ஐ.நா. ஏதிலிகள் பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள எந்தவொரு நாட்டிற்கும் சென்று வாழத் தயார்: இந்தோனேஷிய ஈழ ஏதிலிகளின் சார்பில் அலெக்ஸ்

ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தின் ஏதிலிகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்ட எந்தவொரு நாட்டிற்கும் சென்று வாழ்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம் என்று இந்தோனேஷியாவின் மெராக் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழ ஏதிலிகளின் சார்பாக அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
உப்புத் தண்ணீருக்கும் கடற்காற்றுக்கும் இடையில் நிர்க்கதியான நிலையிலுள்ள ஏதிலிகளுக்கு அவ்வாறான நாடொன்றில் புகலிடம் வழங்குவதற்கான உதவிகளை மனிதாபிமானத்தின் பெயரால் சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் இருந்து மலேசியா ஊடாக படகில் சென்று கொண்டிருந்தபோது இந்தோனேஷிய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளின் நிலைவரம் தொடர்பாக மெராக் துறைமுகத்தில் இருந்து நேற்று பிற்பகல் தொலைபேசியூடாக கருத்துத் தெரிவிக்கும் போதே ஏதிலிகளின் சார்பில் அலெக்ஸ் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இனியாவது நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காகவே எமது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் இவ்வாறான ஆபத்தான கடற்பயணமொன்றை இலங்கையில் இருந்து நாம் ஆரம்பித்தோம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளான 258 பேர் எம்மோடு புறப்பட்டு வந்தனர்.

முதலில் மலேசியாவுக்கு சென்று அங்கிருந்து புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடொன்றிற்கு சென்று தஞ்சம் புகுவதே எமது நோக்கமாக இருந்தது. பல நாட்கள் கடற்பயணத்தின் பின்னர் படகு மலேசியாவைச் சென்றடைந்தபோதும், நாம் முன்னர் திட்டமிட்டிருந்ததைப்போல் புலம்பெயர் நாடொன்றிற்கு செல்வதில் பல சிக்கல்கள், தடங்கல்கள் ஏற்பட்டன.

இந்நிலையில் மலேசியாவில் தொடர்ந்து தங்கியிருத்தல் உசிதமானதல்ல எனக் கருதிய நாம் தென்கிழக்கு நோக்கி கடற்பயணத்தை தொடர்ந்தோம். அவ்வேளையிலேயே இந்தோனேஷிய கரையோர பாதுகாப்புப் பிரிவினரால் கடந்த 11ஆம் திகதி தடுத்து நிறுத்தப்பட்டதுடன் மெராக் துறைமுகத்திற்கும் கொண்டு வரப்பட்டோம்.

32 குழந்தைகளும் 27 பெண்களும் இந்த 17 நாட்களும் கடலிலேயே எமது பொழுதுகள் கழிந்துள்ளன. உப்புத் தண்ணீருக்கும் கடற்காற்றுக்கும் இடையில் இருந்து கொண்டு மனிதாபிமான அடிப்படையிலான ஏதிலி அந்தஸ்துடனான வாழ்க்கையை பெற்றுத்தருமாறு போராடி வருகின்றோம்.

உண்ணாவிரதம், கோஷங்கள், பேச்சுவார்த்தைகள் என்று எல்லா வழிகளிலும் எமது கோரிக்கைகளை முன்வைத்தாயிற்று. ஆயினும் எமக்கு இன்னும் ஒரு முழுமையான, ஆறுதல் கொள்ளும் விதத்திலான தீர்வு கிடைத்தபாடில்லை.

இந்தப்படகில் 32 குழந்தைகளும் 27 பெண்களும் 199 ஆண்களும் இருந்தனர்.

இவர்களில் 4 பேர் மெராக் துறைமுகத்தில் வைத்து இறங்கிச் சென்று குடிவரவு அதிகாரிகளிடம் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு என்னவாயிற்று என்று சரியாக தெரியவில்லை.
அவர்கள் எவ்வாறு எமக்குத் தெரியாமல் இறங்கிச் சென்றார்கள் என்பதும் விளங்கவில்லை. எவ்வாறிருந்தபோதும், இந்தப்படகில் இருந்து எவராது இறங்கிச் செல்வதற்கு விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயமாக தடுத்து வைத்திருப்பதற்கு நாம் விரும்பவில்லை.

உடல்நிலை பாதிப்பு இப்போது படகில் இருக்கும் 250 பேருக்கும் ஐ.ஓ.எம். எனப்படும் குடியகல்வுக்கான சர்வதேச அமைப்பினரே தண்ணீர், உணவுப் பொருட்கள் மற்றும் அவசர உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதும், பல நாட்களாக நாம் கடலிலேயே இருப்பதால் குழந்தைகள், பெண்களென பலரது உடல் நிலை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எம்மோடு இருக்கும் 60 வயதை தாண்டிய 4 முதியோரும் இப்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையைச் சொன்னால் என்னால் கூட இன்னும் எத்தனை நாட்களுக்கு பேச முடியும் என்று தெரியவில்லை. அந்தளவுக்கு படகில் இருப்பவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.

ஒரேயொரு நிபந்தனை நாம் உலகத்தின் எந்த மூலையில் உள்ள ஏதாவது ஒரு நாட்டிலேனும் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழவே விரும்புகிறோம். ஆனால் அந்நாடு ஐ.நா.வின் ஏதிலிகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்ட நாடாக இருக்கவேண்டும் என்பதே எமது ஒரேயொரு நிபந்தனை.

அந்த வகையிலேயே இந்தோனேஷியாவுக்கும் சென்று வாழ்வதற்கு நாம் அஞ்சுகின்றோம். ஐ.நா.வின் ஏதிலிகள் தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்ட எந்தவொரு நாட்டிற்கு அனுப்பிவைத்தாலும் அங்கு செல்வதற்கு நாம் தயாராக இருக்கிறோம். அவ்வாறான நாடொன்றில் ஏதிலி அந்தஸ்துடன் பாதுகாப்பாக வாழ முடியும் என திடமாக நம்புகிறோம்.

நம்பிக்கை இது தொடர்பாக இந்தோனேஷியாவின் தொழிலாளர் கட்சிப் பிரதிநிதிகளிடம் எடுத்துக் கூறியுள்ளதுடன் ஐ.நா. ஏதிலிகள் பேரவை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவகாசத்தை பெற்றுத் தருமாறும் கோரியுள்ளோம். மறுபுறத்தில் இது குறித்து சட்ட ஆலோசனைகளையும் பெற்று வருகின்றோம். இந்நிலையில், இந்தோனோஷிய அரசாங்க·ம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதாகவே தோன்றுகின்றது.

இவ்வாறான ஒரு பின்னணியில், எமக்கு ஆறுதலளிக்கும் வகையில் பாதுகாப்புமிக்க நாடொன்றில் வாழ்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என நாம் திடமாக நம்புகிறோம்.

இதேவேளை, கிறிஸ்மஸ் தீவிற்கு செல்வதற்கு அனுமதியளிக்காவிட்டால் படகை தீயிட்டுக் கொளுத்துவோம் என நாம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகியுள்ளதாக அறிகிறோம். உண்மையில், அவ்வாறான அச்சுறுத்தல் எதனையும் நாம் விடுக்கவில்லை.

துன்பங்களையும் இழப்புக்களையுமே வாழ்வில் சந்தித்த இலங்கைத் தமிழ் ஏதிலிகளாகிய நாம் போக்கிடமின்றிய ஒரு நிர்க்கதியான சூழ்நிலையின் காரணமாக இன்னும் நொந்து போயுள்ளோம்.

எனவே, ஐ.நா.வின் ஏதிலிகள் பிரகடனத்தில் கையொப்பமிட்ட ஏதாவதொரு நாட்டிற்கு எம்மை அனுப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று மனிதாபிமானத்தின் பெயரால் சர்வதேசத்தை வேண்டி நிற்கின்றோம் என்றார்.
Source:http://www.meenagam.org/?p=14496#more-14496

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire