ஆகஸ்ட் 17 விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவனின் பிறந்த நாள். தமிழகத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய தலைவராக வளர்ந்து வந்தவர். பல தலித் தலைவர்கள் பெருந்தலைவர்களாக வளர்ந்ததும்,இயக்கத்தை மறந்து தங்களது சுயநலத்தைப் கவனத்தில் கொண்டு பதவி சுகத்தில், கொள்கைகளை கரைத்து விட்டு, தாங்களும் கரைந்து போன நிலையில், நம்பிக்கைக்குரிய தலைவராக திருமாவளவனை தலித்துகள் பார்த்தார்கள்.
1998 தேர்தலில் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெரும் வெற்றியைப் பெற முடியவில்லை என்றாலும், தொடர்ந்து நடந்த தேர்தல்களில், கணிசமான வாக்குகளைப் பெற்று, தமிழக அரசியலில் தங்களுக்கென்று ஒரு இடத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி பெற்றது.
2008ன் இறுதியில், தமிழகமெங்கும் ஈழத் தமிழருக்கு ஆதரவான போராட்டங்கள் வெடித்துக் கிளம்பிய நிலையில், ஒரு சரியான நிலைப்பாட்டை எடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி “ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில்” தன்னை இணைத்துக் கொண்டு, தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது. முத்துக்குமார் மரணத்தையொட்டி, நடந்த பல போராட்டங்களிலும், தொல்.திருமாவளவன் தன்னை இணைத்துக் கொண்டு ஈழத்தமிழருக்காகவும், ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டியும் குரல் கொடுத்தார்.
தேர்தல் நெருங்கவும், தமிழகத்தின் கூட்டணி காட்சிகள் மாறுகையில், ஈழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியுடன் திருமாவளவன் கூட்டணி வைக்க மாட்டார் என்று ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்த அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், கொள்கையைவிட, பதவிக்காக தமிழினப் படுகொலைக்குக் காரணமான எதிரியிடமே கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ”தொல்” திருமா ”தொலைந்த” திருமா ஆனார். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆன பிறகு டெல்லி சென்ற பிறகும், தனக்கு உரிய மரியாதை கிடைக்காமல் மனம் புழுங்கினார் என்று திருமாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். தேர்தல் கூட்டணிக்காக திருமாவை இழுத்துப் பிடித்து கட்டிவைத்த கருணாநிதி, மந்திரி பதவிக்காக பேரம் நடத்தியபோது, திருமாவை வசதியாக மறந்து விட்டார்.
ஆனால், மந்திரி பதவி எப்படியாவது கிடைக்குமா என்ற நப்பாசையோடு திருமா இருந்தார் என்றுதான் தோன்றுகிறது.
இன்று ஈழ ஆதரவு உணர்வாளர்கள் மத்தியிலும், தன் நன்மதிப்பையும், நம்பகத்தன்மையையும் இழந்து நிற்கும் திருமா இழந்த தன் மதிப்பை மீட்பதற்காக தன் பிறந்த நாளை ”தமிழர் எழுச்சி நாளாக” கொண்டாடுகிறார். ஆகஸ்ட் 17ல் ”எழும் தமிழ் ஈழம்” என்ற தலைப்பில் மாநாடு நடத்த திட்டமிட்டு, சென்னை நகர் முழுவதும் சுவர் விளம்பரங்களும் பேனர்களும் வைக்கப் பட்டிருந்தன. பல பேனர்கள், திருமாவின் படத்துக்கு அருகே, பிரபாகரன் படத்தோடு வைக்கப் பட்டு இருந்தன. வன்னியில் முள் வேலிக்குள் அடைப்பட்டிருக்கும் தமிழர்களை வெளிக் கொணர்வதற்காகவாவது இம்மாநாடு பயன் அளிக்கட்டும் என்ற வகையில் தமிழ் உணர்வாளர்கள் இம்மாநாட்டை வரவேற்கவே செய்தார்கள்.
ஆகஸ்ட் 15 அன்று இரவு, சென்னை காவல்துறையிலிருந்து திருமாவை தொடர்பு கொண்டு ”ஈழம்” என்ற வார்த்தை மாநாட்டின் தலைப்பிலிருந்து நீக்க வேண்டும், பிரபாகரன் படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறினர்.
மறைக்கப் பட்ட "ஈழம்"
மறைக்கப் பட்ட "பிரபாகரன்"
போராட்ட குணம் கொண்ட தலைவர் (???) என்று நம்பப்டும் திருமா இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. ஆனால், விசித்திரமாக திருமா பிரபாகரன் படங்களை அழிப்பதற்கும், ”ஈழம்” என்ற வார்த்தையை அழிப்பதற்கும், தன் சம்மதத்தை தெரிவித்துள்ளார். மேலும் தன் தொண்டர்களிடம், காவல் துறையின் பெயர் மற்றும் படம் அழிப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருமா இப்படி ”வெறுமா” ஆகியதன் பின்னணியை விசாரித்தால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவருகின்றன. சென்னையில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம், பத்பநாபமூர்த்தி மற்றும் மூன்று நபர்களுக்கு சொந்தமானது. இந்த இடத்தில் ஆக்ரமிப்பு செய்து, கட்சி நடத்தி வந்தார் திருமா. இந்த இடத்தில் அலுவலகம் கட்ட, தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, மேற்கு மாம்பலம் தாசில்தார் அலுவலகத்திலிருந்து அலுவலகம் கட்ட அனுமதி வேறு பெற்றிருக்கிறார். பத்பநாபமூர்த்தி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தை 15 நாட்களுக்குள் காலி செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்ததரவிட்டார். இத்தீர்ப்பை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி திருமாவளவன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. உச்சநீதிமன்றத்தில் திருமாவளவன் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப் பட்டு விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இத்தீர்ப்பை செயல்படுத்த வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திக்கச் சென்ற திருமாவளவன் மூன்று மணி நேரம் காக்க வைக்கப் பட்டதாகவும், செய்தியாளர்களின் கேள்விக்கு ஆணையருக்கு வாழ்த்து தெரிவிக்கவே வந்ததாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஏறத்தாழ ஒரு மாதத்துக்கு மேலாக "எழும் தமிழ் ஈழம்" மாநாட்டுக்கு செய்யப் பட்டிருக்கும் சுவர் விளம்பரங்களை துளியும் கண்டுகொள்ளாத கருணாநிதியின் காவல்துறை, மாநாட்டுக்கு முதல் நாள் இவ்வாறு அயோக்கியத்தனமாக மிரட்டல் விடுவதும், அதற்கு திருமாவளவன் அடிபணிவதும், திருமாவளவனின் பலவீனத்தையே காட்டுகிறது.
மறைக்கப் பட்ட "ஈழம்"
இந்தப் பலவீனம் இன்னொருவர் இடத்தில் ஆக்ரமித்து கட்சி நடத்துவதாலேயே வந்தது. நேர்மை வழுவினால், எத்தகைய சமரசத்தை செய்ய வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா திருமா ?
இப்பொழுதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. உடனடியாக நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப் பட்டு, ஆக்ரமித்து வைத்துள்ள அந்த அலுவலகத்தை காலி செய்து விட்டு, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தக் கறையை துடையுங்கள். ஈழத் தமிழர் படுகொலைக்குக் காரணமான கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள். உங்களை நம்பி இன்னும் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை வழிநடத்த, நீங்கள் சரியான வழியில் பயணிப்பது அவசியம். இன்னும் உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. பாரதியின் வரியை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
"படிச்சவன் சூதும் வாதும் பண்ணால் போவான் போவான்; அய்யோன்னு போவான்."
http://www.savukku.blogspot.com/
No comments:
Post a Comment