Wednesday, June 8, 2011

திணறுகிறது சென்னைத் துறைமுகம்: அமைச்சர் ஜி.கே.வாசன் தீர்வு காண்பாரா?

முகவை. க. சிவகுமார்
Source:www.dinamani.com


திருவொற்றியூர், ஜூன் 7: நிர்வாக சீர்கேடு, திட்டப்பணிகளில் தொடரும் தேக்க நிலையால் சென்னைத் துறைமுகம் திணறி வருகிறது; இச் சூழ்நிலையில் கப்பல் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நீண்ட நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை துறைமுகத்திற்கு வருகை தர உள்ளார்.



துறைமுக இணைப்பு சாலை திட்டம், திருவொற்றியூர் வாகன நிறுத்துமிடம், நுழைவு வாயில்களில் நிலவும் நெருக்கடி, கூடுதல் நுழைவு வாயில்கள் அமைப்பது, நிலக்கரி, இரும்புத் தாது உள்ளிட்டவைகளை வேறு துறைமுகங்களுக்கு மாற்றும் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்பார் எனத் தெரிகிறது.

இந்தியாவின் கிழக்கு நுழைவு வாயிலாகக் கருதப்படும் சென்னைத் துறைமுகத்தில் ஆண்டுக்கு சுமார் 15 லட்சம் சரக்குப் பெட்டகங்கள் (கன்டெய்னர்கள்) கையாளப்படுகின்றன. நிலக்கரி, உணவு எண்ணெய், உரம் போன்றவை கப்பல்கள் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் துறைமுகத்திற்கு சுமார் 10 ஆயிரம் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
ஆனால் இவற்றைக் கையாளத் தேவையான கட்டமைப்பு வசதிகள் துறைமுகத்தின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்க்க பல்வேறு திட்டங்களையும் கப்பல்துறை அறிவித்திருந்தது. குறிப்பாக இத்துறையின் அமைச்சராக வாசன் பொறுப்பேற்ற பிறகு திட்டப்பணிகளில் ஏற்பட்டிருந்த பல்வேறு பிரச்னைகளைத் தீர்க்க முனைப்பு காட்டினார். இருப்பினும் இதற்குத் துறைமுக நிர்வாகம் போதிய முயற்சிகளை விரைவாக எடுக்காததால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்ன பிரச்னை இருந்ததோ அவை அப்படியே இப்போதும் தொடரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
முதல் நுழைவு வாயில்: துறைமுகத்துக்கு வரும் லாரிகள் அனைத்தும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள முதல் வாயில் வழியாகத்தான் உள்ளே செல்கின்றன. இங்கு சரக்குப்பெட்டகங்கள் குறித்த சர்வே, பாதுகாப்பு சோதனை, சுங்கத்துறை தணிக்கை ஆகிய பணிகளுக்காக சுமார் 5 முதல் 15 நிமிடங்கள் லாரிகள் நிறுத்தப்படுகின்றன.
ஆனால் தொழில் பாதுகாப்புப் படையினர், சுங்கத்துறை அதிகாரிகள் சுறுசுறுப்பாக பணியாற்றினால் ஒரு லாரியை அனுப்ப இரண்டு நிமிடமே போதுமானது. பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் லாரிகள் காத்திருந்தாலும் விரைவாக உள்ளே அனுப்ப கூடுதல் அலுவலர்களை நியமிக்க துறைமுக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் நெரிசல் ஏற்பட்டு தினமும் 15 கி.மீ. தூரத்திற்கு லாரிகள் வரிசையில் காத்திருக்கின்றன. இங்கு கூடுதல் வாயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் அளித்த உறுதி மொழி என்னாயிற்று?
பணிகள் துவங்காத ரூ. 600 கோடி இணைப்பு சாலை திட்டம்: சென்னைத் துறைமுக வளர்ச்சியின் முக்கிய மைல்கல்லாக விளங்கப்போகும் ரூ.600 கோடி துறைமுக இணைப்புச் சாலை திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. பல்வேறு பிரச்னைகளையும் கடந்து கடந்த பிப்ரவரி மாதம் ரூ. 267 கோடி மதிப்பீட்டிலான சாலைப்பணிகள் அடிக்கல் நாட்டுவிழா திருவொற்றியூரில் நடைபெற்றது. ஆனால் 4 மாதங்களைக் கடந்தும் இதுவரை குறிப்பிடும்படியாக எவ்விதப் பணிகளும் நடைபெறவில்லை. இப்போது காசிமேடு பகுதியில் மீனவர்கள் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையே துவக்கப்பட்ட இத்திட்டம் 24 மாதங்களில் திட்டமிட்டபடி நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மூடிக் கிடக்கும் நுழைவு வாயில்கள்:சென்னைத் துறைமுகத்தில் முன்பு 14 நுழைவு வாயில்கள் இருந்தன. பின்னர் 4 வாயில்கள் நிரந்தரமாக மூடப்பட்டன. தற்போது 10 வாயில்கள் உள்ளன. சுங்க அலுவலகம் ஏதிரில் உள்ள பிரதான நுழைவு வாயிலில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. போர் நினைவுச் சின்னம் அருகே உள்ள வாயில் எண் 10-ல் உரம், நிலக்கரி, கிரானைட் கற்கள், கார்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கடந்த ஜூலை 2009-ல் முதல் காலை 5 மணி முதல் இரவு 10 மணிவரை இவ்வாயிலில் செல்ல அனுமதி இல்லை. இதனால் இவ்வழியே சென்ற வாகனங்கள் அனைத்தும் ராயபுரம், காசிமேடு சாலைகளில் வரிசை கட்டி நிற்கின்றன.
ரூ. 6 கோடியை விரயமாக்கியும் செயல்படாத வாகன நிறுத்த முனையம்: நெரிசல் காரணமாக எண்ணூர் விரைவு சாலையில் சுமார் 15 கி.மீ தூரத்திற்கு வரிசையில் வாகனங்கள் தொடர்ந்து காத்திருக்கின்றன. இதற்குத் தீர்வாக வரிசையில் நிற்கும் வாகனங்களை தனியாக ஓரிடத்தில் நிற்க வைப்பது என முடிவு செய்யப்பட்டு இதற்காக திருவொற்றியூர் நகராட்சி நிலம் 11 ஏக்கர் குத்தகை அடிப்படையில் துறைமுக நிர்வாகம் கையகப்படுத்தியது.
கடந்த ஜூன் 2007-ல் இத்திட்டத்திற்கென ரூ.30 லட்சம் வைப்புத் தொகையையும் துறைமுக நிர்வாகம் செலுத்தியது. கடந்த 4 வருடங்களில் சுமார் ரூ.6 கோடியை துறைமுக நிர்வாகம் வாடகையாக திருவொற்றியூர் நகராட்சிக்குச் செலுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் செயல்பட்டால் மூன்று மாதங்களில் கான்கிரீட் தளம் அமைத்து வாகன நிறுத்த மையம் செயல்பாட்டிற்கு வந்திருக்கும். ஆனால் மாத வாடகை ரூ. 12 லட்சம் செலுத்துகிறோமே என்ற கவலை துறைமுக நிர்வாகத்திற்கு துளியும் இல்லாததால் இன்னும் பொட்டல் காடாகவே காட்சியளிக்கிறது 11 ஏக்கர் நகராட்சி நிலம்.
நிலக்கரி, இரும்புத் தாது: சென்னை மாநகரத்தின் கடற்கரைப் பகுதி மக்களுக்கு சுற்றுச் சூழல் சவாலாக இருந்து வந்த நிலக்கரி, இரும்புத் தாது மாசு பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இதன்படி நிலக்கரி, இரும்புத்தாது கையாளுவதை விரைவில் வேறு துறைமுகங்களுக்கு மாற்ற வேண்டும் என கூறியிருந்தது. இதன் மூலம் பொதுமக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றாலும் துறைமுகத்திற்கு இது ஒரு பலத்த அடியாகவே இருக்கும்.
இவ்வாறு மாற்றுவதன் மூலம் ஏற்படும் சுமார் ரூ.200 கோடி வருமான இழப்பீட்டை ஈடுசெய்யத் தயாராகும் வகையில் எவ்வித உடனடித் திட்டமும் துறைமுக நிர்வாகத் தரப்பில் இல்லை என்றே கூறப்படுகிறது.
சி.பி.ஐ. பிடியில் சென்னைத் துறைமுகம்: சென்னைத் துறைமுகத்தில் கடந்த பல வருடங்களாக நிலவிவந்த ஊழல்களைக் களையும் வகையில் மத்திய புலனாய்வுத் துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னாள் துறைமுகத் தலைவராக இருந்த கே.சுரேஷ் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் துறைத் தலைவர்களாக இருந்த சிலர் சி.பி.ஐ. வசம் இப்போது சிக்கியுள்ளனர். 125 ஆண்டு விழா கொண்டாட்டம், தங்க நாணையங்கள் வாங்கியது, ரூ.47 கோடியில் அமைக்கப்பட்ட கன்வேயர், கப்பல் தள ஒதுக்கீடுகளில் தொடரும் அத்துமீறல்கள் குறித்து கடந்த ஒரு மாதமாக சி.பி.ஐ. ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கிய அதிகாரிகள் விரைவில் சிக்குவார்கள் என சி.பி.ஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஜி.கே.வாசன் நடவடிக்கை எடுப்பாரா? நாட்டின் பழமையான துறைமுகங்களில் ஒன்றான சென்னைத் துறைமுகம் பல்வேறு பிரச்னைகளால் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. துறையின் அமைச்சர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் தொடர்ந்து இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீண்ட நாள்களுக்குப் பிறகு தனியார் கடல்சார் கல்லூரி விழா ஒன்றுக்காக புதன்கிழமை ஜி.கே.வாசன் கலந்து கொள்ள உள்ளார். அப்போது மேற்கண்ட பிரச்னைகள் குறித்து துறைமுகத் தலைவர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிப்பாரா, மேலும் திட்டப் பணிகளில் தொடர்ந்து மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதே கேள்விகளாக உள்ளன.
பணியாளர்கள் விஷயத்தில் போதிய அளவு நடவடிக்கைகளை எடுத்த ஜி.கே. வாசன் நிர்வாகரீதியாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் இப்போது உருவாகியுள்ளது என்றார் துறைமுக அதிகாரி ஒருவர்.


No comments:

Post a Comment

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...