ஏரியைப் பராமரிப்பவரின் காலடியை தலையில் வைத்துக் கொள்வேன்: 1,000 ஆண்டுகளுக்கு முன் கல்வெட்டு



ஏரியைப் பராமரிப்பவர்களின் காலடியை தலையில் வைத்துக் கொள்வேன் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வெட்டில் பதிவு செய்துள்ளார் ஒரு குறுநில மன்னர்.
விழுப்புரம் அருகே கண்டுபிடித்த கல்வெட்டு பொறித்த உரலில் இந்த செய்தி உள்ளது என தொல்லியல் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் ஆணையர் தி.ஸ்ரீ. ஸ்ரீதர் தெரிவித்தார்.
கல்வெட்டுகளை படியெடுக்கும் முனைப்புத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த கல்வெட்டு கண்டறியப்பட்டது. இந்த உரலை கண்டறிந்த கல்வெட்டாய்வாளர் இரா. சிவானந்தம் இது குறித்து கூறியது: விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலுர் வட்டத்தில் திருக்கோயிலூர்- திருவண்ணாமலை வழித்தடத்தில் மணலூர்பேட்டையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஜம்பை என்ற சிற்றூர் அமைந்துள்ளது.
இவ்வூரின் கிழக்கில் உள்ள குன்றில் அதியமான் பற்றிய குறிப்புகள் அடங்கிய தமிழ் பிராமி கல்வெட்டு உள்ளது. இந்த குன்றின் மேற்கில் உள்ள ஏரியில், கல் உரல் ஒன்று கண்டறியப்பட்டது. ஐந்தடி உயரமும், மூன்றடி விட்டமும் உள்ள இந்த உரலில் நடுப்பகுதி குழி ஓரடி ஆழமும் கொண்டுள்ளது. உரலின் மேல் விளிம்பில் 10 செ.மீ. அகலம் உள்ள பகுதியில் கி.பி. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகள் கரடுமுரடாக இருப்பதால் இது ஏதாவது ஒரு இடத்தில் நிலையாக புதைத்து வைத்திருக்க வேண்டும். இதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துக்களின் உருவ அமைப்பைக் கொண்டு இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கல்வெட்டு கூறும் செய்தி...
இந்த கல்வெட்டில், "வ த ஸ்ரீ கள்ளையன் செய்த தருமம் கழத்துவப்பட்டியும் பனைப் பெரிக்கட்டின இவை என்முடி மெலன' என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏரியை கள்ளையன் என்பவர் உருவாக்கி இருக்கலாம். களத்துமேடு மூலமாகப் பெறப்படும் வருவாயிலிருந்தும், பனைமர குத்தகை மூலமாகவும் பாதுகாக்க வேண்டும் எனவும், இந்த பொறுப்பை தொடர்ந்து நிலைநாட்டி வருபவர்களின் காலடியை என் தலைமேல் வைத்துக்கொள்வேன்' என்று கள்ளையன் கூறுவதாக இதில் காணப்படும் வாசகங்களுக்கு கல்வெட்டாய்வாளர்கள் பொருள் கூறுவதாக சிவானந்தம் தெரிவித்தார். பாசனத்துக்காக ஏரிகளை உருவாக்கி அதனால் பயனடையும் விவசாயிகளிடம் இருந்து களத்துமேட்டு பயன்படுத்தியதற்கான வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏரியின் அருகில் பனை மரங்கள் வளர்க்கப்பட்டும் அவற்றை குத்தகைக்கு விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயையும் பயன்படுத்தி ஏரியை பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளதை இந்த கல்வெட்டுச் செய்தி உறுதி செய்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பழமையான செக்கு மற்றும் உரல்கள் கிடைக்கின்றன. ஆனால், இப்போதுதான் எழுத்துகள் பொறிக்கப்பட்ட உரல் கிடைத்துள்ளது என தொல்லியல் துறை முதுநிலை கல்வெட்டு ஆய்வாளர் கி.சு. சம்பத் தெரிவித்தார். கி.பி. 900-ம் ஆண்டு பல்லவர்கள் ஆட்சி முடிந்து சோழர்கள் ஆட்சிக்காலம் தொடங்குவதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிற்றரசர்களும், குறுநில மன்னர்களும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படும் செய்திகளின் அடிப்படையில், ஜம்பை ஏரியில் கிடைத்த உரலில் குறிப்பிடப்படும் கள்ளையன் இப் பகுதியின் குறுநில ஆட்சியாளராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire