Wednesday, March 27, 2013

பெருவாரியான சிங்களர்கள் இந்தியர்கள்தான்: இலங்கைத் தூதர் கரியவாஸம் ரகசிய பிரசாரம்!


Source: http://dinamani.com/india/article1519120.ece
By - எம்.ஏ.பரணீதரன் -, புது தில்லி

"வட இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட சிங்களர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலை கொள்ள வேண்டும்'' என்று தில்லியில் உள்ள அந்நாட்டுத் தூதர் பிரசாத் கரியவாஸம் இந்திய ஊடகங்கள், வடநாட்டுத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரகசிய பிரசாரம் செய்து வருகிறார்.
ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கடந்த 21-ம் தேதி இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, இலங்கைக்கு சாதகமான ஆதரவை இந்திய ஊடகங்கள் மூலம் பெறும் முயற்சியில் பிரசாத் கரியவாஸம் ஈடுபட்டார்.
இதையொட்டி கரியவாஸம் "சிங்களர்கள் வட இந்திய பூர்விகவாசிகள்' எனக் குறிப்பிட்டு அனுப்பிய மின்னஞ்சல் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதில் ""12 சதவீத தமிழ் மக்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஆனால், இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தினர் ஒடிசா மற்றும் வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைப்பட வேண்டும்'' என்று அவர் கருத்து கூறியுள்ளார்.
பிரசாத் கரியவாஸத்தின் மின்னஞ்சல் முகவரியில் இருந்து இலங்கையைத் தலைமையிடமாகக் கொண்ட தனியார் ஊடக மக்கள் தொடர்பு நிறுவனத்துக்கு கடந்த 19-ம் தேதி இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மூலம் இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தற்போது தில்லியில் உள்ள ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலின் விவரம் வருமாறு: ""அசோக சக்ரவர்த்தி ஆட்சி நடைபெற்ற கிறிஸ்து பிறப்பதற்கு 3 நூற்றாண்டுகளுக்கு முன்பே (கி.மு. 300) கலிங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பதிவாகியுள்ளன. புத்த மதத்தால் ஈர்க்கப்பட்ட அசோகர், தனது மகன் அர்ஹத் மஹிந்தாவையும் மகள் சங்கமித்ராவையும் இலங்கைக்கு புத்த மத செய்தியைப் பரப்ப அனுப்பி வைத்தார். இலங்கையில் புத்த நிலையங்களை அவர்கள் நிறுவினர்.
இந்தியாவில் புத்த கயையில் போதி மரத்தடியில் புத்தர் ஞானோதயம் பெற்ற மரத்தின் கன்றை இலங்கையின் அனுராதபுரத்தில் சங்கமித்ரா நட்டார். புனிதம் மிக்க அந்த மரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு உலகின் மிகப் பெரிய மரமாகத் திகழ்கிறது.
2500 ஆண்டுகளுக்கு முன்பு கலிங்கத்தில் இருந்து எட்டு குடும்பங்களாக அரிஹத் மஹிந்தாவும் சங்கமித்ராவும் வந்த நிகழ்வை இப்போதும் இலங்கை கொண்டாடி வருகிறது.
அந்த வகையில் தற்போது இலங்கையில் உள்ள 75 சதவீத சிங்கள சமூகத்தின் பூர்விகம் கலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தும் உருவானதாக நம்பப்படுகிறது. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் ஒடிசா, வங்கம் ஆகியவற்றை பூர்விகமாகக் கொண்டவர்கள்.
மொகலாயர் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்தியாவின் வட மாநிலத்தை குறிப்பாக கலிங்கத்தை சிங்கள மக்கள் தற்போது இணைத்து வருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர்.
ஆனால், தமிழ்நாட்டில் இன ரீதியாக தொடர்பில் உள்ள 12 சதவீத இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியா கவலை கொள்கிறது. ஒடிசா, வட இந்தியாவுடன் வரலாற்றுத் தொடர்பைக் கொண்டவர்கள் சிங்களர்கள். ஹிந்தி, ஒரியா, வங்காளி ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்தோ ஆரிய மொழியான சம்ஸ்கிருதத்தை சிங்களர்களால் பேசவும் எழுதவும் முடியும்.
இந்தியா அவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களின் உரிமைக்காகவும் கவலைப்பட வேண்டும். இலங்கையில் பிரிவினைவாத சக்திகளை ஒடுக்கி, இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்த விடுதலைப் புலிகளை அழித்த அதிபர் மகிந்த ராஜபட்ச பாராட்டுக்குரியவர்'' என்று பிரசாத் கரியவாஸம் மின்னஞ்சலில் கூறியுள்ளார்.
இந்தியாவில் பணியாற்றும் வெளிநாடுகளின் தூதர்கள் உள்நாட்டு அரசியல் நடவடிக்கையில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந்த நிலையில், தில்லி ஊடகங்கள் வட்டாரத்தில் பிரசாத் கரியவாஸத்தின் மேற்கண்ட மின்னஞ்சல் தகவல் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாகத் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் தீவிரமாகி வரும் நிலையில், பிரசாத் கரியவாஸத்தின் மின்னஞ்சல் தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும்: வைகோ

""நஞ்சைப் பரப்பும் இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸத்தை இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும்'' என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
இலங்கைத் தூதரின் மின்னஞ்சல் தொடர்பாக வைகோ கூறியதாவது: ""இலங்கையின் நாகரிகத்தைக் காத்து வருபவர்கள் இலங்கைத் தமிழர்கள்; இலங்கை மண் தமிழர்களுக்கான உரிமை; கரியவாஸத்தின் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் கிடையாது. இந்தக் கருத்தை வெளியிட்டதற்காக அவரை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும். இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தையும் மூட வேண்டும். இலங்கைக்கு இனியும் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்தால், இந்திய ஒருமைப்பாட்டை ஒருபோதும் காப்பாற்ற முடியாது'' என்று வைகோ கூறினார்.

விளக்கம் கேட்க வேண்டும்: டி. ராஜா

தில்லியில் செய்தியாளர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா கூறியதாவது: தூதர் என்பதை மறந்துவிட்டு அந்த நாட்டு அதிபரின் அரசியல் உதவியாளர் போல் பேசுவதை பிரசாத் கரியவாஸம் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்னையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிடுவது அவருக்கு இது முதல் முறையல்ல. சிங்களரின் பூர்விகம் பற்றி கருத்து வெளியிட்டு மறைமுகமாக, அந்த சமூகத்தினருக்கு இந்தியா ஆதரவாக இல்லை என்ற கருத்தை பிரசாத் கரியவாஸம் திணிக்க முற்பட்டுள்ளார். அவரது பேச்சும், செயலும் உள்நோக்கம் கொண்டது என்று சந்தேகிக்கிறோம். அவரை நேரில் அழைத்து மத்திய அரசு விளக்கம் கேட்க வேண்டும் என்று ராஜா கூறினார்.

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...