ஈழம் – விடுதலைக்கான இறுதிக் கணக்கீடுகள்

Source: http://tamilthesiyam.blogspot.com/2009/09/blog-post_3378.html

மனிதர்கள் இதுவரை படைத்துள்ள அகிம்சைத் தத்துவங்கள், புரட்சிகர தத்துவங்கள், மனித நேயக்கோட்பாடுகள், உரிமை சாசனங்கள் இவை எவையாலுமே இதுவரை ஈழமக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
சிங்களத்தின் முன்னே காந்திய அகிம்சை தோற்றுள்ளது. மார்க்சியத்தின் மக்கள் வன்முறை தோற்றுள்ளது. சர்வதேச நெறிமுறைச் சட்டங்கள் அமைதியாகி உள்ளது.
இந்நிலைமைகள் இதுவரை நாம் பின்பற்றிவந்த அனைத்து சமூகக் கோட்பாடுகளையும் மீள்பரிசீலனை செய்ய கோருகிறது.
அவற்றில் நமது தோல்விக்கு காரணமானவற்றை உடனடியாக கைவிட வேண்டும். தேவையான புதிய எதார்த்தமான கோட்பாடுகளை நாம் தயக்கமின்றி ஏற்க வேண்டும். இவற்றிலிருந்து ஈழவிடுதலைப் போராட்டத்தின் தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வகுத்தாக வேண்டும்.
ஈழமும், காந்தியமும்மனித உறவுகளுக்கிடையே பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு காந்தியம் வைக்கும் வழிமுறை மனமாற்றம் என்பதாகும். தீங்கு செய்யும் ஒன்றை மனம் திருந்தும்படி செய்வதே இந்த மனமாற்ற அணுகுமுறை ஆகும். காந்தியத்தின் மனமாற்றத்துவம் சில எல்லைகள் வரை வெற்றியளிக்கும்தான். கணவன் மனைவி உறவுகள், சகோதர உறவுகள், நட்புறவுகள்… இதுபோன்ற நெருங்கிய உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒருவருக்கொருவர் மனம் மாறுதல் மூலம் காந்தியம் பிரச்சனைகளை தீர்க்க முடியும். ஆனால் மனமாற்றத்திற்கு உட்படுத்தப்பட முடியாத சாத்தியப்பாடு, தனி நபரிடமோ, சமூகப் பிரிவிடமோ உண்டு என்பதை காந்தியம் ஏற்றாக வேண்டும். அவ்விடங்களில் காந்தியம் பிரச்சனைகளை தீர்க்கும் சக்தியற்றதாகிவிடுகிறது.
காந்தியக் கண்ணோட்டதின்படி முதல் 30 ஆண்டுகால ஈழ அரசியல் போராட்டம் ஓர் அகிம்சை போராட்டமே. அதாவது சிங்களர்களின் அடக்கு முறைகளுக்கு திருப்பித் தாக்காத அவர்களது மனமாற்றத்தையே எதிர்பார்த்து, பெரிதும் நம்பி நடத்திய அகிம்சை போராட்டமே, உண்மையிலேயே செல்வநாயகம் காந்தியை விடவும் மிதவாதியாக இருந்தார் என்றே சொல்லலாம்.
காந்தியாவது விடுதலை கேட்டார். செல்வநாயகம் நீண்ட காலமாக வெறும் உரிமைகள் தான் கேட்டார். காந்தி சட்டத்தை மீறத்தான் போய் கொண்டிருக்கிறேன் என்று தண்டியாத்திரை நடத்தினார். வெள்ளையனே வெளியேறு என்றார். செல்வநாயகம் கோரிக்கைகள் ஒப்பந்தங்கள் என்று நடத்தினார். இவ்வளவு மிதமான அகிம்சை போராட்டங்கள் – ஈழவிடுதலையை அல்ல- உரிமைகளைத் தரும் மனமாற்றத்தைக் கூட சிங்களர்களிடம் ஏற்டுத்தவில்லை.
இதற்கு காந்தியம் என்ன சொல்கிறது? அதன்பிறகு வந்த ஆயுதப்போராட்டம் காந்தியத்திற்கு தவறானதாக இருக்கலாம். இப்போது அங்கு ஆயுதப்போராட்டம் இல்லை. இராஜபக்சேயையும், சிங்களர்களையும் தம்மால் மனம்மாற்றமுடியும் என்ற நம்பிக்கை கொண்டு காந்தியே அங்கு சென்று அகிம்சாவழியில் போராடினால் அவருக்கு உடல் சித்திரவதையும், மரணமும் உறுதி என்பதே இன்றைய ஈழ நிலை.
காந்திய மனமாற்ற வழிமுறை என்பது உயர்ந்த – நாகரீக -பண்பட்ட – மனிதநேயமிக்க மனித சமுதாயத்திற்கு எடுபட முடியும். சிங்கள இனம் அத்தகைய ஒரு இனமல்ல. எனவே சிங்களத்தின் முன் காந்தியம் முழுமையாக தோல்வியுற்றுள்ளது.
ஈழமும், மார்க்சியமும் தேசிய இனங்களுக்கான சுயநிர்ணய உரிமை என்ற மார்க்சிய கோட்பாடு – அவசியமற்ற பிரிவினைகளைத் தவிர்க்கவும், அவசியமான பிரிவினைகளை ஏற்கவும், உள்ளடக்கிய கோட்பாடு, இலங்கையில், சிங்கள மக்கள் மீதும், ஆட்சியாளர்கள் மீதும் நம்பிக்கை வைத்து 30 ஆண்டுகாலம் பிரிவினைக் கோரிக்கை எழுப்பப்படவில்லை. இது அவசியமற்ற பிரிவினைகளைத் தவிர்க்கச் சொல்லும் மார்க்சிய இயங்கியலுக்கு ஏற்பானதே.
இதற்கு மேலும் சிங்கள – தமிழ் மக்களின் இணைப்பு சாத்தியமில்லை என்ற நிலையில் 1977ல் தமிழ் மக்கள் பிரிவினைக்கு ஆதரவளித்தனர். இது அவசியமான பிரிவினையை ஏற்கும் மார்க்சிய இயங்கியலுக்கு ஏற்புடையது. ஈழவிடுதலைக்கான பெரும் அறவழி மக்கள் போராட்டங்கள் நடந்தன. மக்கள் போராட்டங்கள் மீது நம்பிக்கை வைக்கும் தத்துவமான மார்க்சியத்திற்கு இது ஏற்பானதே. அரசியல் போராட்டங்கள், அதன் உச்சகட்டத்தில் ஆயுதபோராட்டமாவதை மார்க்சியம் ஏற்கிறது. அதுவும் ஈழத்தில் நடந்தேறிவிட்டது. மார்க்சியத்தின் தேசிய இனச்சிக்கல் குறித்த முழு இயங்கியல் அணுகுமுறையும் ஈழத்தில் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு, முடிக்கப்பட்டு இறுதியில் சிங்கள இனத்தால் தோற்கடிக்கப்பட்டு நிற்கிறது.
இதற்கு மேலும் ஈழத்தில் என்னசெய்ய வேண்டும் என்று மார்க்சியம் சொல்கிறது?
மார்க்சியத்தின் தேசிய சுயநிர்ணய உரிமை குறித்த முக்கிய அணுகுமுறை ஒன்று ஈழத்திற்கு பொருத்திப் பார்க்கப்படவேண்டி உள்ளது.
அது ஈழமும், தேசிய சுயநிர்ணய உரிமையும் என்ற தலைப்பில் இக்கட்டுரையில் பின்னர் வருகிறது.
ஈழமும் முதலாளித்துவமும் சுயநலனே மனிதனின் இயக்குவிசை என்கிறது முதலாளித்துவம். இந்த சுயநலன் என்பது தனிமனித அளவினதாக இருக்கலாம். குடும்ப அளவினதாக இருக்கலாம். இன அளவினதாக இருக்கலாம். ஒரு நாட்டின் ஆட்சியாளர் அளவினதாக இருக்கலாம். உலக மேலாதிக்க அளவினதாக இருக்கலாம். இப்படித்தான் சுயநலனாய் மனிதர்கள் இயங்குகிறார்கள் என்று சொன்னால் அதை ஏற்கலாம். ஆனால் இப்படித்தான் இருக்க முடியும் இருக்க வேண்டும் என்று சொன்னால் விலங்கின நிலைக்கும், மனித நிலைக்கும் வேறுபாடற்றதாகும்.
இயக்குவிசை (சுயநலன்) என்ற எலும்புத்துண்டு இல்லாமல் தனிமனிதன் முதல் ஐ.நாவரை முதலாளித்துவத்தின் எந்த அரசியல் பொருளாதார அரங்கும் இயங்காது.
இவ்வாறு இல்லாமல் நீதி, நேர்மை, மனிதாபிமானம் என்பதெல்லாம் தனிமனித மனம் சார்ந்தவை, மனித தன்மைக்கு அப்பாற்பட்ட தெய்வீகத்தன்மையானவை, போற்றுதலுக்கு மட்டுமே உரியவை. இத்தகையவர்கள் ஆட்சியாளர்களில் இருப்பது அரிதிலும் அரிது.ஏனெனில் இவர்கள் அனைவரும் இயக்குவிசை கோட்பாட்டை கொண்டிருப்பவர்களே. இலங்கை என்ற சின்ன எலும்புத்துண்டிற்காக இந்தியா, சீனா மற்றும் பலநாடுகள் போட்டியிடுகின்றன. இந்தியசந்தை என்ற எலும்புத்துண்டை மனதில் கொண்டு உலகநாடுகள் இலங்கையை செல்லமாக வைத்துக்கொள்கின்றன.
சிங்களர்களைப் பாருங்கள், இலங்கை என்ற எலும்புத்துண்டை இந்தியாவுக்கும், சீனாவுக்கும் மாற்றி மாற்றி காட்டி பதிலுக்கு அனைத்து சர்வதேச சட்ட நெறிமுறைகளையும் மீறி இன அழிப்பை பலவடிவங்களில் தொடர்ந்து பயமில்லாமல் செய்கிறார்கள்.
எனவே முதலாளித்துவ உலக அமைப்பில் குறிப்பாக அதன் ஆட்சி அரங்குகளில் இருந்து நீங்கள் எதையாவது பெற முயன்றால் அதன் இயக்குவிசை கோட்பாடின்படியே பெற முடியும். ஈழப்போராட்டம் இயக்குவிசை கோட்பாட்டிற்கு மாறாக, உலக ஆட்சி அரங்குகளில் நீதி, தயவு, நேர்மை, நெறிமுறை, இவற்றை எதிர்பார்த்து வருகிறது. பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்ட அபாய நிமிடங்களில் கூட தங்களது இயக்கு விசை கோட்பாட்டைவிட்டு இறங்கி வரவில்லை உலக நாடுகள், ஏதோ ஒன்றை பெறுவது மட்டும் அல்ல, இருப்பில் உள்ள எதையும் இழந்துவிடக்கூடாது என்பதும் இயக்குவிசைக் கோட்பாடுதான்.
உலக ஆட்சி அரங்குகளை இந்த இயக்கு விசைக்கோட்பாட்டின் அடிப்படையில் அணுகி ஈழ விடுதலையின் சாத்தியப்பாட்டை நாம் பார்க்க வேண்டும்.
மாறாக இந்திய அரசின் ஆதரவை நம்பி, அமெரிக்க மேற்குலக ஆதரவை நம்பி ஈழவிடுதலை என்ற சிந்தனைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஈழமும் சிங்களமியமும்நாம் இதுவரை பார்த்த காந்தியமும், மார்கசியமும், முதலாளித்துவ நெறிமுறைகளும் தோற்றுப்போனது இந்த சிங்களமியத்திடம்தான். ஏனெனில் மேற்சொன்ன தத்துவங்கள், கோட்பாடுகள், அனைத்தும் நவீன மனித சமுதாயத்திற்காக வகுக்கப்பட்டவை. ஆனால் சிங்களமியம் நவீன மனித சமுதாய கோட்பாடுகளை கொண்டதல்ல. அது கி.மு.10,000 மோ, 20,000 மோ ஆண்டுகளுக்க முந்தையது.
ஓர் இனக்குழு, பிறிதொரு, இனக்குழுவை தாக்கி, உயிர்களை அழித்து அல்லது அங்கிருந்து விரட்டி அதன் நலன்களை தாமே அனுபவித்துக்கொள்ளும் ஆதிகால இனக்குழு கோட்பாடே சிங்களமியம் ஆகும்.
எனவே இத்தனை நவீன சமூக தத்துவங்களும், அவர்கள் ஏற்றுக்கொண்ட பௌத்தமும் கூட சிங்களமியத்திடம் தோற்றுப்போனதில் ஆச்சர்யத்திற்கு ஒன்றுமில்லை.ஈழமும், ஆயுதப்போராட்டமும்ஈழவிடுதலைக்கு ஆயுதப்போராட்டம் தொடர்ந்து அவசியமா? இல்லையா? சாத்தியமா? இல்லையா?என்பது இன்றைய முக்கிய கேள்வி. அவசியமா, இல்லையா? என்ற கேள்வியைப் பொறுத்தவரை ஈழ விடுதலைப்போராட்டத்திற்கான பங்களிப்பில் இதுவரை அரசியல் போராட்டதின் பங்கை விட ஆயுதப்போராட்டத்தின் பங்கு அதிகமாக இருந்து வந்துள்ளது.
இன்றைய நிலை ஆயுதப்போராட்டத்தின் பங்கை விட அரசியல் போராட்டத்தின் பங்கையே கூடுதலாக்கி இருக்கிறது. ஏனெனில் 80களில் ஈழப்போர் துவங்கிய போது உலகம் அதை எதிர்க்கவில்லை. இந்தியா உள்நோக்கோடுதான் என்றாலும் ஆதரித்தது. இப்போர் முடிவுக்கு வந்தபோது முழு உலகமும் அந்த ஆயுதப்போராட்டத்தை எதிர்த்து நின்றது.
இந்தியா மறைமுக தலைமையளித்தது. சர்வதேச அரசியல் போராட்டங்களின் தேவை மிகுந்தும், ஆயுதப்போராட்டத்தின் தேவை குறைந்தும் வருவதான நிலையை,ஆயுதப்போராட்டத்தின் அவசியம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாமா என்றால் கருதமுடியாது தான்.
ஏனெனில் சிங்கள அரசிற்கு அரசியல் போராட்டமெல்லாம் எருமை மாட்டில் மழை பெய்தமாதிரி.
ஆயுதப்போராட்டம் ஒன்று நடந்தால்தான் இலேசாகவாவது அசைந்து கொடுக்கும். இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிட்டது என்று உலகையே நம்பவைத்துவிடும். மேலும் ஆயுதப்போராட்டாம் இல்லாத நிலையில், ஈழப்போராட்டம் உயிர்ப்பான சர்வதேச பிரச்சனைகளிலிருந்து நீங்கிவிடும் வாய்ப்பும் உண்டு. எனவே இத்தகைய அவசியங்களுக்கான ஆயுதப்போராட்டத்திற்கு கடந்தகாலங்களைப் போல் தமிழ்பகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில்லை. மாறாக சர்வதேச பிரச்சாரமே நோக்கமானது.
அடுத்ததாக ஆயதப்போராட்டம் சாத்தியமா? இல்லையா? என்பதைப் பொறுத்தவரை தமிழீழ மக்களின் உணர்வுநிலை குறித்த எதார்த்த மதிப்பீடு இதற்கு மிக முக்கியமானதாகும். தளங்களைக் கைப்பற்றுவது அவசியமில்லை என்பதால் அதற்கு தேவையான பெரும்படையை கட்டுவதற்கான மக்களின் தயார்நிலை குறித்து கவலைப்படத் தேவையில்லை.
சிறு ஆயுதத் குழுக்களைக் கட்டுவதற்கான இளைஞர்களின் பங்களிப்பே அவசியமாய் உள்ளது. இது இளைஞர்கள் கோபமூட்டப்படும் செயல்களைச் சார்ந்தது. இதுவரை சிங்கள அரசு இனக்கொடுமைகளால் இளைஞர்களை யுத்தத்திற்கான தயார் நிலைக்கு தள்ளியது. இனியும் அதுவே அந்நிலைக்கு தள்ளும், ஒருவேளை ஆயுதப்போராட்டத்தை கட்ட முடியாவிட்டாலும் கூட அது ஈழத்தின் தோல்வியை நிர்ணயிக்கப்போவதில்லை.
ஏனெனில் இம்முறை வெற்றி கருநிலையில் இருப்பது சர்வதேச ஈழ அரசியல் போராட்டங்களிலேயே. ஆயுதப்போராட்டங்களால் அடைய முடியாமல் போகும் சர்வதேச வீச்சை அரசியல் போராட்டங்களால் ஈடுசெய்ய வேண்டிவரும்.ஆயுதக்குழுக்கள் கட்ட சாத்தியமிருப்பின் அது முற்றிலும் புதிய அமைப்பாகவே செயல்பட வேண்டும்.
புலிகளின் கடந்தகால தனிநபர் அழிப்பு செயல்பாடுகளை தாம் பின்பற்ற போவதில்லை என்று அது பகிரங்க அறிவிப்பு செய்ய வேண்டும். ஆயுதப்போராட்டத்திற்கான சமூகக்கரு இருக்கும்வரை அதை விடுதலைவரை காப்பாற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
இல்லையெனில் நாளை உலகத்தமிழர் போராட்டங்களினால், சர்வதேச தலையீடு ஏற்படுவதற்கு ஈழத்தில் சில ஆயுதக்கிளர்ச்சிகள் அவசியமாயின், அப்போது எதுவும் செய்ய முடியாமல் போய்விடும். மேலும், தலையீடு அவசியமில்லை, இலங்கையில் அமைதியே உள்ளது என்று சர்வதேச அரங்குகளில் மறுத்துப்பேச இலங்கைக்கு அது வசதியாகிவிடும்.
ஈழமும், தேசிய சுயநிர்ணய உரிமையும் தனது சுய நிர்ணய உரிமையை ஒரு தேசிய இனம் 3 வழிகளில் நடைமுறைப்படுத்தலாம்.
1. பிரிவு அவசியமற்ற நிலையில் சம்பந்தப்பட்ட தேசிய இனம் அல்லது இனங்களுடன் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தொடர்ந்து சேர்ந்து வாழ்வது.
2. பிரிவு அவசியமானநிலையில் பிரிந்து தனித்து அரசமைத்து வாழ்வது.
3. அவசியமான நிலைமைகளில், உலகின் எந்தஒரு 3வது தேசிய இனத்துடனும் கூட சுயநிர்ணய உரிமை அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் இணைந்து கொள்வது அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பிரிந்துகொள்வது.
இதுவே லெனின் வகுத்த சுயநிர்ணய உரிமை கோட்பாட்டின் சாரம். இம்மூன்று வழிகளில் எதை தேர்வு செய்வது என்பது சூழல் சார்ந்தது.
முதல் வழியைப் பொறுத்தவரை சிங்களர்கள் ஈழத்தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவில்லை என்பதால் சுயநிர்ணய உரிமையுடன் அவர்களோடு சேர்ந்து வாழ்வது என்ற சிந்தனைக்கே அவர்கள் இடம் கொடுக்கவில்லை.எனவே இது சாத்தியப்படும் சூழல் இல்லை.
2வது வழியான விடுதலைக்காக, ஈழத்தில் 30 ஆண்டுகால ஆயுதப்போராட்டம் ஒரு சுற்று நடத்தி கடும் பின்னடைவில் முடித்து வைக்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் 2வது வழியும் சாத்தியம் இல்லை என்று சிங்கள அரசு அறிவித்துக்கொண்டிருக்கிறது.
ஈழத்தமிழரை உரிமைகளற்ற ஒரு சிங்கள வழியை நோக்கி அது விரட்டி அடித்துக்கொண்டிருக்கிறது.புலம் பெயர்ந்த தமிழர் போராட்டங்களும், தமிழகத்தின் ஈழ ஆதரவு இயக்கங்களின் போராட்டங்களும் சிங்கள வழியை நோக்கிய விரைவு படுத்தலை தடுப்பதற்கே போதிய பலமின்றி இருக்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் வணங்கா மண் பொருட்களை மக்களிடம் சேர்க்கும் போராட்ட பலம் கூட இல்லை.இதற்கு கூட ஆதரவாக சர்வதேசிய சூழல் இல்லை.
எனவே இப்போது நம்மிடம் விடுதலைப்போராட்டத்திற்கான பலம் இல்லை என்பது உண்மை. இதை எப்படி பெறப்போகிறோம் என்ற கேள்வியில் இந்த இரண்டாவது வழி நின்று கொண்டிருக்கிறது.
3வது வழியான எந்த ஒரு தேசிய இனத்தோடும் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் இணைவது என்ற வழிமுறை, எதிர்கால உலகின் தேசிய இனங்களின் ஐக்கியத்திற்கான சனநாயக வழிமுறையாகும். ஈழநிலைமைகளுக்கு இவ்வழிமுறை மிக அவசியமானதாகவே எதிர்காலத்தில் இருக்கும். ஈழத்தின் சிறிய மக்கள் தொகை, நீண்ட சிங்கள-தமிழ் எல்லை, இன்னும் பல பத்தாண்டுகளுக்கு சனநாயகப்பட முடியாத கொடிய இனவாத அரசு, சர்வதேச நீதியைக்கூட தடுக்கும் மேலாதிக்க அண்டை அரசு, இவை போன்றவை 3வது வழியை தேர்வு செய்வதற்கான நிலைமைகளைக் கொண்டிருக்கின்றன.
இதன்படி ஈழம் தனக்கு பொருத்தமான பிறிதொரு நாட்டுடன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்து கொண்டு ஒரே நாடாகும். இது சுயநிர்ணய உரிமைக்கு பின் தீர்மானிக்கப்படும்.
இவ்வழிமுறையை இப்போதே அறிவிப்பதானது, உலகின் முன்னனி நாடுகள், தமக்கு ஒரு நாடு கிடைக்கும் வாய்ப்பை கருத்தில் கொண்டு தமிழ் இன விடுவிப்பை ஆதரிக்கத்தொடங்கலாம். இம்முனை ஈழவிடுதலைக்கான சர்வதேச அங்கீகாரத்தை தொடங்கி வைக்கலாம். எனவே இது குறித்து தமிழீழ அரசியல் வல்லுநர்கள் சர்வதேச அரசியல் அமைப்புச் சட்ட வல்லுனர்கள் ஒரு மேலான கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும். ஈழமும், இந்தியாவும் ஆரம்பம் முதலே இந்திய அணுகுமுறை என்பது ஒரு பிராந்திய வல்லாண்மை அணுகுமுறை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. தனது பிராந்திய நாடுகளின் அமைதியின்மையை அவர்களை பணிய வைக்க பயன்படுத்தி கொள்வது அவ்வளவுதான்.
எனவே இலங்கையில் அமைதியின்மை எப்போதுமே தொடரவேண்டும், இன ஒடுக்குமுறைதொடர வேண்டும் என்பது இலங்கை மீதான இந்திய தலையீட்டை அதிகப்படுத்திக்கொண்டே செல்ல அவசியமானது. இதனால் தான்படையெடுத்து சென்று போட்டு வந்த ராஜீவ்-செயவர்த்தனா ஒப்பந்தத்தில் உள்ள வடக்கு-கிழக்கு இணைப்பைக்கூட 22 ஆண்டுகளாக இந்தியா செய்யவில்லை.
வன்னிமக்களை மீளமைப்பது குறித்து இந்தியா பேசுவது அதன் உதடுகளோடு சம்பந்தப்பட்ட விசயம்தான். அது வணங்காமண் பொருட்களைக் கூட மக்களை சென்றடையச் செய்ய வைக்கவில்லை.
சிங்கள அரசின் கொடுமைகள் தொடர்ந்தால்தான் அதன்மீதான தலையீட்டிற்கு அது வசதியாக இருக்கும் என்பது இந்தியாவிற்கு தெரியும்.இந்நிலையில் இந்திய ஆதரவுடன் ஈழம் என்பது அரசியலற்ற அணுமுறை, ஈழநலனும், இந்திய நலனும் சந்திப்பதான ஒரு புள்ளி இப்போதைக்கு தெரிகிறதா?
அப்படி ஒரு புள்ளி வரலாம், வராமலும் போகலாம், இப்படியே சில, பல பத்தாண்டுகள் செல்லலாம்.ஆருடத்தை நம்பி எந்த விடுதலையும் இருக்க முடியாது. எனவே இப்படியொரு புள்ளியை சாத்தியப்படுத்தி கொண்டு வருவதுதான் நமது வேலையாக இருக்கமுடியுமே தவிர, அதற்கான காத்திருப்பு அல்ல,அதே நேரம் இந்தியாவின் ஏற்பு இல்லாமல் ஈழத்தை அடைய முடியாது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
இந்தியாவைப் பொறுத்தவரை ஈழ ஏற்பு என்பது 2 நிலைமைகளில் ஏற்படலாம்.
1. அதற்கான உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்குதல்களிலிருந்து வரவேண்டும்.
2. வேறு அரங்குகளில் ஏற்படும் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கிலிருந்து வரவேண்டும்.
இந்தியா குறித்த விசயத்தில் மேற்சொன்னவற்றை எப்படிச் செய்வது என்பது குறித்தே நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவை எதிர்பார்த்து ஈழம் என்பது, இந்தியா ஈழ இயக்கங்களை பயன்படுத்திக் கொள்வதாக இருக்க முடியுமே தவிர இந்தியாவைப் பயன்படுத்திக்கொள்வதாக இருக்காது.
இது கடந்தகால அனுபவமும் கூட. ஈழமும் தமிழகமும் தமிழகத்தில் 80களில் பெரும் எழுச்சியாக இருந்த ஈழ ஆதரவு தற்போது தேக்க நிலையிலேயே இருக்கிறது. ஈழ ஆதரவாளர்கள் மட்டுமே பேரணி, பொதுக்கூட்டம், மாநாடு, கருத்தரங்கு, தீக்குளிப்புகள் வரை நடத்தினர்.
இச்செயல்பாடுகளுக்கும் தமிழக மக்களுக்கும் எவ்வித இணைப்பும் ஏற்படவில்லை. தலைமுறை இடைவெளியால் தமிழக இளைஞர்களிடம் ஏற்பட்டிருக்கும் ஈழம் பற்றிய அறியாமையை இது நீக்கிவிடவில்லை.தமிழக அரசியல்களத்தில் ஈழம் முதன்மை இடத்தை பெற்றிருந்த போதிலும், பெரும்பான்மை மக்களிடம் அது முதன்மை இடத்தில் இல்லை.
இங்கு செய்திகளை சேர்ப்பதில் தொலைக்காட்சி ஊடகமே பிரதானமாகிக் கொண்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியுமே படுகொலைகளையும், தீக்குளிப்புகளையும் பிரதானப்படுத்தி செய்தி வெளியிடவில்லை. ஓரளவு செய்த மக்கள் தொலைக்காட்சி அனைத்து மக்களையும் சென்றடையும் நிலையில் இல்லை. முத்துக்குமார் மரணத்தை ஒட்டி அனைத்துக்கட்சிகளுக்கு எதிராக எழுந்த மாணவர் தன்னெழுச்சியை முதல்வர் தலைமையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து தந்திரமாக அணைத்துவிட்டனர்.
இந்தியா அசைந்து கொடுக்காமல் அல்லது அதை அசைத்துப்பார்காமல் ஈழவிடுதலை சாத்தியமில்லை. அதை உள்ளிருந்து அசைத்துப்பார்க்கும் ஆற்றல் தமிழகத்திற்கு மட்டுமே உண்டு. கடந்த நாட்களில் இருந்த அருமையான வாய்ப்புகளையெல்லாம் பதவி சுகத்திற்காக, தேர்தலுக்காக அரசியல் வாதிகள் பாழ்படுத்தினார்கள்.இவர்களுக்கு வெளியே உள்ள ஈழ ஆதரவு ஆற்றல்கள் தமிழகத்தின் ஒரு சதவீத மக்களைத்திரட்டினாலே போதும், அதன் தொடர் சங்கிலி விளைவால் இந்தியா அசைக்கப்படமுடியும்.

அதற்கு இவ்வாற்றல்கள் முழுமையாக ஒன்றிணைவதும் மக்களை நோக்கிய வேலைத்திட்டங்களை அமைப்பதும் இல்லாமல் சாத்தியமில்லை.ஈழமும், நாடுகடந்த தமிழீழ அரசும்நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு அமைப்பு வடிவம். இதன் குரலை ஈழமக்களின் ஒருமித்த குரலாக உலகம் ஏற்கமுடியும். எனினும் ஈழமக்களின் ஒருமித்த குரலாக இந்த அரசு என்ன செய்யப்போகிறது? என்பதைப்பொறுத்தே இது எத்தகைய அரசாக இருக்கும் என்பதை தீர்மானிக்க முடியும்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட அதிகமான முக்கியத்துவத்தை விடுதலைக்கான அரசியல் பாதை என்ற உள்ளடக்கத்திற்கு நாம் கொடுக்க வேண்டும். இந்த உள்ளடக்கம் இல்லை எனில் இது ஈழ விடுதலைக்கான அரசாக இல்லாமல் விண்ணப்பத்திற்கான அரசாக நீர்த்துப்போய்விடும்.
இதற்கான அபாயம் உண்டு என்பதை ஏற்க நாம் தயங்கக்கூடாது.விடுதலைப் போராட்டத்தலைமை என்பது இயக்கத்தின் தலைமையாகவே எப்போதும் இருக்க வேண்டும். இவ்வரசு இயக்க தலைமைக்கு கட்டுப்பட்டே இயங்க வேண்டும். இயக்கதின் கீழ் பன்னாட்டு அரசு உறவுகளுக்கான, உலகமக்களிடையேயான உறவுகளுக்கான ஒரு பிரிவாகவே இது செயல்பட வேண்டும். இதன் செயல்பாடுகளுக்கு அரசியல் ஆயுதப்போராட்டங்களுக்கான தேவையை இடையூறாகக் கருதக்கூடாது.
இத்தகைய ஒருஅரசு இல்லாமல்கூட விடுதலையை அடைய முடியும். ஆனால் விடுதலைக்கான இயக்கம் இல்லாமல் ஒரு விடுதலையை அடைய முடியாது.
இவ்வரசு விடுதலைப்புலிகளின் இடத்திற்கான தொடர்ச்சியாய் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. இது பன்னாட்டு அரசுகளின் பணியவைப்புக்கு தொடர்ந்து உட்படுத்தப்படும் வாய்ப்புகளைக்கொண்டது. இதன் சட்ட வரம்புக்குட்பட்ட செயல்பாடுகளுக்கும், அரசியல் போராட்டங்களின் வளர்ச்சிக்கும் இடையிலான உறவு முரண்பட்டுப்போகும் வாய்ப்பும் உண்டு. இயக்கமும் தலைமையும், பலவீனப்பட்டு இருக்கும் நிலையில், அரசியல் பாதை ஒன்றை உறுதிபடுத்தாத நிலையில், தனிஈழத்திற்கான உலக ஆதரவு இல்லாத நிலையில், இவ்வரசு வடிவத்தை முதன்மைப் படுத்துவதன் மூலம் பெரும் வெற்றிகரமான நகர்வுகளை ஏற்படுத்த முடியாது. நாடுகடந்த தமிழீழ அரசு என்ற வடிவத்தை பயன்படுத்திக்கொள்ள அதன் முழுபரிமாணங்களையும் நாம் கணக்கில் கொண்டாக வேண்டும்.தீர்வுக்கான அணுகுமுறைகள்இதுவரை பார்த்த தலைப்புகளில் தொகுப்பாக தீர்வுக்கான அணுகுமுறைகளை நாம் வரையறுக்கலாம்.
1. ஆயுதப்போராட்ட பின்னடைவின் இன்னொரு எதிர்நிலையாக உலக அரசுகளின் மனமாற்றத்தை எதிர்பார்க்கும் காந்திய அணுகுமுறை வெற்றியளிக்காது.
2. ஈழவிடுதலையை இந்தியா உள்ளிட்ட உலக அரசுகள் ஏற்கும் சூழலை எதிர்பார்ப்பது என்பது அந்த சூழலுக்கான சாத்திய மின்மையும் உண்டு என்ற எதார்த்தத்தை பார்க்க மறுப்பதாகும். எனவே அத்தகைய ஒரு சூழலை உருவாக்குவதற்கான திட்டமிடலே விடுதலைக்கான அணுகுமுறையாக இருக்கமுடியும்.
3. தேசிய சுயநிர்ணய உரிமையின் 3வது வழிமுறையான பிரச்சனைக்குரிய தேசிய இனம் அல்லாத பிற தேசிய இனத்துடன் சேர்வது குறித்த அணுகுமுறை, ஈழ நிலைமைகளுக்கு பொருந்துவது குறித்து விரிவான ஆய்வை உடன் மேற்கொள்ளவேண்டும்.
4. முதலாளித்துவ இயக்குவிசை கோட்பாட்டிற்கு இணைவாக 3வது வழி முறையை ஒரு கருவியாக பயன்படுத்த இயலும் வாய்ப்பை கண்டறிய வேண்டும்.
5. நாடுகடந்த தமிழீழ அரசு என்பது தீர்வு அல்ல. தீர்விற்கான பாதையும் அல்ல. அது விடுதலை இயக்கத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டிய ஓர் அமைப்பு. இதன் பங்கு பாத்திரம் குறித்த மிகைப்படுத்தலும், எதிர்பார்ப்பும் கூடாது. இதன் மூலமான இராஜதந்திர நகர்வுகள் என்பதெல்லாம் உலகம் முழுவதுமான தமிழர்களின் அரசியல் போராட்ட வீச்சை சார்ந்த விசயம் தான். எனவே நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியத்துவம் என்பது அமைப்பு – தலைமை- அரசியல் பாதை- அரசியல் போராட்ட வீச்சு – இவற்றிற்கெல்லாம் அடுத்த படியானதாகவே இருக்கு முடியும்.
6. ஈழத்தில் ஆயுதப்போராட்டம் பழைய பொருளில் தொடரமுடியாது. சர்வதேச அரசியல் போராட்டங்களுக்கு துணை செய்யும் பொருளிலேயே அது தொடர முடியும். ஆயுதப்போராட்டத்திற்கான சமூககருவை முடிந்தவரை காப்பாற்றி, எப்போது அவசியப்படுகிறதோ அப்போது பயன்படுத்திக்கொள்ளும் அணுகுமுறைகளைக் கையாளவேண்டும்.ஒரு விடுதலைப்பாதைஇத்தகைய அணுகுமுறைகளிலிருந்து ஒரு பாதையை வரையலாம். ஒரு பாதையை வரைய நாம் இருக்குமிடத்திலிருந்து இலக்கை நோக்கியும் செல்லலாம். நமது இலக்கிலிருந்து இருக்குமிடம் நோக்கி பின்னோக்கியும் வரலாம்.
இந்த இரண்டில் 2வது அணுகுமுறையே எளிதானதும், விரைவானதும், தெளிவானதுமான அணுகுமுறை, எப்படி எனில் குழந்தைகள் புத்தகங்களில் ஒரு விளையாட்டு இருக்கும். ஒருபக்கம் ஆடு இன்னொரு பக்கம் புல்கட்டு, ஆடு, புல்கட்டை அடையும் வழியை கண்டுபிடிபார்போம் என போட்டிருப்பார்கள்.
ஆடு புல்கட்டை அடைய அநேக வழிகளை வைத்து ஒன்றைத் தவிர மற்றவற்றையெல்லாம் அடைத்துப்போட்டிருப்பார்கள். இவ்வழியை எளிதாகவும் விரைவாகவும் கண்டறிவதற்கான முறை ஆட்டிலிருந்து புல்லைநோக்கி செல்வதை விட புல்லிலிருந்து ஆட்டை நோக்கி வருவதே. இதில் தேவையற்ற தவறான பாதை தெரிவுகள் தவிர்க்கப்பட்டுவிடும். இதைப்போல ஈழவிடுதலைக்கான பாதையை இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி வரைவதே எளிதானதும், தெளிவானதுமாக இருக்கும்.
இலக்கை(ஈழத்தை) அடையும் உச்சக்கட்ட நிகழ்வு சிங்களத்தை வீழ்த்தியோ அதன் விட்டுக்கொடுத்தலிலோ ஏற்படுவது அல்ல. சர்வதேச தலையீட்டின் மூலமே அந்த உச்சகட்ட நிகழ்வு ஏற்பட முடியும். சரி அந்த சர்வதேச தலையீடு எப்படி இருக்க முடியும்? நேரடியாக ஈழத்தை அங்கீகரிப்பதாக இருக்கலாம் அல்லது இன்றைய உலகப்போக்கான ஐ.நா.சரத்துகளின் படியான பொதுவாக்கெடுப்பை நடத்துவதாகவும் இருக்கலாம். இவை இரண்டுமே கோரிக்கை வைத்து போராடி உலகை ஏற்க வைக்காமல் நடைபெறாது. இவ்விரண்டில் ஈழத்தை அங்கீகரிக்க கோரி வெற்றியடைவதைவிட பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி வெற்றியடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. மேலும் நாம் ஏற்கனவே ஈழத்தை சர்வதேசம் அங்கீகரிக்க கோரி போராடி வருகிறோம்.
தென்ஆப்ரிக்காவை தவிர்த்து ஒரு உலக நாட்டைக்கூட கொள்கையளவில் கூட ஈழத்தை ஏற்க வைக்க முடியவில்லை. ஏற்பதில் நாடுகளுக்கிடையேயும் பல்வேறு இராஜதந்திர சிரமங்கள் உள்ளது. இத்தகைய சிரமங்கள் பொதுவாக்கெடுப்பை ஏற்பதில் மிக்குறைவு.
ஆக இலக்கை அடைய பொதுவாக்கெடுப்பிற்கான சர்வதேச தலையீட்டை கோருவதே சாத்தியமான தேர்வாக உள்ளது. உலகதமிழர்களும் உலக சனநாயக ஆற்றல்களும் ஒரே குரலில் உரத்துக்கோராமல் சர்வதேசம் இதை ஏற்க முன்வராது.
எனவே இதற்கு பொதுவாக்கெடுப்பிற்கான உலகளாவிய கோரிக்கை இயக்கம் ஒன்று அவசியமாகிறது. இவ்வுலகளாவிய இயக்கத்திற்கு, உலகத்தமிழர் அமைப்புகள், சனநாயக அமைப்புகள் இவற்றை அங்கத்தினர்களாக ஒருங்கிணைக்கும் ஒரு அரசியல் முன்னனி அவசியமாகிறது.
இதற்கு, விடுதலைப்புலிகளின் உறுதியான இராணுவத்தலைமை போன்ற, அரசியல் தலைமை அவசியமானது. இத்தகைய தலைமை உருவாக இப்பணிகளுக்கான உறுதியான முன்னெடுப்பு அவசியமாகிறது.
இதுவே இலக்கிலிருந்து நமது நிலையை நோக்கி பின்னோக்கி வரையும் பாதை.
அடுத்து இந்தியாவைப் பொறுத்தவரை பொதுவாக்கெடுப்பை எதிர்க்குமேயானால், உலகிலும், தமிழக மக்களிடத்திலும் அது சனநாயகத்தின் எதிரியாக அம்பலப்பட்டு போகும்.
இந்தியாவின் இவ்வெதிர்ப்பை உலக அரங்கில் அதன் வீட்டோபவர் முயற்சியை பாதிக்கும்படி செய்துவிட்டால், அது பொதுவாக்கெடுப்பு எதிர்ப்பை கைவிடும்படி செய்யமுடியும். ஏனெனில் இந்தியாவிற்கு வீட்டோ பவர்கனவை விட பொதுவாக்கெடுப்பை மறுப்பது விட்டுக்கொடுக்கமுடியாத நலன் அல்ல.மேலும் தேசிய சுயநிர்ணய உரிமையின் 3வது வழிமுறையை அறிவித்தல் செய்து முன்னனி நாடு ஒன்று அல்லது சிவற்றின் மூலம் சர்வதேச ஆதரவை பெற முடியுமானால், அதை பொதுவாக்கெடுப்பிற்கான ஆதரவாக பெருக்குவோமேயானால், விடுதலை மிக நெருக்கத்தில் இருக்கும்.
இறுதியாகஇதுவரை இக்கட்டுரையில் சொல்லப்படாத ஓர் முக்கிய கோட்பாடு ஒன்று உள்ளது. அதையும் சொல்லி விடுவதே இக்கட்டுரையின் பொருளை முழுமைப்படுத்துவதாக அமையும். வலியது வெல்லும் என்பதே அக்கோட்பாடு, வலியது வெல்லும் என்பது மனிதர்களுக்கிடையிலான உறவுகளில் இருக்க கூடாது. இது மனிதரல்லாத உயிர்களுக்கிடையேயும், சடப்பொருள்களுக்கிடையேயும் இருந்து வருவது. விலங்குகளில் எதுவலியதோ அதுவே வெல்லும்.
சடப்பொருள்களில் எது வலியதோ அதுவே ஆதிக்கம் செய்யும். சூரிய மண்டலத்திற்குள் சூரியனே ஆதிக்க சக்தி, காட்டுக்குள் வலிய விலங்குகளே ஆதிக்க சக்தி. ஒரு புறம் மனித நேயம், மனித உரிமை, மனித சமத்துவம் இவையெல்லாம் பேசப்பட்டாலும் நடைமுறையில் வலியது வெல்லும் என்பதே மனித உறவுகளிலும் வியாபித்து இருக்கிறது.
இலங்கையில் சிங்களர்கள் வலியது வெல்லும் கோட்பாட்டையே ஆரம்பம் முதல் கையிலெடுத்துள்ளனர். தமிழர்கள் மனித உரிமைக் கோட்பாடுகளையே ஆரம்பம் முதல் கையிலெடுத்து போராடுகின்றனர். இருவருமே மனித உரிமைக் கோட்பாடுகளை கையிலெடுத்திருந்தால் பரஸ்பர புரிதலிலேயே ஏதோ ஒரு தீர்வு எட்டபட்டு அது அரைநூற்றாண்டு கடத்திருக்கும். இருவருமே வலியது வெல்லும் வெல்லும் கோட்பாட்டை கையில் எடுத்திருந்தால் சிங்களப் பகுதியிலும் 2 இலட்சம் பிணம் விழுந்து ஈழத்திற்கான சர்வதேச தலையீடு நடந்திருக்கலாம்.அந்த 2 இலட்ச சிங்கள உயிர்களை காப்பாற்றியிருப்பது தமிழர்களின் மனித உரிமைக்கோட்பாடுதான்.
சிங்களத்தை விட சிறிய ஈழம் பதிலுக்கு சிங்களப் பகுதியிலும் தமக்கு ஏற்பட்டதைப்போன்ற இழப்பை ஏற்படுத்த முடியுமா எனில் முடியும்தான்.ஒரு தேசிய இனத்தை அழிக்க அதைவிட பெரிய தேசிய இனமாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை, மனித நேயமிக்க கோட்பாடுகளை துறந்துவிட்டால். ஹிரோஷிமா, நாகசாகியில் சுமார் 2 இலட்சம் மக்கள் கூட்டத்தை சொற்ப நிமிடங்களில் கொன்றொழிக்க அமெரிக்காவிற்கு தேவைப்பட்டது 4.5 நபர்களும், 2 விமானங்களும் தான்.
எனவே இதுவரை சிங்களப்பேரழிவு ஒன்று இல்லாதிருப்பது சிங்களத்தின் வலிமையால் இல்லை. தமிழர்கள் கடைபிடிக்கும் மனித நேயமிக்க கோட்பாடுகளால்தான் என்பதை சிங்கள மக்கள் உணரவேண்டும். தமிழ் இனம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகம் பார்த்துவிட்ட இனம். எனவே மிருகங்களின் கோட்பாட்டை அவர்கள் தமது கோட்பாடாக ஏற்கமாட்டார்கள்.
இறுதிவரை மனித உரிமை கோட்பாடுகளாலேயே-சிங்களத்தை வீழ்த்துவது அல்ல- அதிலிருந்து விடுதலை பெற விரும்புகிறார்கள்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire