இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஒற்றுமையைச் சீரழித்தவர் கருணாநிதி தான் - விஜயகாந்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது, இதைச் சீரழித்தவர் கருணாநிதிதான் என தேசிய முற்போக்குத் திராவிடர் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந் கூறியுள்ளார். இந்திய நாடாளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:தமிழகத்திலிருந்து இலங்கைக்கு சென்று வந்த நாடாளுமன்றக் குழுவால், அங்குள்ள தமிழர்களுக்கு சிறிதளவும் நன்மை கிடையாது. அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் இனித்துப் பேசி, கைகுலுக்கி, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துவிட்டு நாடு திரும்பியுள்ளது நாடாளுமன்றக் குழு.இந்தப் பயணம் ராஜபட்சவுக்குத்தான் அனுகூலமாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்களே தனக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் என்று, அவரை குறை சொல்லக்கூடிய ஐ.நா. சபைக்கும் மற்ற ஜனநாயக நாடுகளுக்கும் ராஜபட்ச இதை பயன்படுத்திக் கொள்வார்."இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக்காக, இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் இறந்துவிட்டனர். இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறீர்கள்' என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நாடாளுமன்றக் குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்."பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தமிழர்களை இலங்கை இராணுவம் சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தபோது, போர் நின்றுவிட்டது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதியை உலகத் தமிழர்களின் தலைவர் என்று எப்படி அழைக்க முடியும்' என்று மற்றொரு மாணவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளுக்கு நாடாளுமன்றக் குழு பதிலளித்ததாகத் தெரியவில்லை.எங்கள் கூட்டணி சார்பில் பிரதமரை சந்தித்து மனு கொடுத்தோம். அதை ஏற்றுக்கொண்டு இலங்கை செல்ல அனுமதி அளித்தார். இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் எதிர்க்கட்சிகளும் இதுபோல் செய்யட்டும் என்று முதல்வர் கருணாநிதி அறிக்கை விட்டுள்ளார்.முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்திலேயே இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ஒற்றுமை வேண்டும் என்றபோது, இதைச் சீரழித்தவர் கருணாநிதிதான். இவர் என்றைக்கு அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை, பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகம் அறியும்.நாடாளுமன்றக் குழு இங்கிருந்து இலங்கை சென்றுதான் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றால், இலங்கையில் இந்தியத் தூதரகம் எதற்கு? பேராபத்தில் தமிழர்கள் உள்ளபோது, இந்திய அரசு மௌனம் சாதிப்பது யாருக்காக இந்த அரசு நடைபெறுகிறது என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழர்கள் இறந்தாலும் பரவாயில்லை, இந்திய -இலங்கை உறவு நன்றாக இருந்தால் போதும் என்று நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.
Source: http://www.pathivu.com/news/3798/54//d,view.aspx
Comments
Post a Comment