Tuesday, July 12, 2011

இறுதி நாட்களும் எனது பயணமும் - 11

சற்றுநேரமேனும் என்னை புரிந்துகொண்டவர்களாய் என்னோடிருந்த மனிதர்களும் சென்றுவிட்டார்கள். அவர்கள் எழுந்துசென்ற இடைவெளியை வேறு யாரோ வந்து நிரப்பினார்கள்.
மங்கலாகிவிட்ட பார்வையை கூர்மைப்படுத்தியபடி அவதானித்தேன். வயோதிப தம்பதியொன்று தமது பைகளை போட்டு அவைமீது குந்திக்கொண்டிருந்தனர். எனக்கோ கண்களை திறக்க முடியாமல் தலையை வலித்தது. உடலும் மனமும் களைத்து சோர்ந்துபோய்விட்டிருந்தது. போத்திலில் இருந்த, ஒரு மிடறுக்கும் போதாத பானத்தை கவிழ்த்து ஊற்றி நாக்கை முழுதுமாய் நனைத்து விழுங்கினேன்.

சற்றுநேரத்தில் என்முன்னால் சிறுவன் ஒருவன் வந்துநின்றான்.     ‘அக்கா அந்த போத்தில தாறிங்களா?’ என்றபடி. அந்த போத்தில் என்னிடமிருந்தால் என்னை அறிந்தவர்கள் யாராவது தண்ணீருடன் வந்தால் கொஞ்சம் தருவார்கள் என்றிருந்த நப்பாசையையும் அவன் அபகரித்துவிட்டான். அந்தச்சிறுவனுக்கு மறுப்புச்சொல்ல என்னால் முடியவில்லை. போத்திலை அவனிடம் கொடுத்துவிட்டேன். அவனும் வாங்கிய வேகத்தில் போய்விட்டான்.

vanni11-1
பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப்போல எல்லோருக்கும் துன்பங்கள் அதிகரித்துக்கொண்டுதான் செல்கின்றன. போயும் போயும் கிழிந்து கந்தலாய்போன மனதுடன் கிடக்கும் என் கால்மாட்டில்தானா காயப்பட்டவர்களும் வந்து விழவேண்டும். ஆறாத பச்சை காயங்களுடன் வந்த சிலர் செய்வதறியாத நிலையில் இருந்தார்கள்.

தமது ஊன்று கோல்களை பொத்தென கீழே போட்டுவிட்டு நிலத்தில் கிடந்த அவர்களில் களைப்பு அப்பட்டமாய் தெரிந்தது. யாராவது தண்ணீர் தரமாட்டார்களா? எங்கள் காயமடைந்த நிலையை பார்த்து பரிதாபப் பட்டாவது யாரும் ஒரு மிடறுக்குத்தன்னும் தர மாட்டார்களா என்று அவர்கள் சூழவுள்ளவர்களை பார்த்தார்கள் என்றால் அதில் தவறில்லை. ஆனால் எந்த மனிதர்களுமே அவர்களை   பார்க்கவில்லை.

பார்த்தால் தம்மிடமிருந்த சொட்டு நீரையும் கொடுக்கவேண்டி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் எவரும் அவர்களை கடைக்கண்ணால்கூட பார்க்க விரும்பவில்லை. அந்தப்பையன்கள் தவிப்போடுகிடந்தார்கள்.

வெய்யில் பாடாய் படுத்தியது. அத்தனை சனங்களும் நாவாற குடிக்கக்கூடிய தண்ணீரை படையினரால் வழங்கவே முடியவில்லை. வலியன வாழும் என்பதைப்போல அடித்து மோதி தண்ணீரை பிடித்துக்கொண்டவன் குடித்தான். முடியாதவன் தாகத்தோடு உடல்வற்றி சுருண்டான்.
vanni11-1
என் காலடியில் கிடந்தவர்கள் உளறத் தொடங்கிவிட்டார்கள். காயங்கள் அவர்களுக்கு எவ்வளவு வேதனை அளிக்கும் என்பதை என்னாலும் உணரமுடிந்தது. இவர்கள் ஏன் இங்கே வந்தார்கள்? காயப்பட்டவர்களை ஏற்றும் இடத்திற்குச் சென்றிருக்கலாம் அல்லவா? இந்நேரம் மருத்துவமனையை அடைந்திருக்கலாம் அல்லவா? என்று உள்மனம் நினைத்த மறுகணமே அதற்கான காரணங்களையும் எண்ணி அவர்கள்மீது இரக்கத்தையே நிரப்பியது.

அவர்கள் பெரும்பாலும் போராளிகளாக இருந்தவர்களாகவும் இருக்கலாம். அதனால்  தனித்துச்செல்ல அவர்கள் அஞ்சியிருக்கலாம். அல்லது தம் பெற்றோர் சகோதரர்களை தேடித்தான் வந்துமிருக்கலாம். நிறையப்பேர் அப்படித்தான் உறவுகளைத்தேடி அலைந்தார்கள். பெற்றவர்களும் பிள்ளைகளை தேடிக்கொண்டு திரிகிறார்கள் அந்த மனிதச் சமுத்திரத்துள்.

அம்மா அம்மா என்று உளறிக்கொண்டு நிலத்தில் புரளும் காலிழந்தவனுக்கருகில் இன்னொருவன் தன் ஒற்றைக்காலை குத்திக்கொண்டு குந்தியிருந்தான். அவர்களுக்கு அப்பால் இரண்டு பையன்கள் மயக்கநிலையில் கிடந்தார்கள். நான் எழுவதற்குத்தான் முயன்றுகொண்டிருந்தேன். ஆனால் முடியவே இல்லை.

ஒருதுளி தண்ணீரையாவது என்னால் கொடுக்க முடியும் என்றால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று என் உள்மனம் அரற்றியது. நான்கூட தண்ணி தண்ணி என்று அரற்றிக்கொண்டுதான் கிடந்தேன்போலும். அது அருகிலிருந்த வயோதிப தம்பதியை பாதித்து இருக்கவேண்டும்.

‘இந்தா ஒரு மிடறு குடியம்மா’ என்று தம்மிடமிருந்த குறைப்போத்தல் தண்ணீரை தந்தார்கள். அதில் நான் ஒரு மிடறு நீரை வாயில் நிறைத்துக்கொண்டு என்னிடமிருந்த சத்துக்குளிசை ஒன்றை போட்டு விழுங்கினேன். அது ஓரளவு பலவீனத்தை தடுக்கும் அல்லவா என்ற நப்பாசைதான். கையோடு ஐந்தாறு விட்டமின் சி குளிசைகளையும் எடுத்துக்கொண்டு எழுந்தேன். தலை சுற்றியது. நிற்கமுடியாமல் தடுமாறி மீண்டும் அமர்ந்துவிட்டேன்.

vanni11-1
என்னை கட்டுப்படுத்த முயற்சித்தேன். வெட்டைவெளி முழுவதிலும் காயப்போட்ட கருவாடுகள்போல மனிதர்கள் ஏன் படுத்துக்கிடக்கிறார்கள் என்பதை நான் அநுபவபூர்வமாக உணர்ந்தேன். சற்றுநேரத்தின்பின் மிகமெதுவாய் எழுந்துநின்றேன். மெதுவாக காலடிவைத்து நகர்ந்து ஒருவாறு என்னை சமாளித்து நடந்தேன். வாடிவதங்கிப்போய் குந்திக்கொண்டிருந்த  ஒரு தம்பியிடம் இரண்டு  விட்டமின் சி குளிசைகளை கொடுத்தேன்.

‘நாக்குக்கு கீழ் வைச்சிருங்க’ என்றும் சொன்னேன். சொன்னதுதான் தாமதம்;, பறிக்காத குறையாக  அதை வாங்கியவன் தன் வாய்க்குள் எறிந்து கொண்டான். தரையில் புரண்டு புரண்டு கிடக்கும் காலிழந்த தம்பியிடம் மெல்லக் குனிந்து, ‘தம்பி வாயத் திற’ என்று மெதுவாக கன்னக்கில் தட்டினேன்.

பசியோடு காத்திருந்த குருவிக்குஞ்சை போல, அவன் வாய் திறந்தான். அவனது நாக்கு மரக்கட்டை போல வறண்டு வெள்ளை பூத்திருந்தது. அதில் குளிசையை வைத்துவிட்டு உமியுங்கள் என்று எப்படி சொல்வது? ஈரலிப்பே இல்லாத நாவில் குளிசை எப்படி கரையும்? அரை மயக்கத்தில்கிடந்த மற்ற பையன்களின் நாக்குகளிலும் இவ்விரண்டு குளிசைகளை வைத்துவிட்டேன். குறைந்தது ஒரேயொரு குவளை தண்ணீராவது கொண்டுவந்து அவர்களின் நாவை நனைக்க விரும்பியது என் உள்ளம். ஆனால் என்னால் நிற்கக்கூட முடியவில்லை. கால்கள் வலுவிழந்தன. வெற்று நினைவும் வேதனை மனமுமாக மீண்டும் வந்து  நிலத்தில் சரிந்தேன்.

எல்லாமே எனக்கு மங்கலாகத்தான் தெரிந்தன. அந்த பையன்களை நினைக்க அழுகை வந்தது. அப்படி என்னதான் பாவம் செய்தார்கள் இவர்கள்? மனிதர்களை துடிக்கப்பதைக்க வெட்டி கொன்றார்களா? இல்லையே. ஊர்களுக்குள் புகுந்து உறவுகளை பிடித்து கட்டிவைத்து சுட்டார்களா? இல்லையே. பெண்களை கடத்திச்சென்று சித்திரவதை செய்து அவர்கள் குளறக்குளற மானபங்கப் படுத்தினார்களா? இல்லவே இல்லையே.

vanni11-1
தமது இனத்தின் விடுதலைக்காக என்று ஆயுதம் தூக்கினார்கள். தம்முடன் மோத வந்த படையினருடன் மோதினார்கள். அதற்காக இவ்வளவு பெரிய தண்டணையா?

என் கண்களில் இருந்து சுடுநீர் வழிந்து கன்னங்களை நனைத்து அப்படியே உதடுகளையும் நனைத்தது. அந்த ஈரத்தை நாவால் தடவி நாவை ஈரலிப்பாக்கிக்கொண்டேன். என் பார்வையின்முன்னே குந்திக்கொண்டிருந்த போராளியின் வளைந்த முதுகு தெரிந்தது. அழுக்கான அவனது மேற்சட்டைக்கு மேலே முதுகு மெதுவாக ஏறியிறங்கிக் கொண்டிருந்தது.

திடீரென நினைவு வந்தவளாய் சொன்னேன்,
‘தம்பி சீனி இருக்கிது. தரட்டா?’
‘தாங்களனக்கா’ என்றான்.

உடனே என் சிறிய பையில் வைத்திருந்த சீனிப்பையை பிரித்து கைநிறைய அள்ளிக்கொடுத்தேன். காலிழந்து கிடந்தவனின் வாயிலும் சீனியை போட்டுவிட்டேன். அவனை காய்ச்சல் எரித்துக்கொண்டிருந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அவன்பால் இரக்கம் மேலிட்டது.

இப்போது அவன் முகத்தை ஈரத்துணியால் துடைத்துவிட்டால் எவ்வளவு ஆறுதலாக இருக்கும் என்று வெறுமனே நினைத்துக்கொண்டு வேதனையுடன் வந்து குந்திக்கொண்டேன்.

காலத்தாலும் இந்த உலகத்தாலும் சபிக்கப்பட்ட மாந்தர்கள் நாங்கள் என்று எனக்குள்ளேயே என்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டேன். என்னிடம் இன்னும் சிறிதளவு சீனியும் சத்துக்குளிசைகளும் இருக்கின்றன. கடைசிப்பொழுதில் காப்பரணருகே கிடந்ததால் எடுத்துக்கொண்டுவந்தது எவ்வளவு நன்றாகப்போய்விட்டது.
vanni11-1
எனது பார்வையை போலவே பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக்கொண்டே போனது. வெய்யில் தாழவிட்டு எப்படியாவது தண்ணீர் தேடவேண்டும் என்ற எண்ணத்தை என்னால் ஈடேற்ற இயலவில்லை. மின்விளக்குகள் ஆங்காங்கே எரிந்து இருளை விரட்டின. எனினும் என்னால் இயங்க முடியவில்லை. வேறு வழி புரியாமல் படுத்துவிட்டேன். கடும் துக்கமாக இருந்தது. மனசுக்கு நெருக்கமான யாராவது அருகில் இருந்தால் எவ்வளவோ ஆறுதலாக இருக்குமே. என்னைப்போல யாராவது தனித்துவிட்டவர்களாவது வந்து என்னோடு சேர்ந்துகொள்ள மாட்டார்களா என்று ஏக்கமாக இருந்தது.

நான் பிறருக்கு இடைஞ்சலாய் ஆகிவிட விருப்பமில்லை. நான் யாருடனும் சேர்ந்து இருக்கப்போய் படையினர் அவர்களிடம் இவள் யார்? உங்களுக்கு என்ன உறவு என விசாரித்தால் அது அவர்களுக்கு பிரச்சினைதானே. இருக்கின்ற கவலைகள் போதாதா? இன்னும் தேடிக்கொள்ள வேண்டுமா?

vanni11-1
எல்லாவற்றையும் எண்ணித்தான் தனித்திருந்தேன். எனினும் அந்த ஆதரவற்ற தன்மை என்னில் பயங்கரமாய் தாக்கியது. தானாய் வழிகின்ற கண்ணீரை துடைக்கக்கூட மறந்தவவளாய் கிடந்தேன்.
என் தலைமாட்டில் திடீரென நெருக்கிடியத்த கூட்டம் படுமோசமாய் கலகலத்தது. அவர்கள் ஏதோ திருவிழாவில் கலந்து கொண்டிருப்பவர்களைப் போல அமர்க்களப்படுத்தினார்கள்.

‘சரி சரி இந்த தண்ணிய இப்ப பாவியுங்க. மற்றதுகள கவனமா வையுங்க. பிறகு தண்ணி கிண்ணி எண்டு என்னை ஆக்கினப்படுத்த கூடாது. இப்பவே எல்லாரும் சாப்பிடுங்க. மிச்சமிருந்தா கவனமா கொண்டு வாங்க’ என்று கண்டிப்புடன் சொன்னது ஆண்குரல்.

தொடரும்………….
- ஆனதி

No comments:

Post a Comment

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...