Monday, December 14, 2009

ஐந்து முனைகளில் மகிந்தவின் அடுத்தகட்ட போர்?






இலங்கைத்தீவில் தொடர்ந்துவந்த ஆயுத வழியிலான விடுதலைப் போராட்டம் இக்கட்டான நிலையை சந்தித்த நிலையில் இலங்கைத்தீவில் தமிழரின் அடையாளத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் ஐந்து முனைகளில் மகிந்த அரசாங்கம் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்காலத்தில் தமிழர் தேசியம் என்றோ தாயகம் என்றோ அல்லது தமிழர்களின் பண்டைத் தேசம் என்றோ தமிழர்கள் தமது அடையாளங்களை பிரதிநிதித்துவபடுத்த முடியாதவாறு செய்வதற்கான நடவடிக்கை ஐந்து பிரிவுகளாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அவையாவன:

1. போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான தடயங்களை இல்லாதொழித்தல்
2. பாரிய படைத்தளம் ஒன்றை வன்னியின் மையத்தில் நிறுவுதல்
3. விடுதலைப் புலிகளின் நினைவிடங்களை அழித்தலும் இராணுவ தூபிகளை நிறுவுதலும்
4. புத்த விகாரைகளை நிர்மாணித்தலும் முக்கிய இடங்களில் புத்தர் சிலைகளை வைத்தல்
5. சிங்கள குடியேற்றங்களை படிப்படியாக ஊக்குவித்து தமிழரின் குடிப்பரம்பலை சிதைத்தல்


போர்க்குற்றங்கள் நடைபெற்றதற்கான தடயங்களை இல்லாதொழித்தல்

போர்க்குற்றங்களை விசாரிக்குமாறு சர்வதேச நாடுகள் சிறிலங்கா அரசு மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் நிலையில் போர்க்குற்றங்கள் நடைபெற்ற இடங்களில் உள்ள தடயங்களை அகற்றி அல்லது அழித்துவருவதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொல்லப்பட்ட பொதுமக்களின் எலும்புக்கூடுகளை தேடியெடுத்து எரித்தும் புதைக்கப்பட்டுள்ளவற்றை தோண்டியெடுத்து முற்றாக எரித்து அழித்துவருகின்றனர். குறிப்பாக இடம்பெயர்ந்து இயங்கிவந்த வைத்தியசாலைகளை சூழவுள்ள பகுதிகளில் இத்தடய அழித்தொழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

பாரிய படைத்தளம் ஒன்றை வன்னியின் மையத்தில் நிறுவுதல்

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி பல மில்லியன் கணக்கான ரூபாக்களை செலவழித்து பாரிய படைத்தளம் ஒன்று முல்லைத்தீவு பகுதியில் அமைக்கப்பட்டுவருகின்றது. தமிழீழ தாயகத்தின் மிகப்பெரும் இராணுவ தளமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தளத்தை அமைத்து பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்தை தக்கவைப்பதன் மூலம் எதிர்காலத்தில் வன்னியை சிங்கள இராச்சியமாக்கும் தனது கனவு நனவாகும் என மகிந்த எதிர்பார்ப்பதாக தெரிகின்றது. இங்கு முப்படைகளின் முழுப்படைவளங்களும் நிலைநிறுத்தப்படுவதுடன் அதன் தேவைக்கான விமானப்படைத்தளமும் இயங்கும் என கூறப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் நினைவிடங்களை அழித்தலும் இராணுவ தூபிகளை நிறுவுதலும

விடுதலைப்புலிகளை மீள ஞாபகமூட்டக்கூடிய எந்த தடயங்களையும் அழிப்பதன் மூலம் தமிழர்களது விடுதலைப் பற்றை அழிக்கலாம் என மகிந்த அரசு கருதுகின்றது. விடுதலைப்புலிகளின் நிர்வாக மையங்களை முற்றாக அழித்து அகற்றுவதுடன் மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக இருந்த இடம் தெரியாமல் அழிக்கும் நடவடிக்கையில் மகிந்த அரசு ஈடுபட்டுவருகின்றது. மக்களை மீளக்குடியேற்ற முதல் அவற்றினை அழித்துவிடுவதில் அரச நிர்வாகம் கவனம் செலுத்திவருகின்றது. இராணுவ தகவல் மூலம் ஒன்றின் கருத்துப்படி தர்மபுரத்தில் அமைந்திருந்த மாவீரர் துயிலும் இல்லம் புல்டோசர் மூலம் உழுது கிளறி அழிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மாவீரர் துயிலும் இல்லங்களை அழிப்பதன் மூலமே எதிர்காலத்தில் விடுதலைப் போராட்ட முளைவிடாமல் தடுக்கமுடியுமென சிங்கள அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவரான கருணா குறிப்பிட்டுள்ளார். வன்னியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் துயிலும் இல்லங்களை புல்டோசர் மூலம் அழிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ் இராச்சியத்தை வெற்றி கொண்டதை குறிக்கும்முகமாக நினைவுத்தூபிகளை முல்லைத்தீவின் நந்திக்கடற்கரையில் அமைத்து அதனை மகிந்த ராஜபக்ச சென்று திறந்துவைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்த விகாரைகளை நிர்மாணித்தலும் முக்கிய இடங்களில் புத்தர் சிலைகளை வைத்தல்

ஏ9 வீதிவழியே ஆங்காங்கே பெருமளவான புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதை அவ்வீதியால் பயணம் செய்வோர் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்புத்தர் சிலைகள் ஏ9 வீதியின் கிழக்குப் பிரதேசங்களிலும் நிறுவப்பட்டுவருகின்றன.

இவ்வாறு பெருமளவான புத்தர் சிலைகள் புதிதாக வைப்பதன் மூலம் சிங்களவர்களின் அடையாளங்களை தமிழ் இராச்சியங்களில் பதித்து தமிழ் மக்களின் குடிசன பரம்பலையும் சமய ரீதியான பரம்பலையும் சிதைக்கும் நடவடிக்கையாகவே இதனை காணமுடிகின்றது.

சிங்கள குடியேற்றங்களை படிப்படியாக ஊக்குவித்து தமிழரின் குடிப்பரம்பலை சிதைத்தல்

திருக்கோணமலை மாவட்டத்தில் நடந்துவருவதை போன்று – அறிவிக்கப்படாமல் – சிங்கள குடியேற்றங்கள் நிறுவும் நடவடிக்கைகள் வன்னிப்பிரதேசத்திலும் நடைபெற்றுவருகின்றது. சிங்கள பேரினவாத கட்சியான சிங்கள உறுமய கட்சியின் பொறுப்பின் கீழேதான் நிலங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கின்றது. இதனை பயன்படுத்தி அக்கட்சியின் ஏற்பாட்டில் சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகள் வன்னியில் நடந்துவருகின்றன.

இவ்வாறு ஐந்து முனைகளில் தமிழரின் அடையாளங்களை அழிக்கும் மகிந்தவின் அரசினை இன்னும் ஆறு ஆண்டுகள் பதவியில் அமர்த்தினால் தமிழரின் அடையாளங்களை மட்டுமல்ல தமிழரின் இருப்பையே கேள்விக்குள்ளாக்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.




No comments:

Post a Comment

Kids enjoying evening in village