ஈழத்தமிழ்த்தேசிய இனம்:தேசியத் தன்னுரிமையே வரலாற்று வழித் தீர்வு - முனைவர் த.செயராமன்




வரலாறு ஓர் உண்மையைப் பதிவு செய்திருக்கிறது.அது விடுதலை கோரும் ஓரினம் தன் இலக்கை அடையும் வரை ஓயாது என்பதுதான். போராடும் ஓரினம் சில களங்களை இழக்கலாம். பேரிழப்புகள் ஏற்படலாம். ஆனால் அது ஒருபோதும் ஓய்ந்து போவதில்லை.
கி.பி.முதல் நூற்றாண்டில் ரோமானியர்களிடம் நாடிழந்த யூதர்கள் 1948-ல் தங்களுக்கான நாட்டைப் படைத்துக்கொண்டார்கள்.
கி.பி.12- ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆளுகைக்குக் கீழ் வந்த அயர்லாந்தியர் 1922-ல் விடுதலை பெற்ற அயர்லாந்தைப் பெற்றனர், கி.பி.18-ம் நூற்றாண்டில் மும்முறை ஐரோப்பிய வல்லாதிக்க அரசுகளால் பங்கிடப்பட்டு விழுங்கப்பட்ட போலந்து 1918-இல் மீண்டும் விடுதலை பெற்ற தேசமாக பிறப்பெடுத்தது.
தொன்மை வரலாற்றுப் பாரம்பரியம் மிக்கத்தமிழினம் - இரண்டு தேசிய இனங்களாக, தமிழ்த்தேசிய இனம் மற்றும் ஈழத்தமிழ்த்தேசிய இனம் - வேற்றினத்தின் ஆளுகையில் வீழ்ந்து கிடக்கிறது. விடுதலைக்குப் போராடிய ஈழத்தேசிய இனம் இந்திய - சிங்கள வஞ்சகக் கூட்டணியால் வீழ்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத் தமிழ்த் தேசிய இனம் இந்தியத்துக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்து ‘கொசுறுப்’ பதவிகள் பெறுவதில் சுகம் காணுகிறது. ஆனால், தமிழகத்தில் தேசிய இன விடுதலை உணர்வு வளர்நிலையில் உள்ளது. ஈழத்தில் அடக்கவொன்னா வீச்சுடன் மீண்டும் எழும் நிலையில் உள்ளது. தேசிய இனங்களின் பிறப்புரிமை – தன்னுரிமை உலகெங்கும் மக்கள் சமூகங்களாக வாழ்கிறார்கள். அவர்கள் அரசியல் பூர்வமாக தனித்தனி தேசங்களாக அல்லது தேசிய இனங்களாக வாழ்கிறார்கள். மனித சமூகங்கள் வரலாற்றுப் போக்கில் தேசியம் இனம் என்ற அரசியல் அலகுகளாக மாறுகின்றன. ஒரு தேசிய இனம் என்பது வரலாற்றின் விளைபொருள். J.V..ஸ்டாலின் ஒரு தேசம் என்பது நான்கு அடிப்படைக் கூறுகளைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் சமூகம் என வரையறுத்தார். ஒரு பொதுமொழி, ஒரு தொடர்ச்சியான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி, ஒரு பொதுவான பொருளாதார வாழ்வு, பொதுப்பண்பாட்டில் வெளிப்படும் ‘தாம் ஓரினம்’ என்ற உளவியல் இவற்றைக் கொண்டிருக்கும் வரலாற்றுப் போக்கில் உருவான மக்கள் சமுதாயமே ‘தேசம்’ அல்லது ‘தேசிய இனம்’ (Nation) ஆகும்.இடைக்கால நிலப்பிரபுத்துவத்தின் அழிவில் முதலாளிய வகுப்பின் ஆதரவுடன் நவீன காலத் தொடக்கத்தில் (கி.பி.15-ம் ஆம் நூற்றாண்டு) முடிமன்னர்களின் தலைமையில் தேசங்கள் தோன்றின மன்னராட்சி தேசங்கள் பின்னர் 18-ம் நூற்றாண்டில் மக்களாட்சி தேசங்களாக மாறின. ஒவ்வொரு தேசமும் அல்லது தேசிய இனமும் தனக்கான தேசத்தை (Nation – State) படைத்துக்கொண்டது. தேசங்கள் - இறையாண்மை - தன்னுரிமை (National Self –determination) ஆகியவை உடன் பிறப்புகள். தன்னுரிமை அல்லது சுயநிர்ணய உரிமை ( Right to Self- Determination) என்பது ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை. ஒரு தேசிய இனம் தன்னுடைய அரசியல், பொருளியல், சமூக, பண்பாட்டு வாழ்வு நிலையைத் தானே முடிவு செய்து நடைமுறைப்படுத்திக் கொள்ள உரிமை பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில்தான் இன்று ஐரோப்பா முழுவதும் தேசிய இன நாடுகளாக (Nation – State) உருவாகியுள்ளது. தனக்கான சுதந்திரமான நாட்டைப்படைத்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் உரிமை உண்டு. ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மை உடையது. ஒரு தேசிய இனம் விரும்பினால் தனி நாடாகவும் இருக்கலாம், அல்லது தனது பிரிந்துபோகும் உரிமையுடன் ஒரு கூட்டாட்சியில் பங்கு பெற்றிருக்கலாம். ‘தன்னுரிமை’ என்பது ‘தன் தீர்மாணிப்பு உரிமை’ தனது அரசியல் கதி போக்கை ஒரு தேசிய இனம் தன் விருப்பப்படித் தீர்மானித்துக்கொள்வது என்று பொருள். ஒரு தேசிய இனம் தனித்து தேசிய அரசும் அமைத்துக் கொள்ளலாம் அல்லது அந்த உரிமையைக் கைவிடாமல் பிற தேசங்களுடன் சேர்ந்து ஒரு அரசின் கீழ் வாழவும் முடிவெடுக்கலாம். தன்னுரிமை ( சுயநிர்ணய உரிமை) என்பதன் பொருள் ஓரினத்தை இன்னோர் இனம் ஆளக்கூடாது என்பதுதான். தன்னுரிமை இல்லாமல் ஒரு தேசிய இனம் இருக்க முடியாது. அது தேசிய இனத்துடன் உடன் பிறந்தது. ஒரு தேசிய இனம் தனது இறையாண்மையைப் பயன்படுத்தி அது தன் அரசியல் கதிபோக்கைத் தானே நிர்ணயித்துக் கொள்கிறது. சனநாயகம் , தேசங்களின் இறையாண்மை, தன்னுரிமை ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை இவற்றில் எந்த ஒன்று மறுக்கப்பட்டாலும் மற்றவை மறுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன. ஒரு பல்தேசிய இன நாட்டில் இருக்கும் ஒரு தேசிய இனத்தின் ‘பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை’ ஏற்கப்பட்டால் மட்டுமே, அத்தேசிய இனம் தனது இறையாண்மையுடனும், சனநாயக உரிமையுடனும் இருப்பதாகப் பொருள்படும்.
ஒரு பெருந்தேசிய இனம் ஒடுக்குமுறையை வெளிப்படையாகவோ அல்லது நுட்பமாகவோ செயல்படுத்தும். மேலோட்டமாகப் பார்க்கையில் சனநாயக உரிமைகள் அனைவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது போலத்தோன்றும். ஆனால் சிறிய தேசிய இனங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு ஒடுக்கப்படும். சிறு தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு தனிமனித உரிமைகளை அளிப்பது, அதே நேரம் அந்த சமூகத்திற்கான (தேசிய இனத்துக்கான) உரிமைகளை மறுப்பது என்பது சனநாயக மறுப்பே ஆகும். ஏனெனில், மக்கள் சமூகம் என்பது உதிரிகளான தனிமனிதர்கள் அல்ல. அது ஒரு ‘கூட்டு உடல்’ (Collective Personality) தனி மனிதனுக்கு ஒரு வாழ்க்கை இருப்பது போலவே, ஒரு தேசிய இனத்துக்கும் ஒரு அரசியல் வாழ்வு இருக்கிறது. ஒரு தேசிய இனம் சனநாயகத்தை அனுபவிக்கும்போது, அதன் ஒவ்வொரு உறுப்பினனும் உரிமைகளை அனுபவிக்கிறான். அத்தேசிய இனத்தின் உரிமை பெற்ற அரசியல் வாழ்வு பறிக்கப்படும்போது, அந்த தேசிய இனத்தின் ஒட்டுமொத்த மக்களும் உரிமை இழக்கிறார்கள்.
தன்னுரிமைக் கோட்பாட்டின் வரலாறுதேசங்கள் உருவானபோது தன் தீர்மானிப்பு உரிமையையும் பயன்படுத்தும் போக்கும் தொடங்கியது. ஒரு தேசிய இனத்துக்கு ஒரு நாடு என்பதுதான் தற்கால அரசமைவு முறை(Modern State System) ஆகும். இவற்றுக்கிடையில்தான் பன்னாட்டு உறவுகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேசிய அரசுகள் முறை ஐரோப்பாவில் முப்பதாண்டுப்போர் (1618-1648 கி.பி) முடிவடைந்த பிறகு தொடங்கியது. முப்பதாண்டுப்போர் என்பது கத்தோலிக்கர்களுக்கும் புராட்டஸ்டண்டு இளவரசர்களுக்கும் இடையே ஐரோப்பாவில் நிகழ்ந்த இறுதிப்போர். போரின் இறுதியில் 1648-ம் ஆண்டு வெஸ்ட்பாலியா சமாதானம் (Peace of Westphalia) ஏற்பட்டது. மதச்சீர்திருத்தக் காலத்தின் முடிவையும், அரசியல் புரட்சிக்காலத்தின் தொடக்கத்தையும் இந்த ஒப்பந்தம் குறித்தது.ஐரோப்பிய நாடுகள் பங்கேற்ற இந்த முப்பதாண்டுப் போரின் விளைவாக புனித ரோமானியப் பேரரசு (Holy Roman Empire) நடைமுறையில் முடிவுற்றது. புனித ரோமானியப் பேரரசில் அடங்கியிருந்த 343 அரசுகள் ஆட்சி உரிமை பெற்றன. சமயம் சார்ந்த அரசியல் வலுவிழந்தது. சமயப் சார்பின்மை என்பது அரசுகளின் புதிய கோட்பாடானது. தற்கால அரசுமுறை (Modern State System) இப்போது தொடக்கம் கண்டது. ஐரோப்பாவில் அரசுகள் ஒன்றைவிட மற்றொன்று தாழ்ந்தது அல்ல என்ற புரிதல் இதற்கு அடிப்படையானது. முன்பு புனித ரோமானியப் பேரரசே ஏனைய தேசிய அரசுகளை விட உயர்ந்தது எனக் கருதப்பட்டது. ஆனால், இதன்பிறகு பேரரசும் ஓர் ஐரோப்பிய அரசே மற்ற அரசுகளை விட அது உயர்ந்தது அல்ல என்ற எண்ணம் எழுந்தது. வெஸ்ட்பாலியா அமைதி ஒப்பந்தம் பல புதிய அரசுகளை உருவாக்கியது. டச்சு குடியரசுக்கு ஒரு நூறு ஆண்டு போராட்டத்திற்குப்பின் ஏற்பளிக்கப்பட்டது. ஹேப்ஸ்பர்க் அரச வம்சத்தை எதிர்த்து 400 ஆண்டுகாலம் போராடிய சுவிஸ் இப்போது விடுதலை அடைந்தது. இப்போது ஒவ்வொரு ஜெர்மானிய சிற்றரசின் இறையாண்மையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அவை தங்கள் அரசியல் நிலையைத் தாங்களே தீர்மானித்தன. ‘ இறையாண்மையுள்ள சுதந்திர நாடுகள்’ என்ற அடிப்படையில் ஐரோப்பா மாற்ற மடையத் தொடங்கியது. இதன் அடிப்படையிலேயே புதிய பன்னாட்டுச் சட்டங்கள் எழுதப்பட்டன. அதன் அடிப்படையாக , 17-ம் நூற்றாண்டில் (முப்பது ஆண்டுப் போர் நடக்கும் காலத்திலேயே), ஹுகோ குரோஷியஸ் (Hugo Grotius). ‘போர் மற்றும் அமைதிக்கான சட்டம் பற்றி (On the Law of War and Peace) என்ற நூலை எழுதினார்.1648- ஆம் ஆண்டின் வெஸ்ட்பாலியா உடன்பாட்டிலேயே தன்னுரிமை (Right to self determination) பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இக்காலக்கட்டத்தில், தேசியம் என்ற உணர்வு ஒரு இன மக்களை ஒரு நாட்டுடன் இணைத்து அடையாளப்படுத்தியது.இக்காலக்கட்டத்தில் அரசியல் சிந்தனையாளர்களின் சிந்தனைகள் இப்போக்கை ஊக்குவித்தன. ஆங்கில அரசியல் சிந்தனையாளர் ஜான்லாக் (John Lock 1632 –1704) வாழ்வதற்கான உரிமை இயற்கையானது சுதந்திரம்சொத்துரிமை மற்றும் மனித உரிமைகளைக் காப்பதற்காகவே அரசுகள் உருவாக்கப்பட்டன.
மக்களே அரசுகளை உருவாக்கினர். கடமை தவறுமானால் அந்த அரசுகளை மக்கள் நீக்கலாம் என்றார். இதுவே சனநாயகத்தின் அடிப்படை. இக்கருத்து அமெரிக்க விடுதலைப் போரின் மீது (1775-1783) பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்க விடுதலைத் தலைவர்களுள் ஒருவரான ஜெபர்சன் (Jefferson) மீது ஜான் லாக்கின் கருத்து தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரால் வடிவமைக்கப்பட்ட அமெரிக்க விடுதலைப்பிரகடனம் (Declaration of Independence –4 July 1776) இவ்வாறு அறிவித்தது:"ஆளப்படுவோரின் ஒப்புதலில் இருந்தே அரசுக்கு நியாயமான அதிகாரம் கிடைக்கிறது.
இந்த இலக்குகளிலிருந்து ஒரு அரசுமுறை மாறுமானால், அந்த அரசை மாற்றுவது அல்லது அழிப்பது மற்றும் புதிய அரசை நிறுவுவது என்பது மக்களின் உரிமை"இதுவே ஒரு மக்களின் தன்னுரிமை (Self Determination). இது மேலும் பரிமாண வளர்ச்சி பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியில் (1789) ‘மக்களின் இறைமைக் கோட்பாடு’ (Doctrine of Popular –Sovereignty) உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பிரெஞ்சு சிந்தனையாளரான ரூசோ (Rousseau 1712-1778) ‘மக்கள் சமூகம் ஒரு சமுதாய ஒப்பந்தத்திற்கு வந்தது. இதனால் ஓர் அரசியல் சமூகம் உருவாக்கப்பட்டது அதன் ‘பொது விருப்பம்’ (General Will) இறையாண்மை உடையது. இறையாண்மை (Sovereignty) மிக்க ‘பொது விருப்பம்’ அரசை உருவாக்கியது. அந்த அரசு மக்களுக்கு தொண்டாற்ற வேண்டிய முகவர் மட்டுமே. அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்’ என்றார். பிரெஞ்சுப் புரட்சி இவ்விதம் மக்களின் இறையாண்மையையும் தன்னுரிமையையும் இணைத்தது. தன்னுரிமையைப் பயன்படுத்தும் திட்டமாக கருத்துக் கணிப்பு (Plebiscite) என்ற சனநாயக முறையையும் புகுத்தியது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூட்டப்பட்ட தேசிய அவை (National Assembly) பிரான்சின் அரசியலமைப்பைத் தீட்டுமுன் ‘மனிதன் மற்றும் குடிமகன் இவர்களின் உரிமைகளின் அறிக்கை’ (Declaration of Rights of man and Citizen –1789) என்ற பிரகடனத்தை வெளியிட்டது.
அது மனிதர்களின் சமத்துவத்தையும், இறையாண்மை நாட்டுமக்களிடமே இருக்கிறது என்ற கருத்தையும் வலியுறுத்தியது. மக்களின் இறையாண்மை தன்னுரிமையாக வெளிப்பட்டு அரசுகளைத் தெரிவு செய்தது. பிரெஞ்சுப் புரட்சியும், அடுத்து ஆட்சிப்பொறுப்பை கைக்கொண்ட நெப்போலியன் போன பார்ட்டின் நாடு விழுங்கும் பேரரசுக் கொள்கையும் தேசிய இன உணர்வை உசுப்பின.ஸ்பெயின், போலந்து, ரஷ்யா, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தேசிய இன விடுதலை உணர்வு கிளர்ந்தது.
இவ்வுணர்வு இத்தாலியிலும், ஜெர்மனியிலும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்கெதிராக எழுந்தது. இத்தாலிய ஐக்கியம், ஜெர்மானிய ஐக்கியம் (1871) ஆகியவை சாதிக்கப்பட்டன.
தேசிய இனங்கள் தனித் தேசங்களைப் படைத்தபோதெல்லாம் தன்னுரிமைக் கோட்பாடு செயல்படுத்தப்பட்டது. 1820 களில் நடைபெற்ற கிரேக்க விடுதலைப்போரில் தன்னுரிமைக் கோட்பாடு செயல்பட்டது. 1830-இல் பெல்ஜியமும், அதன்பின் ஸ்பானிய அமெரிக்கக் குடியேற்றப்பகுதிகளும் தன்னுரிமை அடிப்படையிலேயே விடுதலை பெற்றன. ஐரோப்பாவில் வெடித்த 1848-ஆம் ஆண்டுப் புரட்சி பிரான்சு முதல் பல நாடுகளில் மாற்றங்களை விளைவித்தது. இப்புரட்சியின்போது தேசிய இனங்கள் தங்களுக்கென தனி தேசங்களை நிறுவ முயன்றன. இக்காலக் கட்டத்தில் தன்னுரிமைக் கோட்பாடு ஒவ்வொரு மக்களையும் ஓர் இனவழிச் சமூகமாக (Ethnic Entity) காணும் போக்கு வளர்ந்திருந்தது. இச்சமூகங்கள் தங்களுக்கான தனித்தனி நாடுகளுக்கு உரிமையுடையவை என்ற பார்வையும் வளர்ந்திருந்தது. இவ்வாறு தன்னுரிமைக் கோட்பாடு வலிமை பெற்று வந்தது. ஆனால், இராணுவ ரீதியில் வலிமை பெற்ற இனங்கள் தன்னுரிமையை நடைமுறைப்படுத்திக்கொண்டன. உதாரணமாக இத்தாலியும், ஜெர்மனியும் சிறிய தேசங்களான டேனியர், செக்குகள், சுலோவக்குகள், குரோட், சுலேவென்கள் -ஆகியவற்றின் தன்னுரிமை கோரிக்கைளாக இருந்தன. 1896-ஆம் ஆண்டு ஜுன் 21 முதல் ஜுலை 1 வரை இலண்டனில் நடைபெற்ற கம்யூனிஸ்ட்டுகளின் இரண்டாவது அகிலத்தின் (Second International Congress) நான்காவது பேராயத்தில் தேசிய இனங்களுக்கான தன்னுரிமையை ஆதரித்து கம்யூனிஸ்ட்டுகள் தீர்மானம் இயற்றினர். முதல் உலகப்போர் (1914- 1918) மற்றும் இரண்டாம் உலகப்போர் (1939-1945) ஆகிய போர்களுக்கு சிறு தேசங்களின் தன்னுரிமைகள் மிதிக்கப்பட்டமையும் காரணமாகும். ஆகவேதான் உலக அமைதியைப் பேணுவதற்காக முதல் உலகப்போருக்குப்பின்னும், இரண்டாம் உலகப்போருக்குப்பின்னும் தேசங்களின் தன்னுரிமை பிரகடனங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டன.முதல் உலகப்போர் (1914 - 1918) முடிவடைந்ததும் பல நாடுகள் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் விடுதலை பெற்றன. பேரரசுகளான ஜெர்மனி, ஆஸ்திரியா, துருக்கி, ரஷ்யா ஆகியவை பல பகுதிகளை இழந்தன. மத்திய ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு ஐரோப்பாவில் புதிய தேசிய இன அரசுகள் தோன்றின. அவை பின்லாந்து, எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா, போலந்து, செக்கோஸ் லோவேகியா, யூகோஸ்லாவியா ( பல தேசிய இனங்கள்). முதல் உலகப் போருக்குப்பின், ‘தேசிய இனங்களின் இறையாண்மையுள்ள ஆட்சியும், அவற்றில் சனநாயகமுறைமையும்’ என்ற புதிய போக்கு பரவியது. பலநாடுகள் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் விடுதலை பெற்றன. 1914-இல் ஐரோப்பாவில் 19 நாடுகள் இருந்தன. 1919-இல் இது 26 ஆக உயர்ந்தது. தேசிய இனத் தன்னுரிமைக் கோட்பாட்டின் பயன்பாடு நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்தியது. முதல் உலகப் போருக்குப்பின் உலக அமைதியைப் பேணுவதற்காக பன்னாட்டு மன்றம் (League of Nations) உருவாக்கப்பட்டது. அதற்கு முன்னோடியாக 1918-இல் ‘The League of Free Nations Association’ உருவானது. அமைதியை விரும்பிய தலைவர்கள் ‘நாடு’ (State) என்ற சொல்லுக்குப் பதில் ‘தேசம்“ (Nation) என்ற சொல்லையே பயன்படுத்தினார்கள்.20-ம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தேசங்களின் ‘தன்னுரிமை’க்கு உரிய மதிப்பு தரப்பட்டது. 1917-இல் அக்டோபர் புரட்சியை நடத்து முன் தேசிய இனங்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை லெனின் உறுதி செய்தார். 1918-இல் வரையப்பட்ட சோவியத் யூனியனின் அரசியல் அமைப்புச் சட்டம் , பிரிந்து செல்லும் உரிமையை ஏனைய குடியரசுகளுக்கு உறுதி செய்தது. தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஆதரிக்கும் நிலையில் லெனின் புதிய திசைவழிகளைக் காட்டினார். ‘தேசிய இன முரண்பாடுகள் ஒடுக்குமுறை வடிவம் பெறும்போது, விடுதலை என்ற வடிவம் தாங்கும் நிலை ஏற்படுகிறது’ என்றும் பிரிந்துபோகும் உரிமை என்பது அனைத்து அசமத்துவங்களையும் தனி ஆதிக்க உரிமைகளையும் அகற்றுவது என்றும் கருத்தறிவித்தார். 1917 அக்டோபர் புரட்சிக்குப்பின் பிரிந்து செல்ல விரும்பிய பின்லாந்து மிகுந்த மதிப்புடன் பிரிந்து போக ஆவன செய்தார். லெனின் இவ்வாறு கருத்தறிவித்தார்.
"சுய நிர்ணய உரிமையையோ பிரிந்து போகும் உரிமையையோ மறுப்பதானது ஆதிக்க தேசிய இனத்தின் தனியுரிமைகளை ஆதரிப்பது என்றே தவிர்க்க முடியாதபடி பொருள்படும்" (லெனின் , தேசிய இனப் பிரச்சினைகளும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் (1969)1987 முன்னேற்றப்பதிப்பகம், பக்-34) முதல் உலகப் போருக்குப்பின்னும் , போர் நடக்கும்போதும், அமெரிக்கக் குடியரசுத்தலைவர் உட்ரோவில்சன் தேசியத் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தனியரசுகள் அமைவதை வலியுறுத்தினார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இவ்வாறு அறிவித்தார். "மக்களும் மாகாணங்களும் ஓர் இறையாண்மைக்கும் மற்றொரு இறையாண்மைக்குமிடையே பண்டமாற்று செய்யப்பட வேண்டியவை அல்ல, ஏதோ கால்நடைகளைப் போல அல்லது சதுரங்க விளையாட்டில் காய்கள் போல, மக்களுடைய ஒப்புதல் மட்டுமே மக்களை மேலாண்மை செய்க்கிறது மற்று்றும் ஆளுகிறது என்று கூறிவிட முடியாது. தன்னுரிமை என்பது வெற்றுச்சொல்லாடல் அல்ல.
அது உடன் செய்யப்பட வேண்டிய செயல்பாட்டுக்கான கொள்கை. அதை அரச தந்திரிகள் இனிமேல் தங்கள் பேரபாயத்தை எதிர்நோக்கியே அலட்சியப்படுத்துவார்கள்." (Quoted in V.D.Mahajan, Political Theory , S.Chand & Co., New Delhi, 1988, PP.154-155) 1918- இல் உட்ரோ வில்சன் தனது 14- அம்சக்கொள்கையை வெளியிட்டார். அதில் தேசிய இனத் தன்னுரிமையை ஆதரித்தார். ஆஸ்திரியா, பால்கன், போலந்து ஆகியவற்றுக்குத் தன்னுரிமை அடிப்படையில், தீர்வு காண வலியுறுத்தினார். உலக அமைதிக்காக பன்னாட்டு (பல்தேச) மன்றத்தை அமைக்க அவரே 14 அம்சக் கொள்கையில் வலியுறுத்தினார். தன்னுரிமைக் கோட்பாட்டை அரசியல் உண்மை இருப்பாக மாற்ற பன்னாட்டு மன்றம் தேவை என்று கருதினார். இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நட்பு நாடுகளால் 1941 -ஆம் அண்டு ஆகஸ்ட் 14 அன்று அட்லாண்டிக் சாசனம் ( Atlantic Character) வெளியிடப்பட்டது. அது, அனைத்து மக்களுக்கும் தங்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு என்று அறிவித்தது.
இரண்டாம் உலகப்போருக்குப்பின் தன்னுரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல விடுதலை அடைந்தன. 1942 சனவரிமாதம் 26 நாடுகள் ஐக்கிய நாடுகள் பிரகடனத்தில் கையொப்பமிட்டன. அப்பிரகடனம் அட்லாண்டிக் சாசனம் கூறும் தன்னுரிமையை ஏற்றுக்கொண்டது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் பல உலகப் பிரகடனங்களும் ஆவணங்களும் தேசிய இனத் தன்னுரிமைக்கு ஏற்பளித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சாசனம் -1945 கூறு 1(2) : "மக்கள் இனங்களுக்கு உரிய தன்னுரிமை (Self determination) மற்றும் சமத்துவ உரிமைகள் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தேசங்களுக்கு இடையில் நட்புறவை வளர்த்தல் மற்றும் உலக அளவில் அமைதியை வலுப்படுத்த தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்" Article 1(2)“To develop friendly relations among nations based on respect for the principle of equal rights and self – determination of peoples, and to take other appropriate measures to strengthen Universal peace” பொருளாதார , சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம் (InternationalCovenant on Economic, Social andCultural Rights-1966) இவ்வாறு குறிப்பிடுகிறது: அனைத்து மக்கள் இனங்களுக்கும் தன்னுரிமை (சுயநிர்ணய உரிமை) உண்டு, அவ்வுரிமையை அவர்கள் பெற்றிருப்பதால், அவர்களுடைய அரசியல் தகுநிலையை சுதந்திரமாக அவர்கள் தீர்மானிக்கிறார்கள். அவர்களுடைய பொருளியல், சமூக, பன்பாட்டு வளர்ச்சியை சுதந்திரமாக முன்னெடுக்கிறார்கள்" (All peoples have the right of self – determination. By virtue of that right they freely determine their political status and freely pursue their economic, social and cultural development).தன்னுரிமை ஏற்பளிப்பின் காரணமாக 1946 முதல் 1960 வரை 37 புதிய தேசங்கள் தோன்றின. 1991-இல் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய 15 குடியரசுகள் சோவியத் யூனியனிலிருந்து வெளியேறின. 1990- இல் தன்னுரிமை அடிப்படையில் யூகோஸ்லாவியா உடைந்து தேசிய இனங்கள் வெளியேறின. இன்றளவும் பல தேசிய இனங்கள் தங்கள் தன்னுரிமையை ஏற்கவேண்டும் எனக்கோரிப் போராடி வருகின்றன. தன்னுரிமைக்கு உரிமை பெற்ற ‘மக்கள்’ (A People) யார்? தேசிய இனத் தன்னுரிமையை உறுதிசெய்யும் உலக ஒப்பந்தங்களும் பிரகடனங்களும் அதற்கு தகுதியானவர்களை ‘A People’ என்றும் அத்தகைய தேசிய இனங்களை ‘Peoples’ என்றும் அழைக்கின்றன. இன்று ஈழத்தேசிய இனம் தன்னுடைய தன்னுரிமையை ஏற்பளிக்கக் கோருகிறது. தன்னுரிமை பெற ‘a People' என்ற தகுதியை ஈழத்தமிழினம் நிறைவு செய்கிறதா?‘ஒரு மக்கள்’ என்பது ஓர் எண்ணிக்கையுள்ள ஒரு கூட்டம். அது ஒரு பொதுவான நிலப்பகுதியில் வாழ்வதாகவும், தேசிய, பண்பாட்டு, மொழி, சமய இணைப்புகளோடு, அரசு அதிகாரமும் கொண்டிருக்கும். அவ்வாறு கருதப்படும் மக்கள், தெளிவான அடையாளத்துடன், தனித்துவப் பண்புகளுடன், ஒரு நிலப்பகுதியுடன், உறவு கொண்ட ஒரு சமூகப் பருண்மை (Social Entity) (B.C.Nirmal, The Right to Self – Determination in International Law, New Delhi, 1999 P.119) 1981-ஆம் ஆண்டு இலங்கை இனப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்து 1983-இல் அறிக்கை அளித்த பன்னாட்டு நீதியாளர்கள் குழு ஈழத்தமிழர்களை ஒரு மக்கள் என அடையாளங் கண்டது. "தமிழர்களை ‘ஒரு மக்கள்’ என்று கருதலாம். அவர்களுக்கு என்று ஒரு தனித்துவமான மொழி, பண்பாடு, ஏனைய பெரும்பான்மை மக்களிடமிருந்து மாறுபட்ட ஒரு தனியான சமய அடையாளம், ஒரு குறிப்பிட்ட அளவிலான வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி ஆகியவை இருக்கின்றன" (Vinginia A. Learny , Ethnic Conflict and Violence in Sri Lanka, International Commission of Jurists, Genera, 1981, P.69).ஈழத்தமிழினத்தின் தன்னுரிமைக் கோரிக்கைபன்னாட்டு ஒப்பந்தங்கள் பேசும் அனைத்துத் தகுதிகளையும் நிறைவு செய்யும் ஈழத்தமிழினத்தின் தேசிய இனத் தன்னுரிமை ஏற்பளிக்கப்பட வேண்டும்.
அதற்கான கோரிக்கையைத் தொடர்ந்து ஈழத்தமிழினம் எழுப்பி வந்திருக்கிறது. பிரச்சினை தொடங்கியபிறகு தன்னுரிமைக் கோரிக்கையை ஈழத்தமிழினம் தொடர்ந்து கீழ்க்கண்ட ஆவணங்களில் எழுப்பியிருக்கிறது.
• எஸ். கதிரவேற்பிள்ளை, கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் (1973)
• தந்தை செல்வநாயகம் (1975)
• வட்டுக்கோட்டை தீர்மானம் (1976)
• தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 1977 தேர்தல் அறிக்கை.
• ஆண்டன் பாலசிங்கம் அளித்த அரசியல்குடி அறிக்கை -1983.
• திம்பு பேச்சுவார்த்தையில் (1985) போராளி அமைப்டபுகளின் தீர்வுக் கோட்பாடு
• நீதிபதி பொன்னம்பலம் -1991
• விசுவநாதன் ருத்ரகுமாரன் -1991
• விடுதலைப்புலிகளின் அரசியல்குடி - 1991
• பன்னாட்டு கல்வி வளர்ச்சிக்குழு ஐ.நா.மனித உரிமை ஆணையத்துக்கு அளித்த அறிக்கை (1998).
தமிழகத்தின் தன்னுரிமைக்குரல்:
• 1938 தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கி தமிழ்நாடு விடுதலைக் கோரிக்கையை தொடங்கிவைத்தார்.
• 1946இல் ம.பொ.சிவஞானம் தமிழகத்துக்குத் தன்னுரிமை கோரினார். இந்திய சுதந்திரக் கூட்டாட்சியில் தன்னுரிமை பெற்ற தமிழகக் குடியரசு என்று அவர் வெளியிட்டக் கூட்டறிக்கையில் தமிழகத் தலைவர்கள் பலரும் தமிழறிஞர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.
• 1961 செப்டம்பரில் ஈ.வெ.கி.சம்பத் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி "மொழிவழித் தேசிய இனங்கள் ஒவ்வொன்றுக்கும் தன்னைத் தானே ஆண்டு கொள்ளும் பூரண சுதந்திரம், தம்மிச்சையாக ஒன்று கூடும் பிரிந்து போகும் உரிமையுடன் கூடியக் கூட்டமைப்பு" என்பதை முன் வைத்தது.
• 1963இல் தென்மொழிக் கழகம் சார்பில் தமிழக விடுதலை உரிமை நாள் அறிவித்த பாவலரேறு பெருஞ்சித்தரனார் 1966 இல் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைத்தார்.
• தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் தலைமை தாங்கிய தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி 1984 ஆம் ஆண்டில் தமிழ்நாடு விடுதலை கோரியது.
• 1990-இல் சென்னை பெரியார்திடலில் தமிழ்த்தேசப் பொதுவுடமைக் கட்சி தன்னுரிமை மாநாட்டைக் கூட்டி தமிழ்த் தேசத் தன்னுரிமை தீர்மானங்களை நிறைவேற்றியது.
• 1991-இல் பழ.நெடுமாறன் அவர்களின் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கம், தஞ்சை மாநாட்டில் தன்னுரிமைத் தீர்மானத்தை நிறைவேற்றியது.
• 1993-ல் தமிழர் தேசிய இயக்கம் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தமிழ் தமிழர் இயக்கம் ஆகியவை தமிழ்த்தேசத் தன்னுரிமை முன்னணியை அமைத்தன. தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் ஆகியவை தமிழ்த் தேசிய விடுதலையை முன்வைத்தன. வே. ஆனைமுத்து அவர்களின் தலைமையில் செயல்படும் மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக்கட்சி ஆகியவை தமிழ்த் தேசியத் தன்னுரிமையை ஏற்றுள்ளன.
மார்க்சிய - லெனினிய பொதுவுடைமைக்கட்சிகளும் வேறு அமைப்புகளும் தேசிய இனத் தன்னுரிமையை தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக வைக்கின்றன. உலகம் முழுவதும் பல தேசிய இனங்கள் தேசிய இனத் தன்னுரிமை கோரிக்கையை முன்வைத்துப்போராடி வென்றிருக்கின்றன. ஈழ தேசிய இனமும் தமிழ்த்தேசிய இனமும் எந்த அளவுகோல் வைத்து அளந்தாலும் தன்னுரிமை கோரத் தகுதி வாய்ந்த மக்களினங்கள் ஆகும். தமிழினத்துக்குத் தன்னுரிமை மறுப்பது வஞ்சகம்.
(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், ஆகஸ்ட் மாத இதழ் 2009)






Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire