வரதராஜப்பெருமாள், தயவுசெய்து வராதே ராஜப்பெருமாள – ரோஜா ரஹ்மான்
எழுதியவர்கதிர் on July 19,
சோர்ஸ்: http://www.meenagam.org/?p=6015
அப்போது எனக்கு ஆறு வயதிருக்கும். இந்திய இராணுவம் எமது மண்ணில் கால்பதித்த ஆரம்பக்காலம். வன்னிமண்ணின், ஒரு அழகான கிராமம்தான் எனது இருப்பிடம். நான் படித்த பாடசாலையோடு இணைந்தே இந்திய இராணுவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. பாடசாலைக்கு முன்புறமாகச் செல்லும் பிரதான வீதியால் போய்வரும் இளைஞர்கள், இந்திய இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு முகாமினுள் அழைத்துச்செல்லப்படுவார்கள். சிறிது நேரத்தில் அங்கே ஓலக்குரல் கேட்கும். பின்பு சிறிது சிறிதாக அடங்கிவிடும். ஏன் இப்படி என்று யாரிடமும் கேட்கமுடியாது. புரிந்து கொள்ளுவதற்கான பக்குவமும் என் வயதிற்குக் கிடையாது. என் மனம் யாரையாவது கேட்கவிரையும். ஆனால் அனைவரிடமிருந்தும் மௌனமே பதிலாகக் கிடைக்கும். காரணம், நான் சிறுவன் என்பதால் யாரிடமும் உளறிவிடுவேன் என்பதாகவும் இருந்திருக்கலாம்.
அப்போதெல்லாம் சில தமிழ் இளைஞர்கள் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து ஆயுதம் ஏந்தியபடி உலாவுவதை நான் கண்டிருக்கிறேன். அவர்களே, வீதியால் செல்லும் தமிழ் இளைஞர்களை, இந்திய இராணுவத்துடன் இணைந்து கைதுசெய்வதையும் என்விழிகள் காண்பதுண்டு. தமிழர்களைத் தமிழர்களே கைதுசெய்யும் இது என்ன கண்ணாமூச்சி ஆட்டம் என்று நிறையவே யோசிப்பேன். எமது ஊரில் ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலின் அருகில் இருந்த ஒரு மரத்தில் ஒருநாள், இரு இளைஞர்கள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தார்கள். அவர்களை வேறு சில தமிழ் இளைஞர்கள் இரும்புக்கம்பிகளால் தாக்கிகொண்டிருந்தார்கள். என் மனம் துடிதுடித்தது. பருவம் தெரிந்த பின்பு, என் வாழ்வில் நான் கண்ட முதல் கோரக்காட்சி அது. மிதிவண்டியின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த நான், அன்றுதான் என் தந்தையைப் பார்த்து முதன்முதலாக ஒரு அரசியல் வினாவைத்தொடுத்தேன். தமிழர்களின் தலைவன் யார் என்பதே அந்த வினா…….!
என் தந்தை திக்குமுக்காடிப்போனார். பதில் தெரிந்திருந்தாலும், அவரால் சொல்லமுடியாத சூழ்நிலை அது. எனக்கு அவர் பதில்சொல்லியிருப்பின், அதை நான் என் சக மாணவர்களுக்குச் சொல்லியிருப்பேன். அதன்பின் என்தந்தையும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் கட்டிதொங்கவிடப்பட்டிருப்பார். ஆகவே; ´´தமிழர்களின் உண்மையான தலைவன் யார் என்பதை எதிர்காலத்தில் நீயாகவே புரிந்துகொள்வாய்´´ என்பதே அவரது அன்றைய பதிலாக இருந்தது.
சிறிது காலம் உருண்டோடியது. வடமாகாணம் எங்கும் தேர்தல் திருவிழாக்கோலம் பூண்டது. நான் படித்த பாடசாலையும் வாக்களிக்கும் ஒரு மையமாக மாற்றப்பட்டிருந்தது. இப்போதைய ஒட்டுக்குளுக்களான, அப்போதைய தாடித்தோழர்கள் அனைவரும் தேர்தல் வேட்டைக்காக நாக்கைத் தொங்கப்போட்டபடி அலைந்துகொண்டிருந்தனர். அதில் முக்கியமானவர்தான் வரதராஜப்பெருமாள் என்ற நபர். தனது வெற்றிக்கு; இந்திய இராணுவத்தினரையே அதிகம் நம்பியிருந்த இவர், முற்றுமுழுதாக இந்தியாவின் கைக்கூலியாகவே செயற்பட்டார். தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரு உத்தியாக, தேர்தலிற்கு சில நாட்களிற்கு முன்பு, தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவரது உடல், வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆனந்தர்புளியங்குளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள விடுதலைப்புலிகள் மணலாற்றுக்காட்டினுள் ஒளிந்திருப்பதாகவும், இந்தியஇராணுவம் தொடர்ந்து அறிவித்துக்கொண்டிருந்தது. அப்போதெல்லாம் இலங்கையில் இருந்த இந்தியஇராணுவத்தினருக்காக (தமிழ்இராணுவத்தினருக்காக) சென்னை வானொலி நிலையத்திலிருந்து, நேசக்கரம், அன்புவழி, வெற்றிமாலை, என ஒரு நாளைக்கு தலாமூன்று வேளைகள் சினிமாப்பாடல்கள் ஒலிபரப்பப்படுவது வழக்கம். அந்தப் பாடல்களினூடு; தலைவர் இறந்துவிட்டார் என்ற செய்தியும் படுவேகமாகப் பரவவிடப்பட்டது. அதாவது, தமிழ்மக்களைத் திசைதிருப்பி, அவர்களை தம்பக்கம் இழுப்பதே இவர்களின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.இந்தியஇராணுவத்தின் சகல ஆசீர்வாதங்களோடும் தேர்தல் ஏற்பாடுகள் இடம்பெற்றன. குறித்தநாளில் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் இடம்பெற்ற பாடசாலைப் பக்கம் ஒரு நாய்கூடச் சென்றிருக்கவில்லை.
மக்கள் எவருமே வாக்குச்சாவடிப் பக்கம் வராததையிட்டு; வரதராஜப்பெருமாள் கூட்டத்தினரை விட, இந்திய இராணுவத்தினரே அதிகம் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்திருந்தனர். விடுதலைப்புலிகள் மக்களைத்தடுத்தார்கள் என்றும் அப்போது புளுகமுடியாது. ஏனெனில், விடுதலைப்புலிகளும் மணலாற்றுக்காட்டினுள் தமது நிலைகளை அமைத்துத் தலைமறைவுப்போராட்டத்தினை நடத்திக்கொண்டிருந்த காலம் அது. ஆகவே, மக்கள் தாமாகவே தேர்தலைப்புறக்கணித்து விட்டார்கள் என்பது அவர்களுக்கு நன்கு புரிந்திருந்தது. எனவே புறக்கணித்த மக்களைப் பழிதீர்க்க, இராணுவத்தினரும், தாடித்தோழர்களும், கிராமங்களுக்குள் புகுந்தனர். எமது எதிர்வீட்டில் குடியிருந்த ஒரு முதியவரைத் தாடித்தோழர்கள் தர தரவென வீதிக்கு இழுத்துவந்தனர். ´´அடேய் கிழட்டு நாயே..! உனக்கு வாக்குபோடுறத்துக்கு என்னடா பஞ்சி …? எனக்கத்தியவாறே அவரின் மார்பில் ஏறி மிதித்தனர். பனைமட்டைகளால் அவரை நார்நாராகக் கிழித்தனர். அவர் அப்படியே அடங்கிப்போனார். தமிழீழமண்ணிலே பிறந்து வளர்ந்த தனக்குப்பிந்திய சமுதாயம், ஆக்கிரமிப்பாளர்களோடு இணைந்து தன்னை வதைக்கும் என ஒருபோதும் அவர் எண்ணியிருக்கமாட்டார். தமிழீழமண்ணின் இளைய சமுதாயத்தில் ஒருபகுதி அடிவருடிகளாக மாற்றப்படுவார்கள் எனக் கனவிலும் எண்ணியிருக்கமாட்டார். ஆனால் என்ன செய்வது…??? காலம் காலமாக நமது தமிழ்இளைஞர்கள் வழிதவறிச்சென்றதற்கு, ஒரு சிலரின் சுயநல அரசியலே காரணமெனின், அதில் தவறேதுமில்லை.
அடுத்தது எமது வீடு. படலையைத் திறந்து உள்நுழைவதுதான் எமது பண்பாடு. ஆனால் கூலிக்கும்பல்களிடம் நாம் எப்படிப் பண்பாட்டை எதிர்பார்க்கமுடியும் ? அப்பா அழகாக நாட்டியிருந்த சீமைக்கிழுவைகளை வெட்டித்தள்ளியபடி, பக்கவாட்டாக அவர்கள் உள்நுளைந்தனர். ஏதோ, தனது உறவினர்களை எனது அப்பா கொலைசெய்துவிட்டார் என்பதுபோல வாய்க்குவந்தபடி எனதுதந்தையைத் திட்டியபடி பாய்ந்துவந்தஒருவன், அப்பாவின் முகவாயில் துப்பாக்கியால் இடித்தான். அப்பா கதறியபடி சுருண்டுவிழுந்தார். நானும், எனதுஅம்மாவும் கூக்குரலிட்டபடி, அப்பாவைத் தாங்கிப்பிடிப்பதற்காக ஓடிச்சென்றோம். இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ என்று நானும், அம்மாவும் பயந்துகொண்டிருந்தவேளை, எஞ்சியிருந்த இந்தியப்படையினர் அனைவரும், சோதனை செய்வதற்காக எமது வீட்டினுள் சென்றுவிட்டனர். உள்ளே சென்ற அனைவரும்,சிரித்த முகத்துடன் வெளியே வந்தனர்.எமக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் சிரித்ததற்குக் காரணம், எமது வீட்டின் ஒருமூலையில் கிடந்த விலாட்டுமாம்பழங்கள். அனைவரினது கைகளிலும் ஒன்றிற்கு மேற்பட்ட விலாட்டுமாம்பழங்கள் இருந்தன. அந்தமாம்பழங்களின் ருசியில், அவர்கள் எம்மை அப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அன்று கடவுள் எம்மை மாம்பழவடிவில் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால்; இன்று நாம் சொர்க்கத்தில், இருபதுவருட வாசிகளாய் இருந்திருப்போம்.
தொடர்ந்தும் எமது கிராமம் அன்றுமுழுவதும் தாக்கப்பட்டது. எத்தனையோ பேர் என்கண்முன்னாலேயே அடித்து இழுத்துச்செல்லப்பட்டார்கள். அப்போது; தனது பேரன் அடித்து இழுத்துச் செல்லப்படுவதைப் பார்த்துக் கதறிஅழுதபடி ஒருபாட்டி சாபமிட்டாள். ´´ அடேய் வரதராஜப்பெருமாள், நீ பாடையில போக….!!! , இந்தச்சாபமும், தாடித்தோழர்கள் பண்ணிய அட்டூழியங்களும் இன்னமும் என்மனத்தை விட்டு நீங்கவில்லை. அப்போது நான் எண்ணிக்கொண்டேன். நிச்சயமாக இவர்கள் தமிழர்களின் தலைவர்களாக இருப்பதற்கு ஒருபோதும் தகுதியற்றவர்கள்…!!!
இவர்களை யாராவது பழிதீர்க்க மாட்டார்களா என்று என்மனம் விம்மும்.ஆனால், அதற்கான தகுதி, அப்போதைய எனதுவயதிற்கு இருக்கவில்லை. காலம் யாரிற்கும் காத்திராது ஓடியது. சேர்ந்து இந்திய இராணுவமும் தமிழீழமண்ணைவிட்டு ஓடியது. விடுதலைப்புலிகள் தமது இலட்சியவழி தவறாது மீண்டும் போராடத்தொடங்கினார்கள். தன்னை மலையாக நம்பியிருந்த தனது தாடித்தோழர்களையும் விட்டுவிட்டு, வரதராஜப்பெருமாள் என்ற பச்சோந்தி இந்தியாவிற்கு ஓடினான். அப்பாடா, ஒரு கயவன் ஓடித்தொலைந்தான் எனத் தமிழீழமக்களும் நிம்மதியடைந்தார்கள். மதுபோதையிலும், போதைப்பொருட்களை உபயோகித்த காரணத்தினாலேயுமே தாம் தவறாக நடந்துகொண்டதாக, வரதராஜப்பெருமாளுடன் இணைந்து செயற்பட்ட அவ்விளைஞர்கள் ஒப்புக்கொண்டனர். மக்களும் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொண்டார்கள்.
தப்பிஓடிய வரதராஜப்பெருமாள் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்தார். நீண்டகாலமாக, தமிழீழப்பக்கமே தலைவைத்துப் படுக்காத வரதராஜப்பெருமாள், இப்போது மக்களைக்கவரும் விதத்தில், புலிகளைக் குற்றஞ்சாட்டிஅறிக்கைகள் விடுத்து, தனது அடுத்த தில்லுமுல்லு அரசியலுக்குத் தயாராகி வரும் செய்திதான், தற்போதைய ஒட்டுக்குழு அரசியலில் முதலிடம் வகிக்கிறது. விடுதலைப்புலிகளைப் புறம்கூறியே அரசியல் நடத்தும் ஒருசிலரில் இவரும் முக்கியமான இடத்தை வகிக்கிறார். இவரது அண்மைக்கால அறிக்கைகளில்,
தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதால், தமிழர்களின் தலைமைத்துவத்திற்கான ஒரு பாரிய இடைவெளி உருவாக்கப்படுள்ளதாகவும், அதற்குப் பொருத்தமானவர் யார் என்பதற்கான குழப்பத்தில் தமிழ்மக்கள் உள்ளதாகவும் ஒரு புதியபுராணத்தைப் பாடியிருக்கிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறதாம் என்ற கதைதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. வரதராஜப்பெருமாளும், ஏனைய கூட்டணிகளும் ஆடிய கூத்துக்களைத் தமிழ்மக்கள் இன்னமும் மறந்துவிடவில்லை. அடிமையாகக் கிடந்த தமிழினத்தைத் தட்டிஎழுப்பி ´´அறைந்தவனுக்குத் திருப்பி அறை´´ என்று சொல்லிக்கொடுத்த எமது தேசியத்தலைவரை மறந்து, இவர்களது அரசியல் நாடகங்களில் மயங்கிப்போவதற்குத் தமிழ்மக்கள் மந்தைகளல்ல. மேலாக, சரித்திரப்புகழ் வாய்ந்த சாதனைகளைச்செய்து மேற்குலகங்களையே மண்டியிடவைத்துப் பேச்சுவார்த்தை மேசைக்கு அவர்களை அழைத்து வந்தவர்கள் விடுதலைப்புலிகள்.அற்பம், இந்த வரதராஜப்பெருமாளால் அறிக்கைமட்டும்தான் விடமுடிகிறது.
இனி, இவரது குற்றச்சாட்டுகளைப்பார்ப்போம். முதலாவதாக, ஆற்றல் மிக்க போராளிகள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார்களாம். தமிழினத்திலே பிறந்து, தமிழ்ப்பால் குடித்துவளர்ந்து, பின்பு ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து, சொந்தச் சகோதரியையே கூட்டிகொடுப்பவன் ஆற்றல் மிக்க போராளியா ? பக்கத்து வீட்டுப் பருவச்சகோதரியை இராணுவம் இழுத்துவந்து முகாமில் வைத்துக் கற்பழிக்கும் போது, பார்த்துக்கொண்டிருந்தவன் ஆற்றல் மிக்க போராளியா ? விடுதலைக்காகப் போராடுபவர்களுக்கு உணவு கொடுத்தவர்களை, உயிருடன் எரித்தவன், ஆற்றல் மிக்க போராளியா ? எதிரியுடன் கைகோர்த்து, எச்சில் சோறுண்பவன் ஆற்றல் மிக்க போராளியா ?? இவர்களெல்லாம் ஆற்றல் மிக்க போராளிகளென்றால்; கழுத்திலே நஞ்சணிந்து, காடுமேடெங்கும் அலைந்து, சுகபோகங்களைத் துறந்து, உணவின்றி, உறக்கமின்றி எதிரியுடன் மோதி உயிர்துறந்த அந்த விடுதலைப்புலி மறவர்களை எப்படி அழைப்பது ??? தமிழினத்துரோகி வரதரே..!, முடிந்தால் பதில் சொல்லும்..!!!
அடுத்தது, விடுதலைப்புலிகள் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தார்களாம். சரி, விடுதலைப்புலிகள் கொள்ளையடித்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம், கொள்ளையடித்தவர்களுக்குப் பின்னால் எப்படிக் கூட்டம் கூடும் ?, எப்படி அந்தக்கூட்டம் தேசியத்தலைவரை நேசிக்கும் ? அந்தக்கொள்ளைக் கூட்டத்தை எப்படி சர்வதேசநாடுகள் இராஜாங்கரீதியாகக் கிளிநொச்சிவரை சென்று சந்திக்கும் ..? . ஐயா, வரதரே, கொள்ளையடிக்கத் தெரியாத குஞ்சே..! நீர் நல்லவனென்றால், கட்டிய வேட்டி கழன்றதுகூட அறியாது கரைதாண்டி ஓடியது எதற்காக..? நெஞ்சை நிமிர்த்தி நின்று, நேருக்கு நேர் மோதியிருக்கலாமே..?, எங்கே ஐயா போயிற்று உம் வீரம்..? ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளும். விடுதலைப்புலிகள் கொள்ளையடித்தாலும், அந்தக்கொள்ளை விடுதலைக்காகவே நடாத்தப்பட்டிருக்கும். உம்மைப்போல, வேசி வீட்டில் விருந்துண்பதற்காக அல்ல.
இவரது அறிக்கையில் அடுத்த குற்றச்சாட்டு, சிறிலங்காவின் பலகோடி பெறுமதியான சொத்துக்களைப் புலிகள் அழித்தார்களாம்.ஐயா; இந்தக் கூற்று ஒன்றே போதும் நீர் எப்படிப்பட்ட துரோகி என்பதை மக்கள் அறிந்துகொள்ள…! , யாழ். நூலகத்தை சிங்களவன் எரித்தான். அது நமது பெறுமதி மிக்க சொத்தில்லையா… ?, குமுதினி படகில் பயணித்தவர்களை வெட்டிக்கொன்றான் சிங்களவன், அவர்களது உயிர்கள் விலைமதிப்பற்றவையா..? நவாலி தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தவர்களைக் குண்டுபோட்டு அழித்தான் சிங்களவன். அந்த உயிர்கள் விலைமதிப்பற்றவையா..? கிருஷாந்தி, பரமேஸ்வரி, இன்னும் எத்தனையோ தமிழ்ச்சகோதரிகள் கற்பழித்துக்கொலை செய்யப்பட்டார்கள்…! அவர்கள் விலைமதிப்பற்றவர்களா..? பாரம்பரியம் மிக்க கோயில்கள், தமிழர்களின் விளைநிலங்கள், தமிழர்களின் கடல்வளங்கள் அனைத்தும் சிங்களவனால் சூறையாடப்பட்டன. இவையெல்லாம் விலைமதிப்பற்றவையா..? இவையெல்லாம் நடக்கும்போது நீர் எந்தக்கண்டத்தில் வாழ்ந்திருந்தீர்..? ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ளும். அவலத்தைத் தந்தவனுக்கே புலிகள் அவலத்தைத் திருப்பித் தந்தார்களே தவிர அப்பாவிகளுக்கல்ல..!
தொடர்ந்து உமது அறிக்கையில்; புலிகளென்ன விவசாயத்தைப் பெருக்கினார்களா? புலிகளென்ன நகரங்களைக் கட்டியெழுப்பினார்களா? தமிழ் மக்களுக்கு நவீன உலகை உருவாக்கிக் கொடுத்தார்களா? அல்லது தமிழ் மக்கள் மத்தியில் நவீன சிந்தனைகளைத் தான் சுதந்திரமாக வளரவிட்டார்களா..? என்று பெரிதாக ஏதேதோ எல்லாம் புலம்பியிருக்கிறீர்…! ஐயா, ஒட்டுக்குழுப் பெருந்தகையே..! சிறிலங்காவின் மோசமான பொருளாதாரத்தடையை எதிர்த்து விடுதலைப்புலிகள் திறமையுடன் போரிட்டதைக் கண்கூடாகக்கண்டவன் நான்.விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட பொருண்மிய மேம்பாட்டுக்கழகம் என்ற அமைப்பு, ஸ்ரீலங்கா அரசு தடைசெய்த பொருட்களுக்கான உபபொருட்களைக் கண்டறிந்து மக்கள் பாவனைக்கு அறிமுகப்படுத்தியமை, உத்தரப்பிரதேசத்தில் ஒளிந்திருந்த உமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். சிங்கள இராணுவம் அழித்துத்தரைமட்டமாக்கிவிட்டுப் போன கிளிநொச்சிநகரை, எண்ணிச் சிலமாதங்களுக்குள், புலம்பெயர்த்தமிழுறவுகளின் உதவியுடன் கட்டிஎழுப்பினார்கள் விடுதலைப்புலிகள். புழுதி மேடாய்க் கிடந்த புதுக்குடியிருப்பு நகரைக் கட்டியெழுப்பியது நீரா அல்லது உம்முடைய பாட்டனா ? முறிகண்டி நகருக்கு அண்மையாக, அறிவியல் நகர் என்றஇடம் கட்டியெழுப்பப்பட்டு, நவநாகரீக உலகின் அத்தனை விடயங்களையும் இளம்தமிழ் சமுதாயம் கற்பதற்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்தது, கொள்ளையர்கள் என உம்மால் பட்டம் சூட்டப்பட்ட இதே விடுதலைப்புலிகள்தான். இவற்றில் ஒன்றைக்கூட உம்போல ஒட்டுக்குழுக்கூலிப்படைகளால் செய்யமுடியுமா..? கூறும் பார்க்கலாம்..! .
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப்பிரிவுத் தலைவர் பொட்டம்மான் அவர்களை, கம்போடியாவின் போல்போட்டிற்கு நிகரானவர் எனக்கூறுமளவிற்கு, உமக்கு என்ன அதிகமாகத் தெரியும்..? உமது ஒட்டுக்குழுக்களைப் போல், விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறை செயற்படவில்லை. எவன் அதிகம் பணம் சம்பதிக்கிறானோ, அவனை எப்படிக் கடத்திச்சென்று பணம்பறிக்கலாம் என்பது பற்றியே சதா சிந்திக்கும் உம்போன்றோர், சர்வதேசப் புலனாய்வு சம்மேளனங்களே வியந்து பாராட்டும் பொட்டமானைப் பற்றிப்பேசுவது, நிலவைப் பார்த்து நாய் குரைத்தலுக்கு ஒப்பானது. எத்தனையோ சர்வதேச இராஜாங்க அமைச்சர்களைக்கண்டு பேசி, அவர்களுடன் கைகுலுக்கி விருந்துண்ட அரசியல்மேதை பாலசிங்கத்தைத் தூற்றி வசைபாடும்நீர், ஆகக்குறைந்தது ஏதாவது ஒரு வெளியுறவு அமைச்சரைச் சந்த்தித்துப்பேசிய அனுபவம் உண்டா..? எதற்குமே லாயக்கிலாத உமக்கெல்லாம் எதற்கையா அரசியல்…?
நீர் என்னதான் புலம்பினாலும், உமக்கு இறுதிவரை உத்தரப்பிரதேசம்தான் அடைக்கலம். தமிழர்களின் தலைவிதியை நிர்ணயிக்க உம்மைப்போல் ஒரு துரோகி தேவைப்படமாட்டான். மீண்டுமொரு முதலமைச்சர் ஆவதற்காக, உம்மால் விடப்படும் அறிக்கைகள், நீர் மேல் எழுத்துப்போல் ஆகுமே ஒழிய, உமக்கு எதுவித நன்மைகளையும் தேடித்தரப்போவதில்லை.
மீண்டும் எனக்கு அந்தமூதாட்டியின் சாபம்தான் நினைவுக்கு வருகிறது….! அடேய் வரதராஜப்பெருமாள்.. நீ பாடையில போக…!
ரோஜா ரஹ்மான்
No comments:
Post a Comment