Wednesday, November 2, 2011

புலம்பெயர் தளங்களிலும், சிங்கள தேசத்தின் ஆள ஊடுருவும் படையணிகள்!


Source: http://www.pathivu.com/news/19037/57//d,article_full.aspx
உலகம் முழுவதும் ஆவிகள் தினம் கொண்டாடப்பட்டு வரும் தினமான  அக்ரோபர் 31 அன்று அதிகாலை பாரிஸ் நகரில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் பொறுப்பாளரும், தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான திரு. பருதி அவர்கள் படு மோசமான தாக்குதல்களுக்குள்ளாகி, ஆபத்தான் நிலையில் வைதிதயசாலை அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிதிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

ஆவிகள் தினத்தன்று முகமூடிகள் அணிந்து வீதிகளில் செல்வது சாதாரணமான விடயமாகவே மக்கள் கருதும் சூழலைப் பயன்படுத்தி மூன்று ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்தத் தாக்குதலைத் தடுக்க முயற்சித்த பருதியுடன் கூடச் சென்ற இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பொல்லுகள், இரும்புக் கம்பி, வாள் ஆகியவற்றால் பருதி மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோது இவர்கள் அதனைத் தடுத்து அவரைக் காப்பாற்றியுள்ளார்கள். இந்தத் தாக்குதல் சம்பவம் பற்றிய விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும், பிளவுகளையும் உருவாக்கும் முயற்சியில் தோல்வியைத் தழுவிய சிங்களப் புலனாய்வாளர்கள், தமிழ்த் தேசிய சிதைவுக்கான உச்ச இலக்காக மாவீரர் தினத்தைக் குறி வைத்துள்ளனர். அந்த சிங்களச் சதியினை களத்தில் நின்று எதிர்த்துப் போராடும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி, அதிலிருந்து அகற்றும் முயற்சியாகவே இந்தத் தாக்குதல் முயற்சி நோக்கப்படுகின்றது.

ஏற்கனவே, பிரித்தானிய தமிழ்த் தேசிய ஒருங்கிணைப்பாளர் தனம் மீது இதே பாணியில் தாக்குதல் நடாத்தப்பட்டது. இதைவிட, ஜெர்மனியிலும், பிரித்தானியாவிலும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள இருவர் தாக்கப்பட்டுள்ளார்கள். பாரிசில் இருந்து வெளிவரும் ஈழமுரசு பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதல் முயற்சியிலிருந்து புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொண்டுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் எவையும் தனிப்பட்ட காரணங்களுக்காகவோ, உள் முரண்பாடுகளாலோ இடம்பெற்றவை அல்ல. மாறாக, திட்டமிட்ட வகையில், தகவல்கள் திரட்டப்பட்டு, தாக்குதலுக்குரிய நபரின் நடமாட்டங்கள் கண்காணிக்கப்பட்டு, வெகு நேர்த்தியாக நடாத்தப்பட்டுள்ளன.

தமிழீழப் பகுதியில் ஆழ ஊடுருவும் படையணிகளில் உள்வாங்கப்பட்ட ஒட்டுக்குழு உறுப்பினர்களால் விடுதலைப் புலி உறுப்பினாகள் படுகொலை செய்ததற்கு ஒப்பிடக் கூடியதாக இந்தத் தாக்குதல்களை அடையாளப்படுத்தலாம். புலம்பெயர் தேசங்களிலும், சிங்களப் புலனாய்வாளர்கள் தமிழ்க் கூலிக் குழுக்களின் உதவியுடன் இந்தத் தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்றே நம்பப்படுகின்றது.

இவர்களது இலக்கு, தனி நபர்கள் குறித்தது அல்ல. தமிழ்த் தேசிய தளமே இவர்களது இலக்கு. அந்த இலக்கை அடைவதற்குத் தடையாக இருப்பவாகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் மீதே தாக்குதல்கள் தொடர்கின்றது. இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

முள்ளிவாய்க்காலில் சிங்கள தேசம் பெற்ற வெற்றியை நிரந்தரமாக்கவும், தக்க வைத்துக்கொள்ளவும் தடையாக இருக்கும் புலம்பெயர் தமிழர்களது பலத்தைச் சிதைப்பதை நோக்காகக் கொண்டே சிங்கள தேசம் நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. அதன் உச்சக்கட்டமாகவே, மாவீரர் தினம் குறி வைக்கப்பட்டுள்ளது. மாவீரர் தினத்தைச் சிதைப்பதன் மூலம், புலம்பெயர் தமிழர்களது உணர்வுபூர்வமான அணி திரள்தலையும், எழுச்சியையும் வீரியமற்றதாக மாற்ற முடியும் என்று சிங்கள அரசு நம்புகின்றது. இது, மாவீரர் துயிலும் இல்லங்களையும், அவர்களது நினைவு இடங்களையும் அழித்து நிர்மூலமாக்கும் சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப்போவதை உணர்ந்து கொள்ளலாம்.

எனவே, மாவீரர் தினத்தை அண்மித்த நாட்களில் இது போன்ற பல தாக்குதல்களும், படுகொலைச் சம்பவங்களும் கூட அரங்கேற்றம் பெறலாம். ஆனாலும், மாவீரர் கனவுகளுடன் தங்களை இணைத்துக்கொண்ட புலம்பெயர் தமிழர்கள் இந்த சிங்களச் சதிகள் அத்தனையையும் முறியடிப்பார்கள் என்பது திண்ணம்.

- அகத்தியன்

No comments:

Post a Comment

Tamil Guardian VIEW: Take Gotabaya Rajapaksa to The Hague

URL:  https://www.tamilguardian.com/content/tg-view-take-him-hague Amidst a whirlwind week in Sri Lankan politics, Gotabaya Rajapaksa has re...