பட்டு வந்த மாவீரர் தினம் இப்படித்தான் நடாத்தப்பட வேண்டும் என்று தேசியத் தலைவர் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டிருந்தது. சமாதான காலத்தில், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள், போராளிகள் அதில் பங்கேற்கவென அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இலண்டன் மாநகரில் நடாத்தப்பட்ட பல மாவீரர் தின நிகழ்வுகளில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பங்கேற்றிருந்தார்.  
இந்த நிலையில், மாவீரர் தின நிகழ்வுகள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது. கணக்குகள் ஆராயப்பட்டது. எதைக் கேட்டால்... எதை முன்வைத்தால் புலம்பெயர் தமிழர்களைக் குழப்பமுடியும்? என்ற கொழும்பின் தீர்மானம் புலம்பெயர் நாடுகளில் கொட்டப்பட்டது. புத்திஜீவிகளாகவும், பாமரர்களாகவும் பிளவுபடுத்தப்பட்ட இலண்டன் மாநகரத்தில் சிங்கள தேசத்தின் கணக்கு ஓரளவு அரங்கேற்றம் கண்டது.

ஆனால், பலமான தமிழ்த் தேசிய உணர்வுடன் வளர்க்கப்பட்ட பாரிஸ் நகரில் அந்தத் திட்டம் தோல்வியைத் தழுவியது. இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, கடந்த வருடத்தில் போட்டி மாவீரர் தினத்தை நிகழ்த்திய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தலைமைச் செயலகம், தமிழர் நடுவம் என்ற கே.பி. குழுவினர் ஆகிய முக்கூட்டு அணிக்கும் கௌரவப் பிரச்சினையாக மாறியது. இவர்கள் எல்லோருக்குமே பரிதியைக் குறி வைத்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்தும், தமிழ்த் தேசிய தளத்திலிருந்தும் பரிதியை அகற்றினால் மட்டுமே தத்தமது நோக்கங்கள் நிறைவேறும் என்ற நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும், தலைமைச் செயலகமும், தமிழர் நடுவமும் பரிதியை எதிரியாகவே நோக்கினார்கள். தமிழ்த் தேசிய விடுதலை நோக்கிய போராட்டத்தில் இவர்களை அரவணைத்துச் செல்ல முற்பட்ட பரிதியின் நல்ல முயற்சிகளும் இவர்களால் நிராகரிக்கப்பட்டது.
அதை விடவும் மோசமாக, பரிதி தலைமையிலான விடுதலைப் போராட்ட நிகழ்வுகளும் இவர்களால் புறக்கணிக்கப்பட்டது. ஆரம்ப நாட்களில் தனியான சில போராட்டங்களை முன்னெடுக்க இந்த முக்கூட்டு அணி முயற்சி செய்த போதும், மக்கள் ஆதரவு வழங்க மறுத்தமையால், அதுவும் கைவிடப்பட்ட நிலையில், கடந்த வருடத்தில் நடாத்தப்பட்ட போட்டி மாவீரர் நிகழ்வும் மக்களால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், பரிதியால் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சியும் கே.பி. குழுவினரால் தோற்கடிக்கப்பட்டு, இந்த வருடத்திலும் போட்டி மாவீரர் தினத்திற்கான அறிவித்தல் இந்த முக்கூட்டு அணியால் விடுக்கப்பட்டது.  
தமிழ்த் தேசிய தளத்திலிருந்து பரிதியை அகற்றுவது மட்டுமே இந்த முக்கூட்டு அணியின் நோக்கமாக இருந்தது. ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள் இதற்கு முற்றிலும் மாறான முடிவை எடுத்துவிட்டார்கள். இந்த முக்கூட்டணி தமக்காக உருவாக்கிய தளத்தினூடாகப் பயணித்தே சிங்களப் பேரினவாதம் பரிதி என்ற இரும்பு மனிதனை, தேசியத் தலைவரின் ஒப்பற்ற தளபதியை, விடுதலைப் பெரு விருட்சத்தின் பெரு விழுதை மண்ணில் சாய்த்தது. பரிதியை சுட்டுக் கொன்றது சிங்கள தேசமாக இருந்தாலும், அதற்கான கால சூழ்நிலையை அமைத்துக் கொடுத்த பொறுப்பிலிருந்து இவர்களில் யாரும் தப்பித்துவிட முடியாது.

No comments:

Post a Comment