அறிஞர் அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்



கருணாநிதிக்கு “அண்ணா விருது“ வழங்கப்படுவதையொட்டி, அண்ணா கருணாநிதிக்கு எழுதிய கடிதம்.

அன்புள்ள தம்பி,
செப்டம்பர் 26ம் நாள், என் பெயரில் உனக்கு விருது வழங்கப்படுவதாக செய்தியறிந்தேன். இந்த நேரத்தில், இவ்விருது உனக்கு தகுதியானதுதானா என்ற எண்ணம் என் மனதில் உதிப்பதை உதாசீனப்படுத்த இயலவில்லை.
தம்பி தம்பி என்று வாயார உன்னை நானழைத்தபோதெல்லாம், இத்தம்பி, எனது கொள்கைகளையும், லட்சியங்களையும், தரணியெல்லாம், எடுத்துச் செல்வான், தமிழ்கூறும் நல்லுலகின் புகழ் பரப்புவான் என்றெண்ணியதுண்டு. ஆனால், தமிழ்கூறும் நல்லுலகம் உன் குடும்பம் மட்டுமே என கருதுவாய் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று நான் சொன்னதை, உன் குடும்பம் மந்திரி பதவிகளைப் பெற்றதும் “வடக்கு வழங்குகிறது, தெற்கு செழிக்கிறது“ என்று நீ மாற்றிவிட்டாய். எந்த காங்கிரஸ் கட்சியை நாம் ஒழித்து, அழித்து, பூண்டோடு அற்றுப் போகச் செய்யவேண்டும் என்று நாம் பாடுபட்டு 67ல் ஆட்சிக்கு வந்தோமோ, அதே காங்கிரஸ் கட்சியின் தலைவியை “தியாகத் திருவிளக்கு“ என்று பட்டமளித்து, பிணமாயிருந்த காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டி, அழகு பார்க்கிறாய்.
வரலாறை திரும்பிப் பார் தம்பி ! என் மறைவுக்குப் பின், என் உயிரினும் மேலான அன்பு இளவல் “நாவலர்“ நெடுஞ்செழியன் முதல்வராக பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மலையாள மன்னவனும் மக்களை வென்றவனுமான எம்ஜிஆரின் உதவியுடன், நாவலரைத் தோற்கடித்து, நீ முதல்வர் பதவியை நயவஞ்சகமாக பிடித்ததை நான் அறிவேன்.

ஆட்சியைப் பிடித்தவுடன், எந்த எம்ஜிஆரால் நீ பதவிக்கு வந்தாயோ, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீ நீக்கியதையும், அதற்காக தமிழக மக்கள் உன்னை 13 ஆண்டுகள் தண்டித்ததையும் வரலாறு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

67ல் ஆட்சிக்கு வரும் வரையில், பல போராட்டங்களை நடத்தியும், சினிமாவுக்கு வசனம் எழுதியும், தமிழக மக்களை நாம் ஏமாற்றி வந்தோம். ஆனால், நான் தொடங்கி வைத்ததை இத்தனை ஆண்டுகள் நீ திறம்பட நடத்துவாய் என நான் எதிர்ப்பார்க்க வில்லை.
எனது ஆட்சியில் “பொதுப் பணித்துறை“ அமைச்சராக நீ இருந்தபொழுது, “பொதுப்பணியை“ கவனிக்காமல், “கலைப்பணி“ யில் ஈடுபட்டு, “காகிதப்பூ“ கதாநாயகியை கர்ப்பிணியாக்கி நான் சொன்னதால், இரண்டாவதாக மணம் புரிந்ததையும் நான் அறிவேன்.
பெரியார் பாசறையிலே என்னோடு சேர்ந்து நீயும் பயின்றவன் என்பதால், ஓரளவாவது பகுத்தறிவோடு இருப்பாய் என எதிர்ப்பார்தேன். ஆனால், மதவாத பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்து, பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு மகுடம் சூட்டுவதில், பக்கத் துணையாய் இருப்பாய் என்பதை யார்தான் எதிர்ப்பார்த்திருப்பார் ? சோதிடத்தில் நம்பிக்கை கொண்டு, அதனால் மஞ்சள் துண்டு அணிந்து, “மஞ்சள் துண்டு மடாதிபதி“யாய் மாறிய உன்னை பெரியார் மன்னிக்க மாட்டார்.

“ஒன்றே குலம், ஒருவனே தேவன்“ என்று நான் சமரசம் செய்தால், உன் அமைச்சர்களை தீ மிதிக்கும் அளவுக்கு வளர்த்துவிட்டுள்ளாய்.
இக்கட்சியை உருவாக்கியதில், மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் எல்லாரும், இப்போது மறைந்து போய், அவர்களின் குடும்பங்கள் வறிய நிலையில் வாடிக்கொண்டிருக்கையில், உன் குடும்பம், உலக செல்வந்தர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருப்பது, காலத்தின் கோலமே !
மற்ற எல்லாவற்றையும் கூட மன்னித்து விடலாம் தம்பி.... இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில், நீ ஆடிய நாடகமும், லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்து கொண்டிருக்கையில், பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக, காங்கிரஸ் காலில் விழுந்து கிடந்ததை நான் மன்னித்தாலும் காலம் மன்னிக்காது. “தமிழர்களை காப்பாற்றுங்கள் தாயே“ என்று அழுது நடித்த நாடகம் தமிழர்களிடத்தில் எடுபடவில்லை. இத்தனை தமிழர்களின் உயிர் போனதற்கு நீதான் காரணம் என்று வரலாறு உன் பெயரை பதிவு செய்யும்.
ஆகையால், என் பெயரால், உனக்கு வழங்கப் படும் விருதுக்கு நீ எள் முனையளவும் தகுதி படைத்தவன் கிடையாது.

Source: http://www.savukku.blogspot.com/

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire