Saturday, September 19, 2009

கலைஞர் அவர்களே, நாங்கள் உங்களை மறந்துவிடவே விரும்புகின்றோம்!











இந்தியாவின் நெறிப்படுத்தலுடனும், பல்வேறு உலக நாடுகளின் யுத்த வளங்களுடனும் சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்பு யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதும், அந்த யுத்த களத்திலிருந்து தப்பிப் பிழைத்த தமிழீழ மக்களின் அவலங்கள் 120 நாட்கள் கடந்த நிலையிலும் தீர்ந்தபாடில்லை.
முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்த அவலங்களிலிருந்து மீள வகையின்றித் தவிக்கும் 300,000 தமிழர்கள் இன்று வதை முகாம்களுக்குள் வைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறார்கள். வந்தோரை வாழவைத்து, மார் தட்டி நின்ற வன்னி மண்ணின் மக்கள் இன்று ஒரு வேளை சோற்றுக்கு எதிரிகளிடமே தட்டேந்தி நிற்கும் பரிதாபக் காட்சி உலக நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி வருகின்றது.
ஈழத் தமிழினம் நடந்து முடிந்த அவலங்களை மட்டுமல்ல, நடந்தேறிய துரோகங்களையும் மறந்துவிடத்தான் முயற்சிக்கிறார்கள். ஆனாலும் அவர்களால் எதையுமே மறக்க முடியாதபடி மீண்டும் மீண்டு நோகடிக்கப்படுகிறார்கள். நம்பிக்கையற்ற எதிர்காலத்தை நோக்கி நாட்களைக் கழிக்கின்றார்கள்.
புலம்பெயர் தமிழர்கள், வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, தினமும் அழிக்கப்படும் தம் உறவுகளை எண்ணி வேதனையுடன் கண்ணீர்ப் போராட்டம் நிகழ்த்துகிறார்கள். மனிதாபிமானம் மிக்க மேற்குலக நாடுகளிடம் தென்படும் மாற்றங்கள் மட்டுமே அவர்களுக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது.
ஈழத் தமிழர்களின் இன்னொரு சோகம் அவ்வப்போது கலைஞர் கருணாநிதி எழுதும் கடிதங்கள். இறுதி வாய் சொட்டு நீருக்கும் வழியின்றி தமிழகம் நோக்கி அவலக் குரல் எழுப்பியவாறு அந்த கடற்கரை மண்ணில் வீழ்ந்து மடிந்த போதும் கலைஞர் கடிதம்தான் எழுதிக்கொண்டிருந்தார். தமிழின அழிப்பின் இறுதி நாட்களில் சிங்கள தேசத்தின் தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்கள் இரத்தம் சிந்திச் சாய்ந்த வேளையிலும், நெருப்பில் கருகி வீழ்ந்த வேளையிலும் கலைஞர் கடிதம் எழுதிக்கொண்டுதான் இருந்தார்.

ஈழத் தமிழர்களின் சாபக்கேடு, தமிழகத்தில் ஈரமுள்ள ஒரு தலைவன் அப்போது இருக்கவில்லை. தமிழகத்து முதல்வர் கதிரையில் கருணாநிதியைத் தவிர யார் இருந்தாலும் பாதித் தமிழர்களாவது காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மீதித் தமிழர்கள் சிறையில் வதைபட்டிருக்க மாட்டார்கள் என்பதுதான் ஈழத் தமிழர்களின் ஆதங்கம்.

போனது போகட்டும், சிங்கள தேசத்திற்கு நேசமான ஒரு சக்தி தமிழகத்தை ஆட்சி செய்கின்றது என்று எம்மை நாமே நொந்து கொண்டு, வர இருக்கும் காலத்தை நம்பிக்கையோடு திசை மாற்றம் செய்திருப்போம். அதையும் மீறி, அடிக்கடி கலைஞர் எழுதும் கடிதங்கள் எம்மைக் கோபம் கொள்ள வைக்கின்றது.
‘நன்மை செய்யப் பிறந்த நீ, நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இரு’ என்ற வசனம் நாங்கள் படித்ததுதான். ஆனால், கலைஞருக்கு இது தெரியுமோ அறியோம். வரலாற்றில் யூதாஸ் காசுக்காக தேவமகன் யேசுவைக் காட்டிக் கொடுத்தான். எட்டப்பன் பொறாமையால் கட்டப்பொம்மனைக் காட்டிக்கொடுத்தான். காக்கை வன்னியன் வெள்ளையர்களிடம் விலை போனதால் பண்டாரவன்னியனைக் காட்டிக் கொடுத்தான். எம் தலைவனை யார் காட்டிக் கொடுத்தான்? விடுதலைப் புலிகளை யார் விலை பேசி விற்றார்கள்? தமிழீழ மக்களின் அழிவுக்கு யார் துணை நின்றார்கள்?
குடும்பத்து உறவுகளின் சொகுசு வாழ்க்கைக்கு மந்திரிப் பதவி யாசித்து டெல்லி சென்ற கலைஞர், அதற்காக சோனியாவின் உறவையும் அறுத்தெறியத் துணிந்தார். மந்திரிப் பதவிகள் வீடு தேடியே வந்தது. பாவிகள்… ஈழத் தமிழர்கள் கொலைக்களத்தில் நின்று அவலக் குரல் எழுப்பிய போதும் பொய்யாகக் கூடக் கோபம் காட்டவில்லையே.
தமிழகத்தில் முத்துக்குமாரன் மூட்டிய தீ, தன் சொந்தங்களுக்கும் சொத்துக்கும் சேதத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற ஆதங்கத்தில் மரினா கடற்கரையில் சினிமா காட்டியதற்கு மேலாக எதையுமே செய்யவில்லையே…
வான் குண்டு மழையில் ஈழத் தமிழர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலையுண்டு போகையிலே, காதல் கதை எழுதி ‘உழியின் ஓசை’ படைத்தாய்… தப்பிப்பிழைத்த தமிழீழ மக்கள் வதை முகாம்களில் சிக்கிச் சிதைக்கப்படுகையிலே ‘பெண் சிங்கம்’ என்றொரு காதல் திரைப்படம்… இவ்வளது பெருந்துயர் ஈழத்தில் நடந்த வேளையிலும், எங்கள் தயரங்களை எழுத் உங்களுக்கு மனம் வரவில்லையே…
கலைஞர்கள் இதயம் மென்மையானது… சுற்றி நிகழும் துன்பங்கள் எல்லாம் அவனைச் சுட்டெரிக்கும் என்கிறார்களே… எங்கள் துயரம், கலைஞரே உங்களைத் தொட்டும் பார்க்கவில்லையே…! பாவிகள் நாங்கள் உங்கள் காலத்தில் வாழ்கிறோமே…! புலிகளின் வீரத்தால் பெருமையுடன் மார்தட்டி நின்ற தமிழர்கள், உங்கள் சுயநல வாழ்க்கையால் மனம் குன்றி நிற்கிறோம்.
நீங்கள் மனைவியார், துணைவியார் சகிதம் உங்கள் குடும்ப உறவுகளோடு இன்னமும் பல்லாண்டு வாழ மஞ்சள் விறத்துக்குச் செந்தமான கடவுளிடம் வேண்டுகின்றோம். பதவி சுகத்துடனும் பலகோடி சொத்துக்களுடனும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள் ஈழத் தமிழர்களுக்காகக் கடிதங்கள் எழுதி உங்கள் பொன்னான நேரங்களை வீணடிக்காதீர்கள். நீங்கள் எழுதும் கடிதங்களால் எங்கள் வேதனைகள் பெருகுகின்றது. கலைஞர் அவர்களே, நாங்கள் உங்களை மறந்துவிடவே விரும்புகின்றோம். மீண்டும் மீண்டும் உங்களை நினைக்க வைத்து எங்கள் வயிற்றெரிச்சலைப் பெற்றுக்கொள்ளாதீர்கள்.
சரித்திரம் வீரர்களையும், தியாகிகளையும், ஆற்றல் மிக்கவர்களையும் மட்டுமே வரலாறாய் பதிவு செய்யும். விடுதலைப் புலிகள் சரித்திரம் படைத்தவர்கள். வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் புகழ் நிலைத்தே இருக்கும். அது போதும் அவர்களது தியாகத்திற்கு.
:ஈழநாடு (பாரிஸ்) பத்திரிகையில் வெளியாகிய கட்டுரை

No comments:

Post a Comment

New Maersk Vessel Class To Enter Service

  A.P. Moller - Maersk (Maersk) has named the first vessel in a series of 17,480 TEU vessels equipped with dual-fuel methanol propulsion. Th...