Source:http://meenakam.com/?p=11303
தாய்லாந்தில் அகதியாக வாழும் உதயனாகிய நான் மீனகம் நிருபர் ஏற்படுத்தித் தந்ததன் பேரில் கனேடியத்தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்டு தாய்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதிகளின் தற்போதைய நிலைமை பற்றிய செய்திகளை நேர்காணலிற் கூறியபோது நான் பகிர்ந்து கொண்ட விடயங்களையும் அதற்குக் கனேடியத்தமிழ் காங்கிரஸைச் சேர்ந்த டேவிட் பூபாலபிள்ளை முன் வைத்த ஆலோசனைகளையும், இது தொடர்பான தமது செயற்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டவற்றைச் செய்தியாகத் தொகுத்துள்ளேன். மேலும் இச்செவ்வியானது கனேடிய நேரப்படி பிற்பகல் ஒரு மணிக்கு வழங்கப்பட்டது.
கேள்வி- தற்பொழுது தாய்லாந்தில் அகதிகளின் நிலை பற்றி?
பதில் இங்குள்ள நிலைமை தொடர்ந்து பதட்டமாகவே உள்ளது.நாள்தோறும் இலங்கை அகதிகள் தாங்களும் கைது செய்யப்படலாம் என்ற பயத்தின் காரணமாக அவர்களின் இருப்பிடங்களை மாற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.
ஏற்கனவே குடிவரவு தடுப்புக்காவல் நிலையத்தில் (IDC)இடப்பற்றாக்குறை உள்ள நிலையில் 11.10.2010 அன்று கைது செய்யப்பட்டவர்கள் 136 பேர் உட்பட இப்போது கிட்டத்தட்ட 280 இலங்கையர்கள் உள்ளார்கள்.
இவர்களில் கர்ப்பிணிகள் 5 பேர்,சிறுவர்கள் 40 பேர்,ஏறக்குறைய பெண்கள் 80 பேர் மிகுதியினர் ஆண்களாகவும் உள்ளனர்.
மேலும் இவர்களில் முதியோர்,நோயாளிகள்,இறுதிச் சண்டையின் போது காயமுற்று இன்னும் அவற்றைக்குணப்படுத்த முடியாமல் இருந்தோரும் அடங்குவர்.
மேலும் தற்போது பெரும்பாலோருக்குக் காய்ச்சல் பரவியுள்ளது.ஏற்ற,போதுமான சாப்பாடு இல்லை.பாதிப்பேர் தூங்கும் போது மீதிப்பேர் விழித்திருக்க வேண்டியுள்ளது.குழந்தைகளுக்குப் பால்மா இல்லை,நல்ல காற்றோட்டமோ,படிப்போ,விளையாட்டோ இல்லை.இந்த நிலை நீடிக்கும் போது உடல் பாதிப்பு மட்டுமன்றி உளப்பாதிப்புக்கும் உள்ளாகும் நிலை உருவாகும்.
இதைவிட தற்போது பிடிபட்டவர்களில் 25 பேர் தாங்களாகவே இலங்கை செல்லச் சம்மதிதுள்ளார்கள்.
இதற்கான காரணம் ஏற்கனவே IDC இல் இரண்டு, மூன்று வருடங்களாக UNHCR இன் எந்த நடவடிக்கையுமின்றி அகதி அந்தஸ்துப் பெற்றவர்கள் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்தமையே ஆகும்.
சாப்பாடு இல்லாமல் நோய்வாய்ப்பட்டு IDC க்குள் உத்தரிப்பதைவிட இலங்கையிற் சொந்த மண்ணில் இறக்கலாம் என்றே கடைசி முடிவாக இதை எடுத்திருக்கிறார்கள்.அவர்கள் முழு விருப்புடனோ அல்லது இலங்கையில் அச்சுறுத்தல் இல்லையென்று தீர்மானித்தோ போகவில்லை.
ஆனால் UNHCR இவர்கள் எல்லாம் அச்சுறுத்தல் இல்லாமல் வந்தவர்கள்,இந்தக்கைதின் மூலமாகத் தாம் பெரிய உண்மையைக்கண்டு பிடித்துவிட்டோம் என்று திருப்ப்தியுடன் அவர்களின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் இலங்கையில் அவர்கள் மரணத்தையோ, சித்திரவதையையோ எதிர்நோக்கினால் UNHCR ஆல் தடுக்கமுடியுமா?
மேலும் 11.10.2010 அன்று கைது செய்யப்பட்டவர்களிடம் தாய்லாந்து அதிகாரிகளுடன் வந்த மேலைத்தேச நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இருந்துள்ளார்கள்.மேலும் கனடாவிற்கு ஆட்களைக்கடத்துவதைத் தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தாக இங்குள்ள ஊடகங்கள்,அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிதுள்ளனர்.மேலு சுதிஸ்சான் எனும் இடத்தில் தாய்லாந்து அதிகாரிகளுடன் வந்த ஒருவர் சரளமாகத்தமிழில் பேசியுள்ளார்.
மேலும் இவர் இலங்கைத்தமிழரைப்போல் தோற்றத்திலும் பேச்சிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆகவே நாம் இதைக்கூட்டுச்சதியாகவே எண்ணவேண்டியுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில் IDC இல் இருந்து வெளியழைப்புக்களை ஏற்படுத்த முடியா நிலையுள்ளதால் ஒரு தமிழ் பிரதிநிதிகள் குழு நேரடியாகச்சென்று அவர்களைப்பார்வையிட்டால் இவை உண்மையென அறியமுடியும்.
சொந்த நாட்டிலும் சரி பிறநாட்டிலும் சரி தமிழர்களுக்கு நடக்கும் கொடுமைகளுக்கு சாட்சிகள் இல்லாமலே இருக்கின்றன.
தாய்லாந்தில் உள்ளவர்கள் இதுவரைக்கும் இத்துன்பங்களையெல்லாம் சகித்துக்கொண்டிருந்தார்கள்.
இப்போ நிலைமை மிகவும் மோசமானதால் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார்கள்.தாய்லாந்தில் உள்ள சிறுவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமானது.
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையடைய வேண்டுமென்றே நினைப்பார்கள்.ஆனால் இங்கு ஒழுங்கான கல்வியென்பது முயற்கொம்பாக உள்ளது.அனேக பிள்ளைகள் பல்கலைக்கழகம் செல்வதற்கான தகைமையைக்கொண்டிருந்தும் பணமின்றி விசாவின்றி படிக்க முடியாமல் உள்ளார்கள்.அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.ஆரம்ப காலங்களில் BRC எனும் நிறுவனத்தில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்கள்.ஆனால் இப்போ தாய் (தாய்லாந்து மொழி)கற்பிக்கின்றார்கள்.
தாய்லாந்துக்கு 2006 இல் நாம் வந்த போது அரிசி 1 கிலோ 12 THB,மா14THB,கோழி இறைச்சி 25THB.தற்போது அவை 25,25,70 என்று விலையேறிவிட்டன.
ஆனால் அகதிகளுக்கு வழங்கப்படும் பணம் 2500THB ஆகவே உள்ளது.எங்களால் எப்படி இங்கு வாழ முடியும்.
இந்த லட்சணத்தில் UNHCR தனது நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துவதுமில்லை.இச்சந்தர்ப்பங்களில் நியாயம் கேட்டால் எம்மைக்குற்றவாளிகளாக எமக்கான நாட்களை இழுத்துக்கொண்டே போவார்கள்.
இவ்வாறு இங்குள்ளோரின் பிரச்சினைகளைக் கூறிக்கொண்டே போகலாம்.மேலும் … இல் அகதி அந்தஸ்துக் கேட்டு வருபவர்கள் நீண்ட காலமாகக் கிட்டத்தட்ட அநேகமானவர்களுக்கு ஒரு வருடத்திற்குப்பின்பே நேர்காணல் நடைபெறும்.
நேர்காணல் முடிந்து முடிவு சொல்வதற்கும் சிலருக்கு 15 மாதங்கள் கடந்தும் இன்னும் பதில் சொல்லவில்லை.அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளுக்குப் போவதற்கான நேர்காணல் நடந்தால் முடிவு சொல்வதற்குக் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேலான காலமெடுக்கும்.அவர்களின் முடிவு சொல்வதற்கு இப்படி நீன்டகாலம் இழுப்பதால் பிள்ளைகளின் கல்வி நிலைமை மோசமாக்கப்படுகிறது.தாய்லாந்தின் சட்டப்படி அகதிகள் யாரும் வேலை செய்ய முடியாது
சுதந்திரமாக நடமாடமுடியாது.ஏனெனில் நாம் எப்போதும் கைது செய்யப்படலாம்.
இந்தச்சூழ்நிலையிலேயே நாம் இங்கு வாழ்கின்றோம்.
நாம் கைதாவதிலிருந்து காப்பாற்றப்படவும்,கைது செய்யப்பட்டோர் விடுபடவும்,இத்துன்பமான வாழ்விலிருந்து விடுபடவும் கனடாவில் வாழும் எமது உறவுகளான நீங்கள் நினைத்தால் எமக்காகச் செயலாற்ற முடியும்.
இந்த விடயம் தொடர்பாக நாம் தமிழகத் தலைவர்களான ஐயா நெடுமாறன்,சு.ப.வேரபாண்டியன்,டி.ராஜேந்தர்,நாம் தமிழர் இயக்க பாக்கியராஜ்,கனிமொழி இன்னும் பலருடன் கதைதுள்ளேன்.
மேலும் எமது பிரதிநிதிகளான டேவிட் பூபாலபிள்ளை, உருத்திரகுமாரன் என்போருடனும் கதைத்திருந்தேன்.மேலும் டேவிட் பூபாலபிள்ளை அவர்கள் ஒரு கருத்தை முன் வைத்திருந்தார்.
அதாவது 4 இலட்சம் தமிழர்கள் கனடாவில் வசிக்கின்றார்கள்.அவர்களில் 4000 பேர் முன் வந்து ஸ்பொன்சர் செய்தால் தாய்லாந்திலுள்ள எமது துன்பத்தைப்போக்க முடியும் என்று.
எனவேதயவு செய்து கனேடிய தமிழ் மாணவ சமூகமே,தமிழ் அமைப்புக்களே,தமிழ் ஊடகங்களே,நலன்விரும்பிகளே நீங்கள் மனது வைத்தால் எமது வாழ்விற்கு,எமது பிள்ளகளின் எதிர்காலத்திற்கு உங்களால் உதவ முடியும்.
எமது இந்த வாழ்வை மாற்ற ஒன்று பட்டு உதவும் படி இங்குள்ள அனைவரின் சார்பிலும் மன்றாட்டமாகக் கேட்கிறேன்.
மேலும் இவ்விடயம் தொடர்பாக எத்தனை பேருடன் கதைத்தேன் என்பது முக்கியமில்லை.யார் எமக்கு விரைவில் அலுவல் பார்க்கிறார்கள் என்பதே எமது வாழ்வைத்தீர்மானிக்கும்.மேலும் எமது இக்கஸ்ரமான நிலையில்,கைதில் தப்பி நான் தொடர்பு கொண்டபோது உறவாக பலருடனும் அழைப்புக்களை ஏற்படுத்தித்தந்த மீனகம் நிருபரான தமிழ் நாட்டு உறவிற்கும், எமது பிரச்சினையை ஒலிபரப்பிய தமிழர்குரல் வானொலிக்கும், கனேடியத் தமிழ் வானொலிக்கும்,நேரம் ஒதுக்கி செவிமடுத்த தலைவர்களுக்கும் உறவுகளுக்கும் அகதிகள் சார்பில் எனது நன்றி.
உமது செயற்பாட்டை ஆவலுடன் எதிபார்க்கும்,
இலங்கைத் தமிழ் ஏதிலிகள், தாய்லாந்து.
No comments:
Post a Comment