Source: http://www.eelanation.com/tamil-ilakiyam/48-kavithai/652-oor.html
அரைவயிறு உணவுகளோடும்
அடையாள இலக்கங்களோடும் இருந்த
அகதி வாழ்வை முடித்துக்கொண்டு
நேற்று நாம் ஊருக்கு திரும்பி விட்டோம்.
அடிமை வாழ்வை ஆரம்பிக்க.
துப்பாக்கிகளை பிடித்தபடி
மேய்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்
சிங்கள இடைஞர்கள்.
ஒட்டிய வயிறுகளோடு சோர்ந்து போயிருக்கிற
மீட்பர்களை தொலைத்த மந்தைகளை.
எங்களின் கடற்கரையில் நின்று
நாங்கள்
பார்த்துக்கொண்டு நிற்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம்.
எவரெவரோ வந்து
மீன்பிடித்துப் போகிற காட்சிகளை.
இனிமேல்...
நாற்று நடவும்
ஞாயிற்றுக்கிழமை கூழ் காய்ச்சவும்
காற்றுப்போன சைக்கிள் ரியூப்பை
கழற்றி மாற்றவும்
கடலை வறுக்க வெளியே அடுப்பு மூட்டவும்
அழையா வருத்தாளிகளிடம் அனுமதி பெறவேண்டுமாம்.
பற்றை வளர்ந்திருக்கிற
விளையாட்டு மைதானத்தின் வாசலிலமர்ந்து
ஏதோ பேசிக்கொண்டிருக்கிற
எங்கள் கிராமத்தின்
உதைபந்தாட்ட இளைஞர்களுக்கு அருகே
அழுதுகொண்டிருக்கின்றன
அவர்களின் ஊன்றுகோல்கள்.
நாங்களில்லாத நாட்களின் வெறுமைகளில்
தங்களை அள்ளி நிரப்பிக்கொண்டவர்கள்
இப்போ
எங்கள் மொழியையும் கொலை செய்துகொண்டு
வேலியில்லா முற்றங்களில் வந்து நிற்கிறார்கள்.
மீதி சில்லறைகளையும் கொள்ளையடித்துப்போக.
எங்கள் வாசம் நுகர்ந்துகொண்டு
மீண்டும் பட்டி திரும்புகின்ற
அவர்களின் பிடிகளிலிருந்து நழுவிய
மீதிக் கால்நடைகளின் கண்ணோரங்களிலும்
கசிந்திருக்கிறது நீர்த்துளி.
சந்தி மதில்களில் சிரித்துக் கொண்டிருந்த
எம் விதைமுகங்களின் மீது
விசிறியிருக்கிற கறுப்புமைகளின் வழி
கீழிறங்குகின்றன நமது கனவுகள்.
யுத்தம் தின்றுவிட்டுப் போட்ட மிச்சங்களுக்குள்
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
செத்துப்போன உறவுகளின்
ஞாபகங்களுக்காய் பத்திரப்படுத்த
அவர்கள் பாவித்த ஏதேனுமொன்றின் எச்சங்களையேனும்.
மாறியிருக்கிற எம் ஊரில்
மீதியிருக்கிற உறவுகளின்
பாதியிருக்கிற மனசையேனும்
நீதியிருக்கிற நாடுகளும்
நாதியிருக்கிற மனிதர்களும்
காப்பாற்றித் தர மாட்டீர்களா?
*** முற்றும் ***
தீபிகா
No comments:
Post a Comment