Wednesday, August 10, 2011

மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பான தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடக அறிக்கை

Source:http://www.viduthalaipulikal.net/index.php?option=com_content&view=article&id=71:maaveerar-naal-2011&catid=28:report&Itemid=2
தலைமைச் செயலகம்,                                                                                  
த/செ/ஊ/அ/06/11 
தமிழீழ விடுதலைப்  புலிகள்,
தமிழீழம்.
10/08/ 2011.

மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாடுகள் தொடர்பான ஊடக அறிக்கை

அன்பான தமிழ்பேசும் மக்களே,
தாயக விடுதலையே தம் குறிக்கோளாய்க்கொண்டு தமிழீழத் தேசியத் தலைவரின் வழியில் அணிதிரண்டு களமாடிக் காவியமான எமது வீரமறவர்களை நினைவுகொள்ளும் எழுச்சி நாளே தமிழீழ மாவீரர்நாள் ஆகும். உலகே வியக்கும் ஒப்பற்ற தியாகங்களைப் புரிந்து தமது இனத்தின் விடியலுக்காய் வித்தாகிப்போன எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாள்   ஆண்டுதோறும் பேரெழுச்சியாக நினைவுகூரப்பட்டு வருகின்றது. உலகத் தமிழர்கள் அனைவரினதும் சிந்தனைகளை ஒரேநேரத்தில் ஒருங்கிணைக்கும் கணமாக மாவீரர் நாளின் வணக்க நிகழ்வு காலங்காலமாக இடம்பெற்று வருகின்றது. விடுதலை வேள்வியில் வித்தாகிய எமது கண்மணிகளை தமிழர்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு அஞ்சலிக்கும் இந்நாளே எம்மினத்தின் அதிமுக்கிய நாளாகும்.

காலங்காலமாக பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுவரும் இந்நாள் தற்போது எமது தாயகத்தில் எழுச்சியுடன் மேற்கொள்ளப்பட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர், எமது மக்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாதபடி தமக்கான ஆளுமை நிலப்பரப்பை இழந்த நிலையில், எமது மாவீரச் செல்வங்களின் நினைவுநாளைச் சிறப்புற மேற்கொள்ள முடியாமலுள்ளது. இந்நிலையில் எமது மக்கள் புலம்பெயர் தேசங்களிலும் தமிழகத்திலும் மட்டுமே இந்நாளைப் எழுச்சியுடன் நினைவுகூரக் கூடிய நிலை தற்போதுள்ளது. அவ்வகையில் புலம்பெயர் தேசங்களில் நிகழும் மாவீரர்நாள் நிகழ்வுகள் வழமையை விட பேரெழுச்சியாகவும் கூடிய பொறுப்புணர்வுடனும் நிகழ்த்தப்பட வேண்டும்.
எமது மாவீரர்கள் தமிழினத்தின் எழுச்சிக்கும் விடுதலைக்குமான குறியீடாகவே பார்க்கப்படுகிறார்கள். உலகத்தமிழர்கள் அனைவருக்கும் பொதுவான ஓர் அடையாளமுமாக இவர்கள் திகழ்கிறார்கள். உலகத் தமிழினத்தை ஒரே நேர்கோட்டில் சந்திக்க வைக்கும் நிகழ்வாகவே இந்த மாவீரர் நாள் அமைகின்றது. அவ்வகையில் வேறெந்த நிகழ்வுக்குமில்லாத சிறப்பியல்பு இந்த மாவீரர் நாளுக்குண்டு.
உலகத் தமிழர்களையும், தமிழினத்தின் விடுதலையின்பால் அக்கறை கொண்டவர்களையும் ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திகழும் இந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் எழுச்சிநாள் நிகழ்வு அனைவரையும் உள்வாங்கி நிகழ்த்தப்படும் ஒரு பொதுமைப்பட்ட நிகழ்வாக மேலும் சிறப்பாக நடாத்தவேண்டியது அனைவரினதும் கடமையாகும்.  தமிழினத்தின் விடுதலையின்பால் அக்கறையோடும் நேர்மையோடும் உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும், உழைக்க முன்வரும் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாகவும் சமூகத்தின் அனைத்து கட்டமைப்புக்களும் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ளும் உணர்வுடனும்  தமிழ்மக்களால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வாவே எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தேசிய எழுச்சி நாள் அமையப்பெறுவது சாலச் சிறந்தது.
மாவீரர் நாளென்பது துக்கநாளோ களியாட்ட நிகழ்வோ அன்று. அதேநேரம் இதுவொரு நிதிதிரட்டலையே முக்கிய நோக்காகக் கொண்டு நிகழ்த்தப்படும் நிகழ்வுமன்று. தற்போதுள்ள உலக ஒழுங்கு, எமது மக்களிடத்திலும் எமது போராட்ட நகர்வுகள் தொடர்பிலும் உலகசக்திகளின் எதிர்பார்ப்பு, எமது போராட்ட ஆதரவுச்சக்திகள் எம்மிடம் எதிர்பார்க்கும் வெளிப்படைத்தன்மையும் சனநாயகப்பண்பும் கொண்ட செயற்பாடுகள் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு எமது நிகழ்வுகளும் செயற்பாடுகளும், போராட்ட நகர்வுகளும் அமையவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
எனவே வெளிப்படைத் தன்மையுடனும் தற்போதைய சூழலில் மக்களுக்கு நம்பிக்கையேற்படும் வகையிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நிகழத்தப்படவேண்டியது முக்கியமானது. தமிழின நலன்விரும்பிகளையும் விடுதலைச் செயற்பாட்டாளர்களையும் சமூகத்தின் அனைத்து கட்டமைப்புக்களின் உறுப்பினர்களையும் உள்வாங்கி அமைக்கப்படும் ஒரு பொதுவான குழுநிலைச் செயற்பாடு தேசிய நினைவெழுச்சி நாளாம் மாவீரர் நாளில் கடைப்பிடிக்கப்படுவதே ஆரோக்கியமானதாகும்.
அவ்வகையில் மேற்குறிப்பட்ட வழிமுறைகளுக்கு அமைய சில நாடுகளில் பொதுவான மாவீரர்நாள் செயற்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கப்படுகின்றது. எடுத்துக்காட்டாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகளில் செயற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்தகைய செயற்பாடுகளை நாம் வரவேற்கின்றோம். இவ்வகையான அணுகுமுறையே அனைத்து நாடுகளிலும் மாவீரர்நாள் தொடர்பில் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
உன்னத இலட்சியத்துக்காக உயிர்நீத்த எமது மாவீரர்களின் நினைவுநாளே எமது இனத்திற்கான அடையாளமாகக் காலங்காலமாக நிலைத்து நிற்கும். அவ்வடையாளம் மூலமே உலகத்தமிழினம் ஒருங்கிணைக்கப்படும். முன்னெப்போதையும் விட பேரெழுச்சியுடன் நினைவுகொள்ளப்பட வேண்டிய இம்மாவீரர்நாளை மக்களனைவருக்கும் பொதுமைப்படுத்தி, கருத்துவேறுபாடுகள், கட்சி வேற்பாடுகள், நிறுவன ரீதியான வேறுபாடுகளைக் கடந்த ஒரு நிகழ்வாக மாற்றி எமது போராட்டப்பயணத்தில் அனைவரையும் ஒன்றுபடுத்தி புதிய பலத்தோடு தொடர்ந்து பயணிப்போம்.
நன்றி.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

No comments:

Post a Comment

Mitsubishi Heavy Industries Appoints Eisaku Ito as Next President

Mitsubishi Heavy Industries, Ltd. (MHI) on 18 December announced executive-level personnel changes effective March 31 and April 1, 2025, and...