Wednesday, September 16, 2009

சுயநலத்திற்காக ஒரு இன அழிப்பு



இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனை பேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவு ஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமது உடன் பிறப்புக்களான தமிழர்களையே.காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொண்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இன விரோதங்களையுமே.இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்ப்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ, பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வட இந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவ குலத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததால் சிங்கள இனம் உருவானது என்பது ஒரு கதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்ட கறுப்பும் குள்ளமுமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பது நம்பக் கூடியதாக இருக்கிறதா? தவித்த வாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?
மதமாற்றங்கள்
தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒரு குரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது "மானைத் தொடரும் மன்னரே மதியைத் தொடர்வீராக" இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்த மதத்தைத் தழுவிக் கொண்டார்கள் என்பது தான் உண்மை வரலாறு.
புத்தமதமானது சாம்ராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப் பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒரு மதம் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்த மதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல பௌத்த மதமும் வந்தேறியதே.சுமார் 13 ஆம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் தொற்று நோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்ப்பாணத்தில் குடியேற்றினான். இதனால்தான் யாழ்ப்பாணப் பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சில வேளை மலையாளிகள் பேசுவது போல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள்தான். முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்த காப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்னியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பல பகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பல மதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ் மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.யாழ்ப்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித்திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வழக்கம். அங்கே ஒரு கற்தூண் வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல் வளைவு வைக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமதத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம் சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார். அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணிமேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளம் எனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்திருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்து மதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஷ்ணவம், புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக புத்த மத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயக் குரவர்கள்தான் மீண்டும் சைவ சமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது வரலாறு.இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மத வழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ, ஹரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாகவே வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத் தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம் பெயர்ந்து இந்தியாவின் கீழ்ப்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்து வெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.மத வருகைகளாலும் அரசர்களின் மத மாற்றங்களாலும் மொழியில் பலமாற்றங்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிட மொழிகளான கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு. தமிழ்த்தாய் வணக்கப் பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துளுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 சதவிகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40 சதவிகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இது போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்த மதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும்தான் இருந்தது. பாழி மொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்து விட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒரு நாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்திருந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்களவர்கள் வட இந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதி குடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒரு நிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்பட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.
இலங்கையின் கடைசி மன்னன்
இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னனுமான, விக்கிரமராஜசிங்கன் தமிழன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.இயக்கர் – நாகர்
மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர், நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத்த உறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஷ்டர்கள் எனத் துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக் கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.இதே போன்று தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சில சான்றுகளை நாம் முன் வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதியில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலி என்றொரு கிராமம் உண்டு. உணவு முறை கலாச்சரப் பின்ணணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது.
பூகோளமாற்றம்
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக் கூடிய தரைவழிப் பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போது இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.பூகோள ரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப் படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோள ரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை, சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லி செனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா..!! இல்லையென்று கூறமுடியுமா?இயக்கர் நாகர் என்ற இரு வேறுபட்ட குழுக்கள் சாதி வழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப் பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக் கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா- இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஒரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதய சுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.காலங்காலமாக பேச்சு வார்த்தை, வட்ட மேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அளிக்கவில்லை, அளிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக் குரோதங்களை மனங்களில் வளர்த்து விட்டு ஒரே நாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக் கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரே நாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன் வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முழக்கமிடும் இராஜபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்த மத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்த நூலாக இருக்க முடியும்? புத்தனின் பல்லைப் பிடுங்கி வந்தவர்களா தமிழர்களை விடப் போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இராஜபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவ முடியும். இது எமக்குக் காட்டும் சமிக்ஞையானது தமிழ் பேசும் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.


இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரச தலைவர் தன் அரசியல் வாழ்வைத் தக்க வைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எளிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும், கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையோடிக் கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம் போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்து விட்டது. அடுத்த தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.புலிகளை ஓரங்கட்டிய பின் சிங்கள மக்களிடையே எழவிருக்கும் வெகு ஜனப் போராட்டத்துக்கு முகம் கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத் திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்ட திருத்தங்கள் என்ற குணங்குறிகளைக் காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழவிருக்கும் புதிய ஆயுதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.தமிழ் மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள், பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசால் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக் கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.சரித்திர ரீதியாகவும், விஞ்ஞான ஆய்வு ரீதியாகவும், தர்க்க ரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வுகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாம் வழிமுறையை மதமாகக் கொண்டுள்ளனர்.இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.




No comments:

Post a Comment

ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal

Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...