இன்னொரு ஆயுதப் போரை நிச்சயமாகப் புலிகளால் மட்டுமன்றி எவராலுமே முன்னெடுக்க முடியாது.




மற்றொரு ஆயுதப் போருக்கான களத்தைத் திறக்கிறதா அரசு?




விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு ஜந்து மாதங்களாகி விட்டன. புலிகளின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் இரண்டு தடவைகள்- அவர்களால் இனித் தலையெடுக்கவே முடியாது என்று அறிவித்து விட்டது.


ஆனால் இப்போது மீண்டும், புலிகளால் ஆபத்து இருக்கிறதென்றும், அவர்கள் தாக்குதல்களை நடத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறத் தொடங்கியுள்ளது.


புலிகள் இயக்கத்தைக் காரணம் காட்டி தமது செயற்பாடுகளை நியாயப்படுத்தி வந்த அரசாங்கத்துக்கு இப்போதும் அந்த நியாயம் தேவைப்படுகிறது.
இது பிரச்சனை.


அடுத்தது, புலிகள் இயக்கத்தின் இராணுவ வலிமை அடியோடு பெயர்க்கப்பட்டு விட்ட நிலையில்கூட- இலங்கை அரசு மற்றொரு ஆயுதப் போராட்டம் பற்றிய அச்சத்தில் இருந்து விடபடவில்லை.


இலங்கை அரசுக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் இதுபற்றிய அச்சங்களும், சந்தேகங்களும் இருக்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன்- புலிகள் இயக்கம் மீளவும் வலிமை பெறக் கூடும் என்று அண்மையில் எச்சரித்திருந்தார். இந்தக் கருத்து வெறும் ஊகத்தின் அடிப்படையிலானது போலத் தெரியவில்லை.


புறக்காரணிகள் இதற்குச் சாதகமாக இருப்பதால் தான்- இந்தியா இப்படியொரு எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. இலங்கை அரசு புலிகளை வைத்தே பிழைப்பு நடத்திப் பழகிப் போனதொன்று. என்றாலும், அதற்குப் புலிகள் மீளவும் ஆயுதப்போரில் இறங்கி விடக் கூடும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது.
இந்தநிலை எப்படி உருவானது?


ஒன்றுக்கு இரண்டு தடவைகள் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாகவும், இனித் தலையெடுக்கவே முடியாதென்றும் கூறிய அரசாங்கத்துக்கு இப்போது இப்படியொரு சந்தேகம் ஏற்பட்டுள்ளதற்கான காரணம் என்ன?


இலங்கை அரசாங்கத்துக்கு இத்தகைய அச்சம் ஏற்பட்டிருப்பதற்கு, போரியல் மற்றும் அரசியல் நிபுணர்களின் எச்சரிக்கைகளே பிரதான காரணம். அவர்கள் சித்தாந்த ரீதியாக சில விடயங்களை அணுகி அரசுக்கு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர். புலிகள் இயக்கத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு போருக்குப் பின்னரான நடவடிக்கைகளே மிகவும் முக்கியமானவை என்பதே அவர்களின் கருத்து.புலிகள் போரை மூன்று தசாப்தமாக நடத்தியதற்கு ஆணிவேராக இருந்தது- இனப்பிரச்சினையே.


இனப்பிரச்சனைக்குப் பொருத்தமான அரசியல் தீர்வை- அதிகாரப் பகிர்வை வழங்கியிருந்தால் புலிகளின் ஆயுதப் போர் எப்போதோ தோல்வியதைத் தழுவியிருக்கும். அரசாங்கம் போரைத் திறமையாக நடத்தியது என்பதை அதன் பெறுபேற்றில் இருந்தே உணர முடிந்துள்ளது.ஆனால் போருக்குப் பின்னர் அதன் செயற்பாடுகள் யாரையுமே திருப்திப்படுத்துவதாக அமையவில்லை. பேரினவாதப் போக்குவடைய தரப்பினரைத் தவிர வேறெவரையும் திருப்திப்பட வைக்கின்ற வகையில் அரசாங்கம் செயலாற்றவில்லை. இது தான் மிகவும் முக்கியமான பிரச்சினை.
இனப்பிரச்சினைக்கு தனியே இராணுவ ரீதியாகத் தீர்வு காணமுடியாதென்றும், இராணுவ அரசியல் வழியிலான தீர்வே சரியாதென்றும் அரசாங்கம் முன்னர் கூறிவந்தது. அதாவது புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கு இராணுவ நடவடிக்கை- தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசியல் நடவடிக்கை என்பதே அது.


ஆனால் போர் முடியும் வரையில் இராணுவ நடவடிக்கையை வேகமாக முன்னெடுத்த அரசாங்கம், போர் முடிந்த பின்னர் அதே வேகத்துடன் செயற்படவில்லை. இதன் காரணமாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் அடிப்படை வசதிகளற்ற தடுப்பு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை புலிகளை அழித்து விட்ட அரசாங்கம் அரசியல் தீர்வு ஒன்றை தரும் என்று நம்பமுடியாத நிலைக்குத் தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக் கூடிய வகையில் அரசாங்கம் எந்த வகையிலுமே நடந்து கொள்ளவில்லை. இதுதான் சர்வதேச சமூகத்தை அதிருப்தியடையச் செய்திருக்கிறது. இன்னொரு ஆயுதப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.இன்னொரு ஆயுதப்போர் இலங்கையில் உருவாவதை எவருமே விரும்பவில்லை. ஆனால் அதற்கான புறச்சூழலும் வாய்ப்புகளும் இருப்பதாகவே சர்வதேசம் கருதுகிறது. இந்தப் புறச்சூழலை உருவாக்க–ஆயுதப் போருக்கான களத்தை உருவாக்கியிருப்பது அரசாங்கம் தான் என்பதே சர்வதேசத்தின் கருத்து. அரசியல் தீர்வொன்றையோ- அதிகாரப் பகிர்வையோ வழங்காமல், தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாதென்ற உண்மையை அரசாங்கம் ஏற்கத் தயாராக இலலை.தமக்குச் சாதகமாக உள்ள தமிழ் அமைச்சர்கள் மூலம் அதிகாரப்பகிர்வுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட வைப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையை அழுக்கி விடலாம் என்று அரசாங்கம் நினைப்பது தவறானது. இதுவே மற்றொரு ஆயுதப்போர் குறித்த அச்சநிலை சர்வதேச ரீதியில் உருவாகியிருப்பதற்குக் காரணமாகியிருக்கிறது.
அதேவேளை புலிகள் இயக்கம் முற்றாக அழிய வில்லை- அவர்கள் மீளவும் தலையெடுக்கலாம் என்ற அச்சம் இலங்கை அரசிடமும் இருக்கிறது. போருக்குப் பிந்திய அரசின் நகர்வுகள் தமிழ் மக்களை மட்டுமன்றி சர்வதேச சமூகத்தையும் திருப்திப்படுத்தத் தவறியதால் தான்- தேக்கநிலை ஒன்று உருவாக்கியிருக்கிறது.
புலிகள் இயக்கத்தை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி அரசாங்கம் அவர்களை அழித்தது- அதற்கு சர்வதேசமும் துணை நின்றது.





தமிழ்மக்களின் ஆதரவின்றி இன்னொரு ஆயுதப் போரை நிச்சயமாகப் புலிகளால் மட்டுமன்றி எவராலுமே முன்னெடுக்க முடியாது. இப்படியான சூழலில்- ஆயுதப் போராட்டம் ஒன்று மீளவும் உருவானால்- அதைப் பயங்கரவாத நடவடிக்கை என்று சர்வதேசம் பார்க்குமா என்பது சந்தேகமே. புலிகள் இயக்கத்தை அழித்த விடயத்தில்-சர்வதேசம் இப்போது பல உண்மைகளை விளங்கிக் கொண்டிருக்கும்.


இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறினால் அரசாங்கம் மற்றொரு நீண்ட ஆயுதப் போருக்குள் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அரசியல்தீர்வு, அதிகாரப்பகிர்வு என்று தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அரசாங்கம் இறங்கா விட்டால்இத்தகைய விளைவுகளையே எதிர்காலம் பரிசளிக்கும்.














Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire