சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் தொடர்பான வழக்கு: சி.பி.ஐ. வழக்கில் பின்னடைவு ஏன்?

திருவொற்றியூர், அக். 25: பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தரப்பில் உறுதியாக நம்பப்படும் சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் தொடர்பான வழக்கு ஏதோ காரணத்துக்காக தாமதம் செய்யப்படுகிறது என்ற சந்தேகம் அதிகார வட்டாரத்தில் எழுந்துள்ளது.

சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் கே.சுரேஷ் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் என்ன காரணத்துக்காக பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

வழக்குப் பதிவு செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகியும் இதுவரை கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் கூட எடுக்க முடியாமல் இருப்பதற்கு அரசியல் தலையீடு காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சென்னைத் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.
இதில் ரூ 2.36 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனை நடத்தியதில் மேலும் 5 கிலோ தங்கம், ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின.

ஜென் ஜார்ஜியோ என்ற கப்பலை விதிமுறைகளுக்கு மாறாக சென்னை துறைமுகத்திற்குள் வர அனுமதி அளித்த வகையில் துறைமுக நிர்வாகத்துக்கு ரூ.20 கோடி வரை நஷ்டத்தை சுரேஷ் ஏற்படுத்தினார் எனக் கூறி சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.
துறைமுக தளங்கள் ஒதுக்கீடு, சேது சமுத்திர திட்டக் குளறுபடி, 125-வது ஆண்டு விழா கொண்டாட்டம், நிலக்கரியைக் கையாள "கன்வேயர்' அமைத்ததில் முறைகேடு எனப் பல புகார்கள் கூறப்பட்டன.

இதில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், "அரசியல் அதிகார மைய'த்தில் இருப்பவர்கள் எனவும் முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரும் மொத்தமாகச் சிக்குவார்கள் என அனைத்துத் தரப்பினரும் உறுதியாக நம்பினர்.

ஆனால் சிபிஐ தரப்பில் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என துறைமுகத் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
வெளிப்படையான ஆதாரங்கள்: சுரேஷ் வீட்டில் சோதனை நடத்தியபோது தங்க பிஸ்கெட், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், ரொக்கப் பணம், வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன என்று கூறப்பட்டது.

வருமான வரித்துறையில் அவர் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி அவருடைய ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம்தான். சம்பளப் பணம் வரவு வைக்கப்பட்ட வங்கியில் இருந்து சம்பளத் தொகையை சிறிது கூட எடுக்காமல் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

துறைமுக பொறுப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட கடந்த ஜூன் மாதமே சென்னை கொட்டிவாக்கத்தில் ரூ.5 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள வீட்டு மனையைத் தனது மனைவி கீதாவுடன் சேர்ந்து சுரேஷ் வாங்கியுள்ளார்.
இதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மட்டும் ரூ.12 லட்சம் ரொக்கமாக சுரேஷ் செலுத்தியது எனப் பல ஆதாரங்கள் இருந்ததால், ஓரிரு நாளில் சுரேஷ் கைது செய்யப்படுவார் என சி.பி.ஐ. தரப்பில் அப்போது கூறப்பட்டது.
ஆனால், இதில் தொடர் நடவடிக்கை ஏதும் இல்லாததன் பின்னணி குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்கிறார் துறைமுகக் கழக ஊழியர் ஒருவர்.

அரசியல் தலையீடு காரணமா?

மத்தியப் பிரதேச "கேடர்' ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுரேஷ், சென்னை துறைமுகத் தலைவராக முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு கப்பல் துறையில் இருந்த செல்வாக்கின் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவைகளுக்கும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றார்.

சுரேஷ் இப்படி பலமானவராக மாறியதற்கு அரசியல் செல்வாக்கே காரணம் என அப்போது கூறப்பட்டது. அதே அரசியல் செல்வாக்குதான் சி.பி.ஐ வழக்கு, கைது நடவடிக்கைகளில் இருந்தும் அவரை இப்போது காப்பாற்றி வருவதாகத் தெரிகிறது என்று துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை தொடரும்:
சுரேஷ் மீதான வழக்கு குறித்து சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு: சுரேஷைக் கைது செய்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் அவர் மீதும் முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள், இதர தரப்பினர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடைய சுரேஷ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம், எவ்வித குறுக்கீடுகளும் எங்களைப் பாதிக்காது என சி.பி.ஐ. தரப்பில் கருத்து தெரிவித்தனர்.

துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாக இருந்தால், அந்த வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? சிபிஐ விசாரிக்கும் வழக்கில் துறை விசாரணை என்பது சந்தேகத்தை அதிகரிக்கிறது என்கிறது துறைமுக வட்டாரம்.

Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=145149&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=சி.பி.ஐ. வழக்கில் பின்னடைவு ஏன்?

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire