இது என்ன ராஜநீதியோ...? புலிகள் மீதான தடை நீடிப்பு குறித்து தினமணி தலையங்கம்

Source: http://www.dinamani.com/

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான போருக்குப் பின்னர், இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்ட நிலையில், இன்னமும் இந்திய அரசு விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்திருப்பது நியாயமா என்று எழுப்பப்படும் கேள்வி நியாயமானதுதான்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை இராணுவம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நாள் முதலாக இலங்கையில் இதுநாள்வரை எந்தவிதமான தாக்குதல்களும் நடைபெறவில்லை என்பதைக் காணும் போது, விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் பலவீனமான நிலையில் இருக்கிறது என்பதும், அவர்கள் இனி ஒன்றுசேர்ந்து செயல்பட்டாலும்கூட, அவர்களது போராட்டம் அரசியல் போராட்டமாக மாறுவதற்குத்தான் அதிக இடமிருக்கிறது என்றும் தோன்றுகிறது. மீண்டும் ஆயுதப் போராட்டமாக அமைவது என்பது உடனடியாகச் சாத்தியமில்லை என்று தெரிகிறது.

தற்போதும்கூட, சர்வதேச அளவில், மலேசியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் சட்ட விரோதமாக ஆயுதம் வாங்கியதற்கான வழக்குகளை எடுத்துக் கொண்டாலும் அவை யாவும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்பாகத்தான் இருக்குமேயொழிய, அதன் பிறகு அல்ல.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் மீதான தடையை இந்திய அரசு தானாகவே விலக்கிக் கொண்டிருந்தாலும்கூட அதில் மாற்றுக்கருத்துக்கு இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், தற்போது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றத்தின் 3 அமர்வுகளிலும் இந்த விவகாரம் விவாதிக்கப்படுவதும், நீதிபதியோ இந்த எதிர்தரப்பு கருத்தைச் சொல்ல வேண்டியவர்கள் பாதிக்கப்பட்ட விடுதலைப் புலிகள்தான் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமாக இருக்கும் வரையில், இங்கே விடுதலைப் புலிகள் என்று சொல்லிக்கொண்டு இந்தியாவுக்குள் நுழைபவரை இந்திய அரசு கைது செய்து இலங்கையிடம் ஒப்படைப்பதுதான் சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க முடியும். அப்படியிருக்கும்போது, விடுதலைப் புலிகள் எப்படி இங்கே இந்த நடுவர் மன்றத்தின் முன்பாக ஆஜராகி, தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும்?

அவ்வாறு நடுவர் மன்றத்தின் முன்பு அவர்கள் சொல்ல வேண்டும் என்பதுதான் விதிமுறையாக இருக்குமானால், அப்படியாக கருத்துத் தெரிவிக்க வரும் விடுதலைப் புலிகள் யாரும் கைது செய்யப்படாமல், அவர்கள் தாங்கள் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதற்கான உத்தரவாதத்தை இந்திய அரசு வழங்கினால்தானே அவர்கள் கருத்துத் தெரிவிக்க வருவார்கள்?

ஊட்டியில் நடைபெற்ற இந்த நடுவர் மன்றத்தின் 3வது அமர்வில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவு இயக்குநர் பி.கே.மிஸ்ரா, விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கக்கூடாது என்று வாதிட்டுள்ளார்.

இதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள் இரண்டு: முதலாவதாக 2008-க்குப் பிறகு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சிலர் பிரச்னைகளை எழுப்புகின்றனர். இது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. இரண்டாவதாக, நாடுகடந்த தமிழீழ அரசில் உறுப்பினர்களாக 115 பேரில் பலருக்கு விடுதலைப் புலிகளின் இயக்கத்துடன் தொடர்பு உள்ளது. இந்தியாவில் இவர்களில் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு உள்ளது.

இதில் இரண்டு விஷயங்களை நாம் கவனித்தாக வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசு உலக நாடுகளில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இல்லை. இரண்டாவதாக, நடந்து முடிந்திருக்கும் ஈழப் போருக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அரசியல் சூழலைத்தான் கருத்தில்கொள்ள வேண்டுமே தவிர, அதற்கு முந்தைய சூழலை கவனத்தில் கொள்வது நடைமுறைக்கு உகந்ததாக இருக்காது.

ஆனால் இதை உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் முன்வைக்கும்போது, இதற்கு மறுப்புத் தெரிவிக்கவும், இந்தக் கருத்தில் மாற்றுக்கருத்து இருப்பதையும் சொல்ல வேண்டியவர்கள் இங்குள்ள பலம் வாய்ந்த அரசியல் கட்சிகள் மட்டுமே. அவர்கள் குரலுக்குத்தான் மத்திய அரசின் காதுகளைச் சென்றடையும் வலிமை இருக்கிறது. ஆனால் அவர்களோ, தங்களுக்கும் இந்தப் பிரச்னைக்கும் தொடர்பே இல்லாததுபோல மௌனம் சாதிக்கின்றனர். அவர்களுடைய தமிழ் இனப்பற்று அத்தகையது.

மேலும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் வைகோவும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறனும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுத்துச் சிறை சென்றவர்கள். இவர்கள் விடுதலைப் புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர்கள், ஆதரித்ததால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற நிலையில், இவர்தம் கருத்துகளை ஏன் விடுதலைப் புலிகளின் கருத்தாகப் பதிவு செய்யக்கூடாது?

விடுதலைப் புலிகள் சிலருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவது உண்மையாக இருந்தாலும், அவை பழைய தொடர்புகளின் எச்சமாக இருக்குமே தவிர, புதிய தொடர்புகளாக இருக்க வாய்ப்பு இல்லை என்பதுதான் இலங்கையில் நிலவும் இன்றைய சூழல் உணர்த்துகிறது.

ஒன்று விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கி அவர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்க அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அவர்கள் சார்பில் வாதிட அவர்களது ஆதரவாளர்களை அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், அது என்ன நடுவர் மன்றம்? ஏன் இந்த அமர்வுகள்?
இலங்கை அரசே விடுதலைப் புலிகளை மறந்துவிட்டாலும்கூட, இந்தியா மறக்காது என்றால், ராஜபக்ச நீதியைக்கூடப் புரிந்து கொள்ளலாம் போலிருக்கிறது, இந்திய அரசின் இந்த ராஜநீதியைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire