Thursday, June 6, 2013

பணி ஓய்வுக்குப் பின் மன நிம்மதி

By முகவை.க.சிவகுமார்
ஓய்வு பெற்றவர்களுக்கான பணிக்கொடை, சேமநலநிதி, ஓய்வூதியம், சலுகைகள் உள்ளிட்டவைகளை ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே வழங்கும் விழா, சென்னை புதுக்கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்றது.
உயர்கல்வித் துறையின் சென்னை மண்டலத்தில் உள்ள அரசு உதவி பெறும் 25  கல்லூரிகளில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய 62 பேராசிரியர்களுக்கு, ஓய்வுக்குப் பிறகு கிடைக்க வேண்டிய அனைத்தும் ஒரே நாளில் வழங்கப்பட்டன.
 இதில் என்ன புதுமை இருக்கிறது என நினைப்பவர்கள், அரசுத் துறைகளிலிருந்து ஓய்வுபெறுபவர்கள் படும் அவதிகளைக் கேட்டறிந்தால் புரியும். ஒருவர் ஓய்வுபெறும்போது துணை ஆட்சியர் அந்தஸ்தில் கூட இருக்கலாம். ஆனால் பணி ஓய்வு பெற்ற மறுநாளே  அவரும் சாதாரண ஓய்வூதியதாரர்தான்! அவரும் கடைநிலை எழுத்தரிடம் நின்று, பல முறை அலைந்துதான் தனது ஓய்வூதியச் சலுகைகளைப் பெறமுடியும்.
ஓய்வுபெறும் ஒருவர் அவரது பணிக்கொடை, சேமநலநிதி போன்றவற்றைப் பெறவே மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதற்கு எந்தத்துறையும் விதிவிலக்கு அல்ல. 
 இத்தகைய நிலைக்குக் காரணம் என்ன? சென்னை குருநானக் கல்லூரியில் சுமார் 35  ஆண்டுகளுக்கும் மேல் பேராசிரியர், கல்லூரி முதல்வராகப் பணியாற்றி இந்த விழாவில் ஓய்வுபெற்ற மாரின் மொரைஸ் இதைத் தெளிவுபடுத்தினார்.
 ""முதலில் அனைத்துத் துறைகளிலும் இந்தப் பணியைக் கவனிக்க போதுமான ஊழியர்கள் இல்லை. அப்படியே இருக்கும் ஊழியர்களிலும் பெரும்பாலானோரிடம் கடமை உணர்வுகள் பாராட்டும்படியாக இல்லை. உதாரணமாக இதே அலுவலகத்தில் முன்பிருந்த ஒரு அலுவலர் ஓய்வுபெற இன்னும் மூன்று மாதங்களே இருந்தன. எனவே கணக்கிடுவதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் தனக்குத்தான் சிக்கல். ஆகையால் ஓய்வு பெறும்வரை எந்தக் கோப்பையும் பைசல் செய்து ஒப்புதல் அளிக்க முடியாது என்று சாதித்தே காட்டினார். அவருக்கு அவரது சொந்தக் கவலை. அவரை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை.
 ஓய்வுக்கு பிறகு கிடைக்கும் பணத்தைக் கொண்டு திருமணம், வீடு, மனைகள் வாங்குவது,  கடனை அடைப்பது என பல்வேறு திட்டமிடலில்தான் ஒருவர் ஓய்வு பெறுகிறார். ஆனால் தற்போதைய நிலையின்படி பெரும்பாலானோர் தங்களது கனவுகளை அவ்வளவு எளிதில் நனவாக்க முடிவதில்லை. எப்படிப் பார்த்தாலும் நம் நாட்டில் உள்ள சிவப்பு நாடா முறைதான் அத்தனைக்கும் காரணம். இதையும் மீறி எங்களுக்கு ஓய்வுபெறும் நாளன்றே அனைத்துப் பயன்களும் கிடைத்தது நாங்கள் செய்த புண்ணியம்தான்'' என்றார் மொரைஸ். அவர் கூறியது அங்கிருந்த 62 பேரின் கருத்தாகவே நாம் அறிய முடிந்தது.
 இந்த 62 பேராசிரியர்களுக்கும் ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வூதியச் சலுகைகளை ஒரு அலுவலகத்தால் வழங்க முடியும் எனில் மற்ற அலுவலகங்களால் ஏன் முடியாது என்ற கேள்வியே நம் முன் எழுகிறது.
 தமிழகத்தில் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டிய இச்சிறப்பான பணியை யார் செய்திருந்தாலும் பாராட்டித்தான் ஆகவேண்டும். இப்பணிக்கு முயற்சி எடுத்த கல்லூரிக் கல்வித்துறை சென்னை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ரவிக்குமார் பாராட்டுக்குரியவர்.
 ""முதலில் இப்பதவியில் பொறுப்பேற்றபோது சுமார் 800 கோப்புகள் நிலுவையில் இருந்தன. இவற்றையெல்லாம் முதலில் பைசல் செய்தாக வேண்டும் என முடிவெடுத்தேன். பிறகு அலுவலக ஊழியர்கள் அனைவரிடத்திலும் இதன் அவசியம் குறித்து விளக்கி அவர்களது ஒத்துழைப்பையும் பெற்றேன். இது ஒரு கூட்டு முயற்சி. தற்போதைய நிலவரப்படி எங்கள் அலுவலகத்தில் எந்த ஒரு ஓய்வூதியதாரரின் கோப்பும் நிலுவையில் இல்லை. ஒரு லட்சியமாக மேற்கொண்டு இப்பணியை எங்கள் அலுவலகம் செய்து வருகிறது. இதில் எங்களுக்கு ஓர் ஆத்ம திருப்தி. உயர் அதிகாரிகள் சரியாகப் பணியாற்றினால், சக ஊழியர்களையும் அரவணைத்துச் செயல்பட்டால், எந்த அலுவலகமும் சரியான திசையில் கண்டிப்பாகப் பயணிக்கும் என்பதுதான் உண்மை'' என்றார் இணை இயக்குனர் ரவிக்குமார்.
 இது ஒரு அலுவலகத்திற்கு மட்டுமல்ல, ஒரு துறைக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த அரசு, தனியார் நிர்வாகங்களுக்கே அவசியமான ஒன்று. ஒருவர் இன்ன தேதியில் ஓய்வுபெறுகிறார் என்பது பணியில் சேர்ந்த தேதியிலேயே கூறிவிட முடியும் என்ற நிலையில் அவர் நியாயமாகப் பெறவேண்டிய ஓய்வூதியப் பயன்களை ஓய்வு பெறும் நாளன்றே வழங்க வேண்டும். அதுதான் அவர்களுக்கு நிம்மதியைத் தரும். இதனை அரசு கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...