LANKA's CAMPS:நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம், எதுவுமே இடம்பெறாததால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.





குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்குரலே முகாமகள் எங்கும் கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.ஸி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலான்ட் தெரிவித்துள்ளார்.
அரசு இந்தப் பிரச்சினைகளைத் தீவிரமாக எடுக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர் எனத் தெரிவித்துள்ள பி.பி.ஸி செய்தியாளர் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:
முகாமின் உட்கட்டமைப்பு குறித்து நெருக்கமாக அவதானிப்பதற்கு பி.பி.ஸிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு இதுவாகும். மெனிக் பார்மில் உள்ள வலயங்களில், வலயம் 2 அதிகளவு சன நெரிசல் கொண்டது. இங்கு தொடர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு இது உதவும் என அரசு தெரிவிக்கின்றது. உள் வீதிகளில் சிறிய கடைகளைக் காண முடிகின்றது. முகாமில் உள்ளவர்கள் சிறிதளவு பணம் சம்பாதிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பே இந்தக் கடைகள். நிலக்கண்ணி வெடிகள் உள்ள பகுதிகளுக்கு மக்கள் செல்லமுடியாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் முகாமில் உள்ளவர்களுடன் நாம் உரையாடிய ஐந்து நிமிடங்கள் மிகவும் வேதனையளிப்பனவாக அமைந்தன.

15 தடவைகள் இடம்பெயர்ந்தோம்
பெண்ணொருவர் எமது காரின் கண்ணாடி ஊடாகப் பேச ஆரம்பித்தார். பின்னர் ஒவ்வொருவராகத் தமது நம்பிக்கையற்ற கதைகளைத் தமிழில் தெரிவித்தனர். ஒவ்வொருவரும் ஒலிவாங்கியில் பேச விரும்பினர். எனினும் அவர்களிடம் கேள்வி கேட்பதற்கோ அல்லது அவர்களுடைய குடும்பங்கள் பற்றி விசாரிக்கவோ அவகாசம் இருக்கவில்லை. கடந்த மூன்று வருட காலப்பகுதியில் தாங்கள் 15 தடைவைகள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், தற்போது 24 பேருடன் கூடாரமொன்றில் வாழ்கின்றனர் என்றும் பெண்ணொருவர் தெரிவித்தார். இப்படி எவ்வாறு வாழ்வது என்பது எனக்குத் தெரியாது. எம்மை இதைவிடச் சிறந்த இடத்துக்கோ அல்லது எமது வீடுகளுக்கோ தயவு செய்து திருப்பி அனுப்புங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எம்மால் அவர்களை எப்படியாவது வீடுகளுக்கு திருப்பி அனுப்பமுடியும் என்ற பரந்துபட்ட கருத்து அவர்களிடம் காணப்பட்டது. அது இயலாது என்று அறிந்து நம்பிக்கையின்மையால் எழுந்த கதறலாகக் காணப்பட்டது.


எதுவுமே இடம்பெறாததால் நாங்கள் வேதனையடைந்துள்ளோம்.
கல்வி கற்கும் குழந்தைகளுக்குக்கூட எதுவும் இல்லை. பென்சில், பேனா, புத்தகம் எதுவுமில்லை என்றும் குடிதண்ணீரோ குளிப்பதற்கு நீரோ இல்லை. நாங்கள் இங்கேயே மரணிக்கப் போகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.தமக்கு வழங்கப்படும் உணவை அனைவரும் காண்பித்தனர்.
சமைப்பதற்கு பானைகள் கூட இல்லை. பருப்பு, அரிசி, கோதுமை மா, சீனி மாத்திரம் உரிய உணவாக அமையாது என்றனர்.
உணவு சமைப்பதற்குப் பானைகளோ நீர் அருந்துவதற்கு கோப்பைகளோ இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். கூடாரங்களில் தொடர்ந்து தங்கியிருப்பதால் பலர் நோய்க்குப் பலியாகின்றனர் என பெண் ஒருவர் தெரிவித்தார். "இங்கு மிகவும் வெக்கையாக உள்ளது. அடைக்கப்பட்ட நிலையில் உள்ளோம். எம்மை வீடுகளுக்கு அனுப்புங்கள்'' என அவர் கேட்டார்.
அந்த மக்கள் தாங்கள் குளிக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டி அது எருமை மாடுகள் வழமையாகக் குளிக்கும் பகுதி. அதில் மனிதர்கள் குளிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினர். பெண் ஒருவர் எங்களைத் தன்னுடைய கூடாரத்திற்கு வருமாறு அழைத்தார். அங்கு மிகவும் மெலிந்த நிலையில் தரையில் சுருண்டு படுத்திருந்த தனது கணவனைக் காண்பித்தார். நாம் ஏழு பேரும் இந்த ஒரேயொரு கூடாரத்தில் இருப்பது கஷ்டம். உறங்குவதற்கு இடமில்லை என்றார் அவர்.


மூன்று நாள்களுக்கு 20 லீற்றர் தண்ணீர்
எனது கணவர் நோய்வாய்ப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தற்போதே இங்கு தங்கியுள்ளார். நான் அவரை மருத்துவமனைகள் பலவற்றுக்கும் கொண்டு சென்றுள்ளேன். அங்கு கூட இடமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் நீர்க்குழாயிலிருந்து நீர் சேமிப்பதை நாம் பார்த்தோம். இந்த நீர் விநியோகத்தைக் கண்காணிக்கும் ஒருவர் மூன்று நாளைக்கு 20 லீற்றர் குடிதண்ணீர் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இது போதுமானது அல்ல. சில வேளைகளில் குடிதண்ணீர் வழங்கும் லொறிகள் போதியளவு குடிதண்ணீரை வழங்குவதில்லை. இதன் காரணமாக மக்கள் வேறு இடங்களை நாடவேண்டியுள்ளனர் என்றார் அவர்.


Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire