மெனிக் பாம் முகாமே உலகில் மிகப் பெரியது: ஐ.நா. அதிகாரி






வன்னி தடுப்பு முகாம்களை, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் சொந்த வீடுகள் போன்று உணர வைப்பதற்காக எதையும் செய்ய முடியாது எனத் தெரிவித்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரிகள், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மெனிக் பாம் முகாமே மிகப் பெரிய அகதி முகாம் என்றும் வர்ணித்துள்ளனர்.இலங்கையின் வடபகுதியில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்பிய பின்னர் கருத்துத் தெரிவித்த ஐ.நா.வின் அரசியல் பொதுச் செயலாளர் லைன் பாஸ்கோவே, இடம்பெயர்ந்த மக்கள் விரைவாக அவர்களின் சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். முகாம்களில் நிலை மிகச் சிக்கலானதாகவும் நெருக்கம் மிக்கதாகவும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில், இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு லைன் பாஸ்கோவே நேற்று வியாழக்கிழமை சென்று நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். அங்குள்ள மக்களுடன் அவர்களின் விருப்பங்கள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் கோரிக்கையின் பேரில் அவர் தனது குழுவினருடன் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். "முகாம்களுடன் நாம் நெருங்கிச் செயற்பட தொடங்கியதில் இருந்து அங்கு என்னென்ன பிரச்சினைகள் எதிர்கொள்ளப்படுகின்றன என்பதைப் பற்றி பொதுச் செயலாளர் புரிந்து வைத்திருந்தார். எனது பயணம் இங்கு என்ன நடக்கிறது என்பது தொடர்பான தெளிவான புரிதலை எமக்குத் தந்துள்ளது" என்றார் லைன் பாஸ்கோவே. இந்த முகாம்களின் நிலை ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றதா என்ற கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காத லைன் பாஸ்கோவே, "இந்தப் பயணம் நாங்கள் எதை விரும்புகிறோம், எதை விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இருந்தது" என்றார். லைன் பாஸ்கோவேவின் ஊடகவியலாளர் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகமவும் கலந்து கொண்டார். ஐ.நா. அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்கள் குறித்து அவர் விளக்கினார். "இடைத் தங்கல் முகாம்களில் இருந்து மக்களை வெளியே அனுப்புவது பற்றிய விடயமே மிக முக்கியமாக ஆராயப்பட்டது." என்றார் அவர். இலங்கையில் விரைவில் இடம்பெயர்ந்த மக்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள் என தாம் நம்புகிறார் எனவும் அவர் தெரிவித்தார். "180 நாட்கள் என்ற எமது எல்லைக்குள் நாம் குறிப்பிட்டளவு மக்களை மீளக்குடியமர்த்துவோம் என்ற உறுதிமொழியை இந்த 90 ஆவது நாளில் நான் தருகின்றேன். அதற்குத் தேவையான கட்டுமான உதவிகளை வழங்குவதற்கு ஐ.நா. இருக்கின்றது" என்றார் ரோகித போகல்லாகம. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் பாஸ்கோவே நேற்று சந்திப்புக்களை நடத்தியிருந்தார். அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் எதிர்க் கட்சியினரையும் தமிழ் அரசியல்வாதிகளையும் அவர் இன்று சந்தித்துப் பேச இருந்தார். எனினும் அரச தலைவருடனான பேச்சின் போது என்ன விவகாரங்கள் ஆராயப்படும் என அவர் தெரிவிக்கவில்லை.










Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire