இரும்புக் கம்பிகளின் பின்னால் தமிழரின் இன்னொரு சந்ததி
தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை எனப்படுவது காலகாலமாக அரசியல்வாதிகளின் உறுதிமாழிகளால் பூசி மெழுகப்படும் விடயமாக இருந்துவருகிறது. அண்மையில்கூட, யாழ்ப்பாணம், அனுராதபுரம் சிறைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதிகளின் போராட்டம் அரசியல்வாதிகளின் உறுதிமொழியை அடுத்து முடித்துவைக்கப்பட்டிருக்கிறது.
சிறைக்கம்பிகளின் பின்னால் கண்ணீரால் கரையும் இவர்களின் எதிர்காலம் எந்த மந்திரக்கோலால் தீர்க்கப்படப்போகிறது?
சிறைக்கம்பிகளின் பின்னால் கண்ணீரால் கரையும் இவர்களின் எதிர்காலம் எந்த மந்திரக்கோலால் தீர்க்கப்படப்போகிறது?
யாழ்ப்பாணம், அனுராதபுரம், களுத்துறை, பூசா, வெலிக்கடை, நியூமகசின், நான்காம்மாடி, தெமட்டகொட பயங்கரவாத தடுப்புப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பணியகம், கண்டி போகம்பரை சிறைச்சாலை போன்ற இடங்களில் 500 இற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகளின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதனைவிட தற்போது தினமும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும் மறுபடியும் கைதுசெய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகவே அமைந்துள்ளது.
நியூமகசின், வெலிக்கடை, பூசா, நான்காம்மாடி, கண்டிபோகம்பரை ஆகிய இடங்களில் 260 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது. இவர்கள் அனைவரும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு பல்வேறுவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டவர்களும் மேல் நீதிமன்ற விசாரணைக்காக காத்திருப்போரும் உள்ளனர்.
இதனைவிட இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ள மேலும் பலருக்கு பலவருடங்கள் கழிந்த நிலையிலும் இதுவரையும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் சட்டமா அதிபர் திணைக்களம் காலம் கடத்துவதாகவே பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. இவையெல்லாவற்றிற்கும் அப்பால் பயங்கரவாதத் தடுப்புத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் பட்சத்தில் பல்வேறு சிக்கல்களை தமிழ் அரசியல் கைதிகள் எதிர்கொள்வதாகவும் முறையிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பாளரில்லாமல் திண்டாடுகின்ற நிலைமை, பொலிஸ் அதிகாரிகள் சாட்சியமளிக்க நீதிமன்றுக்கு வரத்தவறுகின்ற நிலைமை போன்ற பல்வேறு தடைகள் காரணமாக வழக்கு விசாரணைகள் மிக நீண்டகாலத்திற்கு இழுத்தடிக்கப்படுகின்ற போக்குகளே தொடர்ந்தும் இடம்பெறுவதாக தமிழ் அரசியல் கைதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
நியூமகசின் சிறைச்சாலையில் மாத்திரம் தற்போது 60 தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கடந்த ஐந்து வருடகாலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களாவர். இவர்களில் 14 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.இவர்களில் மூவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர். ஏனையோரில் பலருக்கு 50 வருடகாலம், 70 வருட காலம் என்றும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனைவிட இவர்களில் 20 பேருக்கு ஐந்து வருடங்கள் கடந்த நிலையிலும் வழக்குத் தொடரப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது. 14 நாட்களுக்கு ஒருமுறை சிறைச்சாலைக்கு வரும் மஜிஸ்ரேட் நீதிபதி அரசியல்கைதிகளைப் பார்வையிட்டு பயங்கரவாதத் தடுப்புச் தடைச் சட்டத்தை நீடித்துவிட்டுச் செல்வார் என்றும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.
நியூமகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் கடந்த 18 வருடகாலமாக சிறை வாழ்க்கையையே அனுபவித்துக்கொண்டிருக்கிறார். ஏனையோரில் பலர் பத்து வருடம், பதினைந்து வருடம் என்று தமது வாழ்க்கையைச் சிறைக்குள் முடக்கிக் கொண்டவர்களும் அடங்குவர். கடந்த ஆறு வருடகாலமாக தமது உறவுகள் எவரும் தன்னைச் சந்திக்கவில்லையென்று தெரிவித்துள்ளார் பத்து வருட காலமாக சிறை வாழ்க்கையை அனுபவிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியொருவர்.கடிதத் தொடர்புகள் மாத்திரமே எமக்கும் எமது உறவுகளுக்குமிடையிலான பிணைப்பை ஏற்படுத்துகின்றது. ஏனைய எல்லாவற்றிலுமிருந்து நாம் விடுபட்டுத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என்ற பெரும் கவலையைத் தவிர வேறு எதுவும் சிறைக் கூடங்களுக்குள் அடைபட்டுப்போயுள்ள தமிழ் அரசியல் கைதிகளிடமில்லை.
நீண்ட சுவர்கள், தடித்த இரும்புக் கம்பிகள் இவற்றுக்குள்ளேயே எமது வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. எந்தவொரு அடிப்படை வசதிகளுமில்லை. ஆரோக்கியமில்லாத எம்மை உயிருடன் வைத்திருக்க வேண்டுமென்பதற்காக வழங்கப்படும் உணவை விரும்பியோ விரும்பாமலோ மென்று கொண்டிருக்கின்றோம் என்கின்றனர் நியூமகசின் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள்.
1983 ஜுலை 24,25 ஆம் திகதிகளில் தமிழினத்தின் விடுதலைக்காக தம்மை முழுமையாக அர்ப்பணித்த தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன், சிவபாதம் மாஸ்டர் உட்பட 56 போராளிகளைப் பலியெடுத்த வெலிக்கடைச்சிறைப் படுகொலைகள் நிகழ்ந்நாள் தமிழினத்தின் துயர்மிகுந்த நாளாகும். தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்), ஈழப்புரட்சிகர அமைப்பு (ஈரோஸ்), தமிழ் மக்கள் பாதுகாப்பு பேரவை மற்றும் காந்தியம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட 56 தியாகிகளை தமிழினம் வெலிக்கடைச் சிறையில் இழந்தது.இவ்வாறே பண்டாரவளை பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 தமிழ் இளைஞர்கள் காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். ஆனால் அந்தச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
காலையில் இரு மணி நேரமும் மாலையில் இருமணிநேரமும் மாத்திரமே நீண்ட சுவர்களுக்கு இடையே வெளித்தெரியும் உலகைப் பார்க்கும் தமிழ் அரசியல் கைதிகள் தினமும் 20 மணிநேரம் கனத்த இரும்புக்கம்பிகளுக்கு மத்தியில் காலம் கடத்தும் இந்தக் கைதிகளின் வாழ்வில் ஒளி பிறக்கப்போவது எப்போது?
முகிலன் ஈழநேசன்
Source:http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_8081.html
Comments
Post a Comment